அப்போஸ்தலர் 6:1-6

அப்போஸ்தலர் 6:1-6 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அந்நாட்களில் சீடர்களின் எண்ணிக்கை பெருகியபோது, அவர்களில் கிரேக்க மொழி பேசும் யூதர்கள், எபிரெய மொழி பேசும் யூதருக்கு எதிராக முறையீடு செய்தார்கள். ஏனெனில், தங்களுடைய விதவைகள் அன்றாட உணவுப் பகிரும்போது, அலட்சியம் பண்ணப்படுவதாக அவர்கள் கூறினார்கள். அப்பொழுது பன்னிரண்டு அப்போஸ்தலர்கள் எல்லா சீடர்களையும் ஒன்றாய்க் கூட்டி, “நாம் இறைவனுடைய வார்த்தையை அறிவிக்கும் ஊழியத்தில் முழுக் கவனத்தையும் செலுத்தாமல், சாப்பாட்டுப் பந்தியில் பணிசெய்வது சரியானது அல்ல. எனவே பிரியமானவர்களே, உங்கள் மத்தியில் இருந்து ஏழுபேரைத் தெரிந்துகொள்ளுங்கள். அவர்கள் ஆவியானவரினாலும், ஞானத்தினாலும் நிறைந்தவர்களென நற்சான்று பெற்றவர்களாய் இருக்கவேண்டும். நாங்கள் இப்பொறுப்பை அவர்களிடம் ஒப்படைப்போம். நாங்களோ மன்றாடுவதற்கும், வார்த்தையை அறிவிக்கும் ஊழியத்தைச் செய்வதற்கும் எங்கள் முழு நேரத்தையும் செலுத்துவோம்” என்றார்கள். அவர்கள் சொன்னது அங்கு கூடியிருந்த அனைவருக்கும் திருப்தியளித்தது. எனவே அவர்கள் விசுவாசத்திலும், பரிசுத்த ஆவியானவரிலும் நிறைந்தவனான ஸ்தேவானைத் தெரிந்துகொண்டார்கள்; அவனுடன் பிலிப்பு, பிரொகோர், நிக்கானோ, தீமோன், பர்மெனா ஆகியோரையும், யூத விசுவாசத்தைப் பின்பற்றுபவனாயிருந்த அந்தியோகியனான நிக்கொலாவையும் தெரிந்துகொண்டார்கள். அவர்கள் இவர்களை அப்போஸ்தலருக்கு முன்பாகக் கொண்டுவந்தார்கள். அப்போஸ்தலர் இவர்களுக்காக மன்றாடி, இவர்கள்மேல் தங்கள் கைகளை வைத்தார்கள்.

அப்போஸ்தலர் 6:1-6 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அந்த நாட்களிலே, சீடர்களின் எண்ணிக்கை அதிகமானபோது, கிரேக்கர்களானவர்கள், தங்களுடைய விதவைகள் அன்றாட பராமரிப்பில் சரியாக பராமரிக்கப்படவில்லையென்று, எபிரெயர்களுக்கு விரோதமாக முறுமுறுத்தார்கள். அப்பொழுது பன்னிரண்டு சீடர்களும் மற்ற சீடர்கள் கூட்டத்தை வரவழைத்து: நாங்கள் தேவவசனத்தைப் போதிக்காமல், பந்திவிசாரிப்பு செய்வது தகுதியல்ல. ஆதலால் சகோதரர்களே, பரிசுத்த ஆவியும், ஞானமும், நற்சாட்சியும் பெற்றிருக்கிற ஏழுபேரை உங்களில் தெரிந்துகொள்ளுங்கள்; அவர்களை இந்த வேலைக்காக நியமிப்போம். நாங்களோ ஜெபம்பண்ணுவதிலும் தேவவசனத்தைப் போதிப்பதிலும் இடைவிடாமல் உறுதியாகத் தரித்திருப்போம் என்றார்கள். இந்த யோசனை சபையாரெல்லோருக்கும் பிரியமாக இருந்தது. அப்பொழுது விசுவாசமும் பரிசுத்த ஆவியும் நிறைந்தவனாகிய ஸ்தேவானையும், பிலிப்பையும், பிரொகோரையும், நிக்கானோரையும், தீமோனையும், பர்மெனாவையும், யூத மதத்தைச் சேர்ந்தவனான அந்தியோகியா பட்டணத்தானாகிய நிக்கொலாவையும் தெரிந்துகொண்டு, அவர்களை அப்போஸ்தலர்களுக்கு முன்பாக நிறுத்தினார்கள். இவர்கள் ஜெபம்பண்ணி, அவர்கள்மேல் கரங்களை வைத்தார்கள்.

அப்போஸ்தலர் 6:1-6 பரிசுத்த பைபிள் (TAERV)

இயேசுவைப் பின்பற்றுவோராகப் பற்பல மக்கள் மாறிகொண்டிருந்தனர். ஆனால் அதே வேளையில் கிரேக்க மொழி பேசுகின்ற சீஷர்களுக்கும் மற்ற யூதச் சீஷர்களுக்கும் ஒரு விவாதம் நடந்தது. சீஷர்கள் ஒவ்வொரு நாளும் பெற்ற பங்கைப் போன்று அவர்களுடனிருந்த விதவைகளுக்கு அளிக்கப்படவில்லை என்று அவர்கள் கூறினர். பன்னிரண்டு அப்போஸ்தலர்களும் சீஷர்கள் கூட்டத்தை ஒருமிக்க அழைத்தனர். அப்போஸ்தலர்கள் அவர்களை நோக்கி, “தேவனுடைய வார்த்தையைப் போதிக்கும் எங்கள் வேலை தடையுற்றுள்ளது. அது நல்லதல்ல! மக்களுக்கு உண்பதற்கு எதையேனும் கொடுப்பதில் உதவுவதைக் காட்டிலும் தேவனுடைய வார்த்தையைத் தொடர்ந்து போதிப்பதே எங்களுக்கு நல்லது. எனவே, சகோதரர்களே, உங்களில் ஏழு பேரைத் தேர்ந்து எடுங்கள். மக்கள் நல்லவர்களெனக் கருதுவோராக அவர்கள் இருக்க வேண்டும். அவர்கள் ஆவியாலும், ஞானத்தாலும் நிரம்பப் பெற்றவர்களாக இருக்க வேண்டும். அவர்கள் இந்த வேலையைச் செய்யும்படியாக நாங்கள் அவர்களை நியமிப்போம். பின்னர் நாங்கள் எங்கள் முழு நேரத்தையும் பிரார்த்தனை செய்வதற்கும், தேவனுடைய வார்த்தையைப் போதிப்பதற்கும் பயன்படுத்துவோம்” என்றனர். கூட்டத்தினர் எல்லோரும் இந்தத் திட்டத்தை வரவேற்றனர். எனவே அவர்கள் ஏழு பேரைத் தேர்ந்தெடுத்தனர். அவர்கள் ஸ்தேவான் (நம்பிக்கை மிகுந்தவனும் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டவனுமான மனிதன்), பிலிப்பு, ப்ரோகோரஸ், நிகனோர், தீமோன், பர்மேனஸ், நிக்கோலஸ் (அந்தியோகியாவிலிருந்து வந்தவனும் யூதனாக மாற்றப் பட்டவனும் ஆவான்) ஆகியோராவர். அவர்கள் அந்த ஏழு பேரையும் அப்போஸ்தலர்களுக்கு முன்பாக அழைத்து வந்தனர். அப்போஸ்தலர்கள் பிரார்த்தனை செய்து தங்கள் கைகளை அவர்கள் மீது வைத்தனர்.

அப்போஸ்தலர் 6:1-6 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அந்நாட்களிலே, சீஷர்கள் பெருகினபோது, கிரேக்கரானவர்கள், தங்கள் விதவைகள் அன்றாடக விசாரணையில் திட்டமாய் விசாரிக்கப்படவில்லையென்று, எபிரெயருக்கு விரோதமாய் முறுமுறுத்தார்கள். அப்பொழுது பன்னிருவரும் சீஷர் கூட்டத்தை வரவழைத்து: நாங்கள் தேவவசனத்தைப் போதியாமல், பந்திவிசாரணை செய்வது தகுதியல்ல. ஆதலால் சகோதரரே, பரிசுத்த ஆவியும் ஞானமும் நிறைந்து, நற்சாட்சி பெற்றிருக்கிற ஏழுபேரை உங்களில் தெரிந்துகொள்ளுங்கள்; அவர்களை இந்த வேலைக்காக ஏற்படுத்துவோம். நாங்களோ ஜெபம்பண்ணுவதிலும் தேவவசனத்தைப் போதிக்கிற ஊழியத்திலும் இடைவிடாமல் தரித்திருப்போம் என்றார்கள். இந்த யோசனை சபையாரெல்லாருக்கும் பிரியமாயிருந்தது. அப்பொழுது விசுவாசமும் பரிசுத்த ஆவியும் நிறைந்தவனாகிய ஸ்தேவானையும், பிலிப்பையும், பிரொகோரையும், நிக்கானோரையும், தீமோனையும், பர்மெனாவையும், யூதமார்க்கத்தமைந்தவனான அந்தியோகியா பட்டணத்தானாகிய நிக்கொலாவையும் தெரிந்துகொண்டு, அவர்களை அப்போஸ்தலருக்குமுன்பாக நிறுத்தினார்கள். இவர்கள் ஜெபம்பண்ணி, அவர்கள்மேல் கைகளை வைத்தார்கள்.