தானியேல் 6:1-5

தானியேல் 6:1-5 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அரசன் தரியு, தனது அரசை நல்லமுறையில் ஆளுகைசெய்ய விரும்பி, தனது அரசு எங்கும் நூற்றிருபது சிற்றரசர்களை நியமித்தான். அதோடு அவர்களுக்கு மேலாக மூன்று நிர்வாகிகளையும் நியமித்தான். அவர்களில் தானியேலும் ஒருவன். அரசனுக்கு நஷ்டம் ஏற்படாதவாறு இந்தச் சிற்றரசர்கள் நிர்வாகிகளுக்குக் கணக்கு ஒப்புவிக்க வேண்டியதாயிருந்தது. தானியேலில் தனிச் சிறப்புவாய்ந்த பண்புகள் இருந்தன. ஆதலால் அவன் மற்ற நிர்வாகிகளையும், சிற்றரசர்களையும்விட சிறந்து விளங்கினான். இதனால் அரசன் தனது முழு அரசின்மேலும் அவனை பொறுப்பாய் நியமிக்கத் திட்டமிட்டான். இதையறிந்த மற்றைய நிர்வாகிகளும், சிற்றரசர்களும், தானியேலின் அரசியல் விவகாரங்களில் தானியேலின் நடத்தைக்கு எதிராகக் குற்றம் சாட்டுவதற்கான காரணங்களைக் கண்டுபிடிக்க முயற்சித்தார்கள். ஆனால் அவர்களால் அப்படிச் செய்ய முடியவில்லை. அவன் நம்பிக்கைக்குரியவனும், ஊழலும் கடமையில் அலட்சியமும் இல்லாதவனுமாய் இருந்தபடியால், அவனில் எந்தவித குற்றத்தையும் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. இறுதியாக அந்த மனிதர்கள், “தானியேலை வேறொன்றிலும் குற்றப்படுத்த முடியாது. அவனை அவனுடைய இறைவனது சட்டத்தைப்பற்றிய விஷயங்களில் மட்டுமே குற்றப்படுத்தலாம் என்றார்கள்.”

தானியேல் 6:1-5 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

ராஜ்ஜியம் முழுவதையும் ஆளுவதற்காகத் தன் ராஜ்ஜியத்தின்மேல் நூற்றிருபது தேசாதிபதிகளையும், ராஜாவிற்கு நஷ்டம் வராதபடிக்கு அந்த தேசாதிபதிகள் கணக்கு ஒப்புவிக்கிறதற்காக அவர்களுக்கு மேலாக மூன்று அதிகாரிகளையும் ஏற்படுத்துவது தரியுவிற்கு நலமென்று காணப்பட்டது; இவர்களில் தானியேலும் ஒருவனாயிருந்தான். இப்படியிருக்கும்போது தானியேல் அதிகாரிகளுக்கும் தேசாதிபதிகளுக்கும் மேலானவனாயிருந்தான்; தானியேலுக்குள் விசேஷித்த ஆவி இருந்ததால் அவனை ராஜ்ஜியம் முழுவதற்கும் அதிகாரியாக ஏற்படுத்த ராஜா நினைத்தான். அப்பொழுது அதிகாரிகளும் தேசாதிபதிகளும் ராஜ்ஜியத்தின் விசாரிப்பிலே தானியேலைக் குற்றப்படுத்தும்படி காரணத்தைத் தேடினார்கள்; ஆனாலும் ஒரு காரணத்தையும் குற்றத்தையும் கண்டுபிடிக்க அவர்களால் முடியாமலிருந்தது; அவன் உண்மையுள்ளவனாக இருந்ததால் அவன்மேல் சுமத்த எந்தவொரு குற்றமும் குறைவும் காணப்படவில்லை. அப்பொழுது அந்த மனிதர்கள்: நாம் இந்த தானியேலை அவனுடைய தேவனைப்பற்றிய வேதவிஷயத்திலே குற்றப்படுத்தும் காரணத்தைக் கண்டுபிடித்தாலொழிய அவனை வேறொன்றிலும் குற்றப்படுத்தும் காரணத்தைக் கண்டுபிடிக்கமுடியாது என்றார்கள்.

தானியேல் 6:1-5 பரிசுத்த பைபிள் (TAERV)

தரியு தனது இராஜ்யம் முழுவதையும் ஆளுவதற்கு 120 தேசாதிபதிகளைத் தேர்ந்தெடுப்பது நல்ல திட்டமென்று எண்ணினான். அவன் அந்த 120 தேசாதிபதிகளையும் கட்டுப்படுத்த மூன்று பேரைத் தேர்ந்தெடுத்தான். இந்த மூன்று மேற்பார்வையாளர்களில் தானியேலும் ஒருவன். ராஜா இவ்வாறு ஓர் ஏற்பாடு செய்துவிட்டதால் எவரும் அவனை ஏமாற்ற முடியாது. அதோடு அவன் தனது இராஜ்யத்தில் எதையும் இழக்கமாட்டான். தானியேல் தன்னை மற்ற மேற்பார்வையாளர்களைவிடச் சிறந்தவனாகக் காட்டினான். தானியேல் இதனைத் தனது நற்குணங்கள் மூலமும், நல்ல திறமைகள் மூலமும் செய்தான். ராஜா தானியேலின்மேல் மிகவும் வியப்படைந்தான். அவன் தானியேலை இராஜ்யம் முழுவதற்கும் ஆளுநாரக்கிவிடலாம் என்று திட்டமிட்டான். ஆனால் மற்ற மேற்பார்வையளர்களும், மற்ற தேசாதிபதிகளும் இதனை அறிந்ததும் மிகவும் பொறாமைகொண்டனர். அவர்கள் தானியேலை குற்றஞ்சாட்ட காரணங்களைத் தேடினர். எனவே அவர்கள் தானியேல் அரசு பணிகளைச் செய்யும்போது மிகக் கவனமாகக் கவனித்தனர். ஆனால் அவர்களால் தானியேலிடம் எந்தக் குறையையும் கண்டுபிடிக்க முடியவில்லை. தானியேல் நேர்மையாளனாகவும், நம்பிக்கைக்குரியவனாகவும் இருந்தான். அவன் ராஜாவை ஏமாற்றாமல் மிகக் கடுமையாக வேலை செய்து வந்தான். இறுதியாக அந்த ஆட்கள், “நாம் தானியேலை குற்றம் கண்டுபிடிக்கும்படி தவறான எதையும் அவன் செய்யமாட்டான். எனவே நாம் அவனது தேவனுடைய சட்ட விஷயத்தில் குற்றம் காண வேண்டும்” என்று பேசிக்கொண்டனர்.

தானியேல் 6:1-5 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

ராஜ்யம் முழுவதையும் ஆளும்படிக்குத் தன் ராஜ்யத்தின்மேல் நூற்றிருபது தேசாதிபதிகளையும், ராஜாவுக்கு நஷ்டம் வராதபடிக்கு அந்த தேசாதிபதிகள் கணக்கு ஒப்புவிக்கிறதற்காக அவர்களுக்கு மேலாக மூன்று பிரதானிகளையும் ஏற்படுத்துவது தரியுவுக்கு நலமென்று கண்டது; இவர்களில் தானியேல் ஒருவனாயிருந்தான். இப்படியிருக்கையில் தானியேல் பிரதானிகளுக்கும் தேசாதிபதிகளுக்கும் மேற்பட்டவனாயிருந்தான்; தானியேலுக்குள் விசேஷித்த ஆவி இருந்தமையால் அவனை ராஜ்யம் முழுமைக்கும் அதிகாரியாக ஏற்படுத்த ராஜா நினைத்தான். அப்பொழுது பிரதானிகளும் தேசாதிபதிகளும் ராஜ்யத்தின் விசாரிப்பிலே தானியேலைக் குற்றப்படுத்தும்படி முகாந்தரம் தேடினார்கள்; ஆனாலும் ஒரு முகாந்தரத்தையும் குற்றத்தையும் கண்டுபிடிக்க அவர்களால் கூடாதிருந்தது; அவன் உண்மையுள்ளவனாயிருந்தபடியால் அவன்மேல் சுமத்த யாதொரு குற்றமும் குறைவும் காணப்படவில்லை. அப்பொழுது அந்த மனுஷர்: நாம் இந்த தானியேலை அவனுடைய தேவனைப்பற்றிய வேதவிஷயத்திலே குற்றப்படுத்தும் முகாந்தரத்தைக் கண்டுபிடித்தாலொழிய அவனை வேறொன்றிலும் குற்றப்படுத்தும் முகாந்தரத்தைக் கண்டுபிடிக்கக்கூடாது என்றார்கள்.