கொலோசெயர் 2:1-8
கொலோசெயர் 2:1-8 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
உங்களுக்காகவும், லவோதிக்கேயா பட்டணத்தில் இருக்கிறவர்களுக்காகவும், இன்னும் நேரடியாக என்னைச் சந்தித்திராத மற்றெல்லோருக்காகவும், நான் எவ்வளவாய் போராடுகிறேன் என்பதை நீங்கள் அறியவேண்டும் என நான் விரும்புகிறேன். நீங்களும் அவர்களும் இருதயத்தில் உற்சாகமடைந்தவர்களாய், அன்பினால் ஐக்கியப்பட்டிருக்கவேண்டும் என்பதே என் நோக்கம். இதனால் நீங்கள் முழுமையான விளக்கத்தை நிறைவாகப் பெற்று, இறைவனுடைய இரகசியத்தை அறிந்துகொள்வீர்கள். அந்த இரகசியம் கிறிஸ்துவே. ஞானம், அறிவு ஆகிய செல்வங்கள் எல்லாம் கிறிஸ்துவுக்குள்ளேயே மறைந்திருக்கின்றன. மனதைக் கவரும் விவாதங்களினால் ஒருவரும் உங்களை ஏமாற்றாதபடிக்கே நான் இதை உங்களுக்குச் சொல்கிறேன். உடலால் நான் உங்களுடன் இல்லாதிருந்தாலும், ஆவியில் நான் உங்களுடனேயே இருக்கிறேன். நீங்கள் எவ்வளவு ஒழுங்குள்ளவர்களாய் இருக்கிறீர்கள் என்பதையும், கிறிஸ்துவில் நீங்கள் வைத்திருக்கும் விசுவாசத்தில் எவ்வளவு உறுதி உள்ளவர்களாய் இருக்கிறீர்கள் என்பதையும் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். எனவே கிறிஸ்து இயேசுவை நீங்கள் கர்த்தராய் ஏற்றுக்கொண்டபடியே, அவரில் தொடர்ந்து வாழுங்கள். நீங்கள் அவரில் வேரூன்றி கட்டி எழுப்பப்பட்டவர்களாகவும் இருங்கள், உங்களுக்குக் கற்றுக்கொடுக்கப்பட்டது போலவே விசுவாசத்தில் பெலன் கொண்டவர்களாயும், நன்றி மிக்கவர்களாயும் வாழுங்கள். தங்களுடைய வெறுமையான, ஏமாற்றும் தத்துவ ஞானத்தினால், ஒருவனும் உங்களை சிக்கவைக்காதபடி பார்த்துக்கொள்ளுங்கள். இவை மனித பாரம்பரியத்திலும், உலக அடிப்படைக் கொள்கையிலுமே தங்கியிருக்கின்றன. இவை கிறிஸ்துவை அடிப்படையாகக் கொண்டவையல்ல.
கொலோசெயர் 2:1-8 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
உங்களுக்காகவும் லவோதிக்கேயாவில் இருக்கிறவர்களுக்காகவும், சரீரத்தில் என் முகத்தைக் காணாதிருக்கிற மற்றெல்லோருக்காகவும் மிகுந்த போராட்டம் எனக்கு உண்டென்று நீங்கள் அறியவிரும்புகிறேன். அவர்களுடைய இருதயங்கள் தேற்றப்பட்டு, அவர்கள் அன்பினால் இணைக்கப்பட்டு, பிதாவாகிய தேவனுக்கும் கிறிஸ்துவிற்கும் உரிய இரகசியத்தை அறிந்துகொள்ளுகிற உணர்வின் பூரண நிச்சயத்தினுடைய எல்லா ஐசுவரியத்திற்கும் உரியவர்களாகவேண்டுமென்றே இப்படி விரும்புகிறேன். அவருக்குள் ஞானம் அறிவு என்பவைகளாகிய பொக்கிஷங்களெல்லாம் அடங்கியிருக்கிறது. ஒருவனும் பொய்யான வாதங்களால் உங்களை ஏமாற்றாதபடிக்கு இதைச் சொல்லுகிறேன். சரீரத்தின்படி நான் தூரமாக இருந்தும், ஆவியின்படி உங்களோடுகூட இருந்து, உங்களுடைய ஒழுங்கையும், கிறிஸ்துவின் மேலுள்ள உங்களுடைய விசுவாசத்தின் உறுதியையும் பார்த்துச் சந்தோஷப்படுகிறேன். ஆகவே, நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை ஏற்றுக்கொண்டபடியே, அவருக்குள் வேர்கொண்டவர்களாகவும், அவர்மேல் கட்டப்பட்டவர்களாகவும், அவருக்குள் நடந்துகொண்டு, நீங்கள் போதிக்கப்பட்டபடியே, விசுவாசத்தில் உறுதிப்பட்டு, நன்றி செலுத்துவதோடு அதிலே பெருகுவீர்களாக. உலக ஞானத்தினாலும், மாயமான தந்திரத்தினாலும், ஒருவனும் உங்களைக் கொள்ளைகொண்டு போகாதபடிக்கு எச்சரிக்கையாக இருங்கள்; அது மனிதர்களின் பாரம்பரிய நியாயத்தையும் உலக வழிபாடுகளையும் பற்றினதேயல்லாமல் கிறிஸ்துவைப்பற்றினதல்ல.
கொலோசெயர் 2:1-8 பரிசுத்த பைபிள் (TAERV)
உங்களுக்கு உதவ நான் கடுமையான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறேன் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என விரும்புகிறேன். லவோதிக்கேயா மக்களுக்கும், என்னை இதுவரை காணாத ஏனைய மக்களுக்கும் நான் உதவி செய்ய முயல்கிறேன். அவர்களை பலப்படுத்தவும், அன்புடன் ஒன்று சேர்த்துக்கொள்ளவும் விரும்புகிறேன். உறுதியான விசுவாசம் என்னும் செல்வத்தை அவர்கள் பெறவேண்டும் என்று விரும்புகிறேன். அந்த விசுவாசம் சரியான அறிவில் இருந்து பிறக்க வேண்டும் என்றும் விரும்புகிறேன். தேவன் வெளிப்படுத்திய இரகசிய உண்மையை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும் என்றும் விரும்புகிறேன். அந்த உண்மை கிறிஸ்து தான். கிறிஸ்துவுக்குள் ஞானத்தின் எல்லாக் கருவூலங்களும், அறிவும் பாதுகாக்கப்பட்டிருக்கிறது. தோற்றத்தில் உண்மை போன்ற பொய்களைச் சொல்லி உங்களை யாரும் முட்டாளாக்கிவிடக் கூடாது என்பதற்காக இவ்வளவையும் உங்களுக்கு எழுதுகிறேன். அங்கே நான் உங்களோடு இல்லை. எனினும் எனது இதயம் உங்களோடு உள்ளது. உங்களது நல்ல வாழ்வைக் காணும்போதும் கிறிஸ்துவுக்குள் உறுதியான விசுவாசத்தைக் காணும்போதும் நான் மகிழ்வடைகிறேன். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நீங்கள் அடைந்துள்ளீர்கள். எனவே எதையும் மாற்றிக்கொள்ளாமல் தொடர்ந்து அவரைப் பின்பற்றி வாழுங்கள். கிறிஸ்துவை மட்டும் நீங்கள் சார்ந்திருங்கள். வாழ்க்கையும், பலமும் அவரிடமிருந்து வருகின்றன. உங்களுக்கு அந்த உண்மை கற்பிக்கப்பட்டிருக்கிறது. அந்த உண்மையான போதனையில் நீங்கள் தொடர்ந்து உறுதியாக இருக்க வேண்டும். எப்பொழுதும் நன்றி உள்ளவர்களாய் இருங்கள். பொய்யான எண்ணங்களாலும், பொருளற்ற சொற்களாலும் எவரும் உங்களை வழி நடத்திச் செல்லாதபடி உறுதியாய் இருங்கள். இத்தகைய எண்ணங்கள் கிறிஸ்துவிடமிருந்து வராது. மக்களிடமிருந்தே வருகிறது. இவை உலக மக்களின் பயனற்ற எண்ணங்கள்.
கொலோசெயர் 2:1-8 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
உங்களுக்காகவும் லவோதிக்கேயாவிலிருக்கிறவர்களுக்காகவும், சரீரத்தில் என் முகத்தைக் காணாதிருக்கிற மற்றெல்லாருக்காகவும் மிகுந்த போராட்டம் எனக்கு உண்டென்று நீங்கள் அறியவிரும்புகிறேன். அவர்களுடைய இருதயங்கள் தேற்றப்பட்டு, அவர்கள் அன்பினால் இணைக்கப்பட்டு, பிதாவாகிய தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் உரிய இரகசியத்தை அறிந்துகொள்ளுகிற உணர்வின் பூரண நிச்சயத்தினுடைய எல்லா ஐசுவரியத்திற்கும் உரியவர்களாகவேண்டுமென்றே இப்படி விரும்புகிறேன். அவருக்குள் ஞானம் அறிவு என்பவைகளாகிய பொக்கிஷங்களெல்லாம் அடங்கியிருக்கிறது. ஒருவனும் நயவசனிப்பினாலே உங்களை வஞ்சியாதபடிக்கு இதைச் சொல்லுகிறேன். சரீரத்தின்படி நான் தூரமாயிருந்தும், ஆவியின்படி உங்களுடனேகூட இருந்து, உங்கள் ஒழுங்கையும், கிறிஸ்துவின்மேலுள்ள உங்கள் விசுவாசத்தின் உறுதியையும் பார்த்துச் சந்தோஷப்படுகிறேன். ஆகையால், நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை ஏற்றுக்கொண்டபடியே, அவருக்குள் வேர்கொண்டவர்களாகவும், அவர்மேல் கட்டப்பட்டவர்களாகவும், அவருக்குள் நடந்துகொண்டு, நீங்கள் போதிக்கப்பட்டபடியே, விசுவாசத்தில் உறுதிப்பட்டு, ஸ்தோத்திரத்தோடே அதிலே பெருகுவீர்களாக. லௌகிக ஞானத்தினாலும், மாயமான தந்திரத்தினாலும், ஒருவனும் உங்களைக் கொள்ளைகொண்டு போகாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அது மனுஷர்களின் பாரம்பரிய நியாயத்தையும் உலகவழிபாடுகளையும் பற்றினதேயல்லாமல் கிறிஸ்துவைப்பற்றினதல்ல.