தானியேல் 4:25-34

தானியேல் 4:25-34 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

நீர் மக்கள் மத்தியிலிருந்து துரத்தப்பட்டு, காட்டு மிருகங்களோடு வாழ்வீர். ஆகாயத்துப் பனியில் நனைந்து மாட்டைப்போல் புல்லைத் தின்பீர். மகா உன்னதமானவர் மனிதனுடைய அரசுகளின்மேல் ஆளுபவர் என்பதையும், அவர் விரும்பியவனுக்கே அதைக் கொடுப்பார் என்பதையும் நீர் ஏற்றுக்கொள்ளும்வரைக்கும் ஏழு காலங்கள் உம்மைக் கடந்துபோகும். ஆயினும், ‘வேர்களோடு அடிமரத்தை விட்டு வை’ என்ற கட்டளையின் விளக்கம் இதுவே: பரலோகமே ஆளுகை செய்கிறது என்பதை நீர் ஏற்றுக்கொள்ளும்போது, உமது அரசு உமக்கே திரும்பிக் கொடுக்கப்படும். ஆகையால் அரசே, தயவுசெய்து நான் சொல்லும் ஆலோசனையைக் கேளும். நியாயமானவற்றைச் செய்து உமது பாவங்களையும், ஒடுக்கப்பட்டோருக்கு இரக்கம் காட்டி உமது கொடுமைகளையும் அகற்றிவிடும். அதனால் ஒருவேளை உமது வளமான வாழ்வு நீடிக்கலாம் என்றான்.” இவையெல்லாம் நேபுகாத்நேச்சார் அரசனுக்கு நிறைவேறியது. பன்னிரண்டு மாதங்களுக்குப் பின்பு ஒரு நாள் அரசன், பாபிலோனின் அரச அரண்மனை மொட்டைமாடியில் உலாவிக்கொண்டிருந்தான். அப்பொழுது அரசன், “நான் கட்டிய மாபெரும் பாபிலோன் இது அல்லவா! எனது மிகுந்த வல்லமையினால் எனது மாட்சிமையின் மகிமைக்காக எனது அரச குடியிருப்பாக இதைக் கட்டினேன், என தனக்குள் சொல்லிக்கொண்டான்.” இந்த வார்த்தைகள் அவனுடைய உதட்டில் இன்னும் இருக்கும்போதே பரலோகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி, “நேபுகாத்நேச்சார் அரசனே, உனக்குத் தீர்ப்பிடப்பட்டது இதுவே: உனது அரச அதிகாரம் உன்னிடமிருந்து இப்பொழுதே பறிக்கப்பட்டுவிடும். நீ மனிதரிடமிருந்து துரத்தப்பட்டு, காட்டு மிருகங்களோடு வாழ்வாய். மாடுகளைப்போல் புல்லைத் தின்பாய். மகா உன்னதமானவர், மனிதர்களின் அரசுகளின்மேல் ஆளுபவர் என்பதையும், தாம் விரும்பியவர்களுக்கு அரசாட்சியைக் கொடுப்பவர் என்பதையும் நீ ஏற்றுக்கொள்ளும்வரைக்கும் ஏழு காலங்கள் கடந்துபோகவேண்டும் என அச்சத்தம் சொல்வதைக் கேட்டான்.” உடனடியாக நேபுகாத்நேச்சாரைப் பற்றிச் சொல்லப்பட்டது நிறைவேறியது. அவன் மனிதரிலிருந்து துரத்தப்பட்டு, மாடுகளைப்போல் புல்லைத் தின்றான். அவனுடைய உடல் ஆகாயத்துப் பனியில் நனைந்து அவனுடைய தலைமயிர் கழுகுகளின் இறகுகளைப்போல் வளர்ந்தது. அவனுடைய நகங்கள் பறவையின் நகங்களைப்போல் வளர்ந்தது. அந்த ஏழு காலம் முடிந்தபின் நேபுகாத்நேச்சாராகிய நான் வானத்தை நோக்கிப் பார்த்தேன். அந்நேரம் எனது சுயபுத்தி எனக்குத் திரும்பவும் கொடுக்கப்பட்டது. அப்பொழுது நான் மகா உன்னதமானவரைத் துதித்தேன். என்றென்றும் வாழ்கிறவரைப் புகழ்ந்து மகிமைப்படுத்தினேன். அவருடைய ஆளுகை நித்தியமான ஆளுகை. அவரது அரசு தலைமுறை தலைமுறையாக நிலைத்திருக்கிறது.

தானியேல் 4:25-34 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

உன்னதமான தேவன் மனிதர்களுடைய ராஜ்ஜியத்தில் ஆளுகைசெய்து, தமக்கு விருப்பமாயிருக்கிறவனுக்கு அதைக் கொடுக்கிறார் என்பதை நீர் அறிந்துகொள்ளும்வரை ஏழு வருடங்கள் உம்முடைய வாழ்நாளில் கடந்துபோகவேண்டும். ஆனாலும் மரத்தின் வேர்களாகிய அடிமரம் தரையில் இருக்கட்டும் என்று சொல்லப்பட்டது என்னவென்றால்: நீர் தேவனின் அதிகாரத்தை அறிந்தபின், ராஜ்ஜியம் உமக்கு நிலைநிற்கும். ஆகையால் ராஜாவே, நான் சொல்லும் ஆலோசனையை நீர் அங்கீகரித்துக்கொண்டு நீதியைச் செய்து உமது பாவங்களையும், சிறுமையானவர்களுக்கு மனமிரங்கி, உமது அக்கிரமங்களையும் அகற்றிவிடும்; அப்பொழுது உம்முடைய வாழ்வு நீடித்திருக்கலாம் என்றான். இதெல்லாம் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரின்மேல் வந்தது. பன்னிரண்டு மாதம் சென்ற பின்பு, ராஜா பாபிலோன் ராஜ்ஜியத்தின் அரண்மனைமேல் உலாவிக்கொண்டிருக்கும்போது: இது என் வல்லமையின் பராக்கிரமத்தினால், என் புகழ்ச்சியின் பிரஸ்தாபத்திற்கென்று, ராஜ்ஜியத்திற்கு அரண்மனையாக நான் கட்டின மகா பாபிலோன் அல்லவா என்று சொன்னான். இந்த வார்த்தை ராஜாவின் வாயில் இருக்கும்போதே, வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரே, ஆட்சி உன்னைவிட்டு நீங்கியது. மனிதர்களிலிருந்து தள்ளப்படுவாய்; வெளியின் மிருகங்களுடன் வசிப்பாய்; மாடுகளைப்போல் புல்லை மேய்வாய்; இப்படியே உன்னதமான தேவன் மனிதர்களுடைய ராஜ்ஜியத்தில் ஆளுகை செய்து, தமக்கு விருப்பமாயிருக்கிறவனுக்கு அதைக் கொடுக்கிறாரென்பதை நீ அறிந்துகொள்ளும்வரை ஏழு வருடங்கள் உன்மேல் கடந்துபோகும் என்று உனக்குச் சொல்லப்படுகிறது என்று சொன்னது. அந்நேரமே இந்த வார்த்தை நேபுகாத்நேச்சாரிடத்தில் நிறைவேறியது; அவன் மனிதர்களிலிருந்து தள்ளப்பட்டு, மாடுகளைப்போல் புல்லை மேய்ந்தான்; அவனுடைய தலைமுடி கழுகுகளுடைய இறகுகளைப்போலவும், அவனுடைய நகங்கள் பறவைகளுடைய நகங்களைப்போலவும் வளரும்வரை அவன் உடல் ஆகாயத்துப் பனியிலே நனைந்தது. அந்த நாட்கள் சென்றபின்பு, நேபுகாத்நேச்சாராகிய நான் என் கண்களை வானத்திற்கு ஏறெடுத்தேன்; என் புத்தி எனக்குத் திரும்பிவந்தது; அப்பொழுது நான் உன்னதமான தேவனை ஸ்தோத்திரித்து, என்றென்றைக்கும் உயிரோடிருக்கிறவரைப் புகழ்ந்து மகிமைப்படுத்தினேன்; அவருடைய கர்த்தத்துவமே நித்திய கர்த்தத்துவம், அவருடைய ராஜ்ஜியமே தலைமுறை தலைமுறையாக நிற்கும்.

தானியேல் 4:25-34 பரிசுத்த பைபிள் (TAERV)

ராஜாவான நேபுகாத்நேச்சாரே, நீர் ஜனங்களை விட்டுப் போகும்படி வற்புறுத்தப்படுவீர். நீர் காட்டு மிருகங்களுக்கு மத்தியில் வாழ்வீர். நீர் மாடுகளைப்போன்று புல்லைத் தின்பீர். நீர் பனியில் நனைவீர். ஏழு பருவங்கள் (ஆண்டுகள்) கடந்துபோகும். பிறகு நீர் உன்னதமான தேவனே மனித இராஜ்யங்களை ஆளுகிறார் என்பதையும், உன்னதமான தேவன் தான் விரும்புகிற எவருக்கும் இராஜ்யங்களைக் கொடுப்பார் என்பதையும் கற்றுக்கொள்வீர். “மரத்தின் தண்டையும் வேர்களையும் பூமியில் விடவேண்டும் என்பதன் பொருள் இதுதான்: உமது இராஜ்யம் உம்மிடம் திருப்பிக்கொடுக்கப்படும். உமது இராஜ்யத்தை உன்னதமான தேவன் ஆளுகிறார் என்பதை நீர் கற்கும்போது இது நிகழும். எனவே, ராஜாவே, எனது ஆலோசனையை ஏற்றுக்கொள்ளும். நீர் பாவம் செய்வதை நிறுத்தி சரியானவற்றைச் செய்ய வேண்டும் என்று ஆலோசனை கூறுகிறேன். தீமை செய்வதை நிறுத்தும். ஏழை ஜனங்களிடம் இரக்கமாயிரும். பிறகு நீர் வெற்றியுள்ளவராக இருப்பீர்.” அவை யாவும் ராஜா நேபுகாத்நேச்சாருக்கு ஏற்பட்டன. கனவுக்கண்ட 12 மாதத்திற்குப் பிறகு ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் பாபிலோனிலுள்ள தன் அரண்மனையின் மாடியின் மேல் நடந்துகொண்டிருந்தான். அவன் மாடியிலிருந்துக் கொண்டு, “பாபிலோனைப் பார்! நான் இந்தப் பெரியநகரத்தைக் கட்டினேன். இது எனது அரண்மனை! எனது வலிமையினால் நான் இந்த அரண்மனையைக் கட்டினேன். நான் எவ்வளவு பெரியவன் என்று காட்டுவதற்காக இந்த இடத்தைக் கட்டினேன்” என்று கூறினான். இந்த வார்த்தைகள் ராஜாவின் வாயில் இருக்கும்போதே பரலோகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டானது. அச்சத்தம் சொன்னது: “ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரே, இவையெல்லாம் உனக்கு நிகழும். உன்னிடமிருந்து ராஜா என்னும் அதிகாரம் எடுத்துக் கொள்ளப்படும். நீ ஜனங்களிடமிருந்து பலவந்தமாக வெளியேற்றப்படுவாய். நீ காட்டுமிருகங்களோடு வாழ்வாய். நீ பசுவைப்போன்று புல்லைத் தின்பாய். ஏழு பருவங்கள் (ஆண்டுகள்), நீ உனது பாடத்தைக் கற்றுக்கொள்ளும் முன் கடந்துபோகும். பிறகு உன்னதமான தேவன் மனிதரின் இராஜ்யங்களை ஆளுகிறார் என்பதை நீ கற்பாய். அந்த உன்னதமான தேவன் அவர் விரும்புகிறவர்களுக்கு இராஜ்யங்களைக் கொடுக்கிறார்.” அக்காரியங்கள் உடனே நிகழ்ந்தன. நேபுகாத்நேச்சார் ஜனங்களைவிட்டு வெளியேற்றப்பட்டான். அவன் பசுவைப்போன்று புல்லைத் உண்ணத்தொடங்கினான். அவன் பனியால் நனைந்தான். அவனது தலைமுடி கழுகின் சிறகுகள் போன்று நீளமாக வளர்ந்தன. அவனது நகங்கள் பறவையின் நகத்தைப்போன்று வளர்ந்தது. பிறகு காலத்தின் முடிவில், நேபுகாத்நேச்சாராகிய நான் பரலோகத்தை நோக்கிப் பார்த்தேன். என் புத்தி எனக்குத் திரும்பிவந்தது. பிறகு நான் உன்னதமான தேவனைப் போற்றினேன். நான் அவருக்கு மதிப்பையும் மகிமையையும் என்றென்றும் கொடுத்தேன்.

தானியேல் 4:25-34 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

உன்னதமானவர் மனுஷருடைய ராஜ்யத்தில் ஆளுகைசெய்து, தமக்குச் சித்தமாயிருக்கிறவனுக்கு அதைக்கொடுக்கிறார் என்பதை நீர் அறிந்துகொள்ளுமட்டும் ஏழு காலங்கள் உம்முடைய பேரில் கடந்துபோகவேண்டும். ஆனாலும் விருட்சத்தின் வேர்களாகிய அடிமரம் தரையில் இருக்கட்டும் என்று சொல்லப்பட்டது என்னவென்றால்: நீர் பரம அதிகாரத்தை அறிந்தபின், ராஜ்யம் உமக்கு நிலைநிற்கும். ஆகையால் ராஜாவே, நான் சொல்லும் ஆலோசனையை நீர் அங்கீகரித்துக்கொண்டு நீதியைச் செய்து உமது பாவங்களையும், சிறுமையானவர்களுக்கு இரங்கி உமது அக்கிரமங்களையும் அகற்றிவிடும்; அப்பொழுது உம்முடைய வாழ்வு நீடித்திருக்கலாம் என்றான். இதெல்லாம் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரின்மேல் வந்தது. பன்னிரண்டு மாதம் சென்ற பின்பு, ராஜா பாபிலோன் ராஜ்யத்தின் அரமனைமேல் உலாவிக்கொண்டிருக்கும்போது: இது என் வல்லமையின் பராக்கிரமத்தினால், என் மகிமைப்பிரதாபத்துக்கென்று, ராஜ்யத்துக்கு அரமனையாக நான் கட்டின மகா பாபிலோன் அல்லவா என்று சொன்னான். இந்த வார்த்தை ராஜாவின் வாயில் இருக்கும்போதே, வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரே, ராஜ்யபாரம் உன்னைவிட்டு நீங்கிற்று. மனுஷரினின்று தள்ளப்படுவாய்; வெளியின் மிருகங்களோடே சஞ்சரிப்பாய்; மாடுகளைப்போல் புல்லை மேய்வாய்; இப்படியே உன்னதமானவர் மனுஷருடைய ராஜ்யத்தில் ஆளுகை செய்து, தமக்குச் சித்தமாயிருக்கிறவனுக்கு அதைக் கொடுக்கிறாரென்பதை நீ அறிந்துகொள்ளுமட்டும் ஏழு காலங்கள் உன்மேல் கடந்துபோகும் என்று உனக்குச் சொல்லப்படுகிறது என்று விளம்பினது. அந்நேரமே இந்த வார்த்தை நேபுகாத்நேச்சாரிடத்தில் நிறைவேறிற்று; அவன் மனுஷரினின்று தள்ளப்பட்டு, மாடுகளைப்போல் புல்லை மேய்ந்தான்; அவனுடைய தலைமயிர் கழுகுகளுடைய இறகுகளைப்போலவும், அவனுடைய நகங்கள் பட்சிகளுடைய நகங்களைப்போலவும் வளருமட்டும் அவன் சரீரம் ஆகாயத்துப் பனியிலே நனைந்தது. அந்த நாட்கள் சென்றபின்பு, நேபுகாத்நேச்சாராகிய நான் என் கண்களை வானத்துக்கு ஏறெடுத்தேன்; என் புத்தி எனக்குத் திரும்பிவந்தது; அப்பொழுது நான் உன்னதமானவரை ஸ்தோத்திரித்து, என்றென்றைக்கும் ஜீவித்திருக்கிறவரைப் புகழ்ந்து மகிமைப்படுத்தினேன்; அவருடைய கர்த்தத்துவமே நித்திய கர்த்தத்துவம், அவருடைய ராஜ்யமே தலைமுறை தலைமுறையாக நிற்கும்.