அப்போஸ்தலர் 8:1-8

அப்போஸ்தலர் 8:1-8 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

ஸ்தேவானைக் கொலைசெய்கிறதற்கு, சவுலும் உடன்பட்டிருந்தான். அந்த நாளிலே, எருசலேமில் இருந்த திருச்சபைக்கு மிகுந்த துன்பம் ஏற்பட்டது. இதனால், அப்போஸ்தலரைத் தவிர அனைவரும் யூதேயாவின் நாட்டுப் புறங்களுக்கும், சமாரியாவுக்கும் சிதறடிக்கப்பட்டார்கள். இறைவனுடைய பக்தர்கள் ஸ்தேவானை அடக்கம்பண்ணி, அவனுக்காக ஆழ்ந்த துக்கங்கொண்டாடினார்கள். ஆனால் சவுலோ, திருச்சபையை அழிக்கத் தொடங்கினான். அவன் வீடுகள்தோறும் நுழைந்து ஆண்களையும் பெண்களையும் இழுத்துக்கொண்டுபோய் அவர்களைச் சிறையிலடைக்கச் செய்தான். சிதறிப்போனவர்கள் தாங்கள் சென்ற இடமெல்லாம், நற்செய்தியைப் பிரசங்கித்தார்கள். பிலிப்பு சமாரியாவிலுள்ள பட்டணத்திற்குப் போய், அங்கே கிறிஸ்துவைப் பிரசித்தப்படுத்தினான். கூடிவந்த மக்கள், பிலிப்பு சொன்னதைக் கேட்டும் அவன் செய்த அற்புத அடையாளங்களைக் கண்டும் அவன் சொன்னவைகளுக்கு எல்லோரும் கவனமாய்ச் செவிகொடுத்தார்கள். அநேகரிலிருந்து, தீய ஆவிகள் கூச்சலிட்டுக்கொண்டு வெளியேறின. பல முடக்குவாதக்காரரும் கால் ஊனமுற்றோர்களும் சுகமடைந்தார்கள். இதனால் அந்தப் பட்டணத்திலே பெருமகிழ்ச்சி உண்டாயிற்று.

அப்போஸ்தலர் 8:1-8 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

ஸ்தேவானைக் கொலைசெய்வதற்கு சவுலும் சம்மதித்திருந்தான். அந்த நாட்களிலே எருசலேமிலுள்ள சபைக்கு மிகுந்த துன்பம் உண்டானது. அப்போஸ்தலர்கள்தவிர, மற்ற எல்லோரும் யூதேயா சமாரியா நாடுகளில் சிதறப்பட்டுப்போனார்கள். தேவபக்தியுள்ள மனிதர்கள் ஸ்தேவானை எடுத்து அடக்கம்செய்து, அவனுக்காக மிகவும் துக்கம் அனுசரித்தார்கள். சவுல் ஒவ்வொரு வீடாகப்புகுந்து, ஆண்களையும் பெண்களையும் இழுத்துக்கொண்டுபோய், சிறைப்பிடித்து சபையை அழித்துக்கொண்டிருந்தான். சிதறிப்போனவர்கள் எங்கும் சுற்றித்திரிந்து நற்செய்தியைப் போதித்துவந்தார்கள். அப்பொழுது பிலிப்பு என்பவன் சமாரியாவிலுள்ள ஒரு பட்டணத்திற்குச் சென்று, அங்குள்ளவர்களுக்குக் கிறிஸ்துவைக்குறித்துப் போதித்தான். பிலிப்பு செய்த அதிசயங்களை மக்கள் கேள்விப்பட்டு கண்டு, அவனால் சொல்லப்பட்டவைகளை ஒருமனப்பட்டு கவனித்தார்கள். அநேகருக்குள் இருந்த அசுத்தஆவிகள் மிகுந்த சத்தமிட்டு அவர்களைவிட்டுப்போனது. அநேக கைகால்கள் செயலிலந்தவர்களும், நடக்க இயலாதவர்களும் சுகமாக்கப்பட்டார்கள். அந்தப் பட்டணத்திலே மிகுந்த மகிழ்ச்சி உண்டானது.

அப்போஸ்தலர் 8:1-8 பரிசுத்த பைபிள் (TAERV)

ஸ்தேவானின் கொலை ஒரு நல்ல நிகழ்ச்சியே என்று சவுல் அச்சமயம் ஒப்புக்கொண்டான். சில நல்ல மனிதர்கள் ஸ்தேவானைப் புதைத்தனர். அவர்கள் அவனுக்காகச் சத்தமிட்டு அழுதனர். எருசலேமிலுள்ள விசுவாசிகளின் கூட்டத்திற்கு அன்றிலிருந்து யூதர்கள் தீங்கிழைக்க ஆரம்பித்தனர். அவர்களை அதிகமாகத் துன்புறுமாறு யூதர்கள் செய்தனர். அக்கூட்டத்தை அழிப்பதற்கு சவுலும் முயன்றுகொண்டிருந்தான். சவுல் அவர்களின் வீடுகளுக்குள் நுழைந்தான். அவர்களில் ஆண்களையும் பெண்களையும் வெளியே இழுத்து வந்து சிறைக்குள் தள்ளினான். எல்லா விசுவாசிகளும் எருசலேமைவிட்டு அகன்றனர். அப்போஸ்தலர்கள் மட்டுமே அங்குத் தங்கினர். யூதேயா, மற்றும் சமாரியா ஆகிய நாடுகளின் பல பகுதிகளுக்கும் விசுவாசிகள் சென்றனர். விசுவாசிகள் எல்லா இடங்களிலும் பரவியிருந்தனர். விசுவாசிகள் சென்ற இடங்களில் எல்லாம் மக்களுக்கு நற்செய்தியைக் கூறினர். பிலிப்பு சமாரியாவிலுள்ள ஒரு நகரத்திற்குச் சென்றான். அவன் கிறிஸ்துவைப் பற்றிப் போதித்தான். அங்குள்ள மக்கள் பிலிப்பு கூறியதைக் கேட்டனர். அவன் செய்துகொண்டிருந்த அதிசயங்களைக் கண்டனர். பிலிப்பு கூறிய செய்திகளைக் கவனமாகக் கேட்டனர். அம்மக்களில் பலரினுள்ளும் அசுத்த ஆவிகள் இருந்தன. அசுத்த ஆவிகள் அவர்களை விட்டுப் போகும்படியாக பிலிப்பு கட்டளையிட்டான். அவை வெளியே வந்தபோது, ஆவிகள் மிகுந்த சத்தமிட்டன. பாரிச வியாதிக்காரர்கள் பலரும், ஊனமுற்றவர்கள் பலரும் அங்கிருந்தனர். பிலிப்பு அவர்களையும் குணப்படுத்தினான். இதனால் அந்நகர மக்கள் மிகுந்த சந்தோஷம் அடைந்தனர்.

அப்போஸ்தலர் 8:1-8 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அவனைக் கொலைசெய்கிறதற்குச் சவுலும் சம்மதித்திருந்தான். அக்காலத்திலே எருசலேமிலுள்ள சபைக்கு மிகுந்த துன்பம் உண்டாயிற்று. அப்போஸ்தலர்தவிர, மற்ற யாவரும் யூதேயா சமாரியா தேசங்களில் சிதறப்பட்டுப்போனார்கள். தேவபக்தியுள்ள மனுஷர் ஸ்தேவானை எடுத்து அடக்கம்பண்ணி, அவனுக்காக மிகவும் துக்கங்கொண்டாடினார்கள். சவுல் வீடுகள்தோறும் நுழைந்து, புருஷரையும் ஸ்திரீகளையும் இழுத்துக்கொண்டுபோய், காவலில் போடுவித்து, சபையைப் பாழாக்கிக்கொண்டிருந்தான். சிதறிப்போனவர்கள் எங்குந்திரிந்து, சுவிசேஷவசனத்தைப் பிரசங்கித்தார்கள். அப்பொழுது பிலிப்பென்பவன் சமாரியாவிலுள்ள ஒரு பட்டணத்திற்குப் போய், அங்குள்ளவர்களுக்குக் கிறிஸ்துவைக்குறித்துப் பிரசங்கித்தான். பிலிப்பு செய்த அதிசயங்களை ஜனங்கள் கேள்விப்பட்டு கண்டு, அவனால் சொல்லப்பட்டவைகளை ஒருமனப்பட்டுக் கவனித்தார்கள். அநேகரிலிருந்த அசுத்தஆவிகள் மிகுந்த சத்தத்தோடே கூப்பிட்டு அவர்களை விட்டுப் புறப்பட்டது. அநேகந்திமிர்வாதக்காரரும் சப்பாணிகளும் குணமாக்கப்பட்டார்கள். அந்தப் பட்டணத்திலே மிகுந்த சந்தோஷம் உண்டாயிற்று.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்