அப்போஸ்தலர் 28:17-31

அப்போஸ்தலர் 28:17-31 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

மூன்று நாட்களுக்குபின், அவன் யூதர்களின் தலைவர்களை ஒன்றாக அழைத்தான். அவர்கள் ஒன்றுகூடி வந்தபோது, பவுல் அவர்களைப் பார்த்துச் சொன்னதாவது: “என் சகோதரரே, நம்முடைய மக்களுக்கு விரோதமாகவோ, நம்முடைய முன்னோர்களின் முறைமைகளுக்கு விரோதமாகவோ, எதையுமே நான் செய்யவில்லை. ஆனால் நான் எருசலேமிலே கைது செய்யப்பட்டு, ரோமரிடத்தில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறேன். அவர்கள் என்னை விசாரணை செய்து, மரணதண்டனையை பெறக்கூடிய குற்றம் எதையும் நான் செய்யாததனால், என்னை விடுவிக்க விரும்பினார்கள். ஆனால் யூதர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தபோது, நான் ரோமப் பேரரசன் சீசருக்கு மேல்முறையீடு செய்யும்படி கேட்க நேர்ந்தது. ஆனால், என்னுடைய மக்களுக்கு விரோதமான குற்றச்சாட்டு எதுவும் என்னிடத்தில் இருந்ததில்லை. இதனாலேயே நான் உங்களைக் கண்டு, உங்களிடம் பேசவேண்டுமென்று கேட்டுக்கொண்டேன். இஸ்ரயேலர் எதிர்பார்த்திருந்தவரின் காரணமாகவே நான் இந்தச் சங்கிலிகளால் கட்டப்பட்டிருக்கிறேன்” என்றான். அதற்கு அவர்கள், “உன்னைக்குறித்து யூதேயாவிலிருந்து கடிதங்கள் எதுவும் எங்களுக்கு வரவில்லை. அங்கிருந்து வந்த சகோதரர்களில், யாரும் உன்னைக் குறித்துத் தீமையான எதையும் அறிவிக்கவோ, சொல்லவோ இல்லை. ஆனால், உன்னுடைய கருத்துக்களை நாங்கள் கேட்க விரும்புகிறோம். ஏனெனில், எல்லா இடங்களிலும் உள்ள மக்கள், இந்தப் பிரிவினை மார்க்கத்திற்கு விரோதமாக பேசுகிறதை நாங்கள் அறிந்திருக்கிறோம்” என்றார்கள். அவர்கள் பவுலைச் சந்திக்க ஒருநாளை நியமித்து, பவுல் தங்கியிருந்த இடத்துக்குப் பெருங்கூட்டமாக வந்தார்கள். அவன் காலையிலிருந்து மாலைவரை, இறைவனுடைய அரசைக் குறித்து விவரமாய் அவர்களுக்கு அறிவித்தான். மோசேயினுடைய சட்டத்திலிருந்தும், இறைவாக்கினரின் புத்தகங்களிலிருந்தும் இயேசுவைப்பற்றி எடுத்துக் காண்பித்து, அவர்களை நம்பவைக்க முயற்சித்தான். சிலர் அவன் சொன்னதைச் சம்மதித்தார்கள், ஆனால் மற்றவர்களோ அதை விசுவாசிக்கவில்லை. அவர்கள் தங்களுக்குள்ளேயே மனவேற்றுமைக் கொண்டவர்களாய் இருந்தார்கள். அவர்கள் அவ்விடத்தைவிட்டுப் போவதற்குமுன், பவுல் அவர்களைப் பார்த்து இறுதியாகச் சொன்னதாவது: “பரிசுத்த ஆவியானவர் இறைவாக்கினன் ஏசாயாவின் மூலமாய் பேசியபொழுது, உங்கள் முற்பிதாக்களுடன் இதைப் பொருத்தமாகத்தான் பேசியுள்ளார்: “ ‘இந்த மக்களிடத்தில் போய், “நீங்கள் எப்பொழுதும் கேட்டுக்கொண்டே இருப்பீர்கள், ஆனால் ஒருபோதும் உணரமாட்டீர்கள்; நீங்கள் எப்பொழுதும் காண்பீர்கள், ஆனால் ஒருபோதும் அறிந்துகொள்ளமாட்டீர்கள் என்று சொல்.” ஏனெனில் இந்த மக்களுடைய இருதயம் மரத்துப்போய் இருக்கிறது; அவர்கள் தங்கள் காதுகளால் மிக அரிதாகவே கேட்கிறார்கள், தங்களுடைய கண்களையும் மூடிக்கொண்டு இருக்கிறார்கள். ஆகையால், அவர்கள் தங்கள் கண்களால் காணாமலும், தங்கள் காதுகளால் கேட்காமலும், தங்கள் இருதயங்களினால் உணர்ந்து, மனம் மாறாமலும் இருக்கிறார்கள்; நானும் அவர்களைக் குணமாக்காமல் இருக்கிறேன்.’ “ஆகையால், இறைவனுடைய இரட்சிப்பு யூதரல்லாத மக்களுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது என்பதையும், அவர்கள் அதற்குச் செவிகொடுப்பார்கள் என்பதையும், நீங்கள் அறிந்துகொள்ளவேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்றான். பவுல் இதைச் சொல்லி முடித்ததும், யூதர்கள் மிகவும் கடுமையாக விவாதம் செய்துகொண்டு புறப்பட்டுப் போனார்கள். பவுல் இரண்டு வருடங்கள் முழுவதும், தான் வாடகைக்கு எடுத்த வீட்டிலே தங்கியிருந்து, தன்னைச் சந்திக்க வந்த எல்லோரையும் வரவேற்றான். துணிச்சலுடன் தடை எதுவுமின்றி, இறைவனுடைய அரசைக் குறித்துப் பிரசங்கித்து, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைக் குறித்துப் போதித்தான்.

அப்போஸ்தலர் 28:17-31 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

மூன்று நாட்களுக்குப்பின்பு, பவுல் யூதர்களில் முக்கியமானவர்களை வரவழைத்தான்; அவர்கள் கூடிவந்திருந்தபோது, அவன் அவர்களை நோக்கி: சகோதரர்களே, நம்முடைய மக்களுக்கும் நம்முடைய முன்னோர்களின் பழக்கங்களுக்கும் விரோதமானதொன்றையும் நான் செய்யாமலிருந்தும், கட்டப்பட்டவனாக எருசலேமிலிருந்து ரோமர்கள் கைகளில் ஒப்புக்கொடுக்கப்பட்டேன். அவர்கள் என்னை நியாயம் விசாரித்தபோது மரணத்திற்குரிய குற்றம் ஒன்றும் என்னிடத்தில் காணாதபடியினால், என்னை விடுதலையாக்க மனதாயிருந்தார்கள். யூதர்கள் அதற்கு எதிர்பேசினபோது, நான் இராயனிடத்தில் முறையிடவேண்டியதாயிருந்தது; ஆனாலும் என் மக்கள்மேல் எந்தவொரு குற்றஞ்சாட்டவேண்டுமென்று நான் அப்படிச் செய்யவில்லை. இந்தக் காரியத்தினிமித்தமே உங்களைக் காணவும் உங்களோடு பேசவும் உங்களை அழைப்பித்தேன். இஸ்ரவேலுடைய நம்பிக்கைக்காகவே இந்தச் சங்கிலியால் கட்டப்பட்டிருக்கிறேன் என்றான். அதற்கு அவர்கள்: உன்னைக்குறித்து யூதேயாவிலிருந்து எங்களுக்குக் கடிதம் ஒன்றும் வரவுமில்லை, வந்த சகோதரர்களில் ஒருவனும் உன்பேரில் ஒரு தீங்கானக் காரியத்தையும் அறிவித்ததுமில்லை, அதைப்பற்றிப் பேசினதுமில்லை. எங்கும் இந்த மதப்பிரிவிற்கு விரோதமாகப் பேசுகிறதாக நாங்கள் அறிந்திருக்கிறபடியால், இதைக்குறித்து உன்னுடைய கருத்து என்னவென்று கேட்டறிய விரும்புகிறோம் என்றார்கள். அதற்காக அவர்கள் ஒரு நாளைக்குறித்து, அந்த நாளில் அநேகம்பேர் அவன் தங்கியிருந்த வீட்டிற்கு அவனிடத்தில் வந்தார்கள். அவன் காலைதுவங்கி மாலைவரை மோசேயின் நியாயப்பிரமாணத்திலும் தீர்க்கதரிசிகளின் புத்தகங்களிலிருந்தும் இயேசுவிற்குரியவைகளை அவர்களுக்குப் போதித்து, தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துச் சாட்சிக்கொடுத்து வலியுறுத்திப் பேசினான். அவன் சொன்னவைகளைச் சிலர் ஏற்றுக்கொண்டனர், சிலர் விசுவாசிக்காமலிருந்தார்கள். இப்படி அவர்கள் ஒருவரோடொருவர் கருத்து வேறுபட்டவர்களாக, புறப்பட்டுப்போகும்போது, பவுல் அவர்களுக்குச் சொன்ன வார்த்தையாவது: நீங்கள் காதாரக்கேட்டும் உணராதிருப்பீர்கள், கண்ணாரக்கண்டும் பார்க்காதிருப்பீர்கள். இவர்கள் கண்களினால் காணாமலும், காதுகளினால் கேளாமலும், இருதயத்தினால் உணர்ந்து குணப்படாமலும், நான் இவர்களை ஆரோக்கியமாக்காமலும் இருக்கும்படிக்கு, இந்த மக்களின் இருதயம் கொழுத்திருக்கிறது; காதுகளினால் மந்தமாகக் கேட்டுத் தங்களுடைய கண்களை மூடிக்கொண்டார்கள்’ என்று இந்த மக்களினிடத்திற்குப்போய்ச் சொல்லு என்பதைப் பரிசுத்த ஆவியானவர் ஏசாயா தீர்க்கதரிசியைக்கொண்டு நம்முடைய முற்பிதாக்களுடனே நன்றாகச் சொல்லியிருக்கிறார். ஆதலால் தேவனுடைய இரட்சிப்பு யூதரல்லாதவர்களுக்கு அனுப்பப்பட்டிருக்கிறதென்றும், அவர்கள் அதற்குச் செவிகொடுப்பார்களென்றும் உங்களுக்குத் தெரிந்திருக்கக்கடவது என்றான். இப்படி அவன் சொன்னபின்பு, யூதர்கள் தங்களுக்குள்ளே மிகவும் விவாதம்பண்ணிக்கொண்டு, போய்விட்டார்கள். பின்பு பவுல் தனக்காக வாடகைக்கு வாங்கியிருந்த வீட்டிலே இரண்டு வருடங்கள் முழுதும் தங்கி, தன்னிடத்தில் வந்த அனைவரையும் ஏற்றுக்கொண்டு, மிகுந்த தைரியத்துடனே தடையில்லாமல், தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கித்து, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைப்பற்றிய சத்தியங்களை உபதேசித்துக்கொண்டிருந்தான்.

அப்போஸ்தலர் 28:17-31 பரிசுத்த பைபிள் (TAERV)

மூன்று நாளைக்குப் பின் பவுல், சில மிக முக்கியமான யூதர்களைத் தன்னிடம் வருமாறு சொல்லியனுப்பினான். அவர்கள் எல்லோரும் வந்தபோது பவுல், “எனது யூத சகோதரர்களே, நான் நமது மக்களுக்கு எதிராக எதையும் செய்யவில்லை, நம் முன்னோர்களின் மரபிற்கு எதிராகவும் எதையும் நான் செய்யவில்லை. ஆனால் என்னை எருசலேமில் சிறைப்பிடித்து ரோமரிடம் ஒப்படைத்தனர். ரோமர்கள் என்னை விசாரித்தார்கள். ஆனால் நான் கொல்லப்படுவதற்கு ஏதுவான எந்தக் காரணத்தையும் என்னிடம் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே அவர்கள் என்னை விடுதலை செய்ய விரும்பினர். ஆனால் அங்கிருந்த யூதர்கள் அதை விரும்பவில்லை. எனவே நான் என்னை இராயரிடம் வழக்காடும்படியாக ரோமுக்குக் கொண்டு வருமாறு கேட்க வேண்டியதாயிற்று. ஆனால் எனது மக்கள் தவறிழைத்தார்கள் என்று நான் குற்றம் சாட்டிக் கொண்டிருக்கவில்லை. எனவே தான் உங்களைச் சந்தித்து உங்களோடு பேச விரும்பினேன். இஸ்ரவேலரின் நம்பிக்கையை நான் கொண்டிருப்பதால் இவ்விலங்குகளால் கட்டப்பட்டிருக்கிறேன்” என்றான். யூதர்கள் பவுலுக்குப் பதிலாக, “நாங்கள் உன்னைக் குறித்து யூதேயாவிலிருந்து கடிதங்கள் எதையும் பெறவில்லை. அங்கிருந்து பயணம் செய்த எந்த யூத சகோதரரும் உன்னைக் குறித்து செய்தி கொண்டுவரவோ, உன்னைப் பற்றித் தவறாக எதையும் கூறவோ இல்லை. நாங்கள் உனது கருத்துக்களை அறிய விரும்புகிறோம். இந்தக் கூட்டத்தினருக்கு (கிறிஸ்தவர்களுக்கு) எதிராக எல்லா இடங்களின் மக்களும் பேசிக்கொண்டிருப்பதை நாங்கள் அறிவோம்” என்றனர். பவுலும் யூதரும் கூட்டத்திற்கு ஒரு நாளைத் தேர்ந்துகொண்டனர். அந்த நாளில் இன்னும் பல யூதர்கள் பவுலை அவனது வீட்டில் சந்தித்தனர். நாள் முழுவதும் பவுல் அவர்களிடம் பேசினான். தேவனுடைய இராஜ்யத்தைக் குறித்து பவுல் அவர்களுக்கு விளக்கினான். இயேசுவைக் குறித்த காரியங்களில் அவர்கள் நம்பிக்கை கொள்ளச் செய்ய முயன்றான். மோசேயின் சட்டங்களையும் தீர்க்கதரிசிகளின் எழுத்துக்களையும் இதற்குப் பயன்படுத்தினான். சில யூதர்கள் பவுல் கூறியவற்றை நம்பினார்கள். ஆனால் மற்றவர்கள் அதை நம்பவில்லை. அவர்களிடையே ஒரு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. யூதர்கள் புறப்படுவதற்குத் தயாராக இருந்தனர். ஆனால் பவுல் அவர்களுக்கு வேறொரு செய்தியையும் சொல்லியனுப்பினான்: “பரிசுத்த ஆவியானவர் ஏசாயா தீர்க்கதரிசியின் மூலமாக உங்கள் முன்னோருக்கு உண்மையைக் கூறினார். அவர், “‘இம்மக்களிடம் போய் அவர்களுக்குக் கூறு, நீங்கள் கவனிப்பீர்கள், நீங்கள் கேட்பீர்கள், ஆனால் புரிந்துகொள்ளமாட்டீர்கள். நீங்கள் காண்பீர்கள், நீங்கள் பார்ப்பீர்கள், ஆனால் நீங்கள் பார்ப்பவற்றைப் புரிந்துகொள்ளமாட்டீர்கள். ஆம், இம்மக்களின் இருதயங்கள் கடினப்பட்டுள்ளன. இம்மக்களுக்குக் காதுகள் உள்ளன. ஆனால் அவர்கள் கேட்பதில்லை. இம்மக்கள் உண்மையைக் காணவும் மறுக்கிறார்கள். இம்மக்கள் தம் கண்களால் பார்க்காமலும், தம் காதுகளால் கேளாமலும், தம் மனங்களால் புரிந்துகொள்ளாமலும் இருக்கப் போவதாலேயே இது நடந்தது. அவர்கள் குணமடைவதற்காக என்னை நோக்கித் திரும்பாமல் இருப்பதற்காகவே இது நிகழ்ந்தது’ என்றார். “தேவன் தமது இரட்சிப்பை யூதரல்லாத மக்களுக்கு அனுப்பினார் என்பதை யூதராகிய நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டுமென நினைக்கிறேன். அவர்கள் கவனிப்பார்கள்!” என்றான். அவனது வாடகை வீட்டில் பவுல் இரண்டு ஆண்டுகள் முழுவதும் தங்கியிருந்தான். அவனைச் சந்திக்கும்படியாக வந்த மக்களை வரவேற்றான். பவுல் தேவனுடைய இராஜ்யத்தைக் குறித்துப் போதித்தான். கர்த்தர் இயேசு கிறிஸ்துவைக் குறித்துக் கற்பித்தான். அவன் தைரியசாலியாக இருந்தான். அவன் பேசுவதை நிறுத்த ஒருவரும் முயற்சிக்கவில்லை.

அப்போஸ்தலர் 28:17-31 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

மூன்றுநாளைக்குப்பின்பு, பவுல் யூதரில் பிரதானமானவர்களை வரவழைத்தான்; அவர்கள் கூடிவந்திருந்தபோது, அவன் அவர்களை நோக்கி: சகோதரரே, நம்முடைய ஜனங்களுக்கும் நம்முடைய முன்னோர்களின் முறைமைகளுக்கும் விரோதமானதொன்றையும் நான் செய்யாமலிருந்தும், கட்டப்பட்டவனாக எருசலேமிலிருந்து ரோமர் கைகளில் ஒப்புக்கொடுக்கப்பட்டேன். அவர்கள் என்னை நியாயம் விசாரித்தபோது மரணத்துக்கேதுவான குற்றம் ஒன்றும் என்னிடத்தில் காணாதபடியினால், என்னை விடுதலையாக்க மனதாயிருந்தார்கள். யூதர்கள் அதற்கு எதிர்பேசினபோது, நான் இராயனுக்கு அபயமிடவேண்டியதாயிருந்தது; ஆயினும் என் ஜனத்தார்மேல் யாதொரு குற்றஞ் சாட்டவேண்டுமென்று நான் அப்படிச் செய்யவில்லை. இந்தக் காரியத்தினிமித்தமே உங்களைக் காணவும் உங்களுடனே பேசவும் உங்களை அழைப்பித்தேன். இஸ்ரவேலுடைய நம்பிக்கைக்காகவே இந்தச் சங்கிலியால் கட்டப்பட்டிருக்கிறேன் என்றான். அதற்கு அவர்கள்: உன்னைக்குறித்து யூதேயாவிலிருந்து எங்களுக்குக் காகிதம் வரவுமில்லை, வந்த சகோதரரில் ஒருவனும் உன்பேரில் ஒரு பொல்லாங்கை அறிவித்ததுமில்லை, அதைப்பற்றிப் பேசினதுமில்லை. எங்கும் இந்த மதபேதத்துக்கு விரோதமாய்ப் பேசுகிறதாக நாங்கள் அறிந்திருக்கிறபடியால், இதைக்குறித்து உன்னுடைய அபிப்பிராயம் என்னவென்று கேட்டறிய விரும்புகிறோம் என்றார்கள். அதற்காக அவர்கள் ஒரு நாளைக்குறித்து, அநேகம்பேர் அவன் தங்கியிருந்த வீட்டிற்கு அவனிடத்தில் வந்தார்கள். அவன் காலமே தொடங்கி சாயங்காலமட்டும் மோசேயின் நியாயப்பிரமாணத்திலும் தீர்க்கதரிசிகளின் ஆகமங்களிலும் இருந்து இயேசுவுக்கடுத்த விசேஷங்களை அவர்களுக்குப் போதித்து, தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்துச் சாட்சி கொடுத்து விஸ்தரித்துப் பேசினான். அவன் சொன்னவைகளைச் சிலர் விசுவாசித்தார்கள், சிலர் விசுவாசியாதிருந்தார்கள். இப்படி அவர்கள் ஒருவரோடொருவர் ஒவ்வாமலிருந்து, புறப்பட்டுப்போகையில், பவுல் அவர்களுக்குச் சொன்ன வாக்கியமாவது: நீங்கள் காதாரக்கேட்டும் உணராதிருப்பீர்கள், கண்ணாரக்கண்டும் பாராதிருப்பீர்கள். இவர்கள் கண்களினால் காணாமலும், காதுகளினால் கேளாமலும், இருதயத்தினால் உணர்ந்து குணப்படாமலும், நான் இவர்களை ஆரோக்கியமாக்காமலும் இருக்கும்படிக்கு, இந்த ஜனத்தின் இருதயம் கொழுத்திருக்கிறது; காதுகளினால் மந்தமாய்க் கேட்டுத் தங்கள் கண்களை மூடிக்கொண்டார்கள் என்று இந்த ஜனத்தினிடத்தில் போய்ச் சொல்லு என்பதைப் பரிசுத்த ஆவி ஏசாயா தீர்க்கதரிசியைக்கொண்டு நம்முடைய பிதாக்களுடனே நன்றாய்ச் சொல்லியிருக்கிறார். ஆதலால் தேவனுடைய இரட்சிப்பு புறஜாதியாருக்கு அனுப்பப்பட்டிருக்கிறதென்றும், அவர்கள் அதற்குச் செவிகொடுப்பார்களென்றும் உங்களுக்குத் தெரிந்திருக்கக்கடவது என்றான். இப்படி அவன் சொன்னபின்பு, யூதர்கள் தங்களுக்குள்ளே மிகவும் தர்க்கம் பண்ணிக்கொண்டு, போய்விட்டார்கள். பின்பு பவுல் தனக்காக வாடகைக்கு வாங்கியிருந்த வீட்டிலே இரண்டு வருஷமுழுதும் தங்கி, தன்னிடத்தில் வந்த யாவரையும் ஏற்றுக்கொண்டு, மிகுந்த தைரியத்துடனே தடையில்லாமல், தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்துப் பிரசங்கித்து, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைப்பற்றிய விசேஷங்களை உபதேசித்துக்கொண்டிருந்தான்.