ஆமோஸ் 7:1-15
ஆமோஸ் 7:1-15 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
ஆண்டவராகிய யெகோவா எனக்குக் காண்பித்தது இதுவே: அரசனுடைய பங்கு அறுவடை செய்யப்பட்டது. அதன்பின் இரண்டாவது விளைச்சல் வளர்ந்து கொண்டிருந்தபோது, யெகோவா வெட்டுக்கிளிக் கூட்டங்களை ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தார். வெட்டுக்கிளிக் கூட்டம் நாட்டை வெறுமையாக்கியது. அப்போது நான், “ஆண்டவராகிய யெகோவாவே, மன்னியும்! யாக்கோபு எப்படி உயிர் பிழைப்பான்? அவன் மிகவும் சிறியவனாயிருக்கிறானே!” எனக்கூறி அழுதேன். எனவே யெகோவா தமது மனதை மாற்றிக்கொண்டார். “இப்படி இது நடக்காது” என்றும் யெகோவா சொன்னார். பின்பு ஆண்டவராகிய யெகோவா எனக்குக் காண்பித்தது இதுவே: ஆண்டவராகிய யெகோவா நெருப்பினால் நியாயத்தீர்ப்பை நியமித்தார். அது மகா ஆழத்தை வற்றச் செய்தது; நிலத்தையும் சுட்டெரித்தது. அப்பொழுது நான், “ஆண்டவராகிய யெகோவாவே, நான் கெஞ்சிக்கேட்கிறேன். இதை நிறுத்தும். யாக்கோபு எப்படி உயிர் தப்புவான்? அவன் மிகவும் சிறியவனாயிருக்கிறானே” என்று அழுதேன். எனவே யெகோவா தமது மனதை மாற்றிக்கொண்டார். “இதுவும் நடக்காது” என்று ஆண்டவராகிய யெகோவா சொன்னார். பின்பு ஆண்டவராகிய யெகோவா எனக்குக் காண்பித்தது இதுவே: யெகோவா தூக்குநூலின்படி கட்டப்பட்ட சுவரின் அருகில் நின்றுகொண்டிருந்தார். அவர் கையில் ஒரு தூக்குநூல் இருந்தது. அப்பொழுது யெகோவா என்னிடம், “ஆமோஸே, நீ என்னத்தைக் காண்கிறாய்?” என்று கேட்டார். அதற்கு நான், “தூக்குநூலைக் காண்கிறேன்” என்றேன். அதற்கு யெகோவா, “பார், இஸ்ரயேல் என்னும் எனது மக்கள் மத்தியில் தூக்குநூலை வைக்கிறேன். அது அவர்களுடைய பாவங்களை எடுத்துக்காட்டும். நான் இனி அவர்களை தப்பவிடமாட்டேன். “ஈசாக்கின் உயர்ந்த இடங்கள் அழிக்கப்படும். இஸ்ரயேலின் பரிசுத்த இடங்கள் பாழாக்கப்படும். யெரொபெயாமின் வீட்டிற்கு எதிராக நான் வாளுடன் எழும்புவேன்” என்று சொன்னார். அப்பொழுது பெத்தேலின் ஆசாரியனான அமத்சியா இஸ்ரயேல் அரசன் யெரொபெயாமிற்குச் சொல்லி அனுப்பிய செய்தியாவது: “ஆமோஸ் இஸ்ரயேலின் மத்தியிலே உமக்கு எதிராக சூழ்ச்சி செய்கிறான். அவனுடைய வார்த்தைகளை நாட்டு மக்களால் சகித்துக்கொண்டிருக்க முடியாதிருக்கிறது. ஏனெனில் ஆமோஸ் சொல்வதாவது: “ ‘யெரொபெயாம் வாளினால் சாவான். இஸ்ரயேலர் நிச்சயமாக தங்கள் சொந்த நாட்டிலிருந்து நாடுகடத்தப்பட்டுத் தூரமாய் போவார்கள்.’ ” அதன்பின் அமத்சியா ஆமோஸிடம், “தரிசனக்காரனே நாட்டைவிட்டு வெளியே போ; யூதா நாட்டிற்குத் திரும்பிப்போ; அங்கே உழைத்துச் சாப்பிடு; அங்கேயே உனது இறைவாக்கையும் சொல். இனிமேல் பெத்தேலில் இறைவாக்கைச் சொல்லாதே. ஏனெனில் இது அரசனின் பரிசுத்த வழிபாட்டு இடமும், அரசுக்குரிய ஆலயத்தின் இருப்பிடமுமாய் இருக்கிறது” என்றான். அதற்கு ஆமோஸ் அமத்சியாவிடம், “நான் இறைவாக்கினனும் அல்ல; இறைவாக்கினனின் மகனும் அல்ல, நான் மந்தை மேய்க்கிறவனும், காட்டத்தி மரங்களை பராமரிக்கிறவனுமாய் இருந்தேன். ஆனால் மந்தை மேய்த்துக்கொண்டிருந்த என்னை யெகோவா அழைத்து, ‘நீ போய், இஸ்ரயேலரனான என் மக்களுக்கு இறைவாக்குச் சொல்,’ என்றார்.
ஆமோஸ் 7:1-15 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
யெகோவாகிய ஆண்டவர் எனக்குக் காண்பித்தது என்னவென்றால்: இதோ, ராஜாவினுடைய புல்லறுப்புக்குப்பின்பு இரண்டாம் அறுவடையில் புல் முளைக்கத் தொடங்கும்போது அவர் வெட்டுக்கிளிகளை உண்டாக்கினார். அவைகள் தேசத்தின் புல்லைத் தின்று தீர்ந்தபோது, நான்: யெகோவாகிய ஆண்டவரே, மன்னித்தருளும்; யாக்கோபு திரும்ப யாராலே எழுந்திருப்பான்? அவன் சிறுமையடைந்தான் என்றேன். யெகோவா அதற்கு மனஸ்தாபப்பட்டு, அப்படி ஆவதில்லை என்றார். யெகோவாகிய ஆண்டவர் எனக்குக் காண்பித்தது என்னவென்றால்: இதோ, அக்கினியாலே நியாயம் விசாரிப்பேன் என்று யெகோவாகிய ஆண்டவர் தோன்றினார்; அது மகா ஆழத்தை விழுங்கியது, அதில் ஒரு பங்கை விழுங்கி முடித்தது. அப்பொழுது நான்: யெகோவாகிய ஆண்டவரே, நிறுத்துமே; யாக்கோபு திரும்ப யாராலே எழுந்திருப்பான்? அவன் மிகச் சிறியதானான் என்றேன். யெகோவா அதற்கு மனஸ்தாபப்பட்டு, அப்படி ஆவதில்லை என்றார். பின்பு அவர் எனக்குக் காண்பித்தது என்னவென்றால்: இதோ, தூக்குநூல் பிரமாணத்தினால் கட்டப்பட்ட ஒரு மதிலின்மேல் நின்றார்; அவர் கையில் தூக்குநூல் இருந்தது. யெகோவா என்னை நோக்கி: ஆமோஸே, நீ என்னத்தைக் காண்கிறாய் என்றார்; தூக்குநூலைக் காண்கிறேன் என்றேன்; அப்பொழுது ஆண்டவர்: இதோ, இஸ்ரவேல் என்னும் என்னுடைய மக்களின் நடுவே தூக்குநூலை விடுவேன்; இனி அவர்களை மன்னிக்கமாட்டேன். ஈசாக்கின் மேடைகள் பாழும், இஸ்ரவேலின் பரிசுத்த இடங்கள் அழிக்கவும்படும்; நான் யெரொபெயாம் வீட்டாருக்கு விரோதமாகப் வாளோடு எழும்பிவருவேன் என்றார். அப்பொழுது பெத்தேலில் ஆசாரியனான அமத்சியா இஸ்ரவேலின் ராஜாவாகிய யெரொபெயாமுக்கு ஆள் அனுப்பி: ஆமோஸ் இஸ்ரவேல் வம்சத்தாரின் நடுவே உமக்கு விரோதமாகக் கட்டுப்பாடு செய்கிறான்; தேசம் அவனுடைய வார்த்தைகளையெல்லாம் சகிக்கமாட்டாது. யெரொபெயாம் வாளால் சாவான் என்றும், இஸ்ரவேல் தன்னுடைய தேசத்திலிருந்து சிறைபிடித்துக் கொண்டுபோகப்படுவான் என்றும் ஆமோஸ் சொல்லுகிறான் என்று சொல்லச்சொன்னான். அமத்சியா ஆமோஸை நோக்கி: தரிசனம் பார்க்கிறவனே, போ; நீ யூதா தேசத்திற்கு ஓடிப்போ, அங்கே அப்பம் சாப்பிட்டு, அங்கே தீர்க்கதரிசனம் சொல்லு. பெத்தேலிலே இனித் தீர்க்கதரிசனம் சொல்லாதே; அது ராஜாவின் பரிசுத்த இடமும் ராஜ்ஜியத்தின் அரண்மனையுமாக இருக்கிறது என்றான். ஆமோஸ் அமத்சியாவுக்குப் பதிலாக: நான் தீர்க்கதரிசியுமல்ல, தீர்க்கதரிசியின் மகனுமல்ல; நான் மந்தை மேய்க்கிறவனும், காட்டத்திப்பழங்களைப் பதனிடுகிறவனுமாக இருந்தேன். ஆனால் மந்தையின் பின்னாலே போகிறபோது என்னைக் யெகோவா அழைத்து, நீ போய் என்னுடைய மக்களாகிய இஸ்ரவேலுக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொல்லு என்று யெகோவா சொன்னார்.
ஆமோஸ் 7:1-15 பரிசுத்த பைபிள் (TAERV)
கர்த்தர் என்னிடம் இதனைக் காட்டினார். ராஜாவின் முதல் அறுவடைக்குப் பின் இரண்டவாது விளைச்சல் தொடங்குகிற காலத்தில் அவர் வெட்டுக்கிளிகளை உருவாக்கினார். வெட்டுக்கிளிகள் நாட்டிலுள்ள புல் அனைத்தையும் தின்றன. அதற்குப் பிறகு நான், “எனது கர்த்தராகிய ஆண்டவரே, உம்மைக் கெஞ்சுகிறேன். எங்களை மன்னியும்! யாக்கோபு உயிர்ப்பிழைக்க முடியாது. அவன் மிகவும் சிறியவன்!” என்று சொன்னேன். பிறகு கர்த்தர் இதைப்பற்றி அவரது மனதை மாற்றினார். கர்த்தர், “அந்த காரியம் நடைபெறாது” என்றார். எனது கர்த்தராகிய ஆண்டவரே, என்னிடம் இவற்றைக் காட்டினார். நான் அக்கினியாலே நியாயத்தீர்ப்புக்காகக் கூப்பிடுகிற தேவனாகிய கர்த்தரை பார்த்தேன். நெருப்பு பெரிய ஆழியை அழித்தது. நெருப்பு நாட்டை அழிக்கத் தொடங்கியது. ஆனால் நான், “தேவனாகிய கர்த்தாவே, நிறுத்தும், நான் உம்மைக் கெஞ்சுகிறேன். யாக்கோபு உயிரோடு வாழ முடியாது. அவன் மிகவும் சிறியவன்!” என்றேன். பிறகு கர்த்தர் இதைப்பற்றி தம் மனதை மாற்றிக்கொண்டார். தேவனாகிய கர்த்தர், “அந்தக் காரியம் நடைபெறாது” என்றார். கர்த்தர் எனக்கு இதனைக் காட்டினார். கர்த்தர் ஒரு சுவரின் பக்கத்தில் தூக்கு நூலைத் தம் கரத்தில் பிடித்துக்கொண்டு நின்றார். (அச்சுவர் தூக்கு நூலினால் குறிக்கப்பட்டிருந்தது) கர்த்தர், “ஆமோஸ், என்ன பார்க்கிறாய்?” என்று கேட்டார். நான், “ஒரு தூக்கு நூல்” என்றேன். பிறகு என் ஆண்டவர், “பார், என் இஸ்ரவேல் ஜனங்களிடம் தூக்கு நூலை நான் விடுவேன். நான் அவர்களது ‘கோணல் தன்மை’ இனிமேலும் பரிசோதனையைக் கடந்து செல்ல விடமாட்டேன். நான் அந்தக் கெட்ட பகுதிகளை நீக்குவேன். ஈசாக்கின் மேடைகள் அழிக்கப்படும். இஸ்ரவேலின் பரிசுத்த இடங்கள் கற்குவியல்கள் ஆக்கப்படும். நான் யெரோபெயாம் குடும்பத்தை வாளால் தாக்கிக் கொல்வேன்” என்றார். பெத்தேலின் ஆசாரியன் அமத்சியா இஸ்ரவேலின் ராஜாவாகிய யெரோபெயாமுக்கு இச்செய்தியை அனுப்பினான். “ஆமோஸ் உனக்கு எதிராகத் திட்டங்கள் தீட்டுகிறான். அவன், இஸ்ரவேல் உனக்கு எதிராகப் போராட முயற்சி செய்கிறான். இந்த நாடு அவனது வார்த்தைகளையெல்லாம் சகித்துக்கொள்ளாது. ஆமோஸ், ‘யெரொபெயாம் வாளால் கொல்லப்படுவான். இஸ்ரவேல் ஜனங்கள் அவர்களது நாட்டிலிருந்து சிறைகளாகச் செல்வார்கள்’” என்று சொல்லியிருக்கிறான். அமத்சியாவும் ஆமோஸிடம் சொன்னான்: “தீர்க்கதரிசியே போ, யூதாவுக்குப் போய் அங்கு சாப்பிடு. அங்கே உனது பிரச்சாரத்தைச் செய். ஆனால் இனிமேல் பெத்தேலில் தீர்க்கதரிசனம் சொல்லாதே. இது யெரோபெயாமின் பரிசுத்தமான இடம். இது இஸ்ரவேலின் ஆலயம்!” பிறகு ஆமோஸ் அமத்சியாவுக்குப் பதில் சொன்னான். “நான் தொழில்ரீதியான தீர்க்கதரிசி இல்லை. நான் தீர்க்கதரிசியின் குடும்பத்திலிருந்து வரவில்லை. நான் மந்தையைப் பாதுகாக்கிறவன். நான் காட்டத்தி மரங்களைக் கவனித்து வருபவன். நான் ஒரு மேய்ப்பன், நான் மந்தையின் பின்னால் போகிறபோது கர்த்தர் என்னை அழைத்தார். கர்த்தர், ‘போ, எனது இஸ்ரவேல் ஜனங்களுக்குத் தீர்க்கதரிசனம் கூறு’ என்று என்னிடம் சென்னார்.
ஆமோஸ் 7:1-15 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
கர்த்தராகிய ஆண்டவர் எனக்குக் காண்பித்ததாவது: இதோ, ராஜாவினுடைய புல்லறுப்புக்குப்பின்பு இரண்டாம் கந்தாயத்துப் புல் முளைக்கத் தொடங்குகையில் அவர் வெட்டுக்கிளிகளை உண்டாக்கினார். அவைகள் தேசத்தின் புல்லைத் தின்று தீர்ந்தபோது, நான்: கர்த்தராகிய ஆண்டவரே, மன்னித்தருளும்; யாக்கோபு திரும்ப யாராலே எழுந்திருப்பான்? அவன் சிறுத்துப்போனான் என்றேன். கர்த்தர் அதற்கு மனஸ்தாபப்பட்டு, அப்படி ஆவதில்லை என்றார். கர்த்தராகிய ஆண்டவர் எனக்குக் காண்பித்ததாவது: இதோ, அக்கினியாலே நியாயம் விசாரிப்பேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் அழைத்தார்; அது மகா ஆழியைப் பட்சித்தது, அதில் ஒரு பங்கைப் பட்சித்துத் தீர்ந்தது. அப்பொழுது நான்: கர்த்தராகிய ஆண்டவரே, நிறுத்துமே; யாக்கோபு திரும்ப யாராலே எழுந்திருப்பான்? அவன் சிறுத்துப்போனான் என்றேன். கர்த்தர் அதற்கு மனஸ்தாபப்பட்டு, அப்படி ஆவதில்லை என்றார். பின்பு அவர் எனக்குக் காண்பித்ததாவது: இதோ, தூக்குநூல் பிரமாணத்தினால் கட்டப்பட்ட ஒரு மதிலின்மேல் நின்றார்; அவர் கையில் தூக்குநூல் இருந்தது. கர்த்தர் என்னை நோக்கி: ஆமோசே, நீ என்னத்தைக் காண்கிறாய் என்றார்; தூக்குநூலைக் காண்கிறேன் என்றேன்; அப்பொழுது ஆண்டவர்: இதோ, இஸ்ரவேலென்னும் என் ஜனத்தின் நடுவே தூக்குநூலை விடுவேன்; இனி அவர்களை மன்னிக்கமாட்டேன். ஈசாக்கின் மேடைகள் பாழும், இஸ்ரவேலின் பரிசுத்த ஸ்தலங்கள் அவாந்தரமுமாக்கப்படும்; நான் எரொபெயாம் வீட்டாருக்கு விரோதமாய்ப் பட்டயத்தோடே எழும்பிவருவேன் என்றார். அப்பொழுது பெத்தேலில் ஆசாரியனான அமத்சியா இஸ்ரவேலின் ராஜாவாகிய எரொபெயாமுக்கு ஆள் அனுப்பி: ஆமோஸ் இஸ்ரவேல் வம்சத்தாரின் நடுவே உமக்கு விரோதமாகக் கட்டுப்பாடு பண்ணுகிறான்; தேசம் அவன் வார்த்தைகளையெல்லாம் சகிக்கமாட்டாது. எரொபெயாம் பட்டயத்தினால் சாவான் என்றும், இஸ்ரவேல் தன் தேசத்திலிருந்து சிறைபிடித்துக் கொண்டுபோகப்படுவான் என்றும் ஆமோஸ் சொல்லுகிறான் என்று சொல்லச்சொன்னான். அமத்சியா ஆமோசை நோக்கி: தரிசனம் பார்க்கிறவனே, போ; நீ யூதாதேசத்துக்கு ஓடிப்போ, அங்கே அப்பம் தின்று, அங்கே தீர்க்கதரிசனம் சொல்லு. பெத்தேலிலே இனித் தீர்க்கதரிசனம் சொல்லாதே; அது ராஜாவின் பரிசுத்த ஸ்தலமும் ராஜ்யத்தின் அரமனையுமாயிருக்கிறது என்றான். ஆமோஸ் அமத்சியாவுக்குப் பிரதியுத்தரமாக: நான் தீர்க்கதரிசியுமல்ல, தீர்க்கதரிசியின் புத்திரனுமல்ல; நான் மந்தை மேய்க்கிறவனும், காட்டத்திப்பழங்களைப் பொறுக்குகிறவனுமாயிருந்தேன். ஆனால் மந்தையின் பின்னாலே போகிறபோது என்னைக் கர்த்தர் அழைத்து, நீ போய் என் ஜனமாகிய இஸ்ரவேலுக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொல்லு என்று கர்த்தர் உரைத்தார்.