கொலோசெயர் 3:3-24

கொலோசெயர் 3:3-24 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

ஏனென்றால், நீங்கள் மரித்தீர்கள், உங்கள் ஜீவன் கிறிஸ்துவுடனே தேவனுக்குள் மறைந்திருக்கிறது. நம்முடைய ஜீவனாகிய கிறிஸ்து வெளிப்படும்போது, நீங்களும் அவரோடேகூட மகிமையிலே வெளிப்படுவீர்கள். ஆகையால், விபசாரம், அசுத்தம், மோகம், துர்இச்சை, விக்கிரகாராதனையான பொருளாசை ஆகிய இவைகளைப் பூமியில் உண்டுபண்ணுகிற உங்கள் அவயவங்களை அழித்துப்போடுங்கள். இவைகளின்பொருட்டே கீழ்ப்படியாமையின் பிள்ளைகள்மேல் தேவகோபாக்கினை வரும். நீங்களும் முற்காலத்தில் அவர்களுக்குள்ளே சஞ்சரித்தபோது, அவைகளைச் செய்துகொண்டுவந்தீர்கள். இப்பொழுதோ கோபமும் மூர்க்கமும் பொறாமையும், உங்கள் வாயில் பிறக்கலாகாத தூஷணமும் வம்புவார்த்தைகளுமாகிய இவைகளையெல்லாம் விட்டுவிடுங்கள். ஒருவருக்கொருவர் பொய் சொல்லாதிருங்கள்; பழைய மனுஷனையும் அவன் செய்கைகளையும் களைந்துபோட்டு, தன்னைச் சிருஷ்டித்தவருடைய சாயலுக்கொப்பாய்ப் பூரண அறிவடையும்படி புதிதாக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக் கொண்டிருக்கிறீர்களே. அதிலே கிரேக்கனென்றும் யூதனென்றுமில்லை, விருத்தசேதனமுள்ளவனென்றும், விருத்தசேதனமில்லாதவனென்றுமில்லை, புறஜாதியானென்றும் புறதேசத்தானென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை; கிறிஸ்துவே எல்லாரிலும் எல்லாமுமாயிருக்கிறார். ஆகையால், நீங்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட பரிசுத்தரும் பிரியருமாய், உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு; ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர் பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள். இவை எல்லாவற்றின்மேலும், பூரணசற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள். தேவசமாதானம் உங்கள் இருதயங்களில் ஆளக்கடவது, இதற்கென்றே நீங்கள் ஒரே சரீரமாக அழைக்கப்பட்டீர்கள்; நன்றியறிதலுள்ளவர்களாயுமிருங்கள். கிறிஸ்துவின் வசனம் உங்களுக்குள்ளே சகல ஞானத்தோடும் பரிபூரணமாக வாசமாயிருப்பதாக; சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் போதித்து புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்திலே கர்த்தரைப் பக்தியுடன் பாடி; வார்த்தையினாலாவது கிரியையினாலாவது, நீங்கள் எதைச் செய்தாலும், அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து, அவர் முன்னிலையாகப் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள். மனைவிகளே, கர்த்தருக்கேற்கும்படி உங்கள் புருஷருக்குக் கீழ்ப்படியுங்கள். புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள், அவர்கள்மேல் கசந்துகொள்ளாதிருங்கள். பிள்ளைகளே, உங்களைப் பெற்றோருக்கு எல்லாக்காரியத்திலேயும் கீழ்ப்படியுங்கள்; இது கர்த்தருக்குப் பிரியமானது. பிதாக்களே, உங்கள் பிள்ளைகள் திடனற்றுப்போகாதபடி, அவர்களுக்குக் கோபமூட்டாதிருங்கள். வேலைக்காரரே, சரீரத்தின்படி உங்கள் எஜமான்களாயிருக்கிறவர்களுக்கு எல்லாக்காரியத்திலேயும் கீழ்ப்படிந்து, நீங்கள் மனுஷருக்குப் பிரியமாயிருக்க விரும்புகிறவர்களாகப் பார்வைக்கு ஊழியஞ்செய்யாமல், தேவனுக்குப் பயப்படுகிறவர்களாகக் கபடமில்லாத இருதயத்தோடே ஊழியஞ்செய்யுங்கள். நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்துவைச் சேவிக்கிறதினாலே, சுதந்தரமாகிய பலனைக் கர்த்தராலே பெறுவீர்களென்று அறிந்து, எதைச் செய்தாலும், அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல், கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள்.

கொலோசெயர் 3:3-24 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

ஏனெனில் நீங்கள் இறந்துவிட்டீர்கள், இப்பொழுதோ உங்கள் வாழ்க்கை கிறிஸ்துவுடன் இறைவனில் மறைந்திருக்கிறது. உங்கள் வாழ்வாய் இருக்கிற கிறிஸ்து தோன்றும்போது, நீங்களும் அவருடனேகூட மகிமையில் தோன்றுவீர்கள். ஆகவே பூமிக்குரிய இயல்புக்குச் சொந்தமானவைகளான முறைகேடான பாலுறவுகள், அசுத்தமான பழக்கவழக்கங்கள், காமவேட்கைகள், தீய ஆசைகள், விக்கிரக வழிபாடுகளாகிய பேராசை ஆகிய எல்லாவற்றையும் சாகடித்துவிடுங்கள். இவற்றின் காரணமாகவே, இறைவனுடைய கோபம் வருகிறது. முன்பு நீங்கள் வாழ்ந்த வாழ்வில், இவ்விதமான வழிகளில் நடப்பதே உங்கள் வழக்கமாயிருந்தது. ஆனால் இப்பொழுதோ, நீங்கள் இப்படிப்பட்ட காரியங்களை உங்களைவிட்டு அகற்றிவிடவேண்டும்: கோபம், சினம், கேடுசெய்யும் எண்ணம், அவதூறு பேசுதல் ஆகியவற்றுடன், உங்கள் உதடுகளிலிருந்து தீய வார்த்தைகளையும் விலக்கிவிட வேண்டும். நீங்கள் உங்கள் பழைய மனித சுபாவத்தையும், அதன் செய்கைகளையும் உங்களைவிட்டு விலக்கியிருக்கிறபடியால், ஒருவருக்கொருவர் பொய் சொல்லாதிருங்கள். நீங்கள் புதிதாக்கப்பட்ட மனிதனுக்குரிய சுபாவத்தை தரித்துக்கொண்டவர்களாய் இருக்கிறீர்கள். அந்த சுபாவம் படைத்தவருடைய சாயலில், அவரைப்பற்றிய அறிவில் புதிதாக்கப்படுகிறது. இந்தப் புதிதாக்கப்பட்ட சுபாவத்தைப் பொறுத்தவரையில், கிரேக்கன், யூதன் என்று வித்தியாசம் இல்லை. விருத்தசேதனம் பெற்றவன், விருத்தசேதனம் பெறாதவன் என்றோ; அந்நியன், பண்பாடற்றவன் என்றோ; அடிமை, சுதந்திரக் குடிமகன் என்றோ வித்தியாசம் இல்லை. கிறிஸ்துவே எல்லாமாய் இருக்கிறார். அவர் இவர்கள் எல்லோரிலும் இருக்கிறார். ஆகவே இறைவனால் தெரிந்துகொள்ளப்பட்ட மக்களும், பரிசுத்தமுள்ளவர்களும், அன்பு காட்டப்பட்டவர்களுமாய் இருக்கிற நீங்கள் இரக்கம், தயவு, தாழ்மை, சாந்தம், பொறுமை ஆகிய குணங்களை அணிந்துகொள்ளுங்கள். ஒருவரையொருவர் சகித்து நடவுங்கள். ஒருவருக்கு விரோதமாய் உங்களுக்கு ஒரு மனத்தாங்கல் இருக்குமேயானால், அதை அவர்களுக்கு மன்னியுங்கள். கர்த்தர் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் மன்னியுங்கள். இந்த நற்குணங்கள் எல்லாவற்றுக்கும் மேலாக, அன்பை உடுத்திக்கொள்ளுங்கள். அதுவே அவை எல்லாவற்றையும் ஒரு பூரண ஒருமைப்பாட்டில் கட்டி வைத்துக்கொள்கிறது. கிறிஸ்துவின் சமாதானம் உங்கள் இருதயங்களை ஆளுகை செய்யட்டும். ஏனெனில் ஒரே உடலின் பல அங்கங்களாக இந்தச் சமாதானத்துக்கே நீங்கள் அழைக்கப்பட்டுள்ளீர்கள். நன்றியுள்ளவர்களாயும் இருங்கள். கிறிஸ்துவின் வார்த்தை உங்களுக்குள் எல்லா ஞானத்தோடும் நிறைவாய் குடியிருக்கட்டும். சங்கீதங்களினாலும், கீர்த்தனைகளினாலும், ஆவிக்குரிய பாடல்களினாலும் ஒருவருக்கொருவர் போதித்து, அறிவுரை கூறி, உங்கள் இருதயங்களில் இறைவனுக்கு நன்றியுடன் பாடி, சொல்லின் மூலமோ, செயலின் மூலமோ நீங்கள் எதைச் செய்தாலும், கர்த்தராகிய இயேசுவின் பெயரிலேயே எல்லாவற்றையும் செய்யுங்கள். அவர்மூலம் பிதாவாகிய இறைவனுக்கு நன்றி செலுத்தியே அவைகளைச் செய்யுங்கள். மனைவிகளே, உங்கள் கணவருக்குப் பணிந்து நடவுங்கள். இதுவே கர்த்தரில் உங்களுக்கு ஏற்ற நடத்தையாயிருக்கிறது. கணவர்களே, உங்கள் மனைவியிடம் அன்பாய் இருங்கள். அவர்களுடன் கடுமையாய் நடந்துகொள்ளாதிருங்கள். பிள்ளைகளே, எல்லாவற்றிலும் உங்கள் பெற்றோருக்குக் கீழ்ப்படியுங்கள். ஏனெனில், இது கர்த்தரைப் பிரியப்படுத்துகிறது. தந்தையரே, உங்கள் பிள்ளைகளுக்கு மனக்கசப்பை ஏற்படுத்தாதீர்கள். அப்படிச் செய்தால், அவர்கள் சோர்ந்துபோவார்கள். அடிமைகளே, உங்கள் பூமிக்குரிய எஜமான்களுக்கு எல்லாவற்றிலும் கீழ்ப்படிந்திருங்கள்; அவர்கள் உங்களைக் கவனிக்கும்போது மட்டும், அவர்களுடைய நன்மதிப்பைப் பெறுவதற்காக அல்ல, கர்த்தரில் பயபக்தியுள்ளவர்களாய் உண்மையான இருதயத்தோடு அவர்களுக்குக் கீழ்ப்படியுங்கள். நீங்கள் எதைச் செய்தாலும், அதை மனிதருக்குச் செய்வதாக அல்ல, கர்த்தருக்குச் செய்வதாக முழு இருதயத்தோடும் செய்யுங்கள். உங்களுக்கான வெகுமதியாக உரிமைச்சொத்தை கர்த்தரிடமிருந்து பெற்றுக்கொள்வீர்கள் என்று அறிவீர்களே. கிறிஸ்துவாகிய கர்த்தருக்கே நீங்கள் ஊழியம் செய்கிறீர்கள்.

கொலோசெயர் 3:3-24 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

ஏனென்றால், நீங்கள் மரித்தீர்கள், உங்களுடைய ஜீவன் கிறிஸ்துவோடு தேவனுக்குள் மறைந்திருக்கிறது. நம்முடைய ஜீவனாகிய கிறிஸ்து வெளிப்படும்போது, நீங்களும் அவரோடுகூட மகிமையிலே வெளிப்படுவீர்கள். ஆகவே, விபசாரம், அசுத்தம், மோகம், தீய எண்ணம், விக்கிரக ஆராதனையான பொருளாசை ஆகிய இந்த உலகத்திற்குரிய பாவ சுபாவத்தை அழித்துப்போடுங்கள். இவைகளினாலேயே கீழ்ப்படியாமையின் பிள்ளைகள்மேல் தேவனுடைய கோபம் வரும். நீங்களும் முற்காலத்தில் அவர்களுக்குள்ளே வாழ்ந்தபோது, அவைகளைச் செய்துகொண்டுவந்தீர்கள். இப்பொழுதோ கோபமும் மூர்க்கமும் பொறாமையும், உங்களுடைய வாயிலிருந்து வரக்கூடாத நிந்தனையும், வம்புவார்த்தைகளுமாகிய இவைகளையெல்லாம் விட்டுவிடுங்கள். ஒருவருக்கொருவர் பொய் சொல்லாதிருங்கள்; பழைய மனிதனையும் அவன் செய்கைகளையும் களைந்துபோட்டு, தன்னைப் படைத்தவருடைய சாயலுக்கு ஒப்பாக பூரண அறிவடையும்படி புதிதாக்கப்பட்ட புதிய மனிதனை அணிந்துகொண்டிருக்கிறீர்களே. அதிலே கிரேக்கனென்றும் யூதனென்றுமில்லை, விருத்தசேதனம் உள்ளவனென்றும், விருத்தசேதனம் இல்லாதவனென்றுமில்லை, யூதனல்லாதவனென்றும் வெளிதேசத்தானென்றுமில்லை, அடிமையென்றும் சுதந்திரமானவனென்றுமில்லை; கிறிஸ்துவே எல்லோரிலும் எல்லாமுமாக இருக்கிறார். ஆகவே, நீங்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட பரிசுத்தரும் பிரியருமாக, உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், அமைதியையும், நீடிய பொறுமையையும் அணிந்துகொண்டு; ஒருவரையொருவர் ஏற்றுக்கொண்டு, ஒருவர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள். இவை எல்லாவற்றின்மேலும், பூரண நற்குணத்தின் கட்டாகிய அன்பை அணிந்துகொள்ளுங்கள். தேவசமாதானம் உங்களுடைய இருதயங்களில் ஆளக்கடவது, இதற்கென்றே நீங்கள் ஒரே சரீரமாக அழைக்கப்பட்டீர்கள்; நன்றியுள்ளவர்களாகவும் இருங்கள். கிறிஸ்துவின் வசனம் உங்களுக்குள்ளே எல்லா ஞானத்தோடும் பரிபூரணமாக குடியிருப்பதாக; பாடல்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் போதித்து புத்திசொல்லிக்கொண்டு, உங்களுடைய இருதயத்திலே கர்த்த்தரைப் பக்தியுடன் பாடி; வார்த்தையினாலாவது செயல்களினாலாவது, நீங்கள் எதைச்செய்தாலும், அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து, அவர் மூலமாகப் பிதாவாகிய தேவனுக்கு நன்றி செலுத்துங்கள். மனைவிகளே, கர்த்தருக்கேற்கும்படி உங்களுடைய கணவர்களுக்குக் கீழ்ப்படியுங்கள். கணவன்மார்களே, உங்களுடைய மனைவிகளில் அன்பு செலுத்துங்கள், அவர்கள்மேல் கசந்துகொள்ளாதிருங்கள். பிள்ளைகளே, உங்களுடைய பெற்றோருக்கு எல்லாக் காரியத்திலேயும் கீழ்ப்படியுங்கள்; இது கர்த்தருக்கு விருப்பமானது. பிதாக்களே, உங்களுடைய பிள்ளைகள் மனம் தளர்ந்துபோகாதபடி, அவர்களை கோபமூட்டாமலிருங்கள். வேலைக்காரர்களே, சரீரத்தின்படி உங்களுடைய எஜமான்களாக இருக்கிறவர்களுக்கு எல்லாக் காரியத்திலேயும் கீழ்ப்படிந்து, நீங்கள் மனிதர்களைப் பிரியப்படுத்த விரும்புகிறவர்களாகப் பார்வைக்கு பணிவிடைசெய்யாமல், தேவனுக்குப் பயப்படுகிறவர்களாகக் கபடமில்லாத இருதயத்தோடு பணிவிடைசெய்யுங்கள். நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்துவைத் தொழுதுகொள்ளுகிறதினாலே, உரிமைப்பங்கின் பலனைக் கர்த்தராலே பெறுவீர்களென்று அறிந்து, எதைச்செய்தாலும், அதை மனிதர்களுக்கென்று செய்யாமல், கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாகச் செய்யுங்கள்.

கொலோசெயர் 3:3-24 பரிசுத்த பைபிள் (TAERV)

உங்கள் பழைய பாவ சுபாவமானது இறந்துபோயிற்று. தேவனுக்குள் கிறிஸ்துவோடு உங்கள் புதிய வாழ்க்கை மறைந்திருக்கிறது. கிறிஸ்துவே உங்கள் வாழ்க்கை. அவர் மீண்டும் வரும்போது அவரது மகிமையில் பங்கு கொள்வீர்கள். தீமை, பாலியல் குற்றம், பாவ காரியங்களின் ஆளுகைக்கு உள்ளாகுதல், மோகம், தீய ஆசைகள் போன்ற உங்கள் பாவங்களை வாழ்விலிருந்து விலக்குங்கள். போலியான கடவுளுக்குச் சேவை செய்வது என்பதே இவ்விருப்பங்களின் உண்மை அர்த்தம். இவை தேவனைக் கோபப்படுத்தும். இவற்றை நீங்களும் உங்கள் கடந்துபோன பாவ வாழ்க்கையில் செய்தீர்கள். ஆனால் இப்பொழுது கோபம், மூர்க்கம், அடுத்தவர் மனம் புண்படும்படி பேசுதல், கெட்ட வார்த்தைகளை உபயோகித்தல் ஆகியவற்றை உங்கள் வாழ்வில் இருந்து விலக்கி வையுங்கள். ஒருவருக்கொருவர் பொய் சொல்லாதீர்கள். ஏனென்றால் முன்பு நீங்கள் செய்து வந்த பாவச் செயல்களோடு உங்கள் கடந்தகால பாவ வாழ்க்கையை விட்டிருக்கிறீர்கள். நீங்கள் புதிய வாழ்க்கையை வாழ இருக்கிறீர்கள். உங்கள் புதிய வாழ்க்கையில் நீங்களும் தொடர்ச்சியாக புதியவர் ஆகிறீர்கள். நீங்கள் உங்களைப் படைத்த தேவனைப் போல மாறி வருகிறீர்கள். இப்புதிய வாழ்க்கை உங்களுக்கு தேவனைப் பற்றிய உண்மை அறிவைக் கொடுக்கும். இப்புதிய வாழ்வில் கிரேக்கர்களுக்கும், யூதர்களுக்கும் இடையே எந்த வேறுபாடும் இல்லை. விருத்தசேதனம் செய்தவர்களுக்கும், செய்யாதவர்களுக்கும் இடையே எந்த வேறுபாடும் இல்லை. நாகரீகமுள்ளவனென்றும் நாகரீகமில்லாதவனென்றும் வேறுபாடில்லை. அடிமைகளுக்கும் சுதந்திரமானவர்களுக்கும் இடையே வேறுபாடுகள் எதுவும் இல்லை. ஆனால் விசுவாசமுள்ள அனைவரிடமும் கிறிஸ்து இருக்கிறார். எல்லாவற்றையும்விட அவரே அவர்களுக்கு முக்கியமானவர். தேவன் உங்களைத் தேர்ந்தெடுத்து, தன் பரிசுத்த மக்களாக்கினார். அவர் உங்களை நேசிக்கிறார். ஆகவே எப்பொழுதும் நல்லவற்றையே செய்யுங்கள். இரக்கத்தோடும் அருளுணர்வோடும் பிறரிடம் மனவுருக்கம், பணிவு, சாந்தம், பொறுமை ஆகியவற்றைக் கடைப்பிடியுங்கள். ஒருவர்மேல் ஒருவர் கோபப்படாதீர்கள். மன்னித்துவிடுங்கள். மற்றொருவன் உங்களுக்கு எதிராகத் தவறு செய்தால் அதை மன்னியுங்கள். நீங்கள் மற்றவர்களை மன்னிக்கவேண்டும். ஏனென்றால் கர்த்தர் உங்களை மன்னித்தார். இவை அனைத்தையும் செய்யுங்கள், ஆனால் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவதுதான் மிக முக்கியமானது. அன்பு ஒன்றுதான் உங்கள் அனைவரையும் முழு ஒருமையுடன் ஒற்றுமையாகச் சேர்க்க வல்லது. கிறிஸ்துவின் சமாதானம் உங்கள் சிந்தனைகளை ஆள்வதாக. இதற்காக நீங்கள் ஒரே சரீரமாக அழைக்கப்பட்டீர்கள். எப்போதும் நன்றியுள்ளவர்களாய் இருங்கள். கிறிஸ்துவின் போதனைகள் உங்களுக்குள் சிறந்த செல்வமாக இருக்கட்டும். ஒருவருக்கொருவர் போதிக்கவும், பலப்படுத்தவும் உங்கள் முழு ஞானத்தையும் பயன்படுத்துங்கள். உங்கள் இதயத்தில் தேவனுக்கு நன்றி செலுத்தும் வகையில் சங்கீதம், கீர்த்தனைகள், ஞானப்பாட்டு போன்றவற்றை தேவனைக் குறித்து உங்கள் இதயங்களில் சுரக்கும் நன்றியுணர்வோடு பாடுங்கள். நீங்கள் சொல்கின்றவற்றையும் செய்கின்றவற்றையும் உங்கள் கர்த்தராகிய இயேசுவின் பெயரிலேயே செய்யுங்கள். பிதாவாகிய தேவனுக்கு இயேசுவின் மூலம் நன்றி செலுத்துங்கள். மனைவிமார்களே! உங்கள் கணவரின் அதிகாரத்துக்குக் கீழ்ப்படியுங்கள். கர்த்தருக்குள் நீங்கள் செய்யத்தக்க சரியான செயல் இதுவே. கணவன்மார்களே! உங்கள் மனைவியரை நேசியுங்கள். அவர்களோடு சாந்தமாய் இருங்கள். குழந்தைகளே! எல்லா வகையிலும் உங்கள் பெற்றோருக்குக் கீழ்ப்படியுங்கள். இதுவே கர்த்தரை மகிழ்ச்சிப்படுத்துகிறது. பிதாக்களே! உங்கள் பிள்ளைகளை விரக்தியடையச் செய்யாதீர்கள். அவர்களோடு கடுமையாக இருந்தால் அவர்கள் முயற்சி செய்யும் தம் ஆவலை இழந்துவிடுவார்கள். வேலைக்கரார்களே! எல்லா வகையிலும் உங்கள் மண்ணுலக எஜமானர்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள். உங்கள் எஜமானர்கள் உங்களுக்கு அருகில் இல்லாதபோதும், எல்லாக் காலங்களிலும் கீழ்ப்படியுங்கள். மனிதர்களை நீங்கள் சந்தோஷப்படுத்தவில்லை என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். ஆனால் அதைச் செய்துகொண்டிருப்பது நீங்கள் தேவனை மதிக்கிறீர்கள் என்பதாகும். நீங்கள் கர்த்தரை மதிப்பவர்கள், ஆதலால் கபடமில்லாமல் பணிசெய்யுங்கள். நீங்கள் எந்த வேலை செய்தாலும் அதனை இதயப்பூர்வமாகச் செய்யுங்கள். மனிதருக்காக அல்ல, கர்த்தருக்காகச் செய்கிறோம் என்று எண்ணுங்கள். நீங்கள் உங்களுக்குரிய விருதை கர்த்தரிடம் இருந்து பெறுவீர்கள் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். வாக்களித்தபடி அவர் உங்களுக்குத் தருவார். நீங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு சேவை செய்கிறீர்கள்.