அப்போஸ்தலர் 4:23-37
அப்போஸ்தலர் 4:23-37 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
பேதுருவும் யோவானும் விடுதலை செய்யப்பட்டதும், தங்களைச் சேர்ந்த மக்களிடம் திரும்பிப்போய், ஆசாரியர்களும், யூதரின் தலைவர்களும் தங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் அவர்களுக்குச் சொன்னார்கள். அவர்கள் இதைக் கேட்டதும், ஒன்றாக சத்தமிட்டு இறைவனிடம் மன்றாடினார்கள். அவர்கள், “எல்லாம் வல்ல கர்த்தாவே, நீரே வானத்தையும், பூமியையும், கடலையும், அவற்றிலுள்ள எல்லாவற்றையும் படைத்தீர். நீர் பரிசுத்த ஆவியானவரால் உமது ஊழியனும், எங்கள் தந்தையுமான தாவீதின் வாயினால் பேசியதாவது: “ ‘நாடுகள் ஏன் கொதித்து எழும்புகின்றன? மக்கள் ஏன் வீணாய் சூழ்ச்சி செய்கின்றார்கள்? பூமியின் அரசர்கள் எதிர்த்து நிற்கிறார்கள். ஆளுநர்களும் கர்த்தருக்கு விரோதமாகவும், அவரால் அபிஷேகம் பண்ணப்பட்டவருக்கு விரோதமாகவும் ஒன்றுகூடுகிறார்கள்.’ நீர் அபிஷேகம் செய்த உமது பரிசுத்த ஊழியரான இயேசுவுக்கு எதிராய் சூழ்ச்சி செய்வதற்கென, இந்த நகரத்தில் ஏரோதுவும் பொந்தியு பிலாத்துவும் ஒன்றுகூடினார்கள். அவர்கள் யூதரல்லாத மக்களுடனும் இஸ்ரயேல் மக்களுடனும் ஒன்றுசேர்ந்தார்களே. என்ன நடக்கவேண்டும் என்று முன்னதாகவே உம்முடைய வல்லமையும் திட்டமும் தீர்மானித்ததையே அவர்கள் செய்தார்கள். இப்பொழுதும் கர்த்தாவே, அவர்களுடைய பயமுறுத்தல்களைக் கவனத்தில் கொள்ளும்; உமது வார்த்தையை அதிகத் துணிவுடன் பேசுவதற்கு, உமது ஊழியக்காரருக்கு ஆற்றலைக் கொடும். உமது பரிசுத்த ஊழியரான இயேசுவின் பெயரினால் சுகப்படுத்துவதற்கும், அற்புத அடையாளங்களையும் அதிசயங்களையும் செய்வதற்கும் உமது கரத்தை நீட்டும்” என்று மன்றாடினார்கள். அவர்கள் மன்றாடி முடிந்ததும், அவர்கள் கூடியிருந்த இடம் முழுவதும் அதிர்ந்தது. அவர்கள் அனைவரும் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டு, இறைவனுடைய வார்த்தையை பயமின்றிப் பேசினார்கள். விசுவாசிகள் அனைவரும், இருதயத்திலும் மனதிலும் ஒன்றாய் இருந்தார்கள். ஒருவருமே தங்களுடைய சொத்துக்களைத் தங்களுடையது என்று உரிமை கருதவில்லை. ஆனால் அவர்கள் தங்களிடமிருந்த எல்லாவற்றையும் பொதுவாய்ப் பகிர்ந்துகொண்டார்கள். கர்த்தராகிய இயேசுவின் உயிர்த்தெழுதலைக் குறித்து அப்போஸ்தலர் மிகுந்த வல்லமையுடன் சாட்சி கொடுத்தார்கள். அவர்கள் எல்லோர்மேலும் மிகுந்த கிருபை இருந்தது. அவர்களுக்குள்ளே குறையுள்ளவர் யாரும் இருக்கவில்லை. ஏனெனில், காலத்திற்குக் காலம் சொந்த நிலங்களும் வீடுகளும் இருந்தவர்கள் அவற்றை விற்று, அதில் கிடைத்த பணத்தைக் கொண்டுவந்து, அப்போஸ்தலரின் பாதத்தில் வைத்தார்கள். அது தேவையுள்ள எல்லோருக்கும் தேவைக்கு ஏற்றபடி பகிர்ந்துகொடுக்கப்பட்டது. சீப்புரு தீவைச்சேர்ந்த யோசேப்பு என்னும் ஒரு லேவியன் இருந்தான். அப்போஸ்தலர் அவனைப் பர்னபா என அழைத்தார்கள். பர்னபா என்றால், “ஆறுதலின் மகன்” என்று அர்த்தமாகும். இவன் தனக்குச் சொந்தமான வயலை விற்று, பணத்தைக் கொண்டுவந்து அப்போஸ்தலரின் பாதத்தில் வைத்தான்.
அப்போஸ்தலர் 4:23-37 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
அவர்கள் விடுதலையாக்கப்பட்டப்பின்பு, தங்களைச் சேர்ந்தவர்களிடத்தில் வந்து, பிரதான ஆசாரியர்களும் மூப்பர்களும் தங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் அறிவித்தார்கள். அவர்கள் அதைக்கேட்டு, ஒருமனப்பட்டு தேவனை நோக்கிச் சத்தமிட்டு: கர்த்தாவே, நீர் வானத்தையும் பூமியையும் கடலையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கின தேவனாக இருக்கிறீர். யூதரல்லாதோர் கோபமடைந்து, மக்கள் வீணான காரியங்களைச் சிந்திப்பது ஏன் என்றும், கர்த்தருக்கு விரோதமாகவும் அவருடைய கிறிஸ்துவுக்கு விரோதமாகவும் பூமியின் ராஜாக்கள் எழும்பிநின்று, அதிகாரிகள் ஒன்றுகூடினார்கள் என்றும் தேவரீர் உம்முடைய அடியானாகிய தாவீதின் வாக்கினால் உரைத்தீரே. அந்தப்படி உம்முடைய கரமும் உம்முடைய ஆலோசனையும் முன்குறித்தவைகள் யாவையும் செய்யும்படி, ஏரோதும் பொந்தியுபிலாத்தும், யூதரல்லாதாரோடும் இஸ்ரவேல் மக்களோடுகூட, நீர் அபிஷேகம்பண்ணின உம்முடைய பரிசுத்த பிள்ளையாகிய இயேசுவிற்கு விரோதமாக, மெய்யாகவே கூட்டம் கூடினார்கள். இப்பொழுதும், கர்த்தாவே, அவர்கள் பயமுறுத்தல்களை தேவரீர் கவனித்து, உம்முடைய பரிசுத்த பிள்ளையாகிய இயேசுவின் நாமத்தினாலே அதிசயங்களும் அற்புதங்களும் நடக்கும்படிச் செய்து, நோயாளிகளைக் குணமாக்கும்படி உம்முடைய கரத்தை நீட்டி, உம்முடைய ஊழியக்காரர்கள் உம்முடைய வசனத்தை முழு தைரியத்தோடு சொல்லும்படி அவர்களுக்கு உதவி செய்தருளும்” என்றார்கள். அவர்கள் ஜெபம்பண்ணினபோது, அவர்கள் கூடியிருந்த இடம் அசைந்தது. அவர்களெல்லோரும் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டு, தேவவார்த்தையைத் தைரியமாகச் சொன்னார்கள். திரளான விசுவாசக் கூட்டத்தார் ஒரே இருதயமும் ஒரே மனமுள்ளவர்களாக இருந்தார்கள். ஒருவனும் தனக்குள்ளவைகளில் ஒன்றையும் தன்னுடையதென்று சொல்லவில்லை; அனைத்தும் அவர்களுக்குப் பொதுவாக இருந்தது. கர்த்தராகிய இயேசுவின் உயிர்த்தெழுதலைக்குறித்து அப்போஸ்தலர்கள் மிகுந்த உறுதியாக சாட்சிகொடுத்தார்கள்; அவர்களெல்லோர்மேலும் பூரணகிருபை உண்டாயிருந்தது. நிலங்களையும் வீடுகளையும் உடையவர்கள் அவைகளை விற்று, விற்கப்பட்டவைகளின் தொகையைக் கொண்டுவந்து, அப்போஸ்தலர்களுடைய பாதத்திலே வைத்தார்கள். அவனவனுக்குத் தேவைக்குத்தக்கதாகப் பகிர்ந்துகொடுக்கப்பட்டது; அவர்களில் ஒருவனுக்கும் ஒன்றும் குறைவாக இருந்ததில்லை. சீப்புருதீவானும் லேவியனும் அப்போஸ்தலர்களாலே ஆறுதலின் மகன் என்று அர்த்தங்கொள்ளும் பர்னபா என்னும் மறுபெயர்பெற்றவனுமாகிய யோசே என்பவன், தனக்கு உண்டாயிருந்த நிலத்தை விற்று, அதின் தொகையைக் கொண்டுவந்து, அப்போஸ்தலர்களுடைய பாதத்திலே வைத்தான்.
அப்போஸ்தலர் 4:23-37 பரிசுத்த பைபிள் (TAERV)
பேதுருவும் யோவானும் யூதத் தலைவர்களின் கூட்டத்தை விட்டு நீங்கி, அவர்களது குழுவிற்குச் சென்றனர். முக்கிய ஆசாரியரும், முதிய யூத அதிகாரிகளும் அவர்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் அவர்கள் தங்கள், குழுவினருக்குக் கூறினர். விசுவாசிகள் இதனைக் கேட்டபோது, அவர்கள் ஒரே மனதுடன் தேவனிடம் பிரார்த்தனை செய்தனர். அவர்கள் எல்லோரும் ஒரே விதமாக உணர்ந்தனர். அவர்கள், “கர்த்தாவே, வானத்தையும், பூமியையும், கடலையும், உலகத்திலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கியவர் நீர் ஒருவரே. எங்களது தந்தையாகிய தாவீது உம் ஊழியனாக இருந்தான். பரிசுத்த ஆவியின் உதவியால் அவன் கீழ்வரும் வார்த்தைகளை எழுதினான். “‘தேசங்கள் ஏன் கூக்குரல் எழுப்புகின்றன? ஏன் உலக மக்கள் தேவனுக்கெதிராகத் திட்டமிடுகின்றனர்? அவர்கள் செய்வது வீணானது. “‘பூமியின் ராஜாக்கள் போருக்குத் தயாராகின்றனர். தலைவர்கள் அனைவரும் தேவனுக்கும் அவருடைய கிறிஸ்துவிற்கும் எதிராக ஒருமித்துக் கூடுகின்றனர்.’ ஏரோதும் பொந்தியு பிலாத்துவும் தேசங்களும், எல்லா யூத ஜனங்களும் சேர்ந்து எருசலேமில் இயேசுவுக்கு எதிராகக் கூடினபோது இவை அனைத்தும் உண்மையாகவே நிகழ்ந்தன. இயேசு உமது தூய ஊழியர். அவரே கிறிஸ்துவாகும்படி நீர் உண்டாக்கியவர். கூடி வந்த இந்த மக்கள் உம் திட்டம் நிறைவேறும்படி இயேசுவுக்கு எதிராகச் செயல்பட்டனர். உம் வல்லமையின்படியும், சித்தத்தின்படியும் அது நிகழ்ந்தது. கர்த்தாவே, இப்போதும் அவர்கள் கூறுவதைக் கவனியும். அவர்கள் எங்களை அச்சமடையும்படியாகச் செய்ய முயன்றுகொண்டிருக்கிறார்கள். கர்த்தாவே, நாங்கள் உமக்கு ஊழியம் செய்பவர்கள். நீர் விரும்புகிறவற்றை நாங்கள் தைரியமாகக் கூறுவதற்கு எங்களுக்கு உதவும். நோயுற்றோரைக் குணப்படுத்தும். சான்றுகள் கொடும். உம் தூய பணியாளராகிய இயேசுவின் வல்லமையால் அதிசயங்கள் நடக்கும்படிச் செய்யும்” என்று பிரார்த்தனை செய்தனர். விசுவாசிகள் பிரார்த்தனை செய்த பிறகு அவர்கள் கூடியிருந்த இடம் அசைந்தது. அவர்கள் எல்லோரும் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டனர். அச்சமின்றி தேவனுடைய செய்தியைத் தொடர்ந்து கூறினர். விசுவாசிகள் அனைவரும் இருதயத்தில் ஒருமனமுள்ளவர்களாக ஒரே ஊக்கமுடையோராக இருந்தனர். அவர்களில் ஒருவரும் தன்னிடமிருந்த பொருட்கள் தனக்கு மட்டுமே சொந்தமானவை எனக் கூறவில்லை. மாறாக அவர்கள் எல்லாவற்றையும் பகிர்ந்துகொண்டனர். மிகுந்த வல்லமையோடு, அப்போஸ்தலர்கள் கர்த்தராகிய இயேசு மரணத்தினின்று உண்மையாகவே எழுப்பப்பட்டார் என்பதை மக்களுக்குக் கூறினர். விசுவாசிகளை தேவன் அதிகமாக ஆசீர்வதித்தார். அவர்கள் அனைவரும் தேவையான பொருட்களைப் பெற்றனர். வயல்களையோ, வீடுகளையோ உடைய ஒவ்வொருவரும் அவற்றை விற்றனர். அப்பணத்தைக் கொண்டு வந்து அதனை அப்போஸ்தலர்களுக்குக் கொடுத்தனர். பின்பு ஒவ்வொருவருக்கும் தேவைக்கேற்ப பொருட்கள் கொடுக்கப்பட்டன. விசுவாசிகளில் ஒருவன் யோசேப்பு என அழைக்கப்பட்டான். அப்போஸ்தலர்கள் அவனை பர்னபாஸ் என்று அழைத்தனர். (இந்தப் பெயர், “பிறருக்கு உதவுகின்ற மனிதன்” எனப் பொருள்படும்) அவன் சீப்புருவில் பிறந்த லேவியன். அவனுக்குச் சிறிது நிலம் இருந்தது. அவன் அந்த நிலத்தை விற்று பணத்தைக் கொண்டுவந்து, அதை அப்போஸ்தலர்களிடம் கொடுத்தான்.
அப்போஸ்தலர் 4:23-37 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
அவர்கள் விடுதலையாக்கப்பட்ட பின்பு, தங்களைச் சேர்ந்தவர்களிடத்தில் வந்து, பிரதான ஆசாரியர்களும் மூப்பர்களும் தங்களுக்குச் சொன்ன யாவையும் அறிவித்தார்கள். அவர்கள் அதைக் கேட்டு, ஒருமனப்பட்டு தேவனை நோக்கிச் சத்தமிட்டு: கர்த்தாவே, நீர் வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின தேவனாயிருக்கிறீர். புறஜாதிகள் கொந்தளித்து, ஜனங்கள் விருதா காரியங்களைச் சிந்திப்பானேன் என்றும், கர்த்தருக்கு விரோதமாகவும் அவருடைய கிறிஸ்துவுக்கு விரோதமாகவும் பூமியின் ராஜாக்கள் எழும்பி நின்று, அதிகாரிகள் ஏகமாய்க் கூட்டங்கூடினார்கள் என்றும் தேவரீர் உம்முடைய தாசனாகிய தாவீதின் வாக்கினால் உரைத்தீரே. அந்தப்படி உம்முடைய கரமும் உம்முடைய ஆலோசனையும் முன்குறித்தவைகள் யாவையும் செய்யும்படி, ஏரோதும் பொந்தியுபிலாத்தும், புறஜாதிகளோடும் இஸ்ரவேல் ஜனங்களோடுங்கூட, நீர் அபிஷேகம்பண்ணின உம்முடைய பரிசுத்த பிள்ளையாகிய இயேசுவுக்கு விரோதமாய், மெய்யாகவே கூட்டங்கூடினார்கள். இப்பொழுதும், கர்த்தாவே, அவர்கள் பயமுறுத்தல்களை தேவரீர் கவனித்து, உம்முடைய பரிசுத்த பிள்ளையாகிய இயேசுவின் நாமத்தினாலே அடையாளங்களும் அற்புதங்களும் நடக்கும்படி செய்து, பிணியாளிகளைக் குணமாக்கும்படி உம்முடைய கரத்தை நீட்டி, உம்முடைய ஊழியக்காரர் உம்முடைய வசனத்தை முழு தைரியத்தோடும் சொல்லும்படி அவர்களுக்கு அநுக்கிரகஞ்செய்தருளும் என்றார்கள். அவர்கள் ஜெபம்பண்ணினபோது, அவர்கள் கூடியிருந்த இடம் அசைந்தது. அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு, தேவவசனத்தைத் தைரியமாய்ச் சொன்னார்கள். விசுவாசிகளாகிய திரளான கூட்டத்தார் ஒரே இருதயமும் ஒரே மனமுமுள்ளவர்களாயிருந்தார்கள். ஒருவனாகிலும் தனக்குள்ளவைகளில் ஒன்றையும் தன்னுடையதென்று சொல்லவில்லை; சகலமும் அவர்களுக்குப் பொதுவாயிருந்தது. கர்த்தராகிய இயேசுவின் உயிர்த்தெழுதலைக்குறித்து அப்போஸ்தலர்கள் மிகுந்த பலமாய்ச் சாட்சிகொடுத்தார்கள்; அவர்களெல்லார்மேலும் பூரணகிருபை உண்டாயிருந்தது. நிலங்களையும் வீடுகளையும் உடையவர்கள் அவைகளை விற்று, விற்கப்பட்டவைகளின் கிரயத்தைக் கொண்டுவந்து, அப்போஸ்தலருடைய பாதத்திலே வைத்தார்கள். அவனவனுக்குத் தேவையானதற்குத்தக்கதாய்ப் பகிர்ந்துகொடுக்கப்பட்டது; அவர்களில் ஒருவனுக்கும் ஒன்றும் குறைவாயிருந்ததில்லை. சீப்புருதீவானும் லேவியனும் அப்போஸ்தலராலே ஆறுதலின் மகன் என்று அர்த்தங்கொள்ளும் பர்னபா என்னும் மறுபேர்பெற்றவனுமாகிய யோசே என்பவன், தனக்கு உண்டாயிருந்த நிலத்தை விற்று, அதின் கிரயத்தைக் கொண்டு வந்து, அப்போஸ்தலருடைய பாதத்திலே வைத்தான்.