அப்போஸ்தலர் 5:27-42

அப்போஸ்தலர் 5:27-42 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அப்படி அவர்களை அழைத்துக்கொண்டுவந்து, ஆலோசனைச் சங்கத்துக்கு முன்பாக நிறுத்தினார்கள். அப்பொழுது பிரதான ஆசாரியன் அவர்களை நோக்கி: நீங்கள் அந்த நாமத்தைக்குறித்துப் போதகம்பண்ணக்கூடாதென்று நாங்கள் உங்களுக்கு உறுதியாய்க் கட்டளையிடவில்லையா? அப்படியிருந்தும், இதோ, எருசலேமை உங்கள் போதகத்தினாலே நிரப்பி, அந்த மனுஷனுடைய இரத்தப்பழியை எங்கள்மேல் சுமத்தவேண்டுமென்றிருக்கிறீர்கள் என்று சொன்னான். அதற்குப் பேதுருவும் மற்ற அப்போஸ்தலரும்: மனுஷருக்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும் தேவனுக்குக் கீழ்ப்படிகிறதே அவசியமாயிருக்கிறது. நீங்கள் மரத்திலே தூக்கிக் கொலைசெய்த இயேசுவை நம்முடைய பிதாக்களின் தேவன் எழுப்பி, இஸ்ரவேலுக்கு மனந்திரும்புதலையும் பாவமன்னிப்பையும் அருளுகிறதற்காக, அவரை அதிபதியாகவும் இரட்சகராகவும் தமது வலதுகரத்தினாலே உயர்த்தினார், இந்தச் சங்கதிகளைக்குறித்து நாங்கள் அவருக்குச் சாட்சிகளாயிருக்கிறோம்; தேவன் தமக்குக் கீழ்ப்படிகிறவர்களுக்குத் தந்தருளின பரிசுத்த ஆவியும் சாட்சி என்றார்கள். அதை அவர்கள் கேட்டபொழுது, மூர்க்கமடைந்து, அவர்களைக் கொலைசெய்யும்படிக்கு யோசனை பண்ணினார்கள். அப்பொழுது சகல ஜனங்களாலும் கனம்பெற்ற நியாயசாஸ்திரியாகிய கமாலியேல் என்னும் பேர்கொண்ட ஒரு பரிசேயன் ஆலோசனைச் சங்கத்தில் எழுந்திருந்து, அப்போஸ்தலரைச் சற்றுநேரம் வெளியே கொண்டுபோகச் சொல்லி, சங்கத்தாரை நோக்கி: இஸ்ரவேலரே, இந்த மனுஷருக்கு நீங்கள் செய்யப்போகிறதைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள். ஏனென்றால் இந்நாட்களுக்கு முன்னே தெயுதாஸ் என்பவன் எழும்பி, தன்னை ஒரு பெரியவனாகப் பாராட்டினான்; ஏறக்குறைய நானூறுபேர் அவனைச் சேர்ந்தார்கள்; அவன் மடிந்துபோனான்; அவனை நம்பின அனைவரும் சிதறி, அவமாய்ப்போனார்கள். அவனுக்குப்பின்பு, குடிமதிப்பின் நாட்களிலே, கலிலேயனாகிய யூதாஸ் என்பவன் எழும்பி, தன்னைப் பின்பற்றும்படி அநேக ஜனங்களை இழுத்தான்; அவனும் அழிந்துபோனான்; அவனை நம்பியிருந்த அனைவரும் சிதறடிக்கப்பட்டார்கள். இப்பொழுது நான் உங்களுக்குச் சொல்லுகிறதென்னவென்றால் இந்த மனுஷருக்கு ஒன்றுஞ்செய்யாமல் இவர்களை விட்டுவிடுங்கள். இந்த யோசனையும் இந்தக் கிரியையும் மனுஷரால் உண்டாயிருந்ததானால் ஒழிந்துபோம்; தேவனால் உண்டாயிருந்ததேயானால், அதை ஒழித்துவிட உங்களால் கூடாது; தேவனோடே போர்செய்கிறவர்களாய்க் காணப்படாதபடிக்குப் பாருங்கள் என்றான். அப்பொழுது அவர்கள் அவனுடைய யோசனைக்கு உடன்பட்டு, அப்போஸ்தலரை வரவழைத்து, அடித்து, இயேசுவின் நாமத்தைக்குறித்துப் பேசக்கூடாதென்று கட்டளையிட்டு, அவர்களை விடுதலையாக்கினார்கள். அவருடைய நாமத்துக்காகத் தாங்கள் அவமானமடைவதற்குப் பாத்திரராக எண்ணப்பட்டபடியினால், சந்தோஷமாய் ஆலோசனை சங்கத்தைவிட்டுப் புறப்பட்டுப்போய், தினந்தோறும் தேவாலயத்திலேயும் வீடுகளிலேயும் இடைவிடாமல் உபதேசம்பண்ணி, இயேசுவே கிறிஸ்துவென்று பிரசங்கித்தார்கள்.

அப்போஸ்தலர் 5:27-42 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அவர்கள் அப்போஸ்தலர்களைக் கொண்டுவந்து, ஆலோசனைச் சங்கத்தின் முன்நிறுத்தினார்கள். பிரதான ஆசாரியன் கேள்விகளைக் கேட்டான். அவன் அவர்களிடம், “இந்தப் பெயரால் நீங்கள் போதிக்கக் கூடாது என்று நாங்கள் உங்களுக்குக் கடுமையாக உத்தரவிட்டிருந்தோம். ஆனால் நீங்கள் உங்கள் போதனையினாலே எருசலேமை நிரப்பிவிட்டீர்கள். அந்த மனிதனைக் கொன்ற இரத்தப்பழியை எங்கள்மேல் சுமத்தவே நீங்கள் உறுதிகொண்டிருக்கிறீர்கள்” என்றான். ஆனால், பேதுருவும் மற்ற அப்போஸ்தலரும் அவர்களிடம்: “மனிதனைவிட நாங்கள் இறைவனுக்கே கீழ்ப்படிய வேண்டும்! நீங்கள் மரத்தில் தொங்கவிட்டுக் கொலைசெய்த இயேசுவை, நம்முடைய தந்தையரின் இறைவன் மரித்தோரிலிருந்து எழும்பச்செய்தார். இறைவனோ இயேசுவை அதிபதியாகவும், இரட்சகராகவும், தனது வலதுபக்கத்தில் இருக்கும்படி உயர்த்தி, இவர் இஸ்ரயேலுக்கு மனந்திரும்புதலையும், பாவங்களுக்கான மன்னிப்பையும் கொடுக்கும்படி செய்தார். இவற்றிற்கு நாங்கள் சாட்சிகளாய் இருக்கிறோம். தமக்குக் கீழ்ப்படிகிறவர்களுக்கு, இறைவன் கொடுத்திருக்கும் பரிசுத்த ஆவியானவரும் சாட்சியாய் இருக்கிறார்” என்றார்கள். அவர்கள் இதைக் கேட்டபோது, கடுங்கோபமடைந்து இவர்களைக் கொல்ல யோசித்தார்கள். ஆனால் அந்த ஆலோசனைச் சங்கத்தில், கமாலியேல் என்னும் பெயருடைய ஒரு பரிசேயன் இருந்தான். அவன் ஒரு மோசேயின் சட்ட ஆசிரியனாகவும், எல்லா மக்களுடைய மதிப்பைப் பெற்றவனாகவும் இருந்தான்; அவன் எழுந்து நின்று, சிறிது நேரத்திற்கு அப்போஸ்தலரை வெளியே கொண்டுபோகும்படி உத்தரவிட்டான். பின்பு கமாலியேல் அங்கிருந்தவர்களைப் பார்த்து: “இஸ்ரயேலரே, இவர்களுக்கு நீங்கள் செய்யப்போவதைக் கவனமாய் எண்ணிப்பாருங்கள். ஏனெனில் சிலகாலத்திற்கு முன்பு, தெயுதாஸ் என்பவன் முன்வந்து, தன்னை ஒரு பெரிய ஆளாக எல்லோருக்கும் காண்பித்தான், கிட்டத்தட்ட நானூறுபேர் அவனுடன் சேர்ந்துகொண்டார்கள். ஆனால் அவன் கொல்லப்பட்டான்; அவனைப் பின்பற்றிய அனைவரும் சிதறிப்போனார்கள். அந்தக் கூட்டத்தினர் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டனர். அவனுக்குப்பின்பு, குடிமதிப்பு எடுக்கப்பட்ட காலத்தில் கலிலேயனான யூதாஸ் என்பவன் முன்வந்து, அவனும் ஒரு மக்கள் குழுவை கலகத்திற்கு வழிநடத்தினான். ஆனால் அவனும் கொல்லப்பட்டான்; அவனைப் பின்பற்றியவர்களும் சிதறடிக்கப்பட்டார்கள். எனவே, இப்பொழுது இந்த விஷயத்திலும்கூட, நான் கூறும் ஆலோசனை இதுவே: இவர்களை விட்டுவிடுங்கள்! இவர்கள் போகட்டும்! ஏனெனில் இந்தத் திட்டமும், இந்த செயலும் மனிதரிடமிருந்து வந்ததானால், இது இல்லாமற்போகும். ஆனால் இது இறைவனிடமிருந்து வந்ததானால், உங்களால் இவர்களை நிறுத்தமுடியாது; அப்படி முயன்றால், நீங்கள் இறைவனுக்கு விரோதமாக யுத்தம் செய்கிறவர்களாய் இருப்பீர்களே” என்றான். அங்கிருந்தவர்கள் கமாலியேல் சொன்னதற்கு இணங்கினார்கள். அப்பொழுது அவர்கள் அப்போஸ்தலரை உள்ளே கூப்பிட்டு, அவர்களைச் சவுக்கினால் அடித்தார்கள். பின்பு அவர்கள், இயேசுவின் பெயரினால் பேசக்கூடாது என்று கட்டளையிட்டு, அவர்களைப் போகவிட்டார்கள். அப்போஸ்தலர் ஆலோசனைச் சங்கத்தைவிட்டுப் போனபின், இயேசுவின் பெயருக்காக தாங்கள் அவமானப்பட்டுத் துன்பம் அடைவதற்குத் தகுந்தவர்களாக கருதப்பட்டதால், பெருமகிழ்ச்சி அடைந்தார்கள். ஒவ்வொரு நாளும் அவர்கள் ஆலய முற்றத்திலும், வீடுகள்தோறும் இடைவிடாது போதித்து, இயேசுவே கிறிஸ்து என்று நற்செய்தியை அறிவித்துவந்தார்கள்.

அப்போஸ்தலர் 5:27-42 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அப்படி அழைத்துக்கொண்டுவந்து, ஆலோசனைச் சங்கத்திற்கு முன்பாக நிறுத்தினார்கள். அப்பொழுது பிரதான ஆசாரியன் அவர்களை நோக்கி: நீங்கள் இயேசுவின் நாமத்தைக்குறித்து போதகம்பண்ணக்கூடாது என்று நாங்கள் உங்களுக்கு உறுதியாகக் கட்டளையிடவில்லையா? அப்படியிருந்தும், இதோ, எருசலேமை உங்களுடைய போதகத்தினாலே நிரப்பி, அந்த மனிதனுடைய இரத்தப்பழியை எங்கள்மேல் சுமத்தவேண்டுமென்றிருக்கிறீர்கள் என்று சொன்னான். அதற்கு பேதுருவும் மற்ற அப்போஸ்தலர்களும்: மனிதர்களுக்குக் கீழ்ப்படிகிறதைவிட தேவனுக்குக் கீழ்ப்படிகிறதே அவசியமாக இருக்கிறது. நீங்கள் சிலுவையில் அறைந்து கொலைசெய்த இயேசுவை நம்முடைய முற்பிதாக்களின் தேவன் எழுப்பி, இஸ்ரவேலுக்கு மனந்திரும்புதலையும் பாவமன்னிப்பையும் கொடுப்பதற்காக, அவரை அதிபதியாகவும் இரட்சகராகவும் தமது வலது கரத்தினாலே உயர்த்தினார். இந்தச் செய்திகளைக்குறித்து நாங்கள் அவருக்குச் சாட்சிகளாக இருக்கிறோம்; தேவன் தமக்குக் கீழ்ப்படிகிறவர்களுக்குக் கொடுத்த பரிசுத்த ஆவியானவரும் சாட்சி என்றார்கள். அதை அவர்கள் கேட்டபொழுது, மிகுந்த கோபமடைந்து, அவர்களைக் கொலைசெய்யும்படிக்கு யோசனைபண்ணினார்கள். அப்பொழுது அனைத்து மக்களாலும் கனம்பெற்ற வேதபண்டிதர் கமாலியேல் என்னும் பெயர்கொண்ட ஒரு பரிசேயன் ஆலோசனைச் சங்கத்தில் எழுந்திருந்து, அப்போஸ்தலர்களைக் கொஞ்சநேரம் வெளியே கொண்டுபோகச் சொல்லி, சங்கத்தினரை நோக்கி: இஸ்ரவேலர்களே, இந்த மனிதர்களுக்கு நீங்கள் செய்யப்போகிறதைக்குறித்து எச்சரிக்கையாக இருங்கள். ஏனென்றால், இந்த நாட்களுக்கு முன்னே தெயுதாஸ் என்பவன் எழும்பி, தன்னை ஒரு பெரியவனாகப் பாராட்டினான்; ஏறக்குறைய நானூறுபேர் அவனிடத்தில் சேர்ந்தார்கள்; அவன் மரித்துப்போனான்; அவனை நம்பின அனைவரும் சிதறிப்போனார்கள். அவனுக்குப்பின்பு, மக்களைக் கணக்கெடுக்கும் நாட்களிலே, கலிலேயனாகிய யூதாஸ் என்பவன் எழும்பி, தன்னைப் பின்பற்றும்படி அநேக மக்களை இழுத்தான்; அவனும் மரித்துப்போனான்; அவனை நம்பியிருந்த அனைவரும் சிதறிப்போனார்கள். இப்பொழுது நான் உங்களுக்குச் சொல்லுகிறது என்னவென்றால் இந்த மனிதர்களுக்கு ஒன்றும் செய்யாமல் இவர்களை விட்டுவிடுங்கள். இந்த யோசனையும் இந்தச் செயல்களும் மனிதர்களால் உண்டாயிருந்ததானால் அழிந்துபோகும்; தேவனால் உண்டாயிருந்ததேயானால், அதை அழித்துவிட உங்களால் முடியாது; தேவனோடு போர் செய்யாதவர்களாக இருக்கும்படிக்குப் பார்த்துக்கொள்ளுங்கள் என்றான். அப்பொழுது அவர்கள் அவனுடைய யோசனைக்கு உடன்பட்டு, அப்போஸ்தலர்களை வரவழைத்து, அடித்து, இயேசுவின் நாமத்தைக்குறித்துப் பேசக்கூடாதென்று கட்டளையிட்டு, அவர்களை விடுதலையாக்கினார்கள். அவருடைய நாமத்துக்காக தாங்கள் அவமானமடைவதற்குத் தகுதியானவர்களாக எண்ணப்பட்டபடியினால், சந்தோஷமாக ஆலோசனைச் சங்கத்தைவிட்டுப் புறப்பட்டுப்போய், தினந்தோறும் தேவாலயத்திலேயும் வீடுகளிலேயும் இடைவிடாமல் உபதேசம்பண்ணி இயேசுவே கிறிஸ்து என்று பிரசங்கித்தார்கள்.

அப்போஸ்தலர் 5:27-42 பரிசுத்த பைபிள் (TAERV)

வீரர்கள், கூட்டத்திற்கு அப்போஸ்தலரை அழைத்து வந்து, யூதத் தலைவர்களுக்கு முன்பு அவர்களை நிற்கும்படியாகச் செய்தனர். தலைமை ஆசாரியன் அப்போஸ்தலர்களை விசாரித்தான். அவன், “இந்த மனிதனைக் குறித்து உபதேசிக்கக் கூடாது என உங்களுக்கு ஏற்கெனவே நாங்கள் உறுதியாகக் கட்டளை இட்டிருக்கவில்லையா? ஆனால் நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள்? எருசலேமை உங்கள் உபதேசங்களால் நிரப்பியுள்ளீர்கள். இந்த மனிதனின் மரணத்திற்கு எங்களைக் காரணர்களாக ஆக்குவதற்கு நீங்கள் முயல்கிறீர்கள்” என்றான். பேதுருவும் மற்ற அப்போஸ்தலர்களும் பதிலாக “நாங்கள் தேவனுக்குத்தான் கீழ்ப்படிய வேண்டும். உங்களுக்கு அல்ல! நீங்கள் இயேசுவைக் கொன்றீர்கள். அவரைச் சிலுவையில் தொங்கும்படியாகச் செய்தீர்கள். ஆனால் நமது முன்னோரின் கர்த்தராகிய நம் தேவன் இயேசுவை மரணத்தினின்று எழுப்பினார்! தேவன் இயேசுவை உயர்த்தித் தனது வலது பக்கத்தில் உட்கார வைத்துக்கொண்டார். இயேசுவை எங்கள் தலைவராகவும் இரட்சகராகவும் ஆக்கினார். எல்லா யூதர்களும் தங்கள் இருதயத்தையும் வாழ்க்கையையும் மாற்றும்படியாக தேவன் இதைச் செய்தார். இப்போது தேவன் அவர்கள் பாவங்களை மன்னிக்க முடியும். இக்காரியங்கள் அனைத்தும் நடந்ததைக் கண்டோம். இவை அனைத்தும் உண்மையென்று நாங்கள் கூறமுடியும். பரிசுத்த ஆவியானவரும் இவையனைத்தும் உண்மையென்று நிலை நாட்டுகிறார். தேவன் அவருக்குக் கீழ்ப்படிகிற அனைவருக்கும் பரிசுத்த ஆவியை அளித்திருக்கிறார்” என்று கூறினர். யூதத் தலைவர்கள் இந்த வார்த்தைகளைக் கேட்டனர். அவர்கள் மிகுந்த சினம் கொண்டனர். அப்போஸ்தலரைக் கொல்வதற்கு ஒரு வழிகாண அவர்கள் திட்டமிட ஆரம்பித்தனர். கூட்டத்திலிருந்த பரிசேயரில் ஒருவர் எழுந்தார். அவர் பெயர் கமாலியேல். அவர் வேதபாரகராக இருந்தார். எல்லா மக்களும் அவரை மதித்தனர். சில நிமிடங்கள் அப்போஸ்தலரை வெளியே அனுப்புமாறு அவர் கூறினார். பின் அவர் அங்கிருந்தோரை நோக்கி, “இஸ்ரவேலின் மனிதர்களே, இம்மனிதருக்கெதிராகச் செயல்படுமாறு நீங்கள் வகுக்கும் திட்டங்களில் எச்சரிக்கையாக இருங்கள்! எப்போது தெயுதாஸ் தோன்றினான் என்பதை நினைவு கூருகிறீர்களா? அவன் தன்னை ஒரு முக்கியமான மனிதன் என்று கூறினான். சுமார் 400 மனிதர்கள் அவனோடு சேர்ந்துகொண்டனர். ஆனால் அவன் கொல்லப்பட்டான். அவனைப் பின்பற்றியவர்கள் சிதறுண்டு ஓடினார்கள். அவர்களால் எதையும் செய்யக் கூடவில்லை. அவனுக்குப்பின் கலிலேயாவிலிருந்து யூதா என்னும் பெயருள்ள மனிதன் வந்தான். மக்கள்தொகை பதிவு செய்த காலத்தில் அவன் வந்தான். அவன் தன்னைப் பின் பற்றியவர்களுக்குத் தலைமையும் தாங்கினான். அவனும் கொல்லப்பட்டான். அவனைப் பின்பற்றிய அனைவரும் சிதறியோடினர். எனவே இப்போது உங்களுக்குச் சொல்கிறேன். இம்மனிதரிடமிருந்து விலகியிருங்கள். அவர்களைத் தனித்து விட்டுவிடுங்கள். அவர்கள் திட்டம் மனிதர்களிடமிருந்து உருவாகியிருந்தால் அது தகர்ந்து விழும். ஆனால் அது தேவனிடமிருந்து வந்ததெனில், நீங்கள் அவர்களைத் தடுக்கவியலாது. நீங்கள் தேவனுடனேயே சண்டையிடுபவர்களாக ஆவீர்கள்” என்றார். கமாலியேல் கூறியவற்றிற்கு யூதத் தலைவர்கள் உடன்பட்டனர். அவர்கள் அப்போஸ்தர்களை மீண்டும் உள்ளே அழைத்தனர். அவர்கள் அப்போஸ்தலரை அடித்து இயேசுவைக் குறித்து மேலும் மக்களிடம் பேசாதிருக்குமாறு கூறினர். பின்னர் அப்போஸ்தலர்களைப் போகுமாறு விடுவித்தனர். அப்போஸ்தலர்கள் கூட்டத்தைவிட்டுச் சென்றனர். இயேசுவின் பெயரில் வெட்கமுறும்படியாகக் கிடைக்கப்பெற்ற பெருமைக்காக அப்போஸ்தலர்கள் மகிழ்ந்தனர். மக்களுக்குப் போதிப்பதை அப்போஸ்தலர்கள் நிறுத்தவில்லை. இயேசுவே கிறிஸ்து என்னும் நற்செய்தியை அப்போஸ்தலர்கள் மக்களுக்குத் தொடர்ந்து கூறி வந்தனர். தேவாலயத்திலும், மக்களின் வீடுகளிலும் ஒவ்வொரு நாளும் அவர்கள் இதைச் செய்தனர்.