தானியேல் 1:8-21
தானியேல் 1:8-21 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
தானியேல் ராஜாவின் போஜனத்தினாலும் அவர் பானம்பண்ணும் திராட்சரசத்தினாலும் தன்னைத் தீட்டுப்படுத்தலாகாதென்று, தன் இருதயத்தில் தீர்மானம்பண்ணிக்கொண்டு, தன்னைத் தீட்டுப்படுத்தாதபடி பிரதானிகளின் தலைவனிடத்தில் வேண்டிக்கொண்டான். தேவன் தானியேலுக்குப் பிரதானிகளின் தலைவனிடத்தில் தயவும் இரக்கமும் கிடைக்கும்படி செய்தார். பிரதானிகளின் தலைவன் தானியேலை நோக்கி: உங்களுக்குப் போஜனத்தையும் பானத்தையும் குறித்திருக்கிற ராஜாவாகிய என் ஆண்டவனுக்கு நான் பயப்படுகிறேன்; அவர் உங்களோடொத்த வாலிபரின் முகங்களைப்பார்க்கிலும் உங்கள் முகங்கள் வாடிப்போனவைகளாகக் காணவேண்டியதென்ன? அதினால் ராஜா என்னைச் சிரச்சேதம்பண்ணுவாரே என்றான். அப்பொழுது பிரதானிகளின் தலைவனாலே, தானியேல், அனனியா, மீஷாவேல், அசரியா என்பவர்கள்மேல் விசாரிப்புக்காரனாக வைக்கப்பட்ட மேல்ஷார் என்பவனை தானியேல் நோக்கி: பத்துநாள்வரைக்கும் உமது அடியாரைச் சோதித்துப்பாரும்; எங்களுக்குப் புசிக்க பருப்பு முதலான மரக்கறிகளையும், குடிக்கத் தண்ணீரையும் கொடுத்து, எங்கள் முகங்களையும் ராஜபோஜனத்தில் புசிக்கிற வாலிபருடைய முகங்களையும் ஒத்துப்பாரும்; பின்பு நீர் காண்கிறபடி உமது அடியாருக்குச் செய்யும் என்றான். அவன் இந்தக் காரியத்திலே அவர்களுக்குச் செவிகொடுத்து, பத்துநாளளவும் அவர்களைச் சோதித்துப்பார்த்தான். பத்துநாள் சென்றபின்பு, ராஜபோஜனத்தைப் புசித்த எல்லா வாலிபரைப்பார்க்கிலும் அவர்கள் முகம் களையுள்ளதாயும், சரீரம் புஷ்டியுள்ளதாயும் காணப்பட்டது. ஆகையால் மேல்ஷார் அவர்கள் புசிக்கக் கட்டளையான போஜனத்தையும், அவர்கள் குடிக்கக் கட்டளையான திராட்சரசத்தையும் நீக்கிவைத்து, அவர்களுக்குப் பருப்பு முதலானவைகளைக் கொடுத்தான். இந்த நாலு வாலிபருக்கும் தேவன் சகல எழுத்திலும் ஞானத்திலும் அறிவையும் சாமர்த்தியத்தையும் கொடுத்தார்; தானியேலைச் சகல தரிசனங்களையும் சொப்பனங்களையும் அறியத்தக்க அறிவுள்ளவனாக்கினார். அவர்களை ராஜாவினிடத்தில் கொண்டுவருகிறதற்குக் குறித்த நாட்கள் நிறைவேறினபோது, பிரதானிகளின் தலைவன் அவர்களை நேபுகாத்நேச்சாருக்கு முன்பாகக் கொண்டுவந்து விட்டான். ராஜா அவர்களோடே பேசினான்; அவர்கள் எல்லாருக்குள்ளும் தானியேல், அனனியா, மீஷாவேல், அசரியா என்பவர்களைப்போல வேறொருவனும் காணப்படவில்லை; ஆகையால் இவர்கள் ராஜசமுகத்தில் நின்றார்கள். ஞானத்துக்கும் புத்திக்கும் அடுத்த எந்த விஷயத்தில் ராஜா அவர்களைக் கேட்டு விசாரித்தானோ, அதிலே தன் ராஜ்யம் எங்குமுள்ள சகல சாஸ்திரிகளிலும் ஜோசியரிலும் அவர்களைப் பத்துமடங்கு சமர்த்தராகக் கண்டான். கோரேஸ் ராஜ்யபாரம்பண்ணும் முதலாம்வருஷமட்டும் தானியேல் அங்கே இருந்தான்.
தானியேல் 1:8-21 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
ஆனால் தானியேலோ, அரச உணவினாலும், திராட்சை இரசத்தினாலும் தன்னைக் கறைப்படுத்திக்கொள்ளக் கூடாதென தன் மனதில் உறுதி செய்திருந்தான். அவ்வாறே தன்னைக் கறைப்படுத்தாதிருக்கும்படி, பிரதம அதிகாரியிடம் அனுமதியும் கேட்டான். அப்பொழுது பிரதம அதிகாரி தானியேலுக்குத் தயவும், அனுதாபமும் காட்டும்படி இறைவன் செய்தார். ஆனால், பிரதம அதிகாரி தானியேலிடம், “உங்களுக்கு உணவையும், பானத்தையும் ஒழுங்கு செய்திருக்கும் என் தலைவனாகிய அரசனுக்கு நான் பயப்படுகிறேன். ஏனெனில் அவர் உங்களைப் பார்க்கும்போது, உங்கள் வயதோடொத்த வாலிபர்களைவிட, உங்கள் தோற்றம் களையிழந்து வாடிக் காணப்பட்டால், அரசன் என் தலையைத் துண்டித்துவிடுவார் என்றான்.” தானியேல், அனனியா, மீஷாயேல், அசரியா ஆகிய நால்வரையும் பராமரிக்கும்படி, பிரதம அதிகாரியினால் நியமிக்கப்பட்ட காவலனிடம் தானியேல், “தயவுசெய்து பத்து நாட்களுக்கு உமது அடியவர்களைச் சோதித்துப்பாரும். சாப்பிட காய்கறி உணவையும், குடிக்கத் தண்ணீரையுமே அன்றி வேறொன்றும் எங்களுக்குத் தரவேண்டாம். அதன்பின் அரச உணவு சாப்பிடும் வாலிபருடைய தோற்றத்தோடு, எங்கள் தோற்றத்தை ஒப்பிட்டுப்பாரும். பின்பு உமது விருப்பப்படியே உமது அடியார்களை நடத்தும் என்றான்.” அவ்வாறே அவனும் இதற்கு இணங்கி, அவர்களைப் பத்து நாட்களுக்குச் சோதித்துப்பார்த்தான். பத்து நாட்கள் முடிந்தபோது பார்க்கையில், அரச உணவு சாப்பிட்ட வாலிபர்களைவிட, இவர்களே ஆரோக்கியமாகவும், நல்ல புஷ்டியுடையவர்களாகவும் இருக்கக் காணப்பட்டார்கள். எனவே காவலன் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட சிறந்த உணவையும், குடிக்க வேண்டிய திராட்சை இரசத்தையும் எடுத்துவிட்டு, அதற்குப் பதிலாக மரக்கறி உணவையே அவர்களுக்குக் கொடுத்துவந்தான். இறைவன் இந்த நான்கு வாலிபருக்கும் அறிவையும், எல்லாவித இலக்கியங்களையும், கல்வியையும், விளங்கிக்கொள்ளும் ஆற்றலையும் கொடுத்தார். தானியேலினால் எல்லா விதமான தரிசனங்களையும், கனவுகளையும் விளங்கிக்கொள்ளக் கூடியதாயிருந்தது. அவர்களை உள்ளே கொண்டுவரும்படி அரசன் நியமித்த நாளில், பிரதம அதிகாரி அவர்களை நேபுகாத்நேச்சார் முன் கொண்டுவந்தான். அரசன் அவர்களோடு பேசியபோது தானியேல், அனனியா, மீஷாயேல், அசரியா ஆகியோருக்கு இணையாக ஒருவனும் இல்லாதிருப்பதைக் கண்டான்; ஆகவே அவர்கள் அரச பணிசெய்ய அமர்த்தப்பட்டார்கள். எல்லாவித ஞானத்தையும், பகுத்தறிவையும் குறித்து அரசன் அவர்களிடம் கேள்விகள் கேட்டபோது, தனது அரசாட்சியில் உள்ள எல்லா மந்திரவாதிகளையும், மாயவித்தைக்காரர்களையும்விட, பத்து மடங்கு சிறப்புடையவர்களாக அரசன் இவர்களைக் கண்டான். கோரேஸ் அரசனின் ஆட்சியின் முதலாம் வருடம்வரை தானியேல் அங்கேயே இருந்தான்.
தானியேல் 1:8-21 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
தானியேல் ராஜா குறித்திருக்கிற உணவினாலும் அவர் குடிக்கும் திராட்சைரசத்தினாலும் தன்னைத் தீட்டுப்படுத்தக்கூடாதென்று, தன் இருதயத்தில் தீர்மானம்செய்துகொண்டு, தன்னைத் தீட்டுப்படுத்தாதபடி அதிகாரிகளின் தலைவனிடத்தில் வேண்டிக்கொண்டான். தேவன் தானியேலுக்கு அதிகாரிகளின் தலைவனிடத்தில் தயவும் இரக்கமும் கிடைக்கும்படி செய்தார். அதிகாரிகளின் தலைவன் தானியேலை நோக்கி: உங்களுக்கு உணவையும் பானத்தையும் குறித்திருக்கிற ராஜாவாகிய என் எஜமானுக்கு நான் பயப்படுகிறேன்; அவர் உங்களோடிருக்கிற வாலிபர்களின் முகங்களைப்பார்க்கிலும் உங்கள் முகங்கள் வாடிப்போனவைகளாக ஏன் காணப்படவேண்டும்? அதினால் ராஜா எனக்கு மரணதண்டனை கொடுப்பாரே என்றான். அப்பொழுது அதிகாரிகளின் தலைவனாலே, தானியேல், அனனியா, மீஷாவேல், அசரியா என்பவர்கள்மேல் விசாரிப்புக்காரனாக வைக்கப்பட்ட மேல்ஷார் என்பவனை தானியேல் நோக்கி: பத்துநாட்கள்வரைக்கும் உமது அடியார்களைச் சோதித்துப்பாரும்; எங்களுக்கு சாப்பிட பருப்பு முதலான காய்கறிகளையும், குடிக்கத் தண்ணீரையும் கொடுத்து, எங்கள் முகங்களையும், ராஜஉணவைச் சாப்பிடுகிற வாலிபர்களுடைய முகங்களையும் ஒப்பிட்டுப்பாரும்; பின்பு நீர் காண்கிறபடி உமது அடியார்களுக்குச் செய்யும் என்றான். அவன் இந்தக் காரியத்திலே அவர்களுக்குச் செவிகொடுத்து, பத்துநாட்கள்வரை அவர்களைச் சோதித்துப்பார்த்தான். பத்துநாட்கள் சென்றபின்பு, ராஜஉணவைச் சாப்பிட்ட எல்லா வாலிபர்களைப்பார்க்கிலும் அவர்கள் முகம் தெளிவுள்ளதாகவும், உடல் திடமுள்ளதாகவும் காணப்பட்டது. ஆகையால் மேல்ஷார் அவர்கள் சாப்பிடச்சொன்ன உணவையும், அவர்கள் குடிக்கச்சொன்ன திராட்சைரசத்தையும் நீக்கிவைத்து, அவர்களுக்குப் பருப்பு முதலானவைகளைக் கொடுத்தான். இந்த நான்கு வாலிபர்களுக்கும் தேவன் சகல எழுத்திலும் ஞானத்திலும் அறிவையும் சாமர்த்தியத்தையும் கொடுத்தார்; தானியேலைச் சகல தரிசனங்களையும் கனவுகளையும் அறியத்தக்க அறிவுள்ளவனாக்கினார். அவர்களை ராஜாவினிடத்தில் கொண்டுவருகிறதற்குக் குறித்த நாட்கள் நிறைவேறினபோது, அதிகாரிகளின் தலைவன் அவர்களை நேபுகாத்நேச்சாருக்கு முன்பாகக் கொண்டுவந்து விட்டான். ராஜா அவர்களுடன் பேசினான்; அவர்கள் எல்லோருக்குள்ளும் தானியேல், அனனியா, மீஷாவேல், அசரியா என்பவர்களைப்போல வேறொருவனும் காணப்படவில்லை; ஆகையால் இவர்கள் ராஜசமுகத்தில் நின்றார்கள். ஞானத்திற்கும் புத்திக்குமுரிய எந்த விஷயத்தில் ராஜா அவர்களைக் கேட்டு விசாரித்தானோ, அதிலே தன் ராஜ்ஜியம் எங்குமுள்ள சகல ஞானிகளிலும் சோதிடர்களிலும் அவர்களைப் பத்துமடங்கு திறமையுள்ளவர்களாகக் கண்டான். கோரேஸ் ஆட்சிசெய்யும் முதலாம்வருடம்வரை தானியேல் அங்கே இருந்தான்.
தானியேல் 1:8-21 பரிசுத்த பைபிள் (TAERV)
தானியேல் ராஜாவின் வளமான உணவையும், திராட்சைரசத்தையும் உண்ண விரும்பவில்லை. தானியேல் அந்த உணவினாலும் திராட்சைரசத்தாலும் தன்னைத்தானே அசுத்தப்படுத்திக்கொள்ள விரும்பவில்லை. எனவே, அவன் அஸ்பேனாசிடம் தன்னைத் தானே அசுத்தப்படுத்திக்கொள்ளாமல் இருக்க அனுமதி கேட்டான். தேவன், அஸ்பேனாஸ் தானியேலிடம் தயவும் இரக்கமும் கொள்ளும்படி செய்தார். ஆனால் அஸ்பேனாஸ் தானியேலிடம், “நான் என் ராஜாவான எஜமானருக்குப் பயப்படுகிறேன். ராஜா இந்த உணவையும், திராட்சைரசத்தையும் உனக்குத் தரும்படி கட்டளையிட்டிருக்கிறார். நீ இந்த உணவை உண்ணாவிட்டால், பலவீனமுடையவனாகவும், நோயாளியாகவும் ஆவாய். நீ உன் வயதுள்ள மற்ற இளைஞர்களைவிட மோசமான நிலையில் இருப்பாய். ராஜா இதனைப் பார்த்து என் மீது கோபங்கொள்வார். அவர் என் தலையை வெட்டிவிடலாம், ஆனால் இதற்கு உனது தவறே காரணமாகும்” என்று சொன்னான். பிறகு தானியேல் அவர்களது காவலனிடமும் பேசினான். அஸ்பேனாசு அந்தக் காவலனிடம் தானியேல், அனனியா, மீஷாவேல், அசரியா ஆகியோரைக் கவனித்துக் கொள்ளும்படி கட்டளையிட்டிருந்தான். தானியேல் காவலனிடம் “தயவுசெய்து பின் வரும் சோதனையைப் பத்து நாட்களுக்கு எங்களுக்குத் தாரும். எங்களுக்கு உண்ண காய்கறிகளும், குடிக்கத் தண்ணீரும் தவிர வேறு எதுவும் தரவேண்டாம். பத்து நாட்களுக்குப் பின்னர் ராஜாவின் உணவை உண்ணும் மற்றவர்களோடு எங்களை ஒப்பிட்டுப் பார்த்து, யார் ஆரோக்கியமாக இருக்கிறார்கள் எனப் பாரும். பிறகு நீர் எங்களை எவ்வாறு நடத்துவது என்று முடிவு செய்யலாம். நாங்கள் உமது பணியாளர்கள்” என்று சொன்னான். எனவே, காவலன் பத்து நாட்களுக்குத் தானியேல், அனனியா, மீஷாவேல், அசரியா ஆகியோரைச் சோதிக்க ஒப்புக்கொண்டான். பத்து நாட்களுக்குப் பிறகு, தானியேலும் அவனது நண்பர்களும் ராஜாவின் உணவை உண்டுவந்த மற்றவர்களைவிட ஆரோக்கியமாகக் காணப்பட்டனர். எனவே, காவலன் ராஜாவின் உணவையும் திராட்சைரசத்தையும் தொடர்ந்து கொடுப்பதை நிறுத்தினான். அதற்குப் பதிலாக அவன் தானியேல், அனனியா, மீஷாவேல், அசரியா ஆகியோருக்குக் காய்கறிகளைக் கொடுத்தான். தேவன், தானியேல், அனனியா, மீஷாவேல், அசரியா ஆகியோருக்கு ஞானத்தையும், பலவித எழுத்துக்களையும், அறிவியலையும் கற்றுக்கொள்ளும் திறமையையும் கொடுத்தார். தானியேல், பலவித தரிசனங்களையும், கனவுகளையும் புரிந்துகொள்ள முடிந்தது. ராஜா அனைத்து இளைஞர்களும் மூன்று ஆண்டுகளுக்குப் பயிற்சி பெறவேண்டும் என்று விரும்பினான். அக்கால முடிவில் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரின் முன்பு எல்லா இளைஞர்களையும் அஸ்பேனாஸ் கொண்டுவந்தான். ராஜா அவர்களோடு பேசினான். ராஜா அந்த இளைஞர்களில் எவரும் தானியேல், அனனியா, மீஷாவேல், அசரியா ஆகியவர்களைப்போன்று சிறந்தவர்களாக இல்லை என்பதைக் கண்டுகொண்டான். எனவே அந்த நான்கு இளைஞர்களும் ராஜாவின் பணியாட்கள் ஆயினர். ஒவ்வொரு முறையும் ராஜா அவர்களிடம் கேட்கும் முக்கியமான கேள்விகளுக்கு அவர்கள் மிகுந்த ஞானத்தையும் புத்தியையும் காட்டினார்கள். ராஜா அவனது அரசாங்கத்தில் உள்ள மந்திரவாதிகளையும், ஞானிகளையும்விட இவர்கள் பத்து மடங்கு சிறந்தவர்கள் என்று கண்டான். எனவே தானியேல் தெடார்ந்து ராஜாவின் பணியாளாக கோரேஸ் ஆண்ட முதலாம் ஆண்டு மட்டும் இருந்தான்.