அப்போஸ்தலர் 4:23-28
அப்போஸ்தலர் 4:23-28 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
பேதுருவும் யோவானும் விடுதலை செய்யப்பட்டதும், தங்களைச் சேர்ந்த மக்களிடம் திரும்பிப்போய், ஆசாரியர்களும், யூதரின் தலைவர்களும் தங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் அவர்களுக்குச் சொன்னார்கள். அவர்கள் இதைக் கேட்டதும், ஒன்றாக சத்தமிட்டு இறைவனிடம் மன்றாடினார்கள். அவர்கள், “எல்லாம் வல்ல கர்த்தாவே, நீரே வானத்தையும், பூமியையும், கடலையும், அவற்றிலுள்ள எல்லாவற்றையும் படைத்தீர். நீர் பரிசுத்த ஆவியானவரால் உமது ஊழியனும், எங்கள் தந்தையுமான தாவீதின் வாயினால் பேசியதாவது: “ ‘நாடுகள் ஏன் கொதித்து எழும்புகின்றன? மக்கள் ஏன் வீணாய் சூழ்ச்சி செய்கின்றார்கள்? பூமியின் அரசர்கள் எதிர்த்து நிற்கிறார்கள். ஆளுநர்களும் கர்த்தருக்கு விரோதமாகவும், அவரால் அபிஷேகம் பண்ணப்பட்டவருக்கு விரோதமாகவும் ஒன்றுகூடுகிறார்கள்.’ நீர் அபிஷேகம் செய்த உமது பரிசுத்த ஊழியரான இயேசுவுக்கு எதிராய் சூழ்ச்சி செய்வதற்கென, இந்த நகரத்தில் ஏரோதுவும் பொந்தியு பிலாத்துவும் ஒன்றுகூடினார்கள். அவர்கள் யூதரல்லாத மக்களுடனும் இஸ்ரயேல் மக்களுடனும் ஒன்றுசேர்ந்தார்களே. என்ன நடக்கவேண்டும் என்று முன்னதாகவே உம்முடைய வல்லமையும் திட்டமும் தீர்மானித்ததையே அவர்கள் செய்தார்கள்.
அப்போஸ்தலர் 4:23-28 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
அவர்கள் விடுதலையாக்கப்பட்டப்பின்பு, தங்களைச் சேர்ந்தவர்களிடத்தில் வந்து, பிரதான ஆசாரியர்களும் மூப்பர்களும் தங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் அறிவித்தார்கள். அவர்கள் அதைக்கேட்டு, ஒருமனப்பட்டு தேவனை நோக்கிச் சத்தமிட்டு: கர்த்தாவே, நீர் வானத்தையும் பூமியையும் கடலையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கின தேவனாக இருக்கிறீர். யூதரல்லாதோர் கோபமடைந்து, மக்கள் வீணான காரியங்களைச் சிந்திப்பது ஏன் என்றும், கர்த்தருக்கு விரோதமாகவும் அவருடைய கிறிஸ்துவுக்கு விரோதமாகவும் பூமியின் ராஜாக்கள் எழும்பிநின்று, அதிகாரிகள் ஒன்றுகூடினார்கள் என்றும் தேவரீர் உம்முடைய அடியானாகிய தாவீதின் வாக்கினால் உரைத்தீரே. அந்தப்படி உம்முடைய கரமும் உம்முடைய ஆலோசனையும் முன்குறித்தவைகள் யாவையும் செய்யும்படி, ஏரோதும் பொந்தியுபிலாத்தும், யூதரல்லாதாரோடும் இஸ்ரவேல் மக்களோடுகூட, நீர் அபிஷேகம்பண்ணின உம்முடைய பரிசுத்த பிள்ளையாகிய இயேசுவிற்கு விரோதமாக, மெய்யாகவே கூட்டம் கூடினார்கள்.
அப்போஸ்தலர் 4:23-28 பரிசுத்த பைபிள் (TAERV)
பேதுருவும் யோவானும் யூதத் தலைவர்களின் கூட்டத்தை விட்டு நீங்கி, அவர்களது குழுவிற்குச் சென்றனர். முக்கிய ஆசாரியரும், முதிய யூத அதிகாரிகளும் அவர்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் அவர்கள் தங்கள், குழுவினருக்குக் கூறினர். விசுவாசிகள் இதனைக் கேட்டபோது, அவர்கள் ஒரே மனதுடன் தேவனிடம் பிரார்த்தனை செய்தனர். அவர்கள் எல்லோரும் ஒரே விதமாக உணர்ந்தனர். அவர்கள், “கர்த்தாவே, வானத்தையும், பூமியையும், கடலையும், உலகத்திலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கியவர் நீர் ஒருவரே. எங்களது தந்தையாகிய தாவீது உம் ஊழியனாக இருந்தான். பரிசுத்த ஆவியின் உதவியால் அவன் கீழ்வரும் வார்த்தைகளை எழுதினான். “‘தேசங்கள் ஏன் கூக்குரல் எழுப்புகின்றன? ஏன் உலக மக்கள் தேவனுக்கெதிராகத் திட்டமிடுகின்றனர்? அவர்கள் செய்வது வீணானது. “‘பூமியின் ராஜாக்கள் போருக்குத் தயாராகின்றனர். தலைவர்கள் அனைவரும் தேவனுக்கும் அவருடைய கிறிஸ்துவிற்கும் எதிராக ஒருமித்துக் கூடுகின்றனர்.’ ஏரோதும் பொந்தியு பிலாத்துவும் தேசங்களும், எல்லா யூத ஜனங்களும் சேர்ந்து எருசலேமில் இயேசுவுக்கு எதிராகக் கூடினபோது இவை அனைத்தும் உண்மையாகவே நிகழ்ந்தன. இயேசு உமது தூய ஊழியர். அவரே கிறிஸ்துவாகும்படி நீர் உண்டாக்கியவர். கூடி வந்த இந்த மக்கள் உம் திட்டம் நிறைவேறும்படி இயேசுவுக்கு எதிராகச் செயல்பட்டனர். உம் வல்லமையின்படியும், சித்தத்தின்படியும் அது நிகழ்ந்தது.
அப்போஸ்தலர் 4:23-28 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
அவர்கள் விடுதலையாக்கப்பட்ட பின்பு, தங்களைச் சேர்ந்தவர்களிடத்தில் வந்து, பிரதான ஆசாரியர்களும் மூப்பர்களும் தங்களுக்குச் சொன்ன யாவையும் அறிவித்தார்கள். அவர்கள் அதைக் கேட்டு, ஒருமனப்பட்டு தேவனை நோக்கிச் சத்தமிட்டு: கர்த்தாவே, நீர் வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின தேவனாயிருக்கிறீர். புறஜாதிகள் கொந்தளித்து, ஜனங்கள் விருதா காரியங்களைச் சிந்திப்பானேன் என்றும், கர்த்தருக்கு விரோதமாகவும் அவருடைய கிறிஸ்துவுக்கு விரோதமாகவும் பூமியின் ராஜாக்கள் எழும்பி நின்று, அதிகாரிகள் ஏகமாய்க் கூட்டங்கூடினார்கள் என்றும் தேவரீர் உம்முடைய தாசனாகிய தாவீதின் வாக்கினால் உரைத்தீரே. அந்தப்படி உம்முடைய கரமும் உம்முடைய ஆலோசனையும் முன்குறித்தவைகள் யாவையும் செய்யும்படி, ஏரோதும் பொந்தியுபிலாத்தும், புறஜாதிகளோடும் இஸ்ரவேல் ஜனங்களோடுங்கூட, நீர் அபிஷேகம்பண்ணின உம்முடைய பரிசுத்த பிள்ளையாகிய இயேசுவுக்கு விரோதமாய், மெய்யாகவே கூட்டங்கூடினார்கள்.