உபாகமம் 14:11-29

உபாகமம் 14:11-29 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

சுத்தமான எந்தப் பறவையையும் நீங்கள் சாப்பிடலாம். நீங்கள் சாப்பிடக்கூடாத பறவைகளாவன: கழுகு, கருடன், கடலூராஞ்சி, செம்பருந்து, கரும்பருந்து, எல்லாவித வல்லூறுகள், சகலவித அண்டங்காக்கைகள், தீக்கோழி, ஆந்தை, கடல் பறவை, எல்லாவித பருந்துகள், சிறு ஆந்தை, பெரிய ஆந்தை, வெள்ளை ஆந்தை, பாலைவன ஆந்தை, கூழக்கடா, நீர்க்காகம், கொக்கு, எல்லாவித நாரை, புழுக்கொத்தி, வவ்வால் ஆகியனவாகும். பறக்கும் பூச்சி வகைகளில் யாவும் உங்களுக்கு அசுத்தமானவை. அவற்றைச் சாப்பிடவேண்டாம். சிறகுள்ள உயிரினங்களில் சுத்தமானவற்றை நீங்கள் சாப்பிடலாம். ஏற்கெனவே இறந்து கிடக்கிறதாக நீங்கள் காணும் எதையும் சாப்பிடவேண்டாம். உங்கள் பட்டணங்களில் ஒன்றில் வாழும் அந்நியனுக்கு அவற்றைக்கொடுங்கள், அவன் சாப்பிடட்டும் அல்லது வேறு நாட்டவனுக்கு விற்றுவிடுங்கள். ஏனெனில் உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குப் பரிசுத்தமான மக்கள் நீங்களே. வெள்ளாட்டுக்குட்டியை அதன் தாயின் பாலில் சமைக்கவேண்டாம். ஒவ்வொரு வருடமும் உங்கள் வயல்நிலம் விளைவிக்கும் எல்லாவற்றிலும் இருந்து பத்திலொருபாகத்தைப் புறம்பாக்கிவைக்கக் கவனமாயிருங்கள். உங்கள் தானியம், புதுத் திராட்சை இரசம், எண்ணெய் ஆகியவற்றின் பத்திலொரு பங்கையும் மாட்டு மந்தை, ஆட்டு மந்தை ஆகியவற்றின் தலையீற்றையும், உங்கள் இறைவனாகிய யெகோவா தமது பெயர் விளங்கும் வசிப்பிடமாக தெரிந்துகொள்ளும் இடத்தில் அவருக்கு முன்பாக சாப்பிடுங்கள். அப்பொழுது நீங்கள் எப்பொழுதும் உங்கள் இறைவனாகிய யெகோவாவிடத்தில் பயபக்தியாயிருக்கக் கற்றுக்கொள்வீர்கள். யெகோவா தமது பெயர் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் இடம் தூரமாய் இருக்கலாம். அவ்வாறு தூரமாய் இருப்பதினால் உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களை ஆசீர்வதிக்கும்போது, உங்கள் பத்திலொரு பங்கைச் சுமந்துகொண்டு அங்குபோக உங்களால் முடியாதிருக்கலாம். அப்பொழுது உங்கள் பத்திலொரு பங்கை வெள்ளிக்கு பதிலீடுசெய்து, அந்த வெள்ளியை உங்களுடன் எடுத்துக்கொண்டு உங்கள் இறைவனாகிய யெகோவா தெரிந்துகொள்ளும் இடத்துக்குப் போங்கள். அங்கேபோய், அந்த வெள்ளிக்கு செம்மறியாடுகளையோ மாடுகளையோ திராட்சை இரசத்தையோ அல்லது மதுபானத்தையோ நீங்கள் விரும்பும் எதையும் வாங்குங்கள். பின்பு நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு முன்பாக நீங்களும், உங்கள் வீட்டாரும் அவற்றைச் சாப்பிட்டுக் களிகூருங்கள். ஆனாலும் உங்கள் பட்டணங்களில் இருக்கும் லேவியரை மறவாதீர்கள். ஏனெனில் அவர்களுக்குச் சொந்தமாக நிலப்பங்குகளோ உரிமைச்சொத்தோ இல்லை. ஒவ்வொரு மூன்று வருட முடிவிலும் அந்த வருட விளைச்சலின் பத்திலொருபங்கைக் கொண்டுவந்து, உங்கள் பட்டணங்களில் உள்ள களஞ்சியங்களில் சேர்த்துவையுங்கள். இவற்றில், தங்களுக்குச் சொந்தமான நிலப்பங்கும், உரிமைச்சொத்தும் இல்லாமல் உங்கள் பட்டணத்தில் வாழும் லேவியரும், அந்நியரும், தகப்பன் இல்லாதவர்களும், விதவைகளும் வந்து சாப்பிட்டுத் திருப்தியடையட்டும். அப்பொழுது உங்கள் இறைவனாகிய யெகோவா நீங்கள் கையிட்டுச்செய்யும் எல்லா வேலைகளையும் ஆசீர்வதிப்பார்.

உபாகமம் 14:11-29 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

“சுத்தமான சகல பறவைகளையும் நீங்கள் சாப்பிடலாம். நீங்கள் சாப்பிடக்கூடாதவைகள் எவையென்றால்: கழுகும், கருடனும், கடலுராஞ்சியும், பைரியும், வல்லூறும், சகலவித பருந்தும், சகலவித காகங்களும், தீக்குருவியும், கூகையும், செம்புகமும், சகலவிதமான டேகையும், ஆந்தையும், கோட்டானும், நாரையும், கூழக்கடாவும், குருகும், நீர்க்காகமும், கொக்கும், சகலவித ராஜாளியும், புழுக்கொத்தியும், வெளவாலுமே. பறக்கிறவைகளில் ஊர்வன யாவும் உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக; அவைகள் சாப்பிடக்கூடாதவைகள். சுத்தமான பறவைகள் யாவையும் நீங்கள் சாப்பிடலாம். “தானாக இறந்துபோன எதையும் சாப்பிடவேண்டாம்; உங்கள் வாசல்களில் இருக்கிற அந்நியனுக்கு அதை சாப்பிடக் கொடுக்கலாம்; அல்லது அந்நியனுக்கு அதை விற்றுப்போடலாம்; நீங்கள் உங்களுடைய தேவனாகிய யெகோவாவுக்குப் பரிசுத்த மக்கள். வெள்ளாட்டுக்குட்டியை அதின் தாயின் பாலிலே சமைக்கவேண்டாம். “நீ உன் தேவனாகிய யெகோவாவுக்கு எப்பொழுதும் பயந்திருக்கப் பழகும்படி, வருடந்தோறும் நீ விதைக்கிற விதைப்பினாலே வயலில் விளையும் எல்லாப் பலனிலும் தசமபாகத்தைப் பிரித்து, உன் தேவனாகிய யெகோவா தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் இடத்திலே, உன் தானியத்திலும் உன் திராட்சைரசத்திலும் உன் எண்ணெயிலும் தசமபாகத்தையும் உன் ஆடுமாடுகளின் தலையீற்றுகளையும் அவருடைய சந்நிதியில் சாப்பிடுவாயாக. உன் தேவனாகிய யெகோவா உன்னை ஆசீர்வதிக்கும் காலத்தில், உன் தேவனாகிய யெகோவா தமது நாமம் விளங்கும்படித் தெரிந்துகொண்ட இடம் உனக்கு வெகுதூரமாக இருக்கிறதினால், வழிப்பிரயாணத்தின் வெகுதொலைவினிமித்தம், நீ அதைக் கொண்டுபோகமுடியாமல் இருக்குமானால், அதைப் பணமாக மாற்றி, பணமுடிப்பை உன் கையிலே எடுத்துக்கொண்டு, உன் தேவனாகிய யெகோவா தெரிந்துகொண்ட இடத்திற்குப் போய், அங்கே உன் விருப்பப்படி ஆடுமாடு, திராட்சைரசம், மதுபானம் முதலான சகலத்தையும் பணம் கொடுத்து வாங்கி, உன் தேவனாகிய யெகோவாவுடைய சந்நிதியில், நீயும் உன் குடும்பத்தாரும் உன் வாசல்களில் இருக்கிற லேவியனும் சாப்பிட்டுச் சந்தோஷப்படுவீர்களாக. லேவியனுக்கு உன்னுடன் பங்கும் சொத்தும் இல்லாததால் அவனைக் கைவிடாதே. “மூன்றாம் வருடத்தின் முடிவிலே அந்தவருடத்தில் உனக்கு வந்த பலன் எல்லாவற்றிலும் தசமபாகத்தைப் பிரித்து, உன் வாசல்களில் வைக்கக்கடவாய். லேவியனுக்கு உன்னுடன் பங்கும் சொத்தும் இல்லாததால், அவனும், உன் வாசல்களில் இருக்கிற அந்நியனும், திக்கற்றவனும், விதவையும் வந்து சாப்பிட்டுத் திருப்தியடைவார்களாக; அப்பொழுது உன் கை செய்யும் வேலையிலெல்லாம் உன் தேவனாகிய யெகோவா உன்னை ஆசீர்வதிப்பார்.

உபாகமம் 14:11-29 பரிசுத்த பைபிள் (TAERV)

“சுத்தமான எந்தப் பறவையையும் நீங்கள் உண்ணலாம். ஆனால் கழுகுகள், கருடன்கள், கடலுராஞ்சிகள் ஆகியவற்றையும், பைரி, வல்லூற்று எவ்வகை பருந்தும், எந்த வகையான காகங்களும், தீக்குருவி, கூகை, செம்புகம், சகலவிதமான டேகையும், ஆந்தை, கோட்டான், நாரைகள், கூழக் கடா, குருகு, தண்ணீர்க் காகம், கொக்கு, சகலவித ராஜாளியும், புழுக்கொத்தி, வௌவால், ஆகியவற்றை உண்ணக்கூடாது. “பறப்பனவற்றில் எல்லா வகையான ஊர்வன யாவும் சுத்தமற்றவை. ஆகவே அவற்றை உண்ணக் கூடாது. ஆனால், சுத்தமான பறவைகள் எவற்றையும் நீங்கள் உண்ணலாம். “தானாக மரித்துப்போன எந்த விலங்கையும் உண்ண வேண்டாம். நீங்கள் அவற்றை உங்கள் ஊரிலுள்ள வழிப்போக்கருக்குக் கொடுத்துவிடலாம், அவர்கள் அதனை உண்ணலாம். அல்லது அந்நியருக்கு விற்றுவிடலாம். ஆனால் நீங்கள் உங்களுக்குள் அவற்றை உண்ணக்கூடாது. ஏனென்றால் நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு பரிசுத்தமான ஜனங்கள். “வெள்ளாட்டுக் குட்டியை, அதின் தாயின் பாலிலே சமைக்க வேண்டாம். “உங்கள் வயல்களின் எல்லா விளைச்சலிலுமிருந்து பத்தில் ஒரு பங்கை வருடந்தோறும் தனியாக எடுத்து வையுங்கள். அதை நீங்கள் கர்த்தர் தமக்கென்று தெரிந்து கொண்ட சிறப்பான இடத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும். உங்கள் தேவனாகிய கர்த்தரோடு இருக்க நீங்கள் அங்கே செல்ல வேண்டும். அந்த இடத்தில் உங்களது தானியத்திலும், உங்களது திராட்சைரசத்திலும், உங்கள் எண்ணெயிலும் எடுத்துவைத்த பத்தில் ஒரு பங்கையும், உங்கள் மந்தைகளிலுள்ள ஆடு மாடுகளின் தலையீற்றையும் கொண்டுவந்து கர்த்தர் உங்களுக்கு நியமிக்கும் தேவாலயத்தில் உண்டு மகிழுங்கள். உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு மரியாதையளிக்கும்படி எப்பொழுதும் நினைவாயிரு. ஆனால் கர்த்தர் உங்களை ஆசீர்வதிக்கின்றபோது தமது நாமம் விளங்கும்படி தெரிந்து கொண்ட இடமானது நீங்கள் குடியிருக்கிற இடத்திலிருந்து, மிகத் தொலைவில் இருக்கலாம். இந்த சூழ்நிலையில் பத்தில் ஒரு பங்கு காணிக்கைப் பொருட்களை தூக்கி எடுத்துச் செல்ல இயலாமல் போகலாம். அப்படி நடக்குமென்றால் நீங்கள் ஒதுக்கிவைத்த பங்குப் பொருட்களை விற்று, அதன் மூலம் கிடைத்த பணத்தை எடுத்துக்கொண்டு கர்த்தருடைய ஆலயத்திற்கு வரவேண்டும். தேவாலயத்திற்கு வந்த பின்பு, நீங்கள் உங்கள் தேவைக்கேற்ற மாடுகள், ஆடுகள், திராட்சைரசம் போன்ற உணவுப் பொருட்களை அந்த பணத்தினால் வாங்கிக்கொள்ளலாம், பின்பு நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் உண்டு மகிழலாம். உங்கள் நகரில் வசிக்கின்ற லேவியரை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள். (அவர்களுக்கும் உங்கள் உணவை பகிர்ந்தளியுங்கள்) ஏனெனில், அவர்களுக்கு உங்களைப் போன்று எந்த சொத்தும் சுதந்திரமும் கிடையாது. “மூன்று ஆண்டுகள் முடிகின்ற ஒவ்வொரு முறையும் அந்த ஆண்டு உங்களுக்குக் கிடைத்த பலன் எல்லாவற்றிலும் பத்தில் ஒரு பங்கை ஒதுக்கி வைக்கவேண்டும். மற்ற ஜனங்கள் பயன்படுத்தக் கூடிய உங்கள் பட்டணங்களில் அந்த உணவுப் பொருட்களை சேர்த்து வைத்திருங்கள். இந்த உணவுப் பொருட்கள் லேவியர்களுக்கு சொந்தம் ஆகும். ஏனென்றால், அவர்களுக்கென்று சொந்தமான எந்த நிலமும் அவர்களுக்கு இல்லை. மேலும் இந்த உணவுப் பொருட்கள் உங்கள் ஊரில் தேவை உள்ள ஜனங்களுக்கும் ஆகும். அது அயல்நாட்டு குடிகளுக்கும், விதவைகளுக்கும், அநாதைகளுக்கும், உரியது, அவர்கள் வந்து உண்டு திருப்தி அடையட்டும். இவ்வாறெல்லாம் நீங்கள் செய்தீர்கள் என்றால் பின் உங்கள் தேவனாகிய கர்த்தர் நீங்கள் செய்யும் எல்லாவற்றையும் ஆசீர்வதிப்பார்.

உபாகமம் 14:11-29 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

சுத்தமான சகல பட்சிகளையும் நீங்கள் புசிக்கலாம். நீங்கள் புசிக்கத்தகாதவைகள் எவையென்றால்: கழுகும், கருடனும், கடலுராஞ்சியும், பைரியும், வல்லூறும், சகலவித பருந்தும், சகலவித காகங்களும், தீக்குருவியும், கூகையும், செம்புகமும், சகலவிதமான டேகையும், ஆந்தையும், கோட்டானும், நாரையும், கூழக்கடாவும், குருகும், நீர்க்காகமும், கொக்கும், சகலவித ராஜாளியும், புழுக்கொத்தியும், வெளவாலுமே. பறக்கிறவைகளில் ஊர்வன யாவும் உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக; அவைகள் புசிக்கத்தகாதவைகள். சுத்தமான பறவைகள் யாவையும் நீங்கள் புசிக்கலாம். தானாய் இறந்து போனதொன்றையும் புசிக்கவேண்டாம்; உங்கள் வாசல்களில் இருக்கிற பரதேசிக்கு அதைப் புசிக்கக்கொடுக்கலாம்; அல்லது அந்நியனுக்கு அதை விற்றுப்போடலாம்; நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்த ஜனங்கள். வெள்ளாட்டுக்குட்டியை அதின் தாயின் பாலிலே சமைக்கவேண்டாம். நீ உன் தேவனாகிய கர்த்தருக்கு எப்பொழுதும் பயந்திருக்கப் பழகும்படிக்கு, வருஷந்தோறும் நீ விதைக்கிற விதைப்பினாலே வயலில் விளையும் எல்லாப் பலனிலும் தசமபாகத்தைப் பிரித்து, உன் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் ஸ்தானத்திலே, உன் தானியத்திலும் உன் திராட்சரசத்திலும் உன் எண்ணெயிலும் தசமபாகத்தையும் உன் ஆடுமாடுகளின் தலையீற்றுகளையும் அவருடைய சந்நிதியில் புசிப்பாயாக. உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதிக்கும் காலத்தில், உன் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொண்ட ஸ்தானம் உனக்கு வெகு தூரமாயிருக்கிறதினால், வழிப்பிரயாணத்தின் வெகு தொலைவினிமித்தம், நீ அதைக் கொண்டுபோகக்கூடாதிருக்குமானால், அதைப் பணமாக்கி, பணமுடிப்பை உன் கையிலே பிடித்துக்கொண்டு, உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்துகொண்ட ஸ்தலத்திற்குப் போய், அங்கே உன் இஷ்டப்படி ஆடுமாடு, திராட்சரசம், மதுபானம் முதலான சகலத்தையும் பணம்கொடுத்து வாங்கி, உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில், நீயும் உன் குடும்பத்தாரும் உன் வாசல்களில் இருக்கிற லேவியனும் புசித்துச் சந்தோஷப்படுவீர்களாக. லேவியனுக்கு உன்னோடே பங்கும் சுதந்தரமும் இல்லாதபடியால் அவனைக் கைவிடாயாக. மூன்றாம் வருஷத்தின் முடிவிலே அவ்வருஷத்தில் உனக்கு வந்த பலன் எல்லாவற்றிலும் தசமபாகத்தைப் பிரித்து, உன் வாசல்களில் வைக்கக்கடவாய். லேவியனுக்கு உன்னோடே பங்கும் சுதந்தரமும் இல்லாதபடியினால், அவனும், உன் வாசல்களில் இருக்கிற பரதேசியும், திக்கற்றவனும், விதவையும் வந்து புசித்துத் திருப்தியடைவார்களாக; அப்பொழுது உன் கை செய்யும் வேலையிலெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பார்.