தானியேல் 9:20-27

தானியேல் 9:20-27 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இவ்வாறு நான் எனது பாவங்களையும், எங்கள் மக்களாகிய இஸ்ரயேலரின் பாவங்களையும் அறிக்கையிட்டு, என் இறைவனாகிய எனது யெகோவாவின் பரிசுத்த மலைக்காகவும் மன்றாடிக்கொண்டிருந்தேன். இவ்வாறு நான் மன்றாடிக்கொண்டிருக்கையில், முன்பு தரிசனத்தில் நான் கண்ட காபிரியேல் என்பவர், மாலைப்பலி செலுத்தும் வேளையில் விரைவாகப் பறந்து என்னிடத்தில் வந்தார். அவர் வந்து அறிவுறுத்தி எனக்குச் சொன்னதாவது: “தானியேலே உனக்கு நுண்ணறிவையும், விளங்கிக்கொள்ளும் ஆற்றலையும் தரவே நான் இப்பொழுது வந்திருக்கிறேன். நீ மன்றாடத் தொடங்கியவுடனேயே பதில் ஒன்று கொடுக்கப்பட்டது. அதை உனக்குச் சொல்லவே நான் வந்திருக்கிறேன். ஏனெனில் நீ உயர்வாக மதிக்கப்பட்டிருக்கிறாய். ஆதலால் செய்தியைக் கவனமாய்க் கேட்டு, தரிசனத்தின் விளக்கத்தைத் தெரிந்துகொள். “உன் மக்களின் மீறுதல் முடிவுக்கு வரவும், உங்கள் பரிசுத்த நகரத்தின் மீறுதல் முடிவுக்கு வரவும், பாவம் நிறுத்தப்படவும், கொடுமை நிவிர்த்தி செய்யப்படவும், நித்தியமான நியாயம் கொண்டுவரப்படவும், தரிசனமும் இறைவாக்கும் முத்திரையிடப்படவும், மகா பரிசுத்த இடம் அபிஷேகம் செய்யப்படவும் நியமிக்கப்பட்ட காலம் எழுபது ‘ஏழுகள்’ ஆகும். “நீ இதை அறிந்து விளங்கிக்கொள். எருசலேம் மீண்டும் புதுப்பித்து கட்டப்படும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதிலிருந்து, அபிஷேகம் செய்யப்பட்டவரான ஆளுநர் வரும்வரைக்கும் ஏழு ‘ஏழுகளும்’ அறுபத்திரண்டு ‘ஏழுகளும்’ செல்லும். அது வீதிகளும், அலங்கங்களும் உடையதாய் கட்டப்படும். ஆயினும் துன்ப காலங்களிலேயே அது கட்டப்படும். அறுபத்திரண்டு ‘ஏழுகளின்’ பின் அபிஷேகம் செய்யப்பட்டவர் நீக்கப்பட்டு ஒன்றுமில்லாதிருப்பார். வரப்போகும் ஆளுநனின் மக்கள் பட்டணத்தையும், பரிசுத்த ஆலயத்தையும் அழித்துப்போடுவார்கள். முடிவு வெள்ளம்போல் வரும். முடிவுவரை யுத்தம் தொடரும். அழிவுகள் நியமிக்கப்பட்டிருக்கின்றன. அவன் ஒரு ‘ஏழுக்கு’ உடன்படிக்கை ஒன்றை பலருடன் உறுதிப்படுத்துவான். ஆயினும் அந்த ‘ஏழின்’ மத்தியில் பலிக்கும், காணிக்கைக்கும் ஒரு முடிவை உண்டுபண்ணுவான். அழிவைச் செய்கிறவன், நியமிக்கப்பட்ட முடிவு அவன்மேல் வரும்வரை ஆலயத்தின் ஒரு முனையின்மேல் அழிவைக் கொண்டுவரும் அருவருப்பை வைப்பான் என்றார்.”

தானியேல் 9:20-27 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

இப்படி நான் சொல்லி, ஜெபம்செய்து, என் பாவத்தையும் என் மக்களாகிய இஸ்ரவேலின் பாவத்தையும் அறிக்கைசெய்து, என் தேவனுடைய பரிசுத்த மலைக்காக என் விண்ணப்பத்தை என் தேவனாகிய யெகோவாவுக்கு முன்பாகச் செலுத்திக்கொண்டிருந்தேன். அப்படி நான் ஜெபம் செய்துகொண்டிருக்கும்போதே, முதல் தரிசனத்திலே நான் கண்ட தேவதூதனாகிய காபிரியேல், வேகமாகப் பறந்துவந்து, மாலைநேர பலிசெலுத்தும் மாலைநேரத்திலே என்னைத் தொட்டான். அவன் எனக்குத் தெளிவுண்டாக்கி, என்னுடன் பேசி: தானியேலே, உனக்கு அறிவை உணர்த்தும்படி இப்போது புறப்பட்டுவந்தேன். நீ மிகவும் பிரியமானவன், ஆதலால், நீ வேண்டிக்கொள்ளத் தொடங்கினபோதே கட்டளை வெளிப்பட்டது, நான் அதை அறிவிக்கவந்தேன்; இப்போதும் சொல்லுகிற வார்த்தையை நீ கவனித்துக்கேட்டு, தரிசனத்தை அறிந்துகொள். மீறுதலைத் தவிர்க்கிறதற்கும், பாவங்களைத் தொலைக்கிறதற்கும், அக்கிரமத்தை நிவிர்த்திசெய்கிறதற்கும், நித்திய நீதியை வருவிக்கிறதற்கும், தரிசனத்தையும் தீர்க்கதரிசனத்தையும் முத்திரை இடுகிறதற்கும், மகா பரிசுத்தமுள்ளவரை அபிஷேகம்செய்கிறதற்கும், உன் மக்களின்மேலும் உன் பரிசுத்த நகரத்தின்மேலும் எழுபதுவாரங்கள் ஆகுமென்று குறிக்கப்பட்டிருக்கிறது. இப்போதும் நீ அறிந்து உணர்ந்துகொள்ளவேண்டியது என்னவென்றால்: எருசலேமைத் திரும்ப எழுப்பித்துக்கட்டுகிறதற்கான கட்டளை வெளிப்படுவதுமுதல், பிரபுவாகிய மேசியா வரும்வரை ஏழு வாரங்களும், அறுபத்திரண்டு வாரங்களும் ஆகும்; அவைகளில் வீதிகளும் மதில்களும் மறுபடியும் கட்டப்படும்; ஆனாலும் துன்பமான காலங்களில் இப்படியாகும். அந்த அறுபத்திரண்டு வாரங்களுக்குப் பின்பு மேசியா கொல்லப்படுவார்; ஆனாலும் தமக்காக அல்ல; நகரத்தையும் பரிசுத்த இடத்தையும் வரப்போகிற பிரபுவின் மக்கள் அழித்துப்போடுவார்கள்; அதின் முடிவு வெள்ளப்பெருக்கத்தைப்போல இருக்கும்; முடிவுவரை போரும் அழிவும் உண்டாக நியமிக்கப்பட்டது. அவர் ஒரு வாரம்வரைக்கும் அநேகருக்கு உடன்படிக்கையை உறுதிப்படுத்தி, அந்த வாரம் பாதி சென்றபோது பலியையும் காணிக்கையையும் ஒழியச்செய்வார்; அருவருப்பான இறக்கைகளோடே பாழாக்குகிறவன் வந்து இறங்குவான், நிர்ணயிக்கப்பட்டிருக்கிற அழிவு பாழாக்குகிறவன்மேல் தீரும்வரை ஊற்றும் என்றான்.

தானியேல் 9:20-27 பரிசுத்த பைபிள் (TAERV)

நான் எனது ஜெபத்தில் தேவனிடம் இவற்றைச் சொன்னேன். நான் எனது பாவங்களைப் பற்றியும், இஸ்ரவேல் ஜனங்களின் பாவங்களைப் பற்றியும் சொல்லிக்கொண்டிருந்தேன். நான் தேவனுடைய பரிசுத்தமான மலைக்காக ஜெபித்துக்கொண்டிருந்தேன். நான் ஜெபித்துக்கொண்டிருக்கும்போது, காபிரியேல் என்ற தூதன் என்னிடம் வந்தான். காபிரியேல் நான் தரிசனத்தில் பார்த்த மனிதன். காபிரியேல் விரைவாக என்னிடம் பறந்துவந்தான். அவன் மாலைப் பலி நேரத்தில் வந்தான். காபிரியேல், நான் அறிய விரும்பியவற்றை நான் புரிந்துகொள்ள உதவினான். காபிரியேல் என்னிடம், “தானியேலே, நான் உனக்கு ஞானத்தையும், அறிவையும் கொடுக்க வந்திருக்கிறேன். நீ முதலில் ஜெபிக்க ஆரம்பித்தபோதே எனக்குக் கட்டளை கொடுக்கப்பட்டது. நான் உன்னிடம் சொல்ல வந்தேன். தேவன் உன்னை மிகவும் நேசிக்கிறார். இந்தக் கட்டளையை நீ புரிந்துகொள்வாய். நீ இந்தத் தரிசனத்தைப் புரிந்துகொள்வாய். “தேவன் 70 வாரங்களை உனது ஜனங்களுக்கும் உனது பரிசுத்தமான நகரத்திற்கும் அனுமதித்தார். தீமைகள் செய்வதை நிறுத்துவதற்கும், பாவங்கள் செய்வதை நிறுத்துவதற்கும், ஜனங்களைச் சுத்தப்படுத்துவதற்கும், என்றென்றும் நிலைத்திருக்கிற நன்மையைக் கொண்டு வருவதற்கும், தரிசனங்களையும், தீர்க்கதரிசிகளையும் முத்திரையிடுவதற்கும், மிகப்பரிசுத்தமான இடத்தை அர்ப்பணிப்பதற்கும் இந்த 70 வாரங்கள் நியமிக்கப்பட்டன. “தானியேலே, இவற்றைக் கற்றுக்கொள். இவற்றைப் புரிந்துகொள், எருசலேமைத் திரும்ப எடுப்பித்துக் கட்டுவதற்கான கட்டளை தரப்பட்டதுமுதல் தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜா வரும்வரை ஏழு வாரங்களாகும். எருசலேம் மீண்டும் கட்டப்பட்டு கூட்டம் கூடுவதற்கான இடங்கள் ஏற்படுத்தப்படும். பாதுகாப்பிற்காக நகரத்தைச் சுற்றி ஒரு பள்ளம் தோண்டப்படும். எருசலேமானது 62 வாரங்களில் கட்டப்படும். ஆனால் அந்நேரத்தில் அநேக துன்பங்கள் நேரிடும். 62 வாரங்கள் சென்றபிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட நபர் கொல்லப்படுவான். அவன் போய்விடுவான். பிறகு வருங்காலத் தலைவனின் ஜனங்கள் நகரத்தையும் பரிசுத்தமான இடத்தையும் அழிப்பார்கள். அம்முடிவானது வெள்ளத்தைப்போன்று வரும். போரானது முடிவுவரை தொடரும். அந்த இடம் முழுமையாக அழிக்கப்படவேண்டும் என்று தேவன் கட்டளை கொடுத்திருக்கிறார். “பிறகு, வருங்கால ராஜா பல ஜனங்களோடு ஒரு ஒப்பந்தம் செய்துகொள்வான். அந்த ஒப்பந்தம் ஒரு வாரத்திற்கு நீடிக்கும். அரை வாரத்திற்குப் பலிகளும் காணிக்கைகளும் நிறுத்தப்படும். பாழாக்குகிறவன் வருவான். அவன் பயங்கரங்களையும், அழிவுக்குரியக் காரியங்களையும் செய்வான். ஆனால் தேவன், அந்த பாழாக்குகிறவன் முழுமையாக அழிக்கப்படவேண்டும் என்று கட்டளையிட்டிருக்கிறார்” என்றான்.

தானியேல் 9:20-27 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

இப்படி நான் சொல்லி, ஜெபம்பண்ணி, என் பாவத்தையும் என் ஜனமாகிய இஸ்ரவேலின் பாவத்தையும் அறிக்கையிட்டு, என் தேவனுடைய பரிசுத்த பர்வதத்துக்காக என் விண்ணப்பத்தை என் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாகச் செலுத்திக்கொண்டிருந்தேன். அப்படி நான் ஜெபம்பண்ணிக்கொண்டிருக்கும்போதே, முதல் தரிசனத்திலே நான் கண்ட புருஷனாகிய காபிரியேல், வேகமாய்ப் பறந்துவந்து, அந்திப்பலியின் நேரமாகிய வேளையிலே என்னைத் தொட்டான். அவன் எனக்குத் தெளிவுண்டாக்கி, என்னோடே பேசி: தானியேலே, உனக்கு அறிவை உணர்த்தும்படி இப்போது புறப்பட்டுவந்தேன். நீ மிகவும் பிரியமானவன், ஆதலால், நீ வேண்டிக்கொள்ளத் தொடங்கினபோதே கட்டளை வெளிப்பட்டது, நான் அதை அறிவிக்கவந்தேன்; இப்போதும் சொல்லுகிற வார்த்தையை நீ கவனித்துக்கேட்டு, தரிசனத்தை அறிந்துகொள். மீறுதலைத் தவிர்க்கிறதற்கும், பாவங்களைத் தொலைக்கிறதற்கும், அக்கிரமத்தை நிவிர்த்திபண்ணுகிறதற்கும், நித்திய நீதியை வருவிக்கிறதற்கும், தரிசனத்தையும் தீர்க்கதரிசனத்தையும் முத்திரிக்கிறதற்கும், மகா பரிசுத்தமுள்ளவரை அபிஷேகம்பண்ணுகிறதற்கும், உன் ஜனத்தின்மேலும் உன் பரிசுத்த நகரத்தின்மேலும் எழுபதுவாரங்கள் செல்லும்படி குறிக்கப்பட்டிருக்கிறது. இப்போதும் நீ அறிந்து உணர்ந்துகொள்ளவேண்டியது என்னவென்றால்: எருசலேமைத் திரும்ப எடுப்பித்துக்கட்டுகிறதற்கான கட்டளை வெளிப்படுவதுமுதல், பிரபுவாகிய மேசியா வருமட்டும் ஏழு வாரமும், அறுபத்திரண்டுவாரமும் செல்லும்; அவைகளில் வீதிகளும் அலங்கங்களும் மறுபடியும் கட்டப்படும்; ஆனாலும் இடுக்கமான காலங்களில் இப்படியாகும். அந்த அறுபத்திரண்டுவாரங்களுக்குப் பின்பு மேசியா சங்கரிக்கப்படுவார்; ஆனாலும் தமக்காக அல்ல; நகரத்தையும் பரிசுத்த ஸ்தலத்தையும் வரப்போகிற பிரபுவின் ஜனங்கள் அழித்துப்போடுவார்கள்; அதின் முடிவு ஜலப்பிரவாகம்போல இருக்கும்; முடிவுபரியந்தம் யுத்தமும் நாசமும் உண்டாக நியமிக்கப்பட்டது. அவர் ஒரு வாரமளவும் அநேகருக்கு உடன்படிக்கையை உறுதிப்படுத்தி, அந்த வாரம் பாதி சென்றபோது பலியையும் காணிக்கையையும் ஒழியப்பண்ணுவார்; அருவருப்பான செட்டைகளோடே பாழாக்குகிறவன் வந்து இறங்குவான், நிர்ணயிக்கப்பட்டிருக்கிற நிர்மூலம் பாழாக்குகிறவன்மேல் தீருமட்டும் சொரியும் என்றான்.