அப்போஸ்தலர் 4:1-28
அப்போஸ்தலர் 4:1-28 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
பேதுருவும் யோவானும் மக்களிடத்தில் பேசிக்கொண்டிருக்கையில், ஆசாரியர்களும், ஆலயக்காவலர் தலைவனும், சதுசேயரும் அங்கு வந்தார்கள். இயேசுவில் இறந்தோருக்கு உயிர்த்தெழுதல் உண்டென்று மக்களுக்கு அப்போஸ்தலர் போதித்து, அறிவித்ததினால் அவர்கள் மிகவும் எரிச்சலடைந்தார்கள். அவர்கள் பேதுருவையும் யோவானையும் பிடித்து, மாலை நேரமாய் இருந்ததால் அவர்களை மறுநாள் வரைக்கும் சிறையில் போட்டார்கள். ஆனால், வசனத்தைக் கேட்ட பலர் விசுவாசித்தார்கள். விசுவாசித்த ஆண்களின் எண்ணிக்கை ஏறக்குறைய ஐயாயிரமாயிருந்தது. மறுநாளிலே ஆளுநர்களும், யூதரின் தலைவர்களும், மோசேயின் சட்ட ஆசிரியர்களும் எருசலேமில் சந்தித்தார்கள். பிரதான ஆசாரியனாகிய அன்னாவும் அங்கே இருந்தான். காய்பா, யோவான், அலெக்சாந்தர் ஆகியோருடன் பிரதான ஆசாரியனின் குடும்பத்தைச் சேர்ந்த இன்னும் பலரும் அங்கே இருந்தார்கள். அவர்கள் பேதுருவையும் யோவானையும் தங்களுக்குமுன் கொண்டுவரும்படிச்செய்து, அவர்களிடம் கேள்வி கேட்கத் தொடங்கினார்கள்: “எந்த வல்லமையினால் அல்லது எந்தப் பெயரினால் நீங்கள் இதைச் செய்தீர்கள்?” என்றார்கள். அப்பொழுது பேதுரு பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டு, அவர்களிடம்: “ஆளுநர்களே, யூதரின் தலைவர்களே, ஒரு முடவனுக்குக் காண்பிக்கப்பட்ட ஒரு அனுதாபச் செயலுக்கு நாங்கள் இன்று காரணம் காட்டவேண்டுமென்றும், அவன் எப்படி சுகமானானென்றும் நாங்கள் விசாரிக்கப்படுகிறோம் என்றால், நீங்களும் எல்லா இஸ்ரயேல் மக்களும் அறியவேண்டியது இதுவே: நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் பெயரால், இந்த மனிதன் உங்களுக்கு முன்பாக சுகமடைந்தவனாய் நிற்கிறான். அந்த இயேசுவையே நீங்கள் சிலுவையில் அறைந்தீர்கள், ஆனால் இறைவனோ இறந்த அவரை உயிருடன் எழுப்பினார். அந்த இயேசுவே, “ ‘கட்டிடம் கட்டுகிறவர்களாகிய நீங்கள் புறக்கணித்த கல், அவரே இன்று மூலைக்குத் தலைக்கல்லானவர்.’ இயேசு அல்லாமல், வேறு எவரிலும் இரட்சிப்பு இல்லை. ஏனெனில் நாம் இரட்சிக்கப்படும்படிக்கு, வானத்தின்கீழ், மனிதரிடையே அவருடைய பெயரின்றி வேறு எந்தப் பெயரும் கொடுக்கப்படவில்லை” என்றான். பேதுரு, யோவான் ஆகிய இருவருடைய துணிச்சலையும், இவர்கள் கல்வியறிவு இல்லாத சாதாரண மனிதர் என்பதையும் தெரிந்துகொண்டபோது, அவர்கள் மலைத்துப்போனார்கள். இவர்கள் இயேசுவோடுகூட இருந்தவர்கள் என்பதை அவர்கள் உணர்ந்துகொண்டார்கள். சுகமடைந்த மனிதன் இவர்கள் முன்பு நின்றுகொண்டிருந்ததை அவர்கள் கண்டார்கள். அதனால் அவர்களால் எதுவும் சொல்ல முடியவில்லை. எனவே, ஆலோசனைச் சங்கத்திலிருந்து இவர்களை வெளியே போகும்படி உத்தரவிட்டபின், அவர்கள் இந்த விஷயத்தைக்குறித்து ஒருவரோடொருவர் கலந்து பேசினார்கள்: “நாம் இவர்களுக்கு என்ன செய்யலாம்? ஏனென்றால், குறிப்பிடத்தக்க ஒரு பெரிய அடையாளத்தை இவர்கள் செய்துள்ளார்கள் என்பது, எருசலேமில் வாழ்கிற அனைவருக்கும் தெரியும்; இதை நாமும் மறுக்க முடியாது. ஆனால், இது தொடர்ந்து மக்களிடையே பரவாதபடி தடைசெய்வதற்கு, ‘இந்தப் பெயரிலே அவர்கள் இனிமேல் யாருடனும் பேசக்கூடாது’ என்று, நாம் அவர்களை எச்சரிக்க வேண்டும்” என்று சொல்லிக்கொண்டார்கள். எனவே அவர்கள் மீண்டும் பேதுருவையும், யோவானையும் உள்ளே கூப்பிட்டு, “இயேசுவின் பெயரால் எதையும் பேசவோ, போதிக்கவோ கூடாது” என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள். ஆனால் பேதுருவும் யோவானும் அவர்களிடம், “நாங்கள் இறைவனுக்குக் கீழ்ப்படிவதைப் பார்க்கிலும், உங்களுக்குக் கீழ்ப்படிவது இறைவனுடைய பார்வையில் சரியானதோ என்று? நீங்களே நிதானித்துப் பாருங்கள். நாங்கள் கண்டவற்றையும் கேட்டவற்றையும் பேசாமல் இருக்க எங்களால் முடியாது” என்றார்கள். அவர்கள் மீண்டும் பேதுருவையும் யோவானையும் பயமுறுத்தியபின், அனுப்பிவிட்டார்கள். எல்லா மக்களும் நடந்த அற்புதத்திற்காக இறைவனைத் துதித்துக்கொண்டிருந்தபடியால், இவர்களை எப்படிக் கண்டிப்பது என்று அவர்களால் தீர்மானிக்க முடியவில்லை. ஏனெனில், அற்புதமாய் சுகமடைந்தவன் நாற்பது வயதுக்கு மேற்பட்டவனாயிருந்தான். பேதுருவும் யோவானும் விடுதலை செய்யப்பட்டதும், தங்களைச் சேர்ந்த மக்களிடம் திரும்பிப்போய், ஆசாரியர்களும், யூதரின் தலைவர்களும் தங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் அவர்களுக்குச் சொன்னார்கள். அவர்கள் இதைக் கேட்டதும், ஒன்றாக சத்தமிட்டு இறைவனிடம் மன்றாடினார்கள். அவர்கள், “எல்லாம் வல்ல கர்த்தாவே, நீரே வானத்தையும், பூமியையும், கடலையும், அவற்றிலுள்ள எல்லாவற்றையும் படைத்தீர். நீர் பரிசுத்த ஆவியானவரால் உமது ஊழியனும், எங்கள் தந்தையுமான தாவீதின் வாயினால் பேசியதாவது: “ ‘நாடுகள் ஏன் கொதித்து எழும்புகின்றன? மக்கள் ஏன் வீணாய் சூழ்ச்சி செய்கின்றார்கள்? பூமியின் அரசர்கள் எதிர்த்து நிற்கிறார்கள். ஆளுநர்களும் கர்த்தருக்கு விரோதமாகவும், அவரால் அபிஷேகம் பண்ணப்பட்டவருக்கு விரோதமாகவும் ஒன்றுகூடுகிறார்கள்.’ நீர் அபிஷேகம் செய்த உமது பரிசுத்த ஊழியரான இயேசுவுக்கு எதிராய் சூழ்ச்சி செய்வதற்கென, இந்த நகரத்தில் ஏரோதுவும் பொந்தியு பிலாத்துவும் ஒன்றுகூடினார்கள். அவர்கள் யூதரல்லாத மக்களுடனும் இஸ்ரயேல் மக்களுடனும் ஒன்றுசேர்ந்தார்களே. என்ன நடக்கவேண்டும் என்று முன்னதாகவே உம்முடைய வல்லமையும் திட்டமும் தீர்மானித்ததையே அவர்கள் செய்தார்கள்.
அப்போஸ்தலர் 4:1-28 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
பேதுருவும் யோவானும் மக்களுடனே பேசிக்கொண்டிருக்கும்போது, ஆசாரியர்களும் தேவாலயத்துப் படைத்தலைவனும் சதுசேயர்களும் அவர்களிடத்தில் வந்து, அவர்கள் மக்களுக்கு போதிக்கிறதினாலும், இயேசுவை முன்வைத்து, மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுதலைப் பிரசங்கிக்கிறதினாலும், கோபமடைந்து, அவர்களைப் பிடித்து, மாலைநேரமாக இருந்தபடியினால், மறுநாள்வரை காவலில் வைத்தார்கள். வசனத்தைக் கேட்டவர்களில் அநேகர் விசுவாசித்தார்கள்; அவர்களுடைய தொகை ஏறக்குறைய ஐயாயிரமாக இருந்தது. மறுநாளிலே மக்களுடைய அதிகாரிகளும் மூப்பர்களும் வேதபண்டிதர்களும், பிரதான ஆசாரியனாகிய அன்னாவும், காய்பாவும், யோவானும், அலெக்சந்தரும், பிரதான ஆசாரியனுடைய குடும்பத்தார் அனைவரும் எருசலேமிலே கூடிவந்து, அவர்களை நடுவே நிறுத்தி: நீங்கள் எந்த வல்லமையினாலே, எந்த நாமத்தினாலே, இதைச் செய்தீர்கள் என்று கேட்டார்கள். அப்பொழுது பேதுரு பரிசுத்த ஆவியானவராலே நிறைந்து, அவர்களை நோக்கி: மக்களின் அதிகாரிகளே, இஸ்ரவேலின் மூப்பர்களே, வியாதியாக இருந்த இந்த மனிதனுக்குச் செய்யப்பட்ட உபகாரத்தைக்குறித்து எதினாலே இவன் சுகமானான் என்று நீங்கள் இன்று எங்களிடம் விசாரித்துக்கேட்டால், உங்களால் சிலுவையில் அறையப்பட்டவரும், தேவனால் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பப்பட்டவருமாக இருக்கிற நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலேயே இவன் உங்களுக்கு முன்பாகச் சுகமாக்கப்பட்டவனாக நிற்கிறானென்று உங்களெல்லோருக்கும், இஸ்ரவேல் மக்களெல்லோருக்கும் தெரிந்திருக்கக்கடவது. வீடுகட்டுகிறவர்களாகிய உங்களால் அற்பமாக நினைக்கப்பட்ட அவரே அஸ்திபாரத்திற்கு முதற்கல்லானவர். அவரைத்தவிர வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனிதர்களுக்குள்ளே அவருடைய நாமம்தவிர வேறொரு நாமம் கொடுக்கப்படவுமில்லை என்றான். பேதுருவும் யோவானும் பேசுகிற தைரியத்தை அவர்கள் கண்டு, அவர்கள் படிப்பறியாதவர்களென்றும் பேதைகளென்றும் அறிந்து ஆச்சரியப்பட்டு, அவர்கள் இயேசுவோடுகூட இருந்தவர்களென்றும் தெரிந்துகொண்டார்கள். சுகமாக்கப்பட்ட மனிதன் அவர்கள் அருகே நிற்கிறதைக் கண்டபடியால், எதிர்த்துபேச அவர்களுக்கு முடியாமற்போனது. அப்பொழுது அவர்களை ஆலோசனைச் சங்கத்தைவிட்டு வெளியே போகும்படி கட்டளையிட்டு, தங்களுக்குள்ளே யோசனைபண்ணிக்கொண்டு: இந்த மனிதர்களை நாம் என்ன செய்யலாம்? எருசலேமில் வசிக்கின்ற எல்லோருக்கும் தெரிந்திருக்கிறபடி வெளிப்படையான அற்புதம் இவர்களால் செய்யப்பட்டதே, அதை நாம் இல்லையென்று சொல்லக்கூடாது. ஆனாலும் இது அதிகமாக மக்களுக்குள்ளே பரவாதபடிக்கு, இதுமுதல் ஒருவரோடும் இந்த நாமத்தைக்குறித்துப் பேசக்கூடாதென்று, அவர்களை உறுதியாக எச்சரிக்கவேண்டும் என்று சொல்லிக்கொண்டு, அவர்களை அழைத்து: இயேசுவின் நாமத்தைக்குறித்து எதையும் பேசவும், போதிக்கவும் கூடாதென்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள். பேதுருவும் யோவானும் அவர்களை நோக்கி: தேவனுக்குச் செவிகொடுக்கிறதைவிட உங்களுக்குச் செவிகொடுக்கிறது தேவனுக்குமுன்பாக நியாயமாக இருக்குமோ என்று நீங்களே யோசித்துப்பாருங்கள். நாங்கள் கண்டவைகளையும் கேட்டவைகளையும் பேசாமலிருக்கக்கூடாதே என்றார்கள். நடந்த சம்பவங்களைக்குறித்து எல்லோரும் தேவனை மகிமைப்படுத்தினபடியால், மக்களுக்குப் பயந்து அவர்களைத் தண்டிக்க வழியொன்றும் இல்லாமல், அவர்களைப் பயமுறுத்தி விட்டுவிட்டார்கள். அற்புதமாகச் சுகமாக்கப்பட்ட மனிதன் நாற்பது வயதுக்கு மேற்பட்டவனாக இருந்தான். அவர்கள் விடுதலையாக்கப்பட்டப்பின்பு, தங்களைச் சேர்ந்தவர்களிடத்தில் வந்து, பிரதான ஆசாரியர்களும் மூப்பர்களும் தங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் அறிவித்தார்கள். அவர்கள் அதைக்கேட்டு, ஒருமனப்பட்டு தேவனை நோக்கிச் சத்தமிட்டு: கர்த்தாவே, நீர் வானத்தையும் பூமியையும் கடலையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கின தேவனாக இருக்கிறீர். யூதரல்லாதோர் கோபமடைந்து, மக்கள் வீணான காரியங்களைச் சிந்திப்பது ஏன் என்றும், கர்த்தருக்கு விரோதமாகவும் அவருடைய கிறிஸ்துவுக்கு விரோதமாகவும் பூமியின் ராஜாக்கள் எழும்பிநின்று, அதிகாரிகள் ஒன்றுகூடினார்கள் என்றும் தேவரீர் உம்முடைய அடியானாகிய தாவீதின் வாக்கினால் உரைத்தீரே. அந்தப்படி உம்முடைய கரமும் உம்முடைய ஆலோசனையும் முன்குறித்தவைகள் யாவையும் செய்யும்படி, ஏரோதும் பொந்தியுபிலாத்தும், யூதரல்லாதாரோடும் இஸ்ரவேல் மக்களோடுகூட, நீர் அபிஷேகம்பண்ணின உம்முடைய பரிசுத்த பிள்ளையாகிய இயேசுவிற்கு விரோதமாக, மெய்யாகவே கூட்டம் கூடினார்கள்.
அப்போஸ்தலர் 4:1-28 பரிசுத்த பைபிள் (TAERV)
பேதுருவும், யோவானும் மக்களிடம் பேசிக்கொண்டிருக்கும்போது சில மனிதர்கள் அவர்களிடம் வந்தார்கள். யூத ஆசாரியர்களும், ஆலயத்தைப் பாதுகாக்கும் வீரர்களுக்குத் தலைவனும், சில சதுசேயரும் அவர்களோடு வந்திருந்தனர். பேதுருவும், யோவானும் மக்களிடம் போதித்தவற்றைக் குறித்து அவர்கள் அதிருப்தி அடைந்திருந்தனர். அப்போஸ்தலர்கள் இயேசுவைக் குறித்து மக்களுக்குக் கூறும்போது, மக்கள் மரணத்திலிருந்து இயேசுவின் வல்லமையால் உயிர்த்தெழுவார் என்பதையும் போதித்தார்கள். யூதத் தலைவர்கள் பேதுருவையும் யோவானையும் பிடித்துச் சிறையில் அடைத்தனர். அது ஏற்கெனவே இரவு நேரமாயிருந்தது. எனவே அடுத்த நாள்வரைக்கும் பேதுருவையும் யோவானையும் சிறையில் வைத்திருந்தார்கள். ஆனால் பேதுருவும் யோவானும் செய்த போதனைகளைக் கேட்ட மக்களில் பலரும் அவர்கள் கூறியவற்றை விசுவாசித்தனர். அவர்களின் எண்ணிக்கை சுமார் ஐயாயிரம் பேராக இருந்தது. மறுநாள் யூதத் தலைவர்களும், அதிகாரிகளும், வேதபாரகரும் எருசலேமில் சந்தித்தனர். அன்னா, காய்பா, யோவான், அலெக்சாந்தர் ஆகியோரும் அங்கிருந்தனர். தலைமை ஆசாரியனின் குடும்பத்தினர் அனைவரும் அங்கிருந்தனர். எல்லா ஜனங்களுக்கும் முன்பாகப் பேதுருவையும் யோவானையும் அவர்கள் நிறுத்தினர். யூத அதிகாரிகள் பல முறை அவர்களிடம், “ஊனமுற்ற இந்த மனிதனை எவ்வாறு குணப்படுத்தினீர்கள்? எந்த வல்லமையைப் பயன்படுத்தினீர்கள்? யாருடைய அதிகாரத்தினால் நீங்கள் இதைச் செய்தீர்கள்?” என்று கேட்டார்கள். அப்போது பேதுரு பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டான். அவன் அவர்களை நோக்கி, “மக்களின் அதிகாரிகளே, முதிய தலைவர்களே, ஊனமுற்ற மனிதனுக்கு ஏற்பட்ட நல்ல காரியத்தைக் குறித்து எங்களை வினவுகிறீர்களா? அவனைக் குணப்படுத்தியது யார் என்று எங்களை வினவுகிறீர்களா? நீங்கள் யாவரும், யூத மக்கள் அனைவரும், இம்மனிதன் நாசரேத்தைச் சேர்ந்த இயேசு கிறிஸ்துவின் வல்லமையால் குணம் ஆக்கப்பட்டான் என்பதை அறிந்துகொள்ள வேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம். நீங்கள் இயேசுவைச் சிலுவையில் அறைந்தீர்கள். தேவன் அவரை மரணத்திலிருந்து எழுப்பினார். இந்த மனிதன் ஊனமுற்றவனாயிருந்தான். ஆனால் இப்போது இயேசுவின் வல்லமையால் குணம் பெற்று உங்களுக்கு முன்பாக எழுந்து நிற்கிறான். “‘கட்டிடம் கட்டுபவர்களாகிய நீங்கள் இயேசுவை முக்கியமற்ற கல்லைப் போன்று கருதினீர்கள். ஆனால் இந்தக் கல்லோ மூலைக்கல்லாயிற்று.’ மக்களை இரட்சிக்கக் கூடியவர் இயேசு ஒருவரே. உலகத்தில் மக்களை இரட்சிக்கும் வல்லமையுடன் தரப்பட்ட நாமம் இயேசுவினுடையது மட்டுமே. இயேசுவின் மூலமாகவே நாம் இரட்சிக்கப்படவேண்டும்!” என்றான். பேதுருவும் யோவானும் வேறு சிறப்பான பயிற்சியோ கல்வியோ பெறவில்லை என்பதை யூதத் தலைவர்கள் புரிந்துகொண்டனர். பேதுருவும் யோவானும் பேசுவதற்கு அஞ்சவில்லை என்பதையும் அவர்கள் கண்டனர். அதனால் அதிகாரிகள் வியப்புற்றனர். பேதுருவும் யோவானும் இயேசுவுடன் இருந்தவர்கள் என்பதை உணர்ந்தனர். இரண்டு அப்போஸ்தலர்களுடன் ஊனமாயிருந்த அந்த மனிதன் நின்று கொண்டிருப்பதை அவர்கள் கண்டனர். அம்மனிதன் குணமடைந்திருப்பதை அவர்கள் கண்டனர். எனவே அப்போஸ்தலருக்கு எதிராக அவர்களால் எதையும் சொல்ல முடியவில்லை. அக்கூட்டத்திலிருந்து போகுமாறு யூதத் தலைவர்கள் அவர்களுக்குக் கூறினர். அதன் பின்பு தாங்கள் செய்ய வேண்டியது என்னவென்று யூதத் தலைவர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டனர். அவர்கள், “இம்மனிதர்களை நாம் என்ன செய்வோம்? அவர்கள் பேரதிசயம் ஒன்றைச் செய்துள்ளார்கள் என்பதை எருசலேமின் ஒவ்வொரு மனிதனும் அறிவான். இது தெளிவு. இது உண்மையல்லவென்று நம்மால் சொல்ல முடியாது. ஆனால் இம்மனிதனைக் குறித்து இவர்கள் மக்களுக்குச் சொல்வதற்கு அஞ்சும்படி செய்யவேண்டும். அப்போது மக்களிடம் இச்செய்தி மேலும் பரவாது” என்றனர். எனவே யூதத் தலைவர்கள் பேதுருவையும் யோவானையும் மீண்டும் உள்ளே அழைத்தனர். இயேசுவின் பெயரில் எதையும் கூறாதபடியும் போதிக்காதபடியும் அவர்கள் அப்போஸ்தலர்களுக்குக் கூறினர். ஆனால் பேதுருவும் யோவானும் அவர்களுக்குப் பதிலாக, “நீங்கள் எதைச் சரியென்று நினைக்கிறீர்கள்? தேவன் எதை விரும்புவார்? நாங்கள் கீழ்ப்படியவேண்டுவது உங்களுக்கா அல்லது தேவனுக்கா? நாங்கள் அமைதியாக இருக்க முடியாது. நாங்கள் பார்த்தவற்றையும் கேட்டவற்றையும் மக்களுக்குக் கண்டிப்பாகக் கூற வேண்டும்” என்றார்கள். நடந்ததற்காக எல்லா மக்களும் தேவனை வாழ்த்திக்கொண்டிருந்தபடியால் யூதத் தலைவர்கள் அப்போஸ்தலரைத் தண்டிப்பதற்கு ஒரு வழியும் காண முடியவில்லை. (இந்த அதிசயம் தேவனிடமிருந்து வந்த ஒரு சான்று. குணமாக்கப்பட்ட மனிதன் நாற்பது வயதிற்கும் மேற்பட்டவனாயிருந்தான்!) எனவே யூத அதிகாரிகள் மீண்டும் அப்போஸ்தலரை எச்சரித்து விடுவித்தனர். பேதுருவும் யோவானும் யூதத் தலைவர்களின் கூட்டத்தை விட்டு நீங்கி, அவர்களது குழுவிற்குச் சென்றனர். முக்கிய ஆசாரியரும், முதிய யூத அதிகாரிகளும் அவர்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் அவர்கள் தங்கள், குழுவினருக்குக் கூறினர். விசுவாசிகள் இதனைக் கேட்டபோது, அவர்கள் ஒரே மனதுடன் தேவனிடம் பிரார்த்தனை செய்தனர். அவர்கள் எல்லோரும் ஒரே விதமாக உணர்ந்தனர். அவர்கள், “கர்த்தாவே, வானத்தையும், பூமியையும், கடலையும், உலகத்திலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கியவர் நீர் ஒருவரே. எங்களது தந்தையாகிய தாவீது உம் ஊழியனாக இருந்தான். பரிசுத்த ஆவியின் உதவியால் அவன் கீழ்வரும் வார்த்தைகளை எழுதினான். “‘தேசங்கள் ஏன் கூக்குரல் எழுப்புகின்றன? ஏன் உலக மக்கள் தேவனுக்கெதிராகத் திட்டமிடுகின்றனர்? அவர்கள் செய்வது வீணானது. “‘பூமியின் ராஜாக்கள் போருக்குத் தயாராகின்றனர். தலைவர்கள் அனைவரும் தேவனுக்கும் அவருடைய கிறிஸ்துவிற்கும் எதிராக ஒருமித்துக் கூடுகின்றனர்.’ ஏரோதும் பொந்தியு பிலாத்துவும் தேசங்களும், எல்லா யூத ஜனங்களும் சேர்ந்து எருசலேமில் இயேசுவுக்கு எதிராகக் கூடினபோது இவை அனைத்தும் உண்மையாகவே நிகழ்ந்தன. இயேசு உமது தூய ஊழியர். அவரே கிறிஸ்துவாகும்படி நீர் உண்டாக்கியவர். கூடி வந்த இந்த மக்கள் உம் திட்டம் நிறைவேறும்படி இயேசுவுக்கு எதிராகச் செயல்பட்டனர். உம் வல்லமையின்படியும், சித்தத்தின்படியும் அது நிகழ்ந்தது.
அப்போஸ்தலர் 4:1-28 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
அவர்கள் ஜனங்களுடனே பேசிக்கொண்டிருக்கையில், ஆசாரியர்களும் தேவாலயத்துச் சேனைத்தலைவனும் சதுசேயரும் அவர்களிடத்தில் வந்து, அவர்கள் ஜனங்களுக்கு உபதேசிக்கிறதினாலும், இயேசுவை முன்னிட்டு, மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுதலைப் பிரசங்கிக்கிறதினாலும், சினங்கொண்டு, அவர்களைப் பிடித்து, சாயங்காலமாயிருந்தபடியினால், மறுநாள்வரைக்கும் காவலில் வைத்தார்கள். வசனத்தைக் கேட்டவர்களில் அநேகர் விசுவாசித்தார்கள்; அவர்கள் தொகை ஏறக்குறைய ஐயாயிரமாயிருந்தது. மறுநாளிலே ஜனங்களுடைய அதிகாரிகளும் மூப்பரும் வேதபாரகரும், பிரதான ஆசாரியனாகிய அன்னாவும், காய்பாவும், யோவானும், அலெக்சந்தரும், பிரதான ஆசாரியருடைய குடும்பத்தார் யாவரும் எருசலேமிலே கூட்டங்கூடி, அவர்களை நடுவே நிறுத்தி: நீங்கள் எந்த வல்லமையினாலே, எந்த நாமத்தினாலே, இதைச் செய்தீர்கள் என்று கேட்டார்கள். அப்பொழுது பேதுரு பரிசுத்த ஆவியினாலே நிறைந்து, அவர்களை நோக்கி: ஜனத்தின் அதிகாரிகளே, இஸ்ரவேலின் மூப்பர்களே; பிணியாளியாயிருந்த இந்த மனுஷனுக்குச் செய்யப்பட்ட உபகாரத்தைக் குறித்து எதினாலே இவன் ஆரோக்கியமானானென்று நீங்கள் இன்று எங்களிடத்தில் விசாரித்துக்கேட்டால், உங்களால் சிலுவையில் அறையப்பட்டவரும், தேவனால் மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டவருமாயிருக்கிற நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலேயே இவன் உங்களுக்கு முன்பாகச் சொஸ்தமாய் நிற்கிறானென்று உங்களெல்லாருக்கும், இஸ்ரவேல் ஜனங்களெல்லாருக்கும் தெரிந்திருக்கக்கடவது. வீடுகட்டுகிறவர்களாகிய உங்களால் அற்பமாய் எண்ணப்பட்ட அவரே மூலைக்குத் தலைக்கல்லானவர். அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான். பேதுருவும் யோவானும் பேசுகிற தைரியத்தை அவர்கள் கண்டு, அவர்கள் படிப்பறியாதவர்களென்றும் பேதைமையுள்ளவர்களென்றும் அறிந்தபடியினால் ஆச்சரியப்பட்டு, அவர்கள் இயேசுவுடனேகூட இருந்தவர்களென்றும் அறிந்துகொண்டார்கள். சொஸ்தமாக்கப்பட்ட மனுஷன் அவர்கள் அருகே நிற்கிறதைக் கண்டபடியால், எதிர்பேச அவர்களுக்கு இடமில்லாதிருந்தது. அப்பொழுது அவர்களை ஆலோசனைச் சங்கத்தைவிட்டு வெளியே போகும்படி கட்டளையிட்டு, தங்களுக்குள்ளே யோசனைபண்ணிக்கொண்டு: இந்த மனுஷரை நாம் என்ன செய்யலாம்? எருசலேமில் வாசம்பண்ணுகிற எல்லாருக்கும் தெரிந்திருக்கிறபடி வெளியரங்கமான அற்புதம் இவர்களால் செய்யப்பட்டதே, அதை நாம் இல்லையென்று சொல்லக்கூடாது. ஆகிலும் இது அதிகமாய் ஜனத்துக்குள்ளே பரம்பாதபடிக்கு, இதுமுதல் ஒருவரோடும் இந்த நாமத்தைக்குறித்துப் பேசக்கூடாதென்று, அவர்களை உறுதியாய்ப் பயமுறுத்தவேண்டுமென்று சொல்லிக்கொண்டு, அவர்களை அழைத்து: இயேசுவின் நாமத்தைக்குறித்து எவ்வளவும் பேசவும் போதிக்கவும் கூடாதென்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள். பேதுருவும் யோவானும் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: தேவனுக்குச் செவிகொடுக்கிறதைப்பார்க்கிலும் உங்களுக்குச் செவிகொடுக்கிறது தேவனுக்கு முன்பாக நியாயமாயிருக்குமோ என்று நீங்களே நிதானித்துப்பாருங்கள். நாங்கள் கண்டவைகளையும் கேட்டவைகளையும் பேசாமலிருக்கக்கூடாதே என்றார்கள். நடந்த சங்கதிகளைக்குறித்து எல்லாரும் தேவனை மகிமைப்படுத்தினபடியால், ஜனங்களுக்குப் பயந்து அவர்களைத் தண்டிக்க வகையொன்றுங்காணாமல், அவர்களைப் பயமுறுத்தி விட்டுவிட்டார்கள். அற்புதமாய்ச் சொஸ்தமாக்கப்பட்ட மனுஷன் நாற்பது வயதுக்கு மேற்பட்டவனாயிருந்தான். அவர்கள் விடுதலையாக்கப்பட்ட பின்பு, தங்களைச் சேர்ந்தவர்களிடத்தில் வந்து, பிரதான ஆசாரியர்களும் மூப்பர்களும் தங்களுக்குச் சொன்ன யாவையும் அறிவித்தார்கள். அவர்கள் அதைக் கேட்டு, ஒருமனப்பட்டு தேவனை நோக்கிச் சத்தமிட்டு: கர்த்தாவே, நீர் வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின தேவனாயிருக்கிறீர். புறஜாதிகள் கொந்தளித்து, ஜனங்கள் விருதா காரியங்களைச் சிந்திப்பானேன் என்றும், கர்த்தருக்கு விரோதமாகவும் அவருடைய கிறிஸ்துவுக்கு விரோதமாகவும் பூமியின் ராஜாக்கள் எழும்பி நின்று, அதிகாரிகள் ஏகமாய்க் கூட்டங்கூடினார்கள் என்றும் தேவரீர் உம்முடைய தாசனாகிய தாவீதின் வாக்கினால் உரைத்தீரே. அந்தப்படி உம்முடைய கரமும் உம்முடைய ஆலோசனையும் முன்குறித்தவைகள் யாவையும் செய்யும்படி, ஏரோதும் பொந்தியுபிலாத்தும், புறஜாதிகளோடும் இஸ்ரவேல் ஜனங்களோடுங்கூட, நீர் அபிஷேகம்பண்ணின உம்முடைய பரிசுத்த பிள்ளையாகிய இயேசுவுக்கு விரோதமாய், மெய்யாகவே கூட்டங்கூடினார்கள்.