அப்போஸ்தலர் 9:1-9

அப்போஸ்தலர் 9:1-9 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இதற்கிடையில், சவுல் இன்னும் கர்த்தருடைய சீடர்களைக் கொன்றுவிடுவதாக பயமுறுத்தி வந்தான். அவன் பிரதான ஆசாரியனிடத்திற்குப் போய், கிறிஸ்துவின் வழியைச் சார்ந்த ஆண் பெண் யாராய் இருந்தாலும் அவர்களைக் கைதுசெய்து எருசலேமுக்குக் கொண்டுவருவதற்கென்று தமஸ்குவிலுள்ள ஜெப ஆலயங்களுக்குக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டான். சவுல் தன் பிரயாணத்தில் தமஸ்குவை நெருங்கி வருகையில், திடீரென வானத்திலிருந்து ஒரு ஒளி அவனைச்சுற்றிலும் பிரகாசித்தது. அதனால் அவன் தரையிலே விழுந்தான். அப்பொழுது, தன்னுடன் பேசுகிற ஒரு குரலைக் கேட்டான். அந்த குரல், “சவுலே, சவுலே, நீ ஏன் என்னைத் துன்பப்படுத்துகிறாய்?” என்றது. அதற்கு அவன், “ஆண்டவரே, நீர் யார்?” என்று கேட்டான். அதற்கு அவர், “நீ துன்புறுத்துகிற இயேசு நானே, முள்ளில் உதைப்பது உனக்கு கடினமானதே. எனவே, இப்பொழுது நீ எழுந்து பட்டணத்திற்குள்ளே போ. நீ என்ன செய்யவேண்டும் என்பது உனக்குச் சொல்லப்படும்” என்றார். சவுலுடன் பயணம் செய்தவர்கள், பேச்சற்று நின்றார்கள். அவர்களோ சத்தத்தைக் கேட்டார்கள், ஆனால் ஒருவரையுமே காணவில்லை. சவுல் தரையில் இருந்து எழுந்து, தன் கண்களைத் திறந்தபோது, அவனுக்கு ஒன்றும் தெரியவில்லை. எனவே அவர்கள் அவனுடைய கையைப் பிடித்து, தமஸ்கு பட்டணத்திற்குள்ளே கூட்டிக்கொண்டு சென்றார்கள். அங்கே அவன் மூன்று நாட்களாய் பார்வையற்றவனாய் இருந்தான். அவன் எதையும் சாப்பிடவோ, குடிக்கவோ இல்லை.

அப்போஸ்தலர் 9:1-9 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

சவுல் என்பவன் இன்னும் கர்த்தருடைய சீடர்களை பயமுறுத்திக் கொலைசெய்யும்படி பிரதான ஆசாரியனிடத்திற்குப்போய்; இந்த மார்க்கத்தாராகிய ஆண்களையாவது, பெண்களையாவது தான் கண்டுபிடித்தால், அவர்களைக் கட்டி எருசலேமுக்குக் கொண்டுவரும்படி, தமஸ்குவிலுள்ள ஜெப ஆலயங்களுக்கு உத்தரவுகளைக் கேட்டு வாங்கினான். அவன் பயணமாகப்போய், தமஸ்குவிற்கு அருகில் வந்தபோது, திடீரென்று வானத்திலிருந்து ஒரு ஒளி அவனைச் சுற்றிப் பிரகாசித்தது; அவன் தரையிலே விழுந்தான். அப்பொழுது:” சவுலே, சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய்” என்று தன்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக் கேட்டான். அதற்கு அவன்: “ஆண்டவரே, நீர் யார்?” என்றான். அதற்குக் கர்த்தர்: “நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே; முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாம்” என்றார். அவன் நடுங்கித் திகைத்து: “ஆண்டவரே, நான் என்ன செய்ய பிரியமாக இருக்கிறீர்” என்றான். அதற்குக் கர்த்தர்: “நீ எழுந்து, பட்டணத்திற்குள்ளே போ, நீ செய்யவேண்டியது அங்கே உனக்குச் சொல்லப்படும்” என்றார். அவனுடனேகூடப் பயணம்பண்ணின மனிதர்கள் சத்தத்தைக் கேட்டும் ஒருவரையும் காணாமல் செய்வதறியாமல் பிரமித்து நின்றார்கள். சவுல் தரையிலிருந்தெழுந்து, தன் கண்களைத் திறந்தபோது ஒருவரையும் காணவில்லை. அப்பொழுது கையைப் பிடித்து, அவனைத் தமஸ்குவிற்குக் கூட்டிக்கொண்டுபோனார்கள். அவன் மூன்று நாட்கள் பார்வையில்லாதவனாக ஆகாரம் சாப்பிடாமலும், தண்ணீர் குடிக்காமலும் இருந்தான்.

அப்போஸ்தலர் 9:1-9 பரிசுத்த பைபிள் (TAERV)

சவுல் கர்த்தரின் சீஷரைப் பயமுறுத்தவும், கொல்லவும் எப்பொழுதும் முயன்று கொண்டிருந்தான். எனவே அவன் தலைமை ஆசாரியனிடம் சென்றான். தமஸ்கு நகரத்தில் ஜெப ஆலயங்களிலுள்ள யூதர்களுக்குக் கடிதங்களை எழுதுமாறு அவரைக் கேட்டான். தமஸ்குவில் கிறிஸ்துவின் வழியைப் பின்பற்றுகிற சீஷர்களைக் கண்டுபிடிக்கும் அதிகாரத்தை அவனுக்குக் கொடுக்குமாறு தலைமை ஆசாரியரைக் கேட்டான். அங்கு ஆணோ, பெண்ணோ, விசுவாசிகள் எவரையேனும் கண்டால் அவன் அவர்களைக் கைதுசெய்து எருசலேமிற்குக் கொண்டு வர விரும்பினான். எனவே சவுல் தமஸ்குவிற்கு புறப்பட்டுச் சென்றான். அவன் நகரத்திற்கு அருகே வந்தபோது, அவனைச் சுற்றிலும் மிகுந்த பிரகாசமான ஒளி வானிலிருந்து திடீரென வெளிச்சமிட்டது. சவுல் தரையில் விழுந்தான். அவன் தன்னோடு பேசுகிற ஒரு சத்தத்தைக் கேட்டான். “சவுலே, சவுலே! நீ ஏன் புண்படுத்தும் காரியங்களை எனக்குச் செய்துகொண்டிருக்கிறாய்?” என்றது அச்சத்தம். சவுல், “ஆண்டவரே, நீர் யார்?” என்று கேட்டான். அந்தச் சத்தம் பதிலாக, “நான் இயேசு, நீ புண்படுத்த நினைப்பது என்னையே. நீ எழுந்து நகரத்துக்குள் போ. அங்கிருக்கும் ஒருவர் நீ செய்ய வேண்டியதை உனக்குக் கூறுவார்” என்றது. சவுலோடு பயணம் செய்த மனிதர் நின்றனர். அவர்கள் எதுவும் சொல்லவில்லை. அம்மனிதர் சத்தத்தைக் கேட்டனர். ஆனால் யாரையும் பார்க்கவில்லை. சவுல் தரையிலிருந்து எழுந்தான். அவன் கண்களைத் திறந்தபோது அவனால் பார்க்க முடிய வில்லை. எனவே சவுலோடு வந்த மனிதர்கள் அவன் கையைப் பிடித்து, அவனைத் தமஸ்குவுக்கு அழைத்துச் சென்றனர். மூன்று நாட்கள் சவுலால் பார்க்க முடியவில்லை. அவன் எதையும் உண்ணவோ, எதையும் பருகவோ இல்லை.

அப்போஸ்தலர் 9:1-9 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

சவுல் என்பவன் இன்னும் கர்த்தருடைய சீஷரைப் பயமுறுத்திக் கொலைசெய்யும்படி சீறிப் பிரதான ஆசாரியரிடத்திற்குப் போய்; இந்த மார்க்கத்தாராகிய புருஷரையாகிலும் ஸ்திரீகளையாகிலும் தான் கண்டுபிடித்தால், அவர்களைக் கட்டி எருசலேமுக்குக் கொண்டுவரும்படி, தமஸ்குவிலுள்ள ஜெபஆலயங்களுக்கு நிருபங்களைக் கேட்டு வாங்கினான். அவன் பிரயாணமாய்ப் போய், தமஸ்குவுக்குச் சமீபித்தபோது, சடிதியிலே வானத்திலிருந்து ஒரு ஒளி அவனைச் சுற்றிப் பிரகாசித்தது; அவன் தரையிலே விழுந்தான். அப்பொழுது: சவுலே, சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய் என்று தன்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக் கேட்டான். அதற்கு அவன்: ஆண்டவரே, நீர் யார், என்றான். அதற்குக் கர்த்தர்: நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே; முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாம் என்றார். அவன் நடுங்கித் திகைத்து: ஆண்டவரே, நான் என்ன செய்யச் சித்தமாயிருக்கிறீர் என்றான். அதற்குக் கர்த்தர்: நீ எழுந்து, பட்டணத்துக்குள்ளே போ, நீ செய்யவேண்டியது அங்கே உனக்குச் சொல்லப்படும் என்றார். அவனுடனேகூடப் பிரயாணம்பண்ணின மனுஷர்கள் சத்தத்தைக் கேட்டும் ஒருவரையும் காணாமல் பிரமித்து நின்றார்கள். சவுல் தரையிலிருந்தெழுந்து, தன் கண்களைத் திறந்தபோது ஒருவரையும் காணவில்லை. அப்பொழுது கைலாகு கொடுத்து, அவனைத் தமஸ்குவுக்குக் கூட்டிக்கொண்டுபோனார்கள். அவன் மூன்று நாள் பார்வையில்லாதவனாய்ப் புசியாமலும் குடியாமலும் இருந்தான்.