கொலோசெயர் 1:19-22

கொலோசெயர் 1:19-22 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இறைவன் தம்முடைய எல்லா முழுநிறைவையும் கிறிஸ்துவில் குடியிருக்கச் செய்ய விரும்பினார். கிறிஸ்து சிலுவையில் சிந்திய இரத்தத்தினாலே, இறைவன் சமாதானத்தை உண்டாக்கவும் அத்துடன் கிறிஸ்துவின் மூலமாகவே பரலோகத்திலும், பூமியிலும் உள்ள எல்லாவற்றையும் தம்மோடு ஒப்புரவாக்கிக்கொள்ள பிரியங்கொண்டார். முன்பு நீங்கள் இறைவனிடமிருந்து அந்நியராகயிருந்தீர்கள். உங்கள் தீமையான நடத்தையின் காரணமாக உங்கள் மனதில் அவருக்குப் பகைவர்களாக இருந்தீர்கள். ஆனால் இப்பொழுது கிறிஸ்துவினுடைய மனித உடல் மரணத்திற்கு உட்பட்டதன் மூலமாக இறைவன் உங்களைத் தம்முடன் ஒப்புரவாக்கினார். இறைவனுடைய பார்வையிலே உங்களைக் கறைப்படாதவர்களாகவும், குற்றமற்றவர்களாகவும், பரிசுத்தமுள்ளவர்களாகவும் தம் முன்னே நிறுத்தும்படிக்கே அவர் இப்படிச் செய்தார்.

கொலோசெயர் 1:19-22 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

எல்லாப் பரிபூரணமும் அவருக்குள்ளே வாசமாக இருக்கவும், அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி, பூலோகத்திலுள்ளவைகள் பரலோகத்திலுள்ளவைகள் யாவையும் அவர் மூலமாகத் தமக்கு ஒப்புரவாக்கிக்கொள்ளவும் தேவனுக்கு விருப்பமானது. முன்னே தேவனுக்கு அந்நியர்களாகவும் தீய செயல்களினால் மனதிலே விரோதிகளாகவும் இருந்த உங்களையும் பரிசுத்தர்களாகவும் குற்றமற்றவர்களாகவும் கண்டிக்கப்படாதவர்களாகவும் தமக்குமுன் நிறுத்தும்படியாக அவருடைய மாம்சசரீரத்தில் அடைந்த மரணத்தினாலே இப்பொழுது ஒப்புரவாக்கினார். நீங்கள் கேட்ட நற்செய்தியினால் உண்டாகும் நம்பிக்கையைவிட்டு அசையாமல், நிலையாகவும் உறுதியாகவும் விசுவாசத்திலே நிலைத்திருப்பீர்களானால் அப்படியாகும்.

கொலோசெயர் 1:19-22 பரிசுத்த பைபிள் (TAERV)

கிறிஸ்துவில் சகலமும் வாழ்வதே தேவனுடைய விருப்பமாக இருந்தது. பரலோகத்திலும், பூலோகத்திலும் உள்ள அனைத்துப் பொருள்களையும் கிறிஸ்துவின் மூலமாகத் தனக்குள்ளேயே திரும்பவும் கொண்டு வருவதில் தேவன் மகிழ்ச்சியடைந்தார். சிலுவையில் கிறிஸ்து இரத்தம் சிந்தியதன் மூலம் உலகில் தேவன் சமாதானத்தை உருவாக்கினார். ஒரு காலத்தில் நீங்கள் தேவனை விட்டுப் பிரிந்தீர்கள். உங்கள் மனதில் தேவனுக்குப் பகைவராக இருந்தீர்கள். ஏனென்றால் நீங்கள் செய்த எல்லா செயல்களும் தேவனுக்கு எதிரானவை. ஆனால் இப்போது கிறிஸ்து மீண்டும் உங்களை தேவனுக்கு நண்பர்களாக்கிவிட்டார். கிறிஸ்து இதனைத் தனது மரணத்தின் மூலம் தான் சரீரத்தில் இருக்கும்போது செய்தார். இதன் மூலம் அவர் உங்களைப் பரிசுத்தமுள்ளவர்களாகவும், உங்களில் குற்றம் இல்லாதவர்களாகவும், தேவனால் நீங்கள் பாவிகள் என்று தீர்ப்பளிக்க முடியாத வகையில் தேவன் முன் நிறுத்துகிறார்.

கொலோசெயர் 1:19-22 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

சகல பரிபூரணமும் அவருக்குள்ளே வாசமாயிருக்கவும், அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி, பூலோகத்திலுள்ளவைகள் பரலோகத்திலுள்ளவைகள் யாவையும் அவர் மூலமாய்த் தமக்கு ஒப்புரவாக்கிக்கொள்ளவும் அவருக்குப் பிரியமாயிற்று. முன்னே அந்நியராயும் துர்க்கிரியைகளினால் மனதிலே சத்துருக்களாயும் இருந்த உங்களையும் பரிசுத்தராகவும் குற்றமற்றவர்களாகவும் கண்டிக்கப்படாதவர்களாகவும் தமக்கு முன்நிறுத்தும்படியாக அவருடைய மாம்சசரீரத்தில் அடைந்த மரணத்தினாலே இப்பொழுது ஒப்புரவாக்கினார். நீங்கள் கேட்ட சுவிசேஷத்தினால் உண்டாகும் நம்பிக்கையைவிட்டு அசையாமல், ஸ்திரமாயும் உறுதியாயும் விசுவாசத்திலே நிலைத்திருப்பீர்களானால் அப்படியாகும்.