தானியேல் 3:23-25
தானியேல் 3:23-25 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்னும் அந்த மூன்று புருஷரும் கட்டுண்டவர்களாய் எரிகிற அக்கினிச்சூளையின் நடுவிலே விழுந்தார்கள். அப்பொழுது ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் பிரமித்து, தீவிரமாய் எழுந்திருந்து, தன் மந்திரிமார்களை நோக்கி: மூன்று புருஷரை அல்லவோ கட்டுண்டவர்களாக அக்கினியிலே போடுவித்தோம் என்றான்; அவர்கள் ராஜாவுக்குப் பிரதியுத்தரமாக: ஆம், ராஜாவே என்றார்கள். அதற்கு அவன்: இதோ, நாலுபேர் விடுதலையாய் அக்கினியின் நடுவிலே உலாவுகிறதைக் காண்கிறேன். அவர்களுக்கு ஒரு சேதமுமில்லை; நாலாம் ஆளின்சாயல் தேவபுத்திரனுக்கு ஒப்பாயிருக்கிறது என்றான்.
தானியேல் 3:23-25 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
அதேவேளை இம்மூவரும் உறுதியாகக் கட்டுண்டவர்களாய் பற்றியெரியும் நெருப்புச்சூளைக்குள் விழுந்தார்கள். அப்பொழுது அதைப் பார்த்துக்கொண்டிருந்த நேபுகாத்நேச்சார் அரசன் ஆச்சரியத்துடன் துள்ளி எழுந்து, தனது ஆலோசகர்களிடம், “நாம் மூவரைத்தானே கட்டி நெருப்புச்சூளையில் போட்டோம் எனக் கேட்டான்?” அதற்கு அவர்கள், “நிச்சயமாக! ஆம் அரசே!” என்றார்கள். அவன், “இதோ பாருங்கள், நான்கு மனிதர்கள் நெருப்பிலே நடந்து திரிகிறதைக் காண்கிறேன். அவர்கள் கட்டப்படாதவர்களாயும், எதுவித சேதமும் இன்றியும் இருக்கிறார்கள். நான்காவது ஆள், பார்ப்பதற்கு தெய்வங்களின் மகன் போலிருக்கிறானே என்றான்.”
தானியேல் 3:23-25 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்னும் அந்த மூன்று மனிதர்களும் கட்டப்பட்டவர்களாக எரிகிற நெருப்புச்சூளையின் நடுவிலே விழுந்தார்கள். அப்பொழுது ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் பிரமித்து, உடனடியாக எழுந்திருந்து, தன் மந்திரிமார்களை நோக்கி: மூன்று மனிதர்களை அல்லவோ கட்டுண்டவர்களாக நெருப்பிலே போட்டோம் என்றான்; அவர்கள் ராஜாவிற்கு மறுமொழியாக: ஆம், ராஜாவே என்றார்கள். அதற்கு அவன்: இதோ, நான்குபேர் விடுதலையாக அக்கினியின் நடுவிலே உலாவுகிறதைக் காண்கிறேன். அவர்களுக்கு ஒரு சேதமுமில்லை; நான்காம் நபரின் சாயல் தேவபுத்திரனுக்கு ஒப்பாயிருக்கிறது என்றான்.
தானியேல் 3:23-25 பரிசுத்த பைபிள் (TAERV)
சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்கள் இறுகக் கட்டப்பட்ட நிலையில் நெருப்பில் விழுந்தனர். பின்னர் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் குதித்து எழுந்தான். அவன் மிகவும் வியப்புற்று தனது ஆலோசகர்களிடம்: “நாம் மூன்றுபேரை மட்டுமே கட்டி நெருப்பில் போட்டோம். இது சரிதானா?” என்றான். அவனது ஆலோசகர்கள்: “ஆம் ராஜாவே” என்றனர். ராஜா அவர்களிடம், “பாருங்கள், நான்குபேர் நெருப்பிற்குள் நடமாடுவதை நான் பார்க்கிறேன். அவர்கள் கட்டப்பட்டிருக்கவில்லை. அவர்கள் நெருப்பால் எரிக்கப்படவில்லை. நான்காவது ஆள் ஒரு தேவபுத்திரனைப் போன்று இருக்கிறார்” என்றான்.