ஆமோஸ் 8:1-6
ஆமோஸ் 8:1-6 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
ஆண்டவராகிய யெகோவா எனக்குக் காண்பித்தது இதுவே: பழுத்த பழங்களை உடைய ஒரு கூடையைக் கண்டேன். “ஆமோஸ், நீ என்னத்தைக் காண்கிறாய்?” என்று கேட்டார். அதற்கு நான், “பழுத்த பழங்களுடைய கூடையைக் காண்கிறேன்” என்றேன். அப்பொழுது யெகோவா என்னிடம், “இஸ்ரயேலரான என் மக்களுக்கு முடிவுகாலம் வந்துவிட்டது. நான் இனிமேலும் அவர்களைத் தப்பவிடமாட்டேன். “அந்த நாளில், ஆலயப் பாடல்கள் புலம்பலாக மாறும். ஏராளமான உடல்கள், எங்கும் எறியப்பட்டுக் கிடக்கும்! எங்கும் நிசப்தம் உண்டாகும்!” என்று ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார். சிறுமைப்பட்டவர்களை மிதித்து, நாட்டின் ஏழைகளை அகற்றுகிறவர்களே, இதைக் கேளுங்கள். நீங்கள் தானியம் விற்பதற்கு அமாவாசை எப்போது முடியும் என்றும், கோதுமை விற்பதற்கு ஓய்வுநாள் எப்போது முடிவடையும் என்றும் சொல்லி, அளவைக் குறைத்து, விலையை அதிகரித்து, கள்ளத்தராசினால் ஏமாற்றுவதற்குக் காத்திருக்கிறீர்கள். ஏழையை வெள்ளி கொடுத்து வாங்குவதற்கும், சிறுமைப்பட்டவர்களை ஒரு ஜோடி செருப்பு கொடுத்து வாங்குவதற்கும், பதரைக் கோதுமையுடன் விற்பதற்கும் அல்லவோ காத்திருக்கிறீர்கள்.
ஆமோஸ் 8:1-6 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
பின்பு யெகோவாகிய ஆண்டவர் எனக்குக் காண்பித்தது என்னவென்றால்: இதோ, பழுத்த பழங்களுள்ள ஒரு கூடை இருந்தது. அவர்: ஆமோஸே, நீ எதைக் காண்கிறாய் என்று கேட்டார்? பழுத்த பழங்களுள்ள ஒரு கூடையைக் காண்கிறேன் என்றேன். அப்பொழுது யெகோவா என்னை நோக்கி: என்னுடைய மக்களாகிய இஸ்ரவேலுக்கு முடிவுகாலம் வந்தது; இனி அவர்களை மன்னிக்கமாட்டேன். அந்த நாளிலே தேவாலயப் பாடல்கள் அலறுதலாக மாறும்; எல்லா இடத்திலும் திரளான பிரேதங்கள் புலம்பல் இல்லாமல் எறிந்துவிடப்படும் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார். தேசத்தில் சிறுமைப்பட்டவர்களை ஒழியச்செய்ய, எளியவர்களை விழுங்கி: நாங்கள் மரக்காலைக் குறைத்து, சேக்கல் நிறையை அதிகமாக்கி, கள்ளத்தராசினால் வஞ்சித்து, தரித்திரர்களைப் பணத்திற்கும், எளியவர்களை ஒரு ஜோடி காலணிகளுக்கும் வாங்கும்படியும், தானியத்தின் பதரை விற்கும்படியும், நாங்கள் கேட்ட கோதுமையை விற்கத்தக்கதாக மாதப்பிறப்பும், நாங்கள் தானியத்தின் சேமிப்புக்கிடங்குகளை திறக்கத்தக்கதாக ஓய்வு நாளும் எப்போது முடியும் என்று சொல்லுகிறவர்களே, இதைக் கேளுங்கள்.
ஆமோஸ் 8:1-6 பரிசுத்த பைபிள் (TAERV)
கர்த்தர் இதனை எனக்குக் காட்டினார். நான் கோடைகால கனியுள்ள கூடையைப் பார்த்தேன். “ஆமோஸ் நீ என்ன பார்க்கிறாய்?” என்று என்னிடம் கேட்டார். நான், “ஒரு கோடைக்கனியுள்ள கூடை” என்றேன். பிறகு கர்த்தர் என்னிடம், “எனது இஸ்ரவேல் ஜனங்களுக்கு முடிவு வந்துவிட்டது. இனி அவர்களின் பாவங்களை நான் கவனிக்காமல் விடமாட்டேன். ஆலயப் பாடல்கள் மரணப் பாடல்களாக மாறும். எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றை கூறினார். எல்லா இடங்களிலும் மரித்த உடல்கள் கிடக்கும். மௌனமாக, ஜனங்கள் மரித்த உடல்களை எடுத்துப் போய் குவியலாக எறிவார்கள்” என்றார். எனக்குச் செவி கொடுங்கள்! நீங்கள் உதவியற்ற ஜனங்கள் மீது நடக்கிறீர்கள்: நீங்கள் இந்த நாட்டிலுள்ள ஏழை ஜனங்களை அழிக்க முயற்சி செய்கிறீர்கள். வியாபாரிகளாகிய நீங்கள் கூறுகிறீர்கள்: “நாங்கள் தானியம் விற்க அமாவாசை எப்பொழுது முடியும்? நாங்கள் கோதுமையை விற்கக் கொண்டு வர ஓய்வுநாள் எப்பொழுது முடியும்? எங்களால் விலையை ஏற்றி அளவைக் குறைக்க முடியும். அளவுக் கருவிகளை நமக்கு அதிகம் லாபம் கிடைக்கிற விதத்தில் மாற்றி ஜனங்களை ஏமாற்றுவோம். ஏழை ஜனங்களால் தம் கடன்களைச் செலுத்த முடியாது, எனவே நாங்கள் அவர்களை அடிமைகளாக வாங்குவோம். நாங்கள் ஒரு ஜோடி பாதரட்சைக்குரிய பணத்தால் அந்த உதவியற்ற ஜனங்களை வாங்குவோம். ஓ, நாங்கள் நிலத்தில் சிதறிக் கிடக்கிற கோதுமைகளை விற்க முடியும்.”
ஆமோஸ் 8:1-6 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
பின்பு கர்த்தராகிய ஆண்டவர் எனக்குக் காண்பித்ததாவது: இதோ, பழுத்த பழங்களுள்ள ஒரு கூடை இருந்தது. அவர்: ஆமோசே, நீ என்னத்தைக் காண்கிறாய் என்று கேட்டார்? பழுத்த பழங்களுள்ள ஒரு கூடையைக் காண்கிறேன் என்றேன். அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: என் ஜனமாகிய இஸ்ரவேலுக்கு முடிவுகாலம் வந்தது; இனி அவர்களை மன்னிக்கமாட்டேன். அந்நாளிலே தேவாலயப்பாட்டுகள் அலறுதலாக மாறும்; எல்லா இடத்திலும் திரளான பிரேதங்கள் புலம்பலில்லாமல் எறிந்துவிடப்படும் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். தேசத்தில் சிறுமைப்பட்டவர்களை ஒழியப்பண்ண, எளியவர்களை விழுங்கி: நாங்கள் மரக்காலைக் குறைத்து, சேக்கல் நிறையை அதிகமாக்கி, கள்ளத்தராசினால் வஞ்சித்து, தரித்திரரைப் பணத்துக்கும், எளியவர்களை ஒரு ஜோடு பாதரட்சைக்கும் கொள்ளும்படிக்கும், தானியத்தின் பதரை விற்கும்படிக்கும். நாங்கள் தவசம் விற்கத்தக்கதாக மாதப்பிறப்பும், நாங்கள் தானியத்தின் பண்டசாலைகளைத் திறக்கத்தக்கதாக ஓய்வு நாளும் எப்போது முடியும் என்று சொல்லுகிறவர்களே, இதைக் கேளுங்கள்.