கொலோசெயர் 4:7-10

கொலோசெயர் 4:7-10 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

தீகிக்கு என்னைப்பற்றிய செய்தி எல்லாவற்றையும் உங்களுக்கு சொல்வான். அவன் அன்பு சகோதரனாகவும், உண்மையுள்ள ஊழியக்காரனாகவும், கர்த்தரில் உடன்வேலைக்காரனாகவும் இருக்கிறான். நாங்கள் எல்லோரும் எப்படியிருக்கிறோம் என்பதை அவன் உங்களுக்குச் சொல்லி, உங்களை மனதளவில் உற்சாகப்படுத்தும் நோக்கத்திற்காகவேதான், நான் அவனை உங்களிடம் அனுப்புகிறேன். அவன் எங்கள் அன்புள்ள சகோதரனான நம்பிக்கைக்குரிய ஒநேசிமுவுடன் வருகிறான். அவனும் உங்களில் ஒருவனே. அவர்கள் இங்கு நடப்பவை எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவிப்பார்கள். என்னுடன் சிறையில் இருக்கும் அரிஸ்தர்க்கு உங்களுக்கு வாழ்த்துதல் அனுப்புகிறான். அப்படியே பர்னபாவின் ஒன்றுவிட்ட சகோதரனான மாற்குவும் வாழ்த்துதல் அனுப்புகிறான். அவனைக்குறித்து ஏற்கெனவே நீங்கள் அறிவுறுத்தல் பெற்றிருக்கிறீர்கள்; அவன் உங்களிடம் வந்தால், அவனை வரவழைத்துக்கொள்ளுங்கள்.

கொலோசெயர் 4:7-10 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

பிரியமான சகோதரனும், உண்மையுள்ள ஊழியக்காரனும், கர்த்தருக்குள் எனக்கு உடன் வேலையாளுமாக இருக்கிற தீகிக்கு என்பவன் என் செய்திகளையெல்லாம் உங்களுக்கு அறிவிப்பான். உங்களுடைய செய்திகளை அறியவும், உங்களுடைய இருதயங்களைத் தேற்றவும், அவனையும், உங்களில் ஒருவனாக இருக்கிற உண்மையும் பிரியமும் உள்ள சகோதரனாகிய ஒநேசிமு என்பவனையும், உங்களிடம் அனுப்பியிருக்கிறேன்; அவர்கள் இந்த இடத்துச் செய்திகளையெல்லாம் உங்களுக்கு அறிவிப்பார்கள். என்னோடுகூடக் காவலில் இருக்கிற அரிஸ்தர்க்கும், பர்னபாவிற்கு நெருங்கிய உறவினரான மாற்கும் வாழ்த்துதல் சொல்லுகிறார்கள். மாற்குவைக்குறித்து உத்தரவுபெற்றீர்களே; இவன் உங்களிடம் வந்தால் இவனை அங்கீகரித்துக்கொள்ளுங்கள்.

கொலோசெயர் 4:7-10 பரிசுத்த பைபிள் (TAERV)

தீகிக்கு கிறிஸ்துவுக்குள் என் அன்பான சகோதரன். கர்த்தருக்குள் அவன் நம்பிக்கைக்கு உரிய ஊழியன். என்னோடு பணியாற்றும் கர்த்தரின் வேலையாள். என் வாழ்வில் நடைபெற்றுக்கொண்டிருக்கிற எல்லாவற்றையும் அவன் உங்களுக்குக் கூறுவான். அதற்காகத் தான் அவனையும் அனுப்புகிறேன். நாங்கள் எப்படி இருக்கிறோம் என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். உங்களை உற்சாகப்படுத்த அவனை அனுப்புகிறேன். ஒநேசிமுவோடு அவனை அனுப்புகிறேன். ஒநேசிமுவும் கிறிஸ்துவுக்குள் எனது அன்பான நம்பிக்கைக்கு உரிய சகோதரன். அவன் உங்கள் கூட்டத்திலிருந்து வந்தவன். எங்களைப் பற்றிய செய்திகளை எல்லாம் தீகிக்குவும், ஒநேசிமுவும் உங்களிடம் கூறுவார்கள். அரிஸ்தர்க்கு தன் வாழ்த்துக்களை உங்களுக்குத் தெரிவிக்கிறான். அவன் என்னோடு சிறையில் இருக்கிறான். பர்னபாவின் உறவினனான மாற்கும் வாழ்த்து கூறுகிறான். நான் ஏற்கெனவே சொன்ன தகவல்களின்படி இவன் வந்தால் வரவேற்றுக்கொள்ளுங்கள்.

கொலோசெயர் 4:7-10 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

பிரியமான சகோதரனும், உண்மையுள்ள ஊழியக்காரனும், கர்த்தருக்குள் எனக்கு உடன்வேலையாளுமாயிருக்கிற தீகிக்கு என்பவன் என் செய்திகளையெல்லாம் உங்களுக்கு அறிவிப்பான். உங்கள் செய்திகளை அறியவும், உங்கள் இருதயங்களைத் தேற்றவும், அவனையும், உங்களிலொருவனாயிருக்கிற உண்மையும் பிரியமுமுள்ள சகோதரனாகிய ஒநேசிமு என்பவனையும், உங்களிடத்தில் அனுப்பியிருக்கிறேன்; அவர்கள் இவ்விடத்துச் செய்திகளையெல்லாம் உங்களுக்கு அறிவிப்பார்கள். என்னோடேகூடக் காவலிலிருக்கிற அரிஸ்தர்க்கு உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறான்; பர்னபாவுக்கு இனத்தானாகிய மாற்கும் வாழ்த்துதல் சொல்லுகிறான், இவனைக்குறித்துக் கட்டளைபெற்றீர்களே; இவன் உங்களிடத்தில் வந்தால் இவனை அங்கிகரித்துக்கொள்ளுங்கள்.