தானியேல் 3:24-30

தானியேல் 3:24-30 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அப்பொழுது ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் பிரமித்து, தீவிரமாய் எழுந்திருந்து, தன் மந்திரிமார்களை நோக்கி: மூன்று புருஷரை அல்லவோ கட்டுண்டவர்களாக அக்கினியிலே போடுவித்தோம் என்றான்; அவர்கள் ராஜாவுக்குப் பிரதியுத்தரமாக: ஆம், ராஜாவே என்றார்கள். அதற்கு அவன்: இதோ, நாலுபேர் விடுதலையாய் அக்கினியின் நடுவிலே உலாவுகிறதைக் காண்கிறேன். அவர்களுக்கு ஒரு சேதமுமில்லை; நாலாம் ஆளின்சாயல் தேவபுத்திரனுக்கு ஒப்பாயிருக்கிறது என்றான். அப்பொழுது நேபுகாத்நேச்சார் எரிகிற அக்கினிச்சூளையின் வாசலண்டைக்கு வந்து, உன்னதமான தேவனுடைய தாசராகிய சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களே, நீங்கள் வெளியே வாருங்கள் என்றான்; அப்பொழுது சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்கள் அக்கினியின் நடுவிலிருந்து வெளியே வந்தார்கள். தேசாதிபதிகளும், அதிகாரிகளும், தலைவரும், ராஜாவின் மந்திரிகளும் கூடிவந்து, அந்தப் புருஷருடைய சரீரங்களின்மேல் அக்கினி பெலஞ்செய்யாமலும், அவர்களுடைய தலைமயிர் கருகாமலும், அவர்களுடைய சால்வைகள் சேதப்படாமலும், அக்கினியின் மணம் அவர்களிடத்தில் வீசாமலும் இருந்ததைக் கண்டார்கள். அப்பொழுது நேபுகாத்நேச்சார் வசனித்து: சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களுடைய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர்கள் தங்களுடைய தேவனைத்தவிர வேறொரு தேவனையும் சேவித்துப் பணியாமல், அவரையே நம்பி, ராஜாவின் கட்டளையைத் தள்ளி, தங்கள் சரீரங்களை ஒப்புக்கொடுத்ததினால், அவர் தமது தூதனை அனுப்பி, தம்முடைய தாசரை விடுவித்தார். ஆதலால் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களுடைய தேவனுக்கு விரோதமாகத் தூஷணவார்த்தையைச் சொல்லுகிற எந்த ஜனத்தானும், எந்த ஜாதியானும், எந்த பாஷைக்காரனும் துண்டித்துப்போடப்படுவான்; அவன் வீடு எருக்களமாக்கப்படும் என்று என்னாலே தீர்மானிக்கப்படுகிறது; இவ்விதமாய் இரட்சிக்கத்தக்க தேவன் வேறொருவரும் இல்லையென்றான். பின்பு ராஜா சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களைப் பாபிலோன் தேசத்திலே உயர்த்தினான்

தானியேல் 3:24-30 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அப்பொழுது அதைப் பார்த்துக்கொண்டிருந்த நேபுகாத்நேச்சார் அரசன் ஆச்சரியத்துடன் துள்ளி எழுந்து, தனது ஆலோசகர்களிடம், “நாம் மூவரைத்தானே கட்டி நெருப்புச்சூளையில் போட்டோம் எனக் கேட்டான்?” அதற்கு அவர்கள், “நிச்சயமாக! ஆம் அரசே!” என்றார்கள். அவன், “இதோ பாருங்கள், நான்கு மனிதர்கள் நெருப்பிலே நடந்து திரிகிறதைக் காண்கிறேன். அவர்கள் கட்டப்படாதவர்களாயும், எதுவித சேதமும் இன்றியும் இருக்கிறார்கள். நான்காவது ஆள், பார்ப்பதற்கு தெய்வங்களின் மகன் போலிருக்கிறானே என்றான்.” அப்பொழுது நேபுகாத்நேச்சார் சுவாலித்து எரிகிற சூளையின் வாயில் அருகே நெருங்கிப்போய், “சாத்ராக்கே, மேஷாக்கே, ஆபேத்நேகோவே, மகா உன்னதமான இறைவனின் அடியவர்களே, உடனே வெளியேறுங்கள்; இங்கே வாருங்கள்” என்று சத்தமிட்டான். அப்படியே சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்கள் நெருப்பிலிருந்து வெளியே வந்தார்கள். அப்பொழுது சிற்றரசர்களும், நிர்வாக அதிகாரிகளும், ஆளுநர்களும், அரச ஆலோசகர்களும் அவர்களைச் சுற்றி நெருங்கி வந்தார்கள். நெருப்போ அவர்களுடைய உடலுக்கு ஒரு தீங்குகூட விளைவிக்காமலும், தலைமயிர் கருகாமலும் இருப்பதைக் கண்டார்கள். அவர்களுடைய மேலுடைகள் எரியவும் இல்லை. அவர்கள்மேல் நெருப்பின் புகை வாடையும் இருக்கவில்லை. அப்பொழுது நேபுகாத்நேச்சார் சொன்னதாவது: “தமது தூதனை அனுப்பி, தமது அடியவர்களை விடுவித்த சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகியோரின் இறைவனுக்குத் துதி உண்டாவதாக. அவர்கள் தங்கள் இறைவனில் நம்பிக்கை வைத்து அரச கட்டளைகளுக்கு எதிர்த்து நின்றார்கள். தங்கள் இறைவனைத்தவிர வேறு தெய்வத்தை வணங்காமலும், பணிந்துகொள்ளாமலும் இருந்து, தங்கள் உயிரைக் கொடுக்கவும் ஆயத்தமாயிருந்தார்களே. ஆகவே சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களின் இறைவனுக்கு எதிராக எதையாவது கூறும் எந்த மக்களும், எந்த மொழி பேசுவோரும் துண்டுதுண்டாக வெட்டிக் கொலைசெய்யப்படுவர். அவர்களுடைய வீடுகளும் இடிபாடுகளின் குவியலாக்கப்படும். இது எனது உறுதியான கட்டளை. ஏனெனில், வேறு எந்த தெய்வத்தினாலும் இவ்விதமாகக் காப்பாற்ற முடியாது என்றான்.” அதன்பின்பு சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களுக்கு அரசன், பாபிலோன் மாகாணத்தில் பதவி உயர்வு கொடுத்தான்.

தானியேல் 3:24-30 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அப்பொழுது ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் பிரமித்து, உடனடியாக எழுந்திருந்து, தன் மந்திரிமார்களை நோக்கி: மூன்று மனிதர்களை அல்லவோ கட்டுண்டவர்களாக நெருப்பிலே போட்டோம் என்றான்; அவர்கள் ராஜாவிற்கு மறுமொழியாக: ஆம், ராஜாவே என்றார்கள். அதற்கு அவன்: இதோ, நான்குபேர் விடுதலையாக அக்கினியின் நடுவிலே உலாவுகிறதைக் காண்கிறேன். அவர்களுக்கு ஒரு சேதமுமில்லை; நான்காம் நபரின் சாயல் தேவபுத்திரனுக்கு ஒப்பாயிருக்கிறது என்றான். அப்பொழுது நேபுகாத்நேச்சார் எரிகிற நெருப்புச்சூளையின் வாசலருகில் வந்து, உன்னதமான தேவனுடைய தாசராகிய சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களே, நீங்கள் வெளியே வாருங்கள் என்றான்; அப்பொழுது சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்கள் அக்கினியின் நடுவிலிருந்து வெளியே வந்தார்கள். தேசாதிபதிகளும், அதிகாரிகளும், தலைவர்களும், ராஜாவின் மந்திரிகளும் கூடிவந்து, அந்த மனிதர்களுடைய உடல்கள் நெருப்பினால் பாதிக்கப்படாமலும், அவர்களுடைய தலைமுடி கருகாமலும், அவர்களுடைய சால்வைகள் சேதப்படாமலும், நெருப்பின் வாசனை அவர்களிடத்தில் வீசாமலும் இருந்ததைக் கண்டார்கள். அப்பொழுது நேபுகாத்நேச்சார் வசனித்து: சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களுடைய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர்கள் தங்களுடைய தேவனைத்தவிர வேறொரு தேவனையும் சேவித்துப் பணியாமல், அவரையே நம்பி, ராஜாவின் கட்டளையைத் தள்ளி, தங்கள் உடல்களை ஒப்புக்கொடுத்ததினால், அவர் தமது தூதனை அனுப்பி, தம்முடைய தாசரை விடுவித்தார். ஆதலால் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களுடைய தேவனுக்கு விரோதமாகத் தூஷணவார்த்தையைச் சொல்லுகிற எந்த மக்களும், எந்த தேசத்தானும், எந்த மொழி பேசுகிறவனும் துண்டித்துப்போடப்படுவான்; அவன் வீடு எருக்களமாக்கப்படும் என்று என்னாலே தீர்மானிக்கப்படுகிறது; இவ்விதமாக காப்பாற்றக்கூடிய தேவன் வேறொருவரும் இல்லையென்றான். பின்பு ராஜா சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களைப் பாபிலோன் தேசத்திலே உயர்த்தினான்.

தானியேல் 3:24-30 பரிசுத்த பைபிள் (TAERV)

பின்னர் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் குதித்து எழுந்தான். அவன் மிகவும் வியப்புற்று தனது ஆலோசகர்களிடம்: “நாம் மூன்றுபேரை மட்டுமே கட்டி நெருப்பில் போட்டோம். இது சரிதானா?” என்றான். அவனது ஆலோசகர்கள்: “ஆம் ராஜாவே” என்றனர். ராஜா அவர்களிடம், “பாருங்கள், நான்குபேர் நெருப்பிற்குள் நடமாடுவதை நான் பார்க்கிறேன். அவர்கள் கட்டப்பட்டிருக்கவில்லை. அவர்கள் நெருப்பால் எரிக்கப்படவில்லை. நான்காவது ஆள் ஒரு தேவபுத்திரனைப் போன்று இருக்கிறார்” என்றான். பிறகு நேபுகாத்நேச்சார் அக்கினிச் சூளையின் வாசலருகே சென்று உரத்தகுரலில், “சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களே வெளியே வாருங்கள்! உன்னதமான தேவனுடைய பணியாட்களே, வெளியே வாருங்கள்” என்றான். எனவே சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகியோர் நெருப்பிலிருந்து வெளியே வந்தனர். அவர்கள் வெளியே வரும்போது, அவர்களைச் சுற்றி தேசாதிபதிகளும், அதிகாரிகளும், தலைவரும், ராஜாவின் மந்திரிகளும் சூழ்ந்து நின்றனர். நெருப்பானது சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகியோரைச் சுடாமலிருந்ததை அவர்களால் பார்க்க முடிந்தது. அவர்களின் உடல்கள் வெந்துபோகவில்லை. அவர்களின் தலைமயிர் கருகவில்லை. அவர்களின் சால்வைகள் எரிக்கப்படவில்லை அவர்கள்மேல் அக்கினியின் மணம் வீசவில்லை. பிறகு நேபுகாத்நேச்சார்: “சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகியோரின் தேவனைப் போற்றுங்கள். அவர்களின் தேவன், தூதனை அனுப்பி அவர்களைக் காப்பாற்றிவிட்டார். இந்த மூன்று பேரும் அவர்களின் தேவனை நம்பினார்கள். அவர்கள் எனது கட்டளைக்குக் கீழ்ப்படிய மறுத்தனர். அவர்கள் மற்ற தெய்வங்களுக்குப் பணிவிடைச் செய்து தொழுவதைவிட மரித்துப்போகத் தயாராக இருந்தனர். எனவே, நான் இப்போது இந்தச் சட்டத்தை ஏற்படுத்துகிறேன். எந்த தேசத்தினராகவும், மொழியினராகவும் உள்ள என் ஜனங்கள் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகியோரின் தேவனுக்கு எதிராக ஏதாவது சொன்னால் அவர்களைத் துண்டு துண்டாக வெட்டுவேன். அவர்களது வீட்டை எருக்களமாகிப் போடுவேன். வேறு எந்த தேவனும் தம் ஜனங்களை இதுபோல் காப்பாற்ற முடியாது” என்றான். பிறகு ராஜா சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகியோரைப் பாபிலோன் மாகாணத்தின் முக்கிய அதிகாரிகளாக்கினான்.