கொலோசெயர் 1:19-29
கொலோசெயர் 1:19-29 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
சகல பரிபூரணமும் அவருக்குள்ளே வாசமாயிருக்கவும், அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி, பூலோகத்திலுள்ளவைகள் பரலோகத்திலுள்ளவைகள் யாவையும் அவர் மூலமாய்த் தமக்கு ஒப்புரவாக்கிக்கொள்ளவும் அவருக்குப் பிரியமாயிற்று. முன்னே அந்நியராயும் துர்க்கிரியைகளினால் மனதிலே சத்துருக்களாயும் இருந்த உங்களையும் பரிசுத்தராகவும் குற்றமற்றவர்களாகவும் கண்டிக்கப்படாதவர்களாகவும் தமக்கு முன்நிறுத்தும்படியாக அவருடைய மாம்சசரீரத்தில் அடைந்த மரணத்தினாலே இப்பொழுது ஒப்புரவாக்கினார். நீங்கள் கேட்ட சுவிசேஷத்தினால் உண்டாகும் நம்பிக்கையைவிட்டு அசையாமல், ஸ்திரமாயும் உறுதியாயும் விசுவாசத்திலே நிலைத்திருப்பீர்களானால் அப்படியாகும். அந்தச் சுவிசேஷம் வானத்தின் கீழிருக்கிற சகல சிருஷ்டிகளுக்கும் பிரசங்கிக்கப்பட்டுவருகிறது; அதற்கென்றே பவுலாகிய நான் ஊழியக்காரனானேன். இப்பொழுது நான் உங்கள்நிமித்தம் அநுபவிக்கிற பாடுகளில் சந்தோஷமடைந்து, கிறிஸ்துவினுடைய உபத்திரவங்களில் குறைவானதை அவருடைய சரீரமாகிய சபைக்காக, என் மாம்சத்திலே நிறைவேற்றுகிறேன். ஆதிகாலங்களுக்கும் தலைமுறை தலைமுறைகளுக்கும் மறைவாயிருந்து, இப்பொழுது அவருடைய பரிசுத்தவான்களுக்கு வெளியாக்கப்பட்ட இரகசியமாகிய தேவவசனத்தைப் பூரணமாய்த் தெரியப்படுத்துகிறதற்கு, உங்கள்பொருட்டு தேவனால் எனக்கு அளிக்கப்பட்ட உத்தியோகத்தின்படியே நான் அந்தச் சபைக்கு ஊழியக்காரனானேன். புறஜாதிகளுக்குள்ளே விளங்கிய இந்த இரகசியத்திலுள்ள மகிமையின் ஐசுவரியம் இன்னதென்று, தேவன் தம்முடைய பரிசுத்தவான்களுக்குத் தெரியப்படுத்தச் சித்தமானார்; கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருப்பதே அந்த இரகசியம். எந்த மனுஷனையும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேறினவனாக நிறுத்தும்படிக்கு, அவரையே நாங்கள் அறிவித்து, எந்த மனுஷனுக்கும் புத்திசொல்லி, எந்த மனுஷனுக்கும் எல்லா ஞானத்தோடும் உபதேசம் பண்ணுகிறோம். அதற்காக நான் எனக்குள்ளே வல்லமையாய்க் கிரியை நடப்பிக்கிற அவருடைய பலத்தின்படி போராடிப் பிரயாசப்படுகிறேன்.
கொலோசெயர் 1:19-29 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
இறைவன் தம்முடைய எல்லா முழுநிறைவையும் கிறிஸ்துவில் குடியிருக்கச் செய்ய விரும்பினார். கிறிஸ்து சிலுவையில் சிந்திய இரத்தத்தினாலே, இறைவன் சமாதானத்தை உண்டாக்கவும் அத்துடன் கிறிஸ்துவின் மூலமாகவே பரலோகத்திலும், பூமியிலும் உள்ள எல்லாவற்றையும் தம்மோடு ஒப்புரவாக்கிக்கொள்ள பிரியங்கொண்டார். முன்பு நீங்கள் இறைவனிடமிருந்து அந்நியராகயிருந்தீர்கள். உங்கள் தீமையான நடத்தையின் காரணமாக உங்கள் மனதில் அவருக்குப் பகைவர்களாக இருந்தீர்கள். ஆனால் இப்பொழுது கிறிஸ்துவினுடைய மனித உடல் மரணத்திற்கு உட்பட்டதன் மூலமாக இறைவன் உங்களைத் தம்முடன் ஒப்புரவாக்கினார். இறைவனுடைய பார்வையிலே உங்களைக் கறைப்படாதவர்களாகவும், குற்றமற்றவர்களாகவும், பரிசுத்தமுள்ளவர்களாகவும் தம் முன்னே நிறுத்தும்படிக்கே அவர் இப்படிச் செய்தார். நீங்கள் கேட்ட நற்செய்தியினால் உண்டாகும் நம்பிக்கையைவிட்டு விலகாமல், விசுவாசத்தில் உறுதியுடையவர்களாய் தொடர்ந்து நிலைத்திருங்கள். அந்த நற்செய்தி வானத்தின் கீழுள்ள எல்லாப் படைப்புகளுக்கும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. பவுலாகிய நான் இந்த நற்செய்தியை அறிவிக்கும் ஊழியனாகியிருக்கிறேன். இப்பொழுது உங்களுக்காக நான் பட்ட துன்பங்களைக்குறித்து மகிழ்ச்சியடைகிறேன். எனவே கிறிஸ்துவின் உடலாகிய திருச்சபைக்கான அவருடைய துன்பங்களில், நானும் பங்கு பெறும்படி, எனது மாம்சத்திலும் வேதனைகளை அனுபவிக்கிறேன். உங்களுக்கு இறைவனுடைய வார்த்தையை முழுமையாக அறிவிக்கும்படிக்கு, இறைவன் எனக்குக் கொடுத்த பொறுப்பினாலே நான் அவருடைய திருச்சபையின் ஊழியக்காரனானேன். அந்த இரகசியம் காலாகாலமாகவும், தலைமுறை தலைமுறையாகவும் மறைக்கப்பட்டே இருந்தது. ஆனால் இப்பொழுதோ, அது பரிசுத்தவான்களுக்கு வெளிப்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த இரகசியத்தை, யூதரல்லாதவர்களின் நடுவிலும் வெளிப்படுத்துகிறார் என்பதை தம்முடைய பரிசுத்தவான்களுக்குத் தெரியப்படுத்தவே இறைவன் தீர்மானித்தார். கிறிஸ்து உங்களுக்குள் குடியிருப்பதென்பதே அந்த இரகசியம். இதுவே கிறிஸ்துவின் மகிமையில் நாமும் பங்குகொள்வோம் என்ற எதிர்பார்ப்பைக் கொடுக்கும் மகிமையான செல்வம். ஒவ்வொருவரையும் கிறிஸ்துவில் முழுமை பெற்றவர்களாக நிறுத்தும்படிக்கு, நாங்கள் எல்லோருக்கும் கிறிஸ்துவை அறிவித்து, எல்லா ஞானத்தோடும் புத்தி சொல்லி போதித்து வருகிறோம். இதற்காகவே, நான் எனக்குள் செயல்படுகிற அவருடைய ஆற்றல் நிறைந்த முழு வல்லமையுடனும் போராடிப் பிரயாசப்படுகிறேன்.
கொலோசெயர் 1:19-29 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
எல்லாப் பரிபூரணமும் அவருக்குள்ளே வாசமாக இருக்கவும், அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி, பூலோகத்திலுள்ளவைகள் பரலோகத்திலுள்ளவைகள் யாவையும் அவர் மூலமாகத் தமக்கு ஒப்புரவாக்கிக்கொள்ளவும் தேவனுக்கு விருப்பமானது. முன்னே தேவனுக்கு அந்நியர்களாகவும் தீய செயல்களினால் மனதிலே விரோதிகளாகவும் இருந்த உங்களையும் பரிசுத்தர்களாகவும் குற்றமற்றவர்களாகவும் கண்டிக்கப்படாதவர்களாகவும் தமக்குமுன் நிறுத்தும்படியாக அவருடைய மாம்சசரீரத்தில் அடைந்த மரணத்தினாலே இப்பொழுது ஒப்புரவாக்கினார். நீங்கள் கேட்ட நற்செய்தியினால் உண்டாகும் நம்பிக்கையைவிட்டு அசையாமல், நிலையாகவும் உறுதியாகவும் விசுவாசத்திலே நிலைத்திருப்பீர்களானால் அப்படியாகும். அந்த நற்செய்தி வானத்தின்கீழே இருக்கிற எல்லாப் படைப்புகளுக்கும் பிரசங்கிக்கப்பட்டுவருகிறது; அதற்கென்றே பவுலாகிய நான் ஊழியக்காரனானேன். இப்பொழுது நான் உங்கள்நிமித்தம் அநுபவிக்கிற பாடுகளில் சந்தோஷமடைந்து, கிறிஸ்துவினுடைய உபத்திரவங்களில் குறைவானதை அவருடைய சரீரமாகிய சபைக்காக, என் சரீரத்தினாலே நிறைவேற்றுகிறேன். ஆரம்ப காலங்களுக்கும் தலைமுறை தலைமுறைகளுக்கும் மறைவாக இருந்து, இப்பொழுது அவருடைய பரிசுத்தவான்களுக்கு வெளியாக்கப்பட்ட இரகசியமாகிய தேவவசனத்தை நிறைவாகத் தெரியப்படுத்துகிறதற்கு, உங்கள்நிமித்தம் தேவனால் எனக்கு அளிக்கப்பட்ட வேலையின்படியே நான் அந்தச் சபைக்கு ஊழியக்காரனானேன். யூதரல்லாதவர்களுக்குள்ளே விளங்கிய இந்த இரகசியத்திலுள்ள மகிமையின் ஐசுவரியம் இன்னதென்று, தேவன் தம்முடைய பரிசுத்தவான்களுக்குத் தெரியப்படுத்தப் பிரியமானார்; கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருப்பதே அந்த இரகசியம். எந்த மனிதனையும் கிறிஸ்து இயேசுவிற்குள் தேறினவனாக நிறுத்தும்படிக்கு, அவரையே நாங்கள் அறிவித்து, எந்த மனிதனுக்கும் புத்திசொல்லி, எந்த மனிதனுக்கும் எல்லா ஞானத்தோடும் உபதேசம் செய்கிறோம். அதற்காக நான் எனக்குள்ளே வல்லமையான செய்கையை நடப்பிக்கிற அவருடைய பலத்தின்படி போராடிப் பிரயாசப்படுகிறேன்.
கொலோசெயர் 1:19-29 பரிசுத்த பைபிள் (TAERV)
கிறிஸ்துவில் சகலமும் வாழ்வதே தேவனுடைய விருப்பமாக இருந்தது. பரலோகத்திலும், பூலோகத்திலும் உள்ள அனைத்துப் பொருள்களையும் கிறிஸ்துவின் மூலமாகத் தனக்குள்ளேயே திரும்பவும் கொண்டு வருவதில் தேவன் மகிழ்ச்சியடைந்தார். சிலுவையில் கிறிஸ்து இரத்தம் சிந்தியதன் மூலம் உலகில் தேவன் சமாதானத்தை உருவாக்கினார். ஒரு காலத்தில் நீங்கள் தேவனை விட்டுப் பிரிந்தீர்கள். உங்கள் மனதில் தேவனுக்குப் பகைவராக இருந்தீர்கள். ஏனென்றால் நீங்கள் செய்த எல்லா செயல்களும் தேவனுக்கு எதிரானவை. ஆனால் இப்போது கிறிஸ்து மீண்டும் உங்களை தேவனுக்கு நண்பர்களாக்கிவிட்டார். கிறிஸ்து இதனைத் தனது மரணத்தின் மூலம் தான் சரீரத்தில் இருக்கும்போது செய்தார். இதன் மூலம் அவர் உங்களைப் பரிசுத்தமுள்ளவர்களாகவும், உங்களில் குற்றம் இல்லாதவர்களாகவும், தேவனால் நீங்கள் பாவிகள் என்று தீர்ப்பளிக்க முடியாத வகையில் தேவன் முன் நிறுத்துகிறார். நீங்கள் கேட்டறிந்த நற்செய்தியில் தொடர்ந்து விசுவாசம் கொண்டவர்களாக இருந்தால், உங்களுக்காகக் கிறிஸ்து இதைச் செய்வார். உங்கள் விசுவாசத்தில் தொடர்ந்து உறுதியாகவும், ஸ்திரமாகவும் இருக்கவேண்டும். நற் செய்தியின் மூலம் பெற்ற விசுவாசத்தில் இருந்து கொஞ்சம் கூட விலகக் கூடாது. இந்த நற்செய்தியே உலகம் முழுவதும் சொல்லப்பட்டிருக்கிறது. பவுலாகிய நான் அந்த நற்செய்தியைப் பரவலாக ஆக்கும் பொருட்டு உதவி செய்கிறேன். உங்களுக்காகப் பாடுபடுவதைக் குறித்து நான் மகிழ்கிறேன். சரீரமாகிய சபைக்காக கிறிஸ்து இன்னும் துன்புற்றுக்கொண்டிருக்கிறார். அத்துன்பத்தில் ஒரு பங்கை நானும் பெற்றுக்கொள்கிறேன். அவரது சரீரமாகிய சபைக்காக நான் துன்புறுகிறேன். ஏனென்றால் தேவன் எனக்கு இந்தச் சிறப்புக்குரிய வேலையைக் கொடுத்திருக்கிறார். இந்தப் பணி உங்களுக்கு உதவுகிறது. தேவனுடைய போதனையை முழுமையாய் கூறுவதுதான் என் பணி. இந்தப் போதனைதான் இரகசிய உண்மை. இது உலகம் படைக்கப்பட்ட காலம் முதல் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. இது எல்லா மக்களிடமிருந்தும் மறைக்கப்பட்டிருந்தது. இப்போது தேவனுடைய பரிசுத்தமான மக்களுக்கு மட்டும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. தேவன், தனது மக்கள், இந்தச் செல்வமும், உன்னதமுமிக்க இரகசிய உண்மையைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று முடிவு செய்தார். அந்த உயர்ந்த உண்மை உலகிலுள்ள மக்கள் அனைவருக்கும் உரியது. கிறிஸ்துதான் அந்த உண்மை. அவர் உங்களில் இருக்கிறார். அவரே நம் மகிமைக்கான ஒரே நம்பிக்கையாக இருக்கிறார். எனவே நாம் மக்களிடம் தொடர்ந்து கிறிஸ்துவைப் பற்றிப் போதனை செய்கிறோம். நம் முழு அறிவையும் ஒவ்வொருவரையும் பலப்படுத்தவும், ஒவ்வொருவருக்கும் போதிக்கவும் பயன்படுத்துகிறோம். கிறிஸ்துவுக்குள் ஆன்மீக முழுமைபெற்ற மக்களைப் போன்று ஏனைய மக்களையும் நாம் தேவனுக்கு முன்பாகக் கொண்டு வர முயற்சி செய்துகொண்டிருக்கிறோம். கிறிஸ்து எனக்குக் கொடுத்திருக்கிற முழு சக்தியையும் பயன்படுத்தி, இதைச் செய்வதற்காகத்தான் நான் உழைத்து வருகிறேன். அச்சக்தி எனக்குள் வேலை செய்கிறது.