அப்போஸ்தலர் 5:27-32

அப்போஸ்தலர் 5:27-32 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அப்படி அவர்களை அழைத்துக்கொண்டுவந்து, ஆலோசனைச் சங்கத்துக்கு முன்பாக நிறுத்தினார்கள். அப்பொழுது பிரதான ஆசாரியன் அவர்களை நோக்கி: நீங்கள் அந்த நாமத்தைக்குறித்துப் போதகம்பண்ணக்கூடாதென்று நாங்கள் உங்களுக்கு உறுதியாய்க் கட்டளையிடவில்லையா? அப்படியிருந்தும், இதோ, எருசலேமை உங்கள் போதகத்தினாலே நிரப்பி, அந்த மனுஷனுடைய இரத்தப்பழியை எங்கள்மேல் சுமத்தவேண்டுமென்றிருக்கிறீர்கள் என்று சொன்னான். அதற்குப் பேதுருவும் மற்ற அப்போஸ்தலரும்: மனுஷருக்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும் தேவனுக்குக் கீழ்ப்படிகிறதே அவசியமாயிருக்கிறது. நீங்கள் மரத்திலே தூக்கிக் கொலைசெய்த இயேசுவை நம்முடைய பிதாக்களின் தேவன் எழுப்பி, இஸ்ரவேலுக்கு மனந்திரும்புதலையும் பாவமன்னிப்பையும் அருளுகிறதற்காக, அவரை அதிபதியாகவும் இரட்சகராகவும் தமது வலதுகரத்தினாலே உயர்த்தினார், இந்தச் சங்கதிகளைக்குறித்து நாங்கள் அவருக்குச் சாட்சிகளாயிருக்கிறோம்; தேவன் தமக்குக் கீழ்ப்படிகிறவர்களுக்குத் தந்தருளின பரிசுத்த ஆவியும் சாட்சி என்றார்கள்.

அப்போஸ்தலர் 5:27-32 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அவர்கள் அப்போஸ்தலர்களைக் கொண்டுவந்து, ஆலோசனைச் சங்கத்தின் முன்நிறுத்தினார்கள். பிரதான ஆசாரியன் கேள்விகளைக் கேட்டான். அவன் அவர்களிடம், “இந்தப் பெயரால் நீங்கள் போதிக்கக் கூடாது என்று நாங்கள் உங்களுக்குக் கடுமையாக உத்தரவிட்டிருந்தோம். ஆனால் நீங்கள் உங்கள் போதனையினாலே எருசலேமை நிரப்பிவிட்டீர்கள். அந்த மனிதனைக் கொன்ற இரத்தப்பழியை எங்கள்மேல் சுமத்தவே நீங்கள் உறுதிகொண்டிருக்கிறீர்கள்” என்றான். ஆனால், பேதுருவும் மற்ற அப்போஸ்தலரும் அவர்களிடம்: “மனிதனைவிட நாங்கள் இறைவனுக்கே கீழ்ப்படிய வேண்டும்! நீங்கள் மரத்தில் தொங்கவிட்டுக் கொலைசெய்த இயேசுவை, நம்முடைய தந்தையரின் இறைவன் மரித்தோரிலிருந்து எழும்பச்செய்தார். இறைவனோ இயேசுவை அதிபதியாகவும், இரட்சகராகவும், தனது வலதுபக்கத்தில் இருக்கும்படி உயர்த்தி, இவர் இஸ்ரயேலுக்கு மனந்திரும்புதலையும், பாவங்களுக்கான மன்னிப்பையும் கொடுக்கும்படி செய்தார். இவற்றிற்கு நாங்கள் சாட்சிகளாய் இருக்கிறோம். தமக்குக் கீழ்ப்படிகிறவர்களுக்கு, இறைவன் கொடுத்திருக்கும் பரிசுத்த ஆவியானவரும் சாட்சியாய் இருக்கிறார்” என்றார்கள்.

அப்போஸ்தலர் 5:27-32 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அப்படி அழைத்துக்கொண்டுவந்து, ஆலோசனைச் சங்கத்திற்கு முன்பாக நிறுத்தினார்கள். அப்பொழுது பிரதான ஆசாரியன் அவர்களை நோக்கி: நீங்கள் இயேசுவின் நாமத்தைக்குறித்து போதகம்பண்ணக்கூடாது என்று நாங்கள் உங்களுக்கு உறுதியாகக் கட்டளையிடவில்லையா? அப்படியிருந்தும், இதோ, எருசலேமை உங்களுடைய போதகத்தினாலே நிரப்பி, அந்த மனிதனுடைய இரத்தப்பழியை எங்கள்மேல் சுமத்தவேண்டுமென்றிருக்கிறீர்கள் என்று சொன்னான். அதற்கு பேதுருவும் மற்ற அப்போஸ்தலர்களும்: மனிதர்களுக்குக் கீழ்ப்படிகிறதைவிட தேவனுக்குக் கீழ்ப்படிகிறதே அவசியமாக இருக்கிறது. நீங்கள் சிலுவையில் அறைந்து கொலைசெய்த இயேசுவை நம்முடைய முற்பிதாக்களின் தேவன் எழுப்பி, இஸ்ரவேலுக்கு மனந்திரும்புதலையும் பாவமன்னிப்பையும் கொடுப்பதற்காக, அவரை அதிபதியாகவும் இரட்சகராகவும் தமது வலது கரத்தினாலே உயர்த்தினார். இந்தச் செய்திகளைக்குறித்து நாங்கள் அவருக்குச் சாட்சிகளாக இருக்கிறோம்; தேவன் தமக்குக் கீழ்ப்படிகிறவர்களுக்குக் கொடுத்த பரிசுத்த ஆவியானவரும் சாட்சி என்றார்கள்.

அப்போஸ்தலர் 5:27-32 பரிசுத்த பைபிள் (TAERV)

வீரர்கள், கூட்டத்திற்கு அப்போஸ்தலரை அழைத்து வந்து, யூதத் தலைவர்களுக்கு முன்பு அவர்களை நிற்கும்படியாகச் செய்தனர். தலைமை ஆசாரியன் அப்போஸ்தலர்களை விசாரித்தான். அவன், “இந்த மனிதனைக் குறித்து உபதேசிக்கக் கூடாது என உங்களுக்கு ஏற்கெனவே நாங்கள் உறுதியாகக் கட்டளை இட்டிருக்கவில்லையா? ஆனால் நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள்? எருசலேமை உங்கள் உபதேசங்களால் நிரப்பியுள்ளீர்கள். இந்த மனிதனின் மரணத்திற்கு எங்களைக் காரணர்களாக ஆக்குவதற்கு நீங்கள் முயல்கிறீர்கள்” என்றான். பேதுருவும் மற்ற அப்போஸ்தலர்களும் பதிலாக “நாங்கள் தேவனுக்குத்தான் கீழ்ப்படிய வேண்டும். உங்களுக்கு அல்ல! நீங்கள் இயேசுவைக் கொன்றீர்கள். அவரைச் சிலுவையில் தொங்கும்படியாகச் செய்தீர்கள். ஆனால் நமது முன்னோரின் கர்த்தராகிய நம் தேவன் இயேசுவை மரணத்தினின்று எழுப்பினார்! தேவன் இயேசுவை உயர்த்தித் தனது வலது பக்கத்தில் உட்கார வைத்துக்கொண்டார். இயேசுவை எங்கள் தலைவராகவும் இரட்சகராகவும் ஆக்கினார். எல்லா யூதர்களும் தங்கள் இருதயத்தையும் வாழ்க்கையையும் மாற்றும்படியாக தேவன் இதைச் செய்தார். இப்போது தேவன் அவர்கள் பாவங்களை மன்னிக்க முடியும். இக்காரியங்கள் அனைத்தும் நடந்ததைக் கண்டோம். இவை அனைத்தும் உண்மையென்று நாங்கள் கூறமுடியும். பரிசுத்த ஆவியானவரும் இவையனைத்தும் உண்மையென்று நிலை நாட்டுகிறார். தேவன் அவருக்குக் கீழ்ப்படிகிற அனைவருக்கும் பரிசுத்த ஆவியை அளித்திருக்கிறார்” என்று கூறினர்.