தானியேல் 3:19-25

தானியேல் 3:19-25 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அப்பொழுது நேபுகாத்நேச்சார் அரசன், சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகியோர்மீது கடுங்கோபம் கொண்டான். அவர்களைப்பற்றி அவன் கொண்டிருந்த மனப்பாங்கு மாற்றமடைந்தது. அவன் அந்த சூளையை வழக்கத்தைவிட ஏழுமடங்கு அதிகமாகச் சூடாக்கும்படி கட்டளையிட்டான். பின்பு சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களைக் கட்டி, பற்றியெரிகிற நெருப்புச்சூளையிலே போடும்படி தனது படையிலுள்ள வலிமையான போர் வீரருக்குக் கட்டளையிட்டான். அப்படியே இந்த மனிதர் தாங்கள் அணிந்திருந்த மேலுடைகளோடும், காற்சட்டைகளோடும், தலைப்பாகைகளோடும் மற்றும் உடைகளோடும் கட்டப்பட்டு, பற்றியெரியும் நெருப்புச்சூளையினுள் எறியப்பட்டார்கள். அரசனின் கட்டளை அவசரமானதாயிருந்ததாலும் சூளையோ மிகவும் சூடாயிருந்ததாலும் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகியோரைக் கொண்டுசென்ற வீரர்களையோ நெருப்பு ஜூவாலை எரித்துப்போட்டது. அதேவேளை இம்மூவரும் உறுதியாகக் கட்டுண்டவர்களாய் பற்றியெரியும் நெருப்புச்சூளைக்குள் விழுந்தார்கள். அப்பொழுது அதைப் பார்த்துக்கொண்டிருந்த நேபுகாத்நேச்சார் அரசன் ஆச்சரியத்துடன் துள்ளி எழுந்து, தனது ஆலோசகர்களிடம், “நாம் மூவரைத்தானே கட்டி நெருப்புச்சூளையில் போட்டோம் எனக் கேட்டான்?” அதற்கு அவர்கள், “நிச்சயமாக! ஆம் அரசே!” என்றார்கள். அவன், “இதோ பாருங்கள், நான்கு மனிதர்கள் நெருப்பிலே நடந்து திரிகிறதைக் காண்கிறேன். அவர்கள் கட்டப்படாதவர்களாயும், எதுவித சேதமும் இன்றியும் இருக்கிறார்கள். நான்காவது ஆள், பார்ப்பதற்கு தெய்வங்களின் மகன் போலிருக்கிறானே என்றான்.”

தானியேல் 3:19-25 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அப்பொழுது நேபுகாத்நேச்சாருக்கு மிகவும் கோபம்கொண்டு: சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களுக்கு விரோதமாக அவனுடைய முகம் வேறுபட்டது; சூளையைச் சாதாரணமாகச் சூடாக்குவதைப்பார்க்கிலும் ஏழுமடங்கு அதிகமாகச் சூடாக்கும்படி கட்டளைகொடுத்து, சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களை எரிகிற நெருப்புச்சூளையிலே போடுவதற்கு அவர்களைக் கட்டும்படி, தன் இராணுவத்தில் பலசாலிகளாகிய மனிதர்களுக்குக் கட்டளையிட்டான். அப்பொழுது அவர்கள் தங்கள் சால்வைகளோடும், கால்சட்டைகளோடும், தலைப்பாகைகளோடும் மற்ற உடைகளோடும் கட்டப்பட்டு, எரிகிற நெருப்புச்சூளையின் நடுவிலே போடப்பட்டார்கள். ராஜாவின் கட்டளை கடுமையாக இருந்ததாலும், சூளை மிகவும் சூடாக்கப்பட்டிருந்ததாலும், நெருப்பு ஜூவாலையானது சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களைத் தூக்கிக்கொண்டுபோன மனிதர்களைக் கொன்றுபோட்டது. சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்னும் அந்த மூன்று மனிதர்களும் கட்டப்பட்டவர்களாக எரிகிற நெருப்புச்சூளையின் நடுவிலே விழுந்தார்கள். அப்பொழுது ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் பிரமித்து, உடனடியாக எழுந்திருந்து, தன் மந்திரிமார்களை நோக்கி: மூன்று மனிதர்களை அல்லவோ கட்டுண்டவர்களாக நெருப்பிலே போட்டோம் என்றான்; அவர்கள் ராஜாவிற்கு மறுமொழியாக: ஆம், ராஜாவே என்றார்கள். அதற்கு அவன்: இதோ, நான்குபேர் விடுதலையாக அக்கினியின் நடுவிலே உலாவுகிறதைக் காண்கிறேன். அவர்களுக்கு ஒரு சேதமுமில்லை; நான்காம் நபரின் சாயல் தேவபுத்திரனுக்கு ஒப்பாயிருக்கிறது என்றான்.

தானியேல் 3:19-25 பரிசுத்த பைபிள் (TAERV)

பின்னர் நேபுகாத்நேச்சார் மிகவும் கோபங்கொண்டான். சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களுக்கெதிரான கோபம் அவனது முகத்தில் வெளிப்பட்டது. அவன், வழக்கத்தை விடச் சூளையை ஏழு மடங்கு மிகுதியாகச் சூடாக்கும்படிக் கட்டளையிட்டான். பிறகு நேபுகாத்நேச்சார் தனது வீரர்களில் மிகவும் பலமானவர்களிடம் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகியோரை நன்றாகக் கட்டும்படி கட்டளையிட்டான். ராஜா சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகியோரை அக்கினி சூளையிலே போடும்படி வீரர்களிடம் கட்டளையிட்டான். எனவே சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகியோர் கட்டப்பட்டு அக்கினி சூளையிலே போடப்பட்டனர். அவர்கள் சால்வை, நிசார் தலைப்பாகை, மற்றும் ஆடைகளை அணிந்திருந்தனர். ராஜா கட்டளையிடும்போது மிகவும் கோபமுடையவனாக இருந்தான். எனவே அவர்கள் சூளையைச் சீக்கிரமாக சூடாக்கினார்கள். அந்நெருப்பு பலமான வீரர்களையும் எரிக்கும் அளவில் மிகவும் சூடாக இருந்தது. அவர்கள் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகியோரைத் தூக்கிச் சென்று அக்கினிச் சூளையில் போடுவதற்கு அருகில் சென்றபோது அவ்வீரர்களை நெருப்பு அழித்துப்போட்டது. சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்கள் இறுகக் கட்டப்பட்ட நிலையில் நெருப்பில் விழுந்தனர். பின்னர் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் குதித்து எழுந்தான். அவன் மிகவும் வியப்புற்று தனது ஆலோசகர்களிடம்: “நாம் மூன்றுபேரை மட்டுமே கட்டி நெருப்பில் போட்டோம். இது சரிதானா?” என்றான். அவனது ஆலோசகர்கள்: “ஆம் ராஜாவே” என்றனர். ராஜா அவர்களிடம், “பாருங்கள், நான்குபேர் நெருப்பிற்குள் நடமாடுவதை நான் பார்க்கிறேன். அவர்கள் கட்டப்பட்டிருக்கவில்லை. அவர்கள் நெருப்பால் எரிக்கப்படவில்லை. நான்காவது ஆள் ஒரு தேவபுத்திரனைப் போன்று இருக்கிறார்” என்றான்.

தானியேல் 3:19-25 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அப்பொழுது நேபுகாத்நேச்சாருக்குக் கடுங்கோபமூண்டு: சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களுக்கு விரோதமாய் அவனுடைய முகம் வேறுபட்டது; சூளையைச் சாதாரணமாய்ச் சூடாக்குவதைப்பார்க்கிலும் ஏழுமடங்கு அதிகமாய்ச் சூடாக்கும்படி உத்தரவுகொடுத்து, சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களை எரிகிற அக்கினிச்சூளையிலேபோடுவதற்கு அவர்களைக் கட்டும்படி, தன் இராணுவத்தில் பலசாலிகளாகிய புருஷருக்குக் கட்டளையிட்டான். அப்பொழுது அவர்கள் தங்கள் சால்வைகளோடும், நிசார்களோடும், பாகைகளோடும் மற்ற வஸ்திரங்களோடும் கட்டப்பட்டு, எரிகிற அக்கினிச்சூளையின் நடுவிலே போடப்பட்டார்கள். ராஜாவின் கட்டளை கடுமையாயிருந்தபடியினாலும், சூளை மிகவும் சூடாக்கப்பட்டிருந்தபடியினாலும், அக்கினி ஜூவாலையானது சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களைத் தூக்கிக்கொண்டுபோன புருஷரைக் கொன்றுபோட்டது. சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்னும் அந்த மூன்று புருஷரும் கட்டுண்டவர்களாய் எரிகிற அக்கினிச்சூளையின் நடுவிலே விழுந்தார்கள். அப்பொழுது ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் பிரமித்து, தீவிரமாய் எழுந்திருந்து, தன் மந்திரிமார்களை நோக்கி: மூன்று புருஷரை அல்லவோ கட்டுண்டவர்களாக அக்கினியிலே போடுவித்தோம் என்றான்; அவர்கள் ராஜாவுக்குப் பிரதியுத்தரமாக: ஆம், ராஜாவே என்றார்கள். அதற்கு அவன்: இதோ, நாலுபேர் விடுதலையாய் அக்கினியின் நடுவிலே உலாவுகிறதைக் காண்கிறேன். அவர்களுக்கு ஒரு சேதமுமில்லை; நாலாம் ஆளின்சாயல் தேவபுத்திரனுக்கு ஒப்பாயிருக்கிறது என்றான்.