உபாகமம் 1:26-31

உபாகமம் 1:26-31 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அப்படியிருந்தும் நீங்கள் அங்கு ஏறிப்போக மனதற்றவர்களாய், உங்களுடைய இறைவனாகிய யெகோவாவின் கட்டளைக்கு விரோதமாகக் கலகம் செய்தீர்கள். நீங்கள் உங்கள் கூடாரங்களிலிருந்து முறுமுறுத்து, “யெகோவா எங்களை வெறுக்கிறார்; அதனால்தான் எங்களை அழிப்பதற்காக எமோரியரின் கையில் ஒப்படைக்கும்படி எகிப்திலிருந்து எங்களை வெளியே கொண்டுவந்தார். நாங்கள் எங்கே போவது? எங்கள் சகோதரர் எங்களை மனந்தளரப் பண்ணிவிட்டார்களே. ‘அந்த மக்கள் எங்களைவிட பலமும் உயரமுமாய் இருக்கிறார்கள்; அவர்களுடைய பட்டணங்கள் பெரியவையும், அவற்றின் மதில்கள் வானத்தைத் தொடுமளவுக்கு இருக்கின்றன. மேலும் நாங்கள் ஏனாக்கியரான அரக்கரையும் அங்கே கண்டோம்,’ என்கிறார்கள்” என்று சொன்னீர்கள். அப்பொழுது நான் உங்களிடம், “திகிலடையவேண்டாம்; அவர்களுக்குப் பயப்படவும் வேண்டாம். உங்களுக்கு முன்பாகச் செல்லும் உங்கள் இறைவனாகிய யெகோவா, உங்கள் கண்களுக்கு முன்பாக எகிப்தில் செய்ததுபோல, உங்களுக்காக யுத்தம் செய்வார். நீங்கள் இந்த இடத்தை வந்து சேரும்வரை, நீங்கள் சென்ற வழிகளிலெல்லாம் ஒரு தகப்பன் தன் மகனைச் சுமந்துசெல்லுவது போல, உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களை எப்படிச் சுமந்தார் என்பதை அங்கே கண்டீர்களே” என்றேன்.

உபாகமம் 1:26-31 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

“அப்படியிருந்தும், நீங்கள், போகமாட்டோம் என்று உங்கள் தேவனாகிய யெகோவாவுடைய கட்டளைக்கு விரோதமாக எதிர்த்து, உங்கள் கூடாரங்களில் முறுமுறுத்து: யெகோவா நம்மை வெறுத்து, நம்மை அழிப்பதற்காக நம்மை எமோரியர்களின் கையில் ஒப்புக்கொடுக்க, நம்மை எகிப்து தேசத்திலிருந்து புறப்படச்செய்தார். நாம் எங்கே போகலாம்; அந்த மக்கள் நம்மைவிட பலவான்களும், உயரமானவர்களும், அவர்களுடைய பட்டணங்கள் பெரியவைகளும், வானளாவிய மதிலுள்ளவைகளுமாக இருக்கிறதென்றும், ஏனாக்கியர்களின் சந்ததியையும் அங்கே கண்டோம் என்றும் நம்முடைய சகோதரர்கள் சொல்லி, நம்முடைய இருதயத்தைக் கலங்கச்செய்தார்கள் என்று சொன்னீர்கள். அப்பொழுது நான் உங்களை நோக்கி: நீங்கள் கலங்காமலும் அவர்களுக்குப் பயப்படாமலும் இருங்கள். உங்களுக்கு முன் செல்லும் உங்கள் தேவனாகிய யெகோவா தாமே எகிப்தில் உங்களோடிருந்து, உங்கள் கண்களுக்கு முன்பாகச் செய்த எல்லாவற்றைப் போலவும், வனாந்திரத்தில் செய்துவந்ததுபோலவும், உங்களுக்காக போர்செய்வார். ஒரு மனிதன் தன் பிள்ளையைச் சுமந்துகொண்டு போவதுபோல, நீங்கள் இவ்விடத்திற்கு வருகிறவரைக்கும், நடந்துவந்த வழிகள் எல்லாவற்றிலும், உங்கள் தேவனாகிய யெகோவா உங்களைச் சுமந்துகொண்டு வந்ததைக் கண்டீர்களே.

உபாகமம் 1:26-31 பரிசுத்த பைபிள் (TAERV)

“ஆனால் நீங்களோ அங்கு செல்ல மறுத்து, உங்கள் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைக்குக் கீழ்ப்படிய மறுத்தீர்கள். நீங்கள் உங்களது கூடாரங்களுக்குத் திரும்பிச்சென்று குறைகூறத் துவங்கினீர்கள். நீங்கள், ‘கர்த்தர் நம்மை வெறுக்கிறார்! எமோரிய ஜனங்கள் நம்மை அழிப்பதற்காகவே அவர் எகிப்து தேசத்திலிருந்து நம்மை வெளியேற்றினார்! நாம் இப்பொழுது எங்கே செல்லமுடியும்? நம் சகோதரர்கள் (பன்னிரண்டு ஒற்றர்கள்) நம்மை பயமுறுத்திவிட்டார்கள். அவர்கள், “அங்குள்ளவர்கள் நம்மை விடவும் பலசாலிகளாகவும், உயரமானவர்களாகவும் இருக்கிறார்கள்! நகரங்கள் பெரியனவாயும், வானுயர்ந்த சுவர்களைக் கொண்டதாயும் உள்ளன! மேலும் நாங்கள் இராட்சதர்களை அங்கே கண்டோம்!”’ என்று சொன்னீர்கள். “ஆகவே நான் உங்களிடம்: ‘கலக்கம் அடையாதீர்கள்! அந்த ஜனங்களைக் குறித்துப் பயப்படாதீர்கள்! உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு முன்னால் சென்று உங்களுக்காகப் போரிடுவார். அவர் எகிப்தில் செய்ததைப் போலவே இதையும் செய்வார், அவர் பாலைவனத்தில் செய்ததைக் கண்டீர்கள். தன் குமாரனை ஒருவன் சுமந்து செல்வதைப்போல, தேவன் உங்களை சுமந்து சென்றதைக் கண்டீர்கள். கர்த்தர் உங்களைப் பத்திரமாக இங்கே கொண்டு வந்து சேர்த்தார்’ என்று கூறினேன்.

உபாகமம் 1:26-31 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அப்படியிருந்தும், நீங்கள் போகமாட்டோம் என்று உங்கள் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைக்கு விரோதமாக எதிர்த்து, உங்கள் கூடாரங்களில் முறுமுறுத்து: கர்த்தர் நம்மை வெறுத்து, நம்மை அழிக்கும்பொருட்டாக நம்மை எமோரியரின் கையில் ஒப்புக்கொடுக்கும்படி, நம்மை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணினார். நாம் எங்கே போகலாம்; அந்த ஜனங்கள் நம்மைப்பார்க்கிலும் பலவான்களும், நெடியவர்களும், அவர்கள் பட்டணங்கள் பெரியவைகளும், வானத்தையளாவும் மதிலுள்ளவைகளுமாய் இருக்கிறதென்றும், ஏனாக்கியரின் புத்திரரையும் அங்கே கண்டோம் என்றும் நம்முடைய சகோதரர் சொல்லி, நம்முடைய இருதயத்தைக் கலங்கப்பண்ணினார்கள் என்று சொன்னீர்கள். அப்பொழுது நான் உங்களை நோக்கி: நீங்கள் கலங்காமலும் அவர்களுக்குப் பயப்படாமலும் இருங்கள். உங்களுக்கு முன் செல்லும் உங்கள் தேவனாகிய கர்த்தர் தாமே எகிப்தில் உங்களோடிருந்து, உங்கள் கண்களுக்கு முன்பாகச் செய்ததெல்லாவற்றைப்போலவும், வனாந்தரத்தில் செய்துவந்ததுபோலவும், உங்களுக்காக யுத்தம்பண்ணுவார். ஒரு மனிதன் தன் பிள்ளையைச் சுமந்துகொண்டு போவதுபோல, நீங்கள் இவ்விடத்திற்கு வருகிறவரைக்கும், நடந்துவந்த வழிகள் எல்லாவற்றிலும், உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களைச் சுமந்துகொண்டு வந்ததைக் கண்டீர்களே.