கொலோசெயர் 3:9-14

கொலோசெயர் 3:9-14 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

நீங்கள் உங்கள் பழைய மனித சுபாவத்தையும், அதன் செய்கைகளையும் உங்களைவிட்டு விலக்கியிருக்கிறபடியால், ஒருவருக்கொருவர் பொய் சொல்லாதிருங்கள். நீங்கள் புதிதாக்கப்பட்ட மனிதனுக்குரிய சுபாவத்தை தரித்துக்கொண்டவர்களாய் இருக்கிறீர்கள். அந்த சுபாவம் படைத்தவருடைய சாயலில், அவரைப்பற்றிய அறிவில் புதிதாக்கப்படுகிறது. இந்தப் புதிதாக்கப்பட்ட சுபாவத்தைப் பொறுத்தவரையில், கிரேக்கன், யூதன் என்று வித்தியாசம் இல்லை. விருத்தசேதனம் பெற்றவன், விருத்தசேதனம் பெறாதவன் என்றோ; அந்நியன், பண்பாடற்றவன் என்றோ; அடிமை, சுதந்திரக் குடிமகன் என்றோ வித்தியாசம் இல்லை. கிறிஸ்துவே எல்லாமாய் இருக்கிறார். அவர் இவர்கள் எல்லோரிலும் இருக்கிறார். ஆகவே இறைவனால் தெரிந்துகொள்ளப்பட்ட மக்களும், பரிசுத்தமுள்ளவர்களும், அன்பு காட்டப்பட்டவர்களுமாய் இருக்கிற நீங்கள் இரக்கம், தயவு, தாழ்மை, சாந்தம், பொறுமை ஆகிய குணங்களை அணிந்துகொள்ளுங்கள். ஒருவரையொருவர் சகித்து நடவுங்கள். ஒருவருக்கு விரோதமாய் உங்களுக்கு ஒரு மனத்தாங்கல் இருக்குமேயானால், அதை அவர்களுக்கு மன்னியுங்கள். கர்த்தர் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் மன்னியுங்கள். இந்த நற்குணங்கள் எல்லாவற்றுக்கும் மேலாக, அன்பை உடுத்திக்கொள்ளுங்கள். அதுவே அவை எல்லாவற்றையும் ஒரு பூரண ஒருமைப்பாட்டில் கட்டி வைத்துக்கொள்கிறது.

கொலோசெயர் 3:9-14 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

ஒருவருக்கொருவர் பொய் சொல்லாதிருங்கள்; பழைய மனிதனையும் அவன் செய்கைகளையும் களைந்துபோட்டு, தன்னைப் படைத்தவருடைய சாயலுக்கு ஒப்பாக பூரண அறிவடையும்படி புதிதாக்கப்பட்ட புதிய மனிதனை அணிந்துகொண்டிருக்கிறீர்களே. அதிலே கிரேக்கனென்றும் யூதனென்றுமில்லை, விருத்தசேதனம் உள்ளவனென்றும், விருத்தசேதனம் இல்லாதவனென்றுமில்லை, யூதனல்லாதவனென்றும் வெளிதேசத்தானென்றுமில்லை, அடிமையென்றும் சுதந்திரமானவனென்றுமில்லை; கிறிஸ்துவே எல்லோரிலும் எல்லாமுமாக இருக்கிறார். ஆகவே, நீங்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட பரிசுத்தரும் பிரியருமாக, உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், அமைதியையும், நீடிய பொறுமையையும் அணிந்துகொண்டு; ஒருவரையொருவர் ஏற்றுக்கொண்டு, ஒருவர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள். இவை எல்லாவற்றின்மேலும், பூரண நற்குணத்தின் கட்டாகிய அன்பை அணிந்துகொள்ளுங்கள்.

கொலோசெயர் 3:9-14 பரிசுத்த பைபிள் (TAERV)

ஒருவருக்கொருவர் பொய் சொல்லாதீர்கள். ஏனென்றால் முன்பு நீங்கள் செய்து வந்த பாவச் செயல்களோடு உங்கள் கடந்தகால பாவ வாழ்க்கையை விட்டிருக்கிறீர்கள். நீங்கள் புதிய வாழ்க்கையை வாழ இருக்கிறீர்கள். உங்கள் புதிய வாழ்க்கையில் நீங்களும் தொடர்ச்சியாக புதியவர் ஆகிறீர்கள். நீங்கள் உங்களைப் படைத்த தேவனைப் போல மாறி வருகிறீர்கள். இப்புதிய வாழ்க்கை உங்களுக்கு தேவனைப் பற்றிய உண்மை அறிவைக் கொடுக்கும். இப்புதிய வாழ்வில் கிரேக்கர்களுக்கும், யூதர்களுக்கும் இடையே எந்த வேறுபாடும் இல்லை. விருத்தசேதனம் செய்தவர்களுக்கும், செய்யாதவர்களுக்கும் இடையே எந்த வேறுபாடும் இல்லை. நாகரீகமுள்ளவனென்றும் நாகரீகமில்லாதவனென்றும் வேறுபாடில்லை. அடிமைகளுக்கும் சுதந்திரமானவர்களுக்கும் இடையே வேறுபாடுகள் எதுவும் இல்லை. ஆனால் விசுவாசமுள்ள அனைவரிடமும் கிறிஸ்து இருக்கிறார். எல்லாவற்றையும்விட அவரே அவர்களுக்கு முக்கியமானவர். தேவன் உங்களைத் தேர்ந்தெடுத்து, தன் பரிசுத்த மக்களாக்கினார். அவர் உங்களை நேசிக்கிறார். ஆகவே எப்பொழுதும் நல்லவற்றையே செய்யுங்கள். இரக்கத்தோடும் அருளுணர்வோடும் பிறரிடம் மனவுருக்கம், பணிவு, சாந்தம், பொறுமை ஆகியவற்றைக் கடைப்பிடியுங்கள். ஒருவர்மேல் ஒருவர் கோபப்படாதீர்கள். மன்னித்துவிடுங்கள். மற்றொருவன் உங்களுக்கு எதிராகத் தவறு செய்தால் அதை மன்னியுங்கள். நீங்கள் மற்றவர்களை மன்னிக்கவேண்டும். ஏனென்றால் கர்த்தர் உங்களை மன்னித்தார். இவை அனைத்தையும் செய்யுங்கள், ஆனால் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவதுதான் மிக முக்கியமானது. அன்பு ஒன்றுதான் உங்கள் அனைவரையும் முழு ஒருமையுடன் ஒற்றுமையாகச் சேர்க்க வல்லது.

கொலோசெயர் 3:9-14 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

ஒருவருக்கொருவர் பொய் சொல்லாதிருங்கள்; பழைய மனுஷனையும் அவன் செய்கைகளையும் களைந்துபோட்டு, தன்னைச் சிருஷ்டித்தவருடைய சாயலுக்கொப்பாய்ப் பூரண அறிவடையும்படி புதிதாக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக் கொண்டிருக்கிறீர்களே. அதிலே கிரேக்கனென்றும் யூதனென்றுமில்லை, விருத்தசேதனமுள்ளவனென்றும், விருத்தசேதனமில்லாதவனென்றுமில்லை, புறஜாதியானென்றும் புறதேசத்தானென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை; கிறிஸ்துவே எல்லாரிலும் எல்லாமுமாயிருக்கிறார். ஆகையால், நீங்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட பரிசுத்தரும் பிரியருமாய், உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு; ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர் பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள். இவை எல்லாவற்றின்மேலும், பூரணசற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.