அப்போஸ்தலர் 27:1-44
அப்போஸ்தலர் 27:1-44 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
நாங்கள் கப்பல் ஏறி இத்தாலியாவுக்குப் போகவேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டபோது, பவுலும் வேறுசில கைதிகளும், யூலியு என்னும் நூற்றுக்குத் தலைவனிடம் ஒப்படைக்கப்பட்டார்கள். அவன் ரோமப் பேரரசின் படைப்பிரிவைச் சேர்ந்தவன். நாங்கள் அதிரமித்தியம் ஊரிலிருந்து வந்த கப்பல் ஒன்றில் ஏறிப் புறப்பட்டோம். அது ஆசியா பகுதியின் கரையோரத்திலுள்ள துறைமுகங்களை நோக்கிப் போய்க்கொண்டிருந்தது. தெசலோனிக்கேயாவைச் சேர்ந்த மக்கெதோனியனான அரிஸ்தர்க்கு என்பவனும், எங்களுடன் இருந்தான். மறுநாள் நாங்கள் சீதோன் துறைமுகத்தில் இறங்கினோம். யூலியு, பவுலின்மேல் தயவு காண்பித்தான். அதனால் பவுல் தன் சிநேகிதர்களிடம் போய்ப் பராமரிக்கப்படவும், உதவி பெற்றுக்கொள்ளவும், அவன் அனுமதித்தான். அங்கிருந்து நாங்கள் மீண்டும் புறப்பட்டு, சீப்புரு தீவின் ஒதுக்குப் புறமாகக் கடந்துசென்றோம். ஏனெனில், காற்று எங்களுக்கு எதிராய் வீசிக்கொண்டிருந்தது. பின்பு சிலிசியா, பம்பிலியா நாடுகளின் பக்கமாயுள்ள நடுக்கடலைக் கடந்துசென்று லிசியா நாட்டிலுள்ள மீறா பட்டணத்தைச் சென்றடைந்தோம். அங்கே அந்த நூற்றுக்குத் தலைவன், இத்தாலியாவுக்கு வந்த அலெக்சந்திரியா பட்டணத்தைச் சேர்ந்த ஒரு கப்பலைக் கண்டு எங்களை அதில் ஏற்றினான். பல நாட்களாக நாங்கள் மெதுவாகப் பயணம் செய்து, சிரமத்துடனே கினீது தீவுக்கு அப்பால் வந்து சேர்ந்தோம். காற்று எங்களுக்கு எதிராய் வீசி, எங்கள் பாதையைத் தடைசெய்தபடியால், சல்மோனே முனைக்கு எதிராகப் போய், கிரேத்தாத் தீவின் ஒதுக்குப் புறமாக பயணம் செய்தோம். சிரமத்துடனே அப்பகுதியைக் கடந்து, பாதுகாப்புத் துறைமுகம் எனப்பட்ட ஒரு இடத்தைச் சென்றடைந்தோம். அது லசேய பட்டணத்தின் அருகே இருந்தது. “இந்தப் பயணத்தில் அதிககாலம் சென்றுவிட்டது. பாவநிவாரண தினமும் கடந்துவிட்டது, தொடர்ந்து கடலில் பயணம் செய்வது ஆபத்தானது” என்று பவுல் அவர்களை எச்சரித்து, “நண்பர்களே, நமது கப்பற்பயணம் ஆபத்தானதாய் இருக்கும் என்று எனக்குத் தெரிகிறது. கப்பலுக்கும் பொருட்களுக்கும் மட்டுமல்ல, நம் உயிர்களுக்கும் இழப்பு நேரிடலாம்” என்றான். ஆனால் நூற்றுக்குத் தலைவன் பவுல் சொன்னதைக் கவனத்தில் கொள்ளாமல், கப்பல் மாலுமியும் கப்பல் சொந்தக்காரனும் சொன்னதையே அவன் கேட்டான். நாங்கள் தங்கியிருந்த துறைமுகம் குளிர்க்காலத்தைக் கழிப்பதற்கு ஏற்றதாய் இராததினால், கப்பலில் இருந்த பெரும்பாலானோர், அங்கிருந்து போகத் தீர்மானித்தார்கள். எப்படியாவது பேனிக்ஸை சென்றடைந்து, அங்கே குளிர்க்காலத்தைக் கழிக்கத் தீர்மானித்தார்கள். பேனிக்ஸ் கிரேத்தா தீவிலுள்ள ஒரு துறைமுகம். இது தென்மேற்காகவும், வடமேற்காகவும் பார்த்தபடி அமைந்திருந்தது. அப்பொழுது தெற்கிலிருந்து காற்று மெதுவாய் வீசத்தொடங்கியபோது, தாங்கள் விரும்பியது நிறைவேறிவிட்டது என்று அவர்கள் நினைத்தார்கள். எனவே அவர்கள் நங்கூரத்தை ஏற்றி, கிரேத்தா தீவின் கரையோரமாகப் பயணம் செய்யத் தொடங்கினார்கள். ஆனால் சிறிது நேரத்திற்குள்ளாகவே, வடகிழக்கு கொண்டல் என்னும் பெருங்காற்று, தீவுப் பக்கத்திலிருந்து மிகப் பலமாய் வீசிற்று. கப்பல் புயலில் அகப்பட்டுக் கொண்டது. காற்றை எதிர்த்துக் கப்பலைத் திருப்ப முடியவில்லை. எனவே காற்றின் திசையிலேயே, கப்பலைச் செல்லவிட்டோம். நாங்கள் கிலவுதா எனப்பட்ட ஒரு சிறிய தீவின் ஒதுக்குப் புறமாகக் கடந்து போகையில், கப்பலில் இருந்த உயிர்காப்பு படகை சிரமத்துடன் பாதுகாத்துக் கொண்டோம். கப்பலாட்கள் அதைக் கப்பலுக்குள் தூக்கி எடுத்தார்கள். அதற்குப் பின்பு அவர்கள் கப்பல் உடையாது வைத்திருப்பதற்காகக் கப்பலையும் கயிறுகளால் இணைத்துக் கட்டினார்கள். சிர்த்திஸ் வளைகுடா பகுதியிலுள்ள சொரிமணல் திண்டுகளில் கப்பல் மோதிவிடுமோ என்று அவர்கள் பயந்து, கப்பற்பாயை இறக்கிக் காற்றின் திசையிலேயே கப்பலை அடித்துச்செல்ல போகவிட்டார்கள். நாங்கள் புயலினால் மிகவும் அடிக்கப்பட்டோம். அதனால் மறுநாளிலே, கப்பலாட்கள் கப்பலிலுள்ள பொருட்களை வெளியே எறியத் தொடங்கினார்கள். மூன்றாம் நாளிலே, அவர்கள் தங்களுடைய கைகளினாலேயே கப்பல் தளவாடங்களையும் எறிந்தார்கள். பல நாட்களாக சூரியனோ நட்சத்திரங்களோ காணப்படவில்லை. புயலும் வேகமாய் வீசிக்கொண்டிருந்தது. இதனால் நாங்கள் உயிர் தப்புவோம் என்ற எதிர்பார்ப்பும் அற்றுப்போயிற்று. பல நாட்களாக அந்த மனிதர் சாப்பாடு இல்லாமல் இருந்ததால், பவுல் அவர்கள் நடுவே எழுந்து நின்று, “நண்பர்களே, நீங்கள் எனது புத்திமதியைக் கேட்டு, கிரேத்தா தீவை விட்டுப் புறப்படாதிருந்திருக்க வேண்டும். இந்த சேதத்தையும், இழப்பையும் நீங்கள் தவிர்த்திருக்கலாம். ஆனால் இப்போது நீங்கள் மன உறுதியுடன் இருக்கும்படி நான் உங்களைக் கேட்கிறேன். ஏனெனில், உங்களிடையே ஒருவருக்கும் உயிரிழப்பு ஏற்படாது. கப்பலை மட்டுமே இழக்க நேரிடும். நேற்று இரவு என்மேல் உரிமையுள்ளவரும், என்னைத் தன் ஊழியத்தில் நியமித்தவருமான இறைவனின் ஒரு தூதன் என் அருகே வந்து நின்றான். அந்த தூதன் என்னிடம், ‘பவுலே பயப்படாதே, நீ ரோமப் பேரரசன் சீசருக்கு முன்பாக விசாரணைக்கு நிற்கவேண்டும்; உன்னுடன் பயணம் செய்கிற அனைவருடைய உயிரையும் இறைவன் தயவாய் உனக்குக் கொடுத்திருக்கிறார்’ என்றான். ஆகையால், தைரியமாயிருங்கள். இறைத்தூதன் எனக்குச் சொன்னபடியே நடக்கும் என்று நான் இறைவனிடம் விசுவாசமாயிருக்கிறேன். ஆனால், ஏதாவது ஒரு தீவுக்கரையில் நாம் தள்ளப்பட்டுப் போவோம்” என்று சொன்னான். பதினான்காம் நாள் இரவிலே, ஆதிரியா கடலில் அலைந்து கொண்டிருந்தோம். நடு இரவானபோது, கப்பலாட்கள் தாங்கள் ஒரு கரையை நெருங்கிச் சேர்வதாக உணர்ந்தார்கள். அவர்கள் கடலின் ஆழத்தைப் பார்த்தபோது, அது நூற்றிருபது அடி ஆழமாய் இருந்தது. சிறிது நேரத்திற்குப்பின், அவர்கள் மீண்டும் அளந்து பார்த்தபோது, அது தொண்ணூறடி ஆழமாய் இருந்தது. நாங்கள் பாறைகளில் மோதி விடுவோம் என்று பயந்து, அவர்கள் கப்பலின் பின்பகுதியிலிருந்து நான்கு நங்கூரங்களை வெளியே போட்டார்கள். பின்பு, பகல் வெளிச்சத்திற்காக மன்றாடினார்கள். கப்பலாட்கள் கப்பலில் இருந்து தப்பும் முயற்சியில் ஈடுபட்டு, உயிர்காப்புப் படகைக் கடலில் இறக்கினார்கள். அவர்கள் கப்பலின்முன் பகுதியிலிருந்து, நங்கூரங்களை இறக்குவது போல பாசாங்கு செய்துகொண்டே இப்படிச் செய்தார்கள். அப்பொழுது பவுல் நூற்றுக்குத் தலைவனையும், படைவீரர்களையும் பார்த்து, “இவர்கள் கப்பலில் இல்லாவிட்டால் நீங்கள் தப்பிப்பிழைக்க முடியாது” என்றான். உடனே படைவீரர்கள் உயிர்காப்புப் படகைக் கட்டியிருந்த கயிற்றைவெட்டி, அதைக் கடலில் போகவிட்டார்கள். விடியற்காலையாகும்போது, பவுல் அவர்கள் எல்லோரையும் பார்த்து, ஏதாவது உணவைச் சாப்பிடும்படி கேட்டுக்கொண்டான். அவன் அவர்களிடம், “பதினான்கு நாட்களாக நீங்கள் உணவு எதையும் சாப்பிடாமல், என்ன நடக்குமோ என்ற பயத்தோடு காத்திருக்கிறீர்கள். இப்பொழுது ஏதாவது உணவைச் சாப்பிடுங்கள் என்று, உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் உயிர்த்தப்புவதற்கு அது உதவியாயிருக்கும். உங்களில் ஒருவனுடைய தலை முடிக்கேனும் இழப்பு நேரிடாது” என்றான். இதைச் சொன்னபின், அவன் அப்பத்தை எடுத்து, அவர்கள் எல்லோருக்கும் முன்பாக இறைவனுக்கு நன்றி செலுத்தினான். பின்பு, அதைப் பிட்டுச் சாப்பிடத் தொடங்கினான். அப்பொழுது அவர்கள் அனைவரும் உற்சாகமடைந்து, அவர்களும் கொஞ்சம் உணவு சாப்பிட்டார்கள். நாங்கள் எல்லோருமாக இருநூற்று எழுபத்தாறுபேர் அந்தக் கப்பலில் இருந்தோம். அவர்கள் தங்கள் பசியாறச் சாப்பிட்டபின், கப்பலில் இருந்த கோதுமையைக் கடலில் வீசி, அதன் பாரத்தைக் குறைத்தார்கள். பொழுது விடிந்ததும், அந்தக் கரையை அவர்கள் எவ்விடமென்று அறியவில்லை. ஆனால் மணல் நிறைந்த கரையுடன், ஒரு வளைகுடா இருப்பதை அவர்கள் கண்டார்கள். முடியுமானால், கப்பலைக் கரை சேர்க்கலாமென்று அவர்கள் தீர்மானித்தார்கள். அவர்கள் நங்கூரங்களை அவிழ்த்து, அவற்றைக் கடலில் விட்டார்கள். அதேவேளையில், சுக்கான்களைக் கட்டியிருந்த கயிறுகளைத் தளர்த்திவிட்டார்கள். பின்பு கப்பலின்முன் பாயை இழுத்து காற்றின் பக்கமாய் உயர்த்தி, கடற்கரையை நோக்கி கப்பலைச் செலுத்தினார்கள். கப்பல் ஒரு மணல் திண்டில் கரை தட்டி, தரையில் தங்கியது. ஆனால் கப்பலின் முன்பகுதி, மணலில் புதைந்து அசையாது நின்றது; கப்பலின் பின்பகுதியோ, அலைகளினால் மோதப்பட்டு துண்டுதுண்டாய் உடைந்தது. கைதிகளில் யாரும் நீந்தித் தப்பிப் போகாதபடி, அவர்களைக் கொன்றுவிட படைவீரர்கள் திட்டமிட்டார்கள். ஆனால் நூற்றுக்குத் தலைவன் பவுலின் உயிரைக் காப்பாற்ற விரும்பி, அவர்கள் அவ்விதம் செய்யாதபடி அவர்களைத் தடை செய்தான். நீந்தக்கூடியவர்கள் முதலில் கப்பலில் இருந்து குதித்து கரைசேரும்படி அவன் உத்தரவிட்டான். மற்றவரை பலகைகளின் மேலும், உடைந்த கப்பல் துண்டுகளின் மேலும் ஏறிக் கரைசேரச் செய்தான். இவ்விதம், ஒவ்வொருவரும் பாதுகாப்பாய் கரைசேர்ந்தார்கள்.
அப்போஸ்தலர் 27:1-44 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
நாங்கள் இத்தாலியா தேசத்திற்குக் கப்பல் ஏறிப்போகும்படி தீர்மானிக்கப்பட்டபோது, பவுலையும் காவலில் வைக்கப்பட்டிருந்த வேறுசிலரையும் அகுஸ்து படையைச் சேர்ந்த யூலியு என்னும் பெயர்கொண்ட நூறுபேருக்கு தலைவனிடத்தில் ஒப்புவித்தார்கள். அதிரமித்தியம் ஊர்க்கப்பலில் நாங்கள் ஏறி, ஆசியா நாட்டு வழியைபிடித்துப் போகவேண்டுமென்று நினைத்துப் புறப்பட்டோம். மக்கெதோனியா தேசத்துத் தெசலோனிக்கே பட்டணத்தானாகிய அரிஸ்தர்க்கு எங்களுடனேகூட இருந்தான். மறுநாள் சீதோன் துறைமுகம் வந்துசேர்ந்தோம். யூலியு பவுலை அன்பாக நடப்பித்து, அவன் தன் நண்பர்களிடத்திலே போய் உபசரிக்கப்படும்படிக்கு உத்தரவு கொடுத்தான். அந்த இடத்தைவிட்டு நாங்கள் புறப்பட்டு, எதிர்க்காற்றாயிருந்தபடியினால், சீப்புரு தீவின் ஓரமாகப் பயணம் செய்தோம் பின்பு சிலிசியா பம்பிலியா நாடுகளின் கடல்வழியாக பயணித்து, லீசியா நாட்டு மீறாப்பட்டணத்தில் சேர்ந்தோம். இத்தாலியாவிற்குப் போகிற அலெக்சந்திரியா பட்டணத்துக் கப்பலை, நூறுபேருக்கு தலைவன் அங்கே பார்த்து, எங்களை அதில் ஏற்றினான். காற்று எங்களைத் தடுத்தபடியினாலே, நாங்கள் அநேகநாட்கள் மெதுவாய்ச் சென்று, வருத்தத்தோடு கினீது பட்டணத்திற்கு எதிரே வந்து, சல்மோனே ஊருக்கு எதிராய்க் கிரேத்தாதீவின் ஓரமாகப் பயணம் செய்தோம். அதை வருத்தத்தோடு கடந்து, நல்ல துறைமுகம் என்னப்பட்ட ஒரு இடத்திற்கு வந்தோம்; லசேயபட்டணம் அதற்கு அருகில் இருந்தது. வெகுகாலம் சென்று, உபவாசநாளும் முடிந்து போனபடியினாலே, இனிக் கப்பல் பயணம் செய்கிறது ஆபத்தாக இருக்குமென்று, பவுல் அவர்களை நோக்கி: மனிதர்களே, இந்த பயணத்தினாலே பொருட்களுக்கும், கப்பலுக்கும் மாத்திரமல்ல, நம்முடைய உயிருக்கும் வருத்தமும், மிகுந்த சேதமும் உண்டாயிருக்குமென்று காண்கிறேன் என்று சொல்லி அவர்களை எச்சரித்தான். நூறுபேருக்குத் தலைவன் பவுலினால் சொல்லப்பட்டவைகளைவிட மாலுமியையும் கப்பல் சொந்தக்காரர்களையும் அதிகமாக நம்பினான். அந்தத் துறைமுகம் மழைகாலத்திலே தங்குவதற்கு வசதியாக இல்லாததினால், அந்த இடத்தைவிட்டுத் தென்மேற்கையும் வடமேற்கையும் நோக்கியிருக்கும் கிரேத்தா தீவிலுள்ள துறைமுகமாகிய பேனிக்ஸ் என்னும் இடத்தில் சேரக்கூடுமானால் சேர்ந்து, மழைகாலத்தில் தங்கும்படி அநேகம்பேர் ஆலோசனை சொன்னார்கள். தென்றல் மெதுவாக வீசினபடியால், தாங்கள் வேண்டிக்கொண்டது கைகூடிவந்ததென்று எண்ணி, அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டு கிரேத்தா தீவிற்கு அருகில் சென்றார்கள். கொஞ்சநேரத்திற்குள்ளே யூரோக்கிலிதோன் என்னும் கடுங்காற்று அதில் மோதிற்று. கப்பல் அதில் அகப்பட்டுக்கொண்டு, காற்றுக்கு எதிர்த்துப்போகக்கூடாதபடியினால் காற்றின் போக்கிலே கொண்டுபோகப்பட்டோம். அப்படிக் கிலவுதா என்னப்பட்ட ஒரு சின்ன தீவின் அருகில் போகும்போது வெகுநேரம் போராடி படகை கைப்பற்றினோம். அதை அவர்கள் தூக்கியெடுத்தப்பின்பு, கயிற்றினால் கப்பலைச் சுற்றிக் கட்டி, புதை மணலிலே விழுவோமென்று பயந்து, பாய்களை இறக்கி, இவ்விதமாகக் கொண்டுபோகப்பட்டார்கள். மேலும் பெருங்காற்றுமழையில் நாங்கள் மிகவும் அவதிப்பட்டபடியினால் மறுநாளில் சில பொருட்களை கடலில் எறிந்தார்கள். மூன்றாம்நாளிலே கப்பலின் கருவிகளை எங்களுடைய கைகளினாலே எடுத்து கடலில் வீசினோம் அநேகநாளாகச் சூரியனாவது நட்சத்திரங்களாவது காணப்படாமல், மிகுந்த பெருங்காற்றுமழையும் அடித்துக் கொண்டிருந்தபடியினால், இனித் தப்பிப்பிழைப்போமென்னும் நம்பிக்கை முழுமையும் இல்லாமல்போனது. அநேகநாட்கள் அவர்கள் சாப்பிடாமல் இருந்தபோது, பவுல் அவர்கள் நடுவிலே நின்று: மனிதர்களே, இந்த வருத்தமும் சேதமும் வராதபடிக்கு என் சொல்லைக்கேட்டு, கிரேத்தாதீவைவிட்டுப்புறப்படாமல் இருக்கவேண்டியதாயிருந்தது. ஆனாலும் மனதில் உறுதியுள்ளவர்களாக இருங்களென்று இப்பொழுது உங்களுக்குத் தைரியஞ்சொல்லுகிறேன். கப்பற்சேதமேயல்லாமல் உங்களில் ஒருவனுக்கும் உயிர்சேதம் வராது. ஏனென்றால், என்னை ஆட்கொண்டவரும் நான் வணங்குகிறவருமான தேவனுடைய தூதனானவன் இந்த இரவிலே என்னிடத்தில் வந்துநின்று: பவுலே, பயப்படாதே, நீ இராயனுக்கு முன்பாக நிற்கவேண்டும், இதோ, உன்னுடனேகூட பயணம் பண்ணுகிற அனைவரையும் தேவன் உனக்கு தயவுபண்ணினார் என்றான். ஆகவே, மனிதர்களே, மனதில் உறுதியுள்ளவர்களாக இருங்கள். எனக்குச் சொல்லப்பட்டபடியே நடக்கும் என்று தேவனிடத்தில் நம்பிக்கையாக இருக்கிறேன். ஆனாலும் நாம் ஒரு தீவிலே விழவேண்டியதாயிருக்கும் என்றான். பதினான்காம் இராத்திரியானபோது, நாங்கள் ஆதிரியாக் கடலிலே அலைக்கழிக்கப்பட்டுப் போகும்போது, நடு இராத்திரியிலே கப்பலாட்களுக்கு ஒரு கரை நெருங்கிவருகிறதாகத் தோன்றியது. உடனே அவர்கள் நங்கூரம்விட்டுப் பார்த்தபோது இருபது அடி ஆழம் என்று கண்டார்கள்; சிறிதுதூரம் போனபொழுது, மறுபடியும் நங்கூரம்விட்டுப் பார்த்தபோது பதினைந்து அடி ஆழம் என்று கண்டார்கள். பாறையிடங்களில் விழுவோமென்று பயந்து, பின் பகுதியிலிருந்து நாலு நங்கூரங்களைப்போட்டு, எப்போது பொழுதுவிடியுமோ என்றிருந்தார்கள். அப்பொழுது கப்பலாட்கள் கப்பலைவிட்டு ஓடிப்போக வகைதேடி, முன்பகுதியிலிருந்து நங்கூரங்களைப் போடப்போகிறதுபோல படகை கடலில் இறக்கும்போது, பவுல் நூறுபேருக்கு தலைவனையும், போர்வீரர்களையும் நோக்கி: இவர்கள் கப்பலில் இல்லாவிட்டால் நீங்கள் தப்பிப் பிழைக்கமாட்டீர்கள் என்றான். அப்பொழுது, போர்வீரர்கள் படகின் கயிறுகளை அறுத்து, அதைக் கீழே விழவிட்டார்கள். பொழுதுவிடியும்போது எல்லோரும் சாப்பிடும்படி பவுல் அவர்களுக்குத் தைரியஞ்சொல்லி: நீங்கள் இன்று பதினாலுநாட்களாக ஒன்றும் சாப்பிடாமல் பட்டினியாக இருக்கிறீர்கள். ஆகவே, சாப்பிடும்படி உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன், நீங்கள் தப்பிப் பிழைப்பதற்கு அது உதவியாக இருக்கும்; உங்களுடைய தலையிலிருந்து ஒரு முடியும் விழாது என்றான். இப்படிச் சொல்லி. அப்பத்தை எடுத்து, தேவனை ஸ்தோத்தரித்து, அதைப் பிட்டுச் சாப்பிடத் தொடங்கினான். அப்பொழுது எல்லோரும் தைரியப்பட்டு சாப்பிட்டார்கள். கப்பலில் இருநூற்று எழுபத்தாறுபேர் இருந்தோம். திருப்தியாக சாப்பிட்டபின்பு அவர்கள் கோதுமையைக் கடலிலே போட்டு, கப்பலின் பாரத்தைக் குறைத்தார்கள். பொழுதுவிடிந்தபின்பு, எந்த இடம் என்று அறியாதிருந்தார்கள். அப்பொழுது சமமான கரையுள்ள ஒரு துறைமுகத்தை அவர்கள் பார்த்து; கூடுமானால் அதற்குள் கப்பலையோட்ட யோசனையாக இருந்து, நங்கூரங்களை அறுத்துக் கடலிலே விட்டுவிட்டு, சுக்கான்களுடைய கட்டுகளைத் தளரவிட்டு, பெரும்பாயைக் காற்று முகமாக விரித்து, கரைக்கு நேராகப்போய், இருபுறமும் கடல் மோதிய ஒரு இடத்திலே கப்பலை நிறுத்தினார்கள்; முன்பகுதி ஊன்றி அசையாமலிருந்தது, பின் பாகங்கள் அலைகளுடைய பலத்தினால் உடைந்துபோனது. அப்பொழுது காவல் பண்ணப்பட்டவர்களில் ஒருவனும் நீந்தி ஓடிப்போகாதபடிக்கு அவர்களைக் கொன்றுபோடவேண்டுமென்று போர்வீரர்கள் யோசனையாக இருந்தார்கள். நூறுபேருக்குத் தலைவன் பவுலைக் காப்பாற்ற மனதாயிருந்து, அவர்களுடைய யோசனையைத் தடுத்து, நீந்தத்தக்கவர்கள் முந்திக் கடலில் விழுந்து கரையேறவும், மற்றவர்களில் சிலர் பலகைகள்மேலும், சிலர் கப்பலின் உடைந்த துண்டுகள்மேல் உட்கார்ந்து கரையேறவும் கட்டளையிட்டான்; இவ்விதமாக எல்லோரும் தப்பிக் கரைசேர்ந்தார்கள்.
அப்போஸ்தலர் 27:1-44 பரிசுத்த பைபிள் (TAERV)
நாங்கள் இத்தாலிக்குக் கடற்பயணம் செய்யவேண்டுமென முடிவெடுக்கப்பட்டது. ஜூலியஸ் என்னும் பெயருள்ள படை அதிகாரி பவுலையும் வேறு சில கைதிகளையும் பொறுப்பேற்றுக் கொண்டான். இராயரின் படையில் ஜூலியஸ் சேவை புரிந்துகொண்டிருந்தான். நாங்கள் ஒரு கப்பலில் ஏறிச் சென்றோம். கப்பல் அதிரமித்தியம் என்னும் நகரிலிருந்து வந்து ஆசியாவின் பல இடங்களுக்குப் பயணம் செல்லத் தயாராக இருந்தது. அரிஸ்தர்க்கும் எங்களோடு வந்தான். அம்மனிதன் மக்கதோனியாவில் தெசலோனிக்கா நகரத்தைச் சேர்ந்தவன். மறுநாள் நாங்கள் சீதோன் நகரத்திற்கு வந்தோம். ஜூலியஸ் பவுலோடு நல்ல முறையில் நடந்துகொண்டான். அவன், பவுல் அவனது நண்பர்களைச் சென்று சந்திக்கும் சுதந்திரத்தை அவனுக்குக் கொடுத்தான். இந்த நண்பர்கள் பவுலுக்குரிய தேவைகளைக் கவனித்து வந்தனர். நாங்கள் சீதோன் நகரத்திலிருந்து கடலில் பயணமானோம். காற்று எங்களுக்கு எதிர்த் திசையில் வீசியபடியால் சீப்புரு தீவின் கரையோரம் எங்கள் கடற்பயணம் தொடர்ந்தது. சிலிசியா, பம்பிலியா வழியாகக் கடலைக் கடந்து சென்றோம். பின் லீசியாவிலுள்ள மீரா நகரத்திற்கு நாங்கள் வந்தோம். மீராவில் படை அதிகாரி அலெக்ஸாண்டிரியா நகரத்திலிருந்து வந்த ஒரு கப்பலைக் கண்டான். இந்தக் கப்பல் இத்தாலிக்குப் போய்க் கொண்டிருந்தது. எனவே அவன் எங்களை அதில் ஏற்றினான். நாங்கள் நிதானமாகப் பல நாட்கள் கடலில் பயணம் செய்தோம். காற்று எங்களுக்கு எதிராக வீசிக்கொண்டிருந்தபடியால் கினீது நகரை அடைவதே கடினமாக இருந்தது. அவ்வழியாக மேலும் போக முடியவில்லை. சால்மோனின் அருகேயுள்ள கிரேத்தா தீவின் தென் பகுதியின் வழியாகக் கடல் பயணமானோம். கடற்கரை ஓரமாகப் போனோம். ஆனாலும் கடற் பயணம் கடினமாக இருந்தது. பாதுகாப்பான துறைமுகம் என்னும் இடத்திற்கு வந்தோம். லசேயா நகரம் அந்த இடத்திற்கு அருகாமையிலிருந்தது. நிறைய நேரத்தை நாங்கள் இழந்திருந்தோம். கடற்பயணம் செய்வது ஆபத்தானதாக இருந்தது. ஏனெனில் யூதர்களின் உபவாச தினம் ஆரம்பித்திருந்தது. எனவே பவுல், “மனிதரே இப்பயணத்தில் இன்னும் தொல்லைகள் மிகுதியாக இருக்கும் என்று எண்ணுகிறேன்” என்று அவர்களை எச்சரித்தான். “கப்பலும், கப்பலின் பொருள்களும் இழக்கப்படலாம். நம் உயிரையும் நாம் இழக்கக்கூடும்!” என்றான். ஆனால் கப்பல் தலைவனும் கப்பலின் சொந்தக்காரனும் பவுல் கூறியதை ஒப்புக்கொள்ளவில்லை. அதனால் படை அதிகாரி பவுலை நம்பவில்லை. பதிலாக, தலைவனும் கப்பலின் சொந்தக்காரனும் கூறியதை அதிகாரி நம்பினான். குளிர்காலத்தில் கப்பல் தங்குவதற்கு அத்துறைமுகமும் ஏற்றதல்ல. எனவே பெரும்பான்மையான மனிதர்களும் கப்பல் புறப்படவேண்டுமென முடிவெடுத்தனர். பேனிக்ஸ் நகரத்தை அடையக் கூடுமென அவர்கள் நம்பினர். குளிர்காலத்தில் கப்பல் அங்கு தங்கமுடியும். (கிரேத்தா தீவில் பேனிக்ஸ் ஒரு நகரம். தென் மேற்கு, வட மேற்கு திசைகளை நோக்கிய துறைமுகம் அங்கிருந்தது.) தெற்கிலிருந்து ஒரு நல்ல காற்று வீசியது. கப்பலிலிருந்த மனிதர்கள், “நமக்குத் தேவையான காற்று இது. இப்போது அது வீசுகிறது!” என்று நினைத்தார்கள். எனவே அவர்கள் நங்கூரத்தை மேலே இழுத்தார்கள். கிரேத்தா தீவுக்கு வெகு அருகில் பயணம் செய்தோம். “வட கிழக்கன்” என்னும் பெயருள்ள மிகப் பலமான காற்று தீவின் குறுக்காக வந்தது. இக்காற்று கப்பலைச் சுமந்து சென்றது. காற்றுக்கு எதிராகக் கப்பலால் செல்ல முடியவில்லை. எனவே, முயற்சி செய்வதைவிட்டு, காற்று எங்களைச் சுமந்து செல்லும்படியாக விட்டோம். கிலவுதா என்னும் ஒரு சிறிய தீவின் கீழே சென்றோம். எங்களால் உயிர் மீட்கும் படகை வெளியே எடுக்கமுடிந்தது. ஆனால் அதை எடுப்பது மிகக் கடினமான செயலாக இருந்தது. உயிர் மீட்கும் படகை மனிதர்கள் எடுத்த பின், அவர்கள் கப்பலைச் சுற்றிலும் கயிறுகளால் கப்பல் சரியாக இருப்பதற்கென்று கட்டினார்கள். சிர்டிஸின் மணற் பாங்கான கரையில் கப்பல் மோதக்கூடுமென்று அவர்கள் நினைத்தார்கள். எனவே துடுப்புகளை எடுத்துவிட்டு, காற்று கப்பலைச் செலுத்தும்படியாக விட்டார்கள். மறுநாள் புயல் கடுமையாகத் தாக்கியதால் மனிதர்கள் கப்பலிலிருந்து சில பொருட்களை வெளியே வீசினார்கள். ஒரு நாள் கழிந்ததும் கப்பலின் கருவிகளை வெளியே வீசினர். பல நாட்கள் எங்களால் சூரியனையோ, நட்சத்திரங்களையோ பார்க்க முடியவில்லை. புயல் கொடுமையாக இருந்தது. நாங்கள் உயிர் பிழைக்கும் நம்பிக்கையைக் கைவிட்டோம். நாங்கள் இறந்து விடுவோமென எண்ணினோம். நீண்ட காலமாக அம்மனிதர்கள் சாப்பிடவில்லை. பின்பு ஒருநாள் பவுல் அவர்களுக்கு முன்பாக எழுந்து நின்று, “மனிதரே, கிரேத்தாவை விட்டுப் புறப்படாதீர்கள் என்று உங்களுக்குச் சொன்னேன். நீங்கள் நான் சொல்வதைக் கேட்டிருக்க வேண்டும். இத்தனை தொல்லைகளும் நஷ்டமும் உங்களுக்கு ஏற்பட்டிருக்காது. ஆனால் இப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும்படிக்கு உங்களுக்குக் கூறுகிறேன். உங்களில் ஒருவரும் இறக்கமாட்டீர்கள்! ஆனால் கப்பல் அழிந்து போகும். நேற்று இரவு தேவனிடமிருந்து ஒரு தூதன் என்னிடம் வந்தான். நான் வணங்குகிற தேவன் அவரே. நான் அவருடையவன். தேவதூதன், ‘பவுலே, பயப்படாதே! நீ இராயருக்குமுன் நிற்க வேண்டும். தேவன் உனக்கு இவ்வாக்குறுதியைத் தருகிறார். உன்னோடு பயணமாகிற எல்லா மனிதரின் உயிர்களும் காப்பாற்றப்படும்’ என்றான். எனவே மனிதரே மகிழ்ச்சியாயிருங்கள்! நான் தேவனிடம் நம்பிக்கை வைத்துள்ளேன். அவரது தூதன் கூறியபடி எல்லாம் நடக்கும். ஆனால் நாம் ஒரு தீவிற்குச் சென்று மோதுவோம்” என்றான். பதினான்காம் நாள் இரவில் ஆதிரியாக் கடலைச் சுற்றிலும் நாங்கள் கப்பலில் மிதந்துகொண்டிருந்தோம். மாலுமிகள் கரையை நெருங்குகிறோம் என்று எண்ணினர். அவர்கள் ஒரு கனமான பொருளை நுனியில் கட்டி கயிற்றை நீருக்குள் வீசினர். நீர் 120 அடி ஆழமானது என்று அவர்கள் கண்டனர். இன்னும் சற்று தூரம் சென்று கயிற்றை மீண்டும் வீசினர். அங்கு நீர் 90 அடி ஆழமாயிருந்தது. நாங்கள் பாறையில் மோதுவோமென்று மாலுமிகள் பயந்தார்கள். எனவே நான்கு நங்கூரங்களை நீருக்குள் பாய்ச்சினர். மறுநாளின் பகலொளிக்காகப் பிரார்த்தனை செய்தனர். சில மாலுமிகள் கப்பலைக் கைவிட விரும்பினர். அவர்கள் உயிர் மீட்கும் படகை நீரில் இறக்கினர். கப்பலின் முன்பக்கத்திலிருந்து அதிகமான நங்கூரங்களை வீசுவதாக பிறமனிதர்கள் கருதும்படியாக நடந்துகொண்டனர். ஆனால் பவுல் படை அதிகாரியையும், பிற வீரர்களையும் நோக்கி, “இம்மனிதர்கள் கப்பலிலே இருக்காவிட்டால் உங்கள் உயிர்களைக் காக்க முடியாது” என்றான். எனவே வீரர்கள் கயிறுகளை அறுத்து உயிர் மீட்கும் படகை நீரில் விழச்செய்தனர். அதிகாலைக்குச் சற்று முன் பவுல் எல்லா மக்களையும் ஏதேனும் உண்பதற்குச் சம்மதிக்க வைத்தான். அவன் “கடந்த இரண்டு வாரங்களாக நீங்கள் காத்துக்கொண்டும், கவனித்துக்கொண்டும் இருக்கிறீர்கள். பதினான்கு நாட்களாக நீங்கள் எதையும் உண்ணவில்லை. நீங்கள் இப்போது எதையாவது சாப்பிடுமாறு உங்களை வேண்டுகிறேன். உயிரோடிருப்பதற்கு உங்களுக்கு இது தேவை. உங்களில் யாரும் ஒரு தலை முடியைக் கூட இழக்கமாட்டீர்கள்” என்றான். இதைக் கூறிய பிறகு பவுல் ரொட்டியை எடுத்து எல்லோர் முன்பாகவும் அதற்காக தேவனுக்கு நன்றி சொன்னான். அதில் ஒரு பகுதியை எடுத்து, அவன் உண்ண ஆரம்பித்தான். எல்லா மனிதர்களும் உற்சாகம் பெற்றனர். அவர்களும் சாப்பிட ஆரம்பித்தார்கள். (கப்பலில் 276 பேர் இருந்தனர்.) நாங்கள் திருப்தியாகச் சாப்பிட்டோம். பின் கப்பலிலிருந்த தானியங்களை எல்லாம் கப்பலின் பாரத்தைக் குறைக்கும்பொருட்டு கடலுக்குள் வீசினோம். பகல் ஒளி வர ஆரம்பித்ததும் மாலுமிகள் நிலத்தைக் கண்டனர். அந்நிலம் எதுவென்று அவர்களால் அறியமுடியவில்லை. அவர்கள் கடற்கரையோடு கூடிய ஒரு வளைகுடாவைக் கண்டனர். மாலுமிகள் அவர்களால் முடிந்தவரைக்கும் கடற்கரைக்கு நேராக கப்பலைச் செலுத்த முயன்றனர். ஆனால் கப்பல் மணல் மேட்டில் மோதியது. கப்பலின் முன்பகுதி அதற்குள் நுழைந்து நின்றது. கப்பலால் அசைய முடியவில்லை. பெரும் அலைகள் வந்து கப்பலின் பின்பகுதியில் மோதி, கப்பலை உடைத்துவிட்டன. எந்தக் கைதியும் நீந்தித் தப்பித்துப் போகாதவாறு வீரர்கள் அவர்களைக் கொல்வதற்கு முடிவு செய்தார்கள். ஆனால் படைத் தலைவன் பவுலை உயிரோடு காக்க எண்ணினான். எனவே வீரர்கள் கைதிகளைக் கொல்வதற்கு அவன் அனுமதிக்கவில்லை. நீந்தத் தெரிந்தவர்கள் கடலில் குதித்து நீந்திக் கரை சேரலாமென்று ஜூலியஸ் மக்களுக்குக் கூறினான். பிற மக்கள் மரப் பலகைகளையோ கப்பலின் உடைந்த பகுதிகளையோ பிடித்து நீந்தினர். இவ்வாறு எல்லா மக்களும் நிலத்தை அடைந்தனர். மக்களில் ஒருவரும் இறக்கவில்லை.
அப்போஸ்தலர் 27:1-44 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
நாங்கள் இத்தாலியா தேசத்துக்குக் கப்பல் ஏறிப்போகும்படி தீர்மானிக்கப்பட்டபோது, பவுலையும் காவலில் வைக்கப்பட்டிருந்த வேறுசிலரையும் அகுஸ்து பட்டாளத்தைச் சேர்ந்த யூலியு என்னும் பேர்கொண்ட நூற்றுக்கு அதிபதியினிடத்தில் ஒப்புவித்தார்கள். அதிரமித்தியம் ஊர்க்கப்பலில் நாங்கள் ஏறி, ஆசியா நாட்டுக் கரைபிடித்தோடவேண்டுமென்று நினைத்துப் புறப்பட்டோம். மக்கெதோனியா தேசத்துத் தெசலோனிக்கே பட்டணத்தானாகிய அரிஸ்தர்க்கு எங்களுடனேகூட இருந்தான். மறுநாள் சீதோன் துறைபிடித்தோம். யூலியு பவுலைப் பட்சமாய் நடப்பித்து, அவன் தன் சிநேகிதரிடத்திலே போய்ப் பராமரிப்படையும்படிக்கு உத்தரவு கொடுத்தான். அவ்விடம்விட்டு நாங்கள் புறப்பட்டு, எதிர்க்காற்றாயிருந்தபடியினால், சீப்புரு தீவின் ஒதுக்கிலே ஓடினோம். பின்பு சிலிசியா பம்பிலியா நாடுகளின் கடல்வழியாய் ஓடி, லீசியா நாட்டு மீறாப்பட்டணத்தில் சேர்ந்தோம். இத்தாலியாவுக்குப் போகிற அலெக்சந்திரியா பட்டணத்துக் கப்பலை நூற்றுக்கு அதிபதி அங்கே கண்டு, எங்களை அதில் ஏற்றினான். காற்று எங்களைத் தடுத்தபடியினாலே, நாங்கள் அநேகநாள் மெதுவாய்ச் சென்று, வருத்தத்தோடே கினீதுபட்டணத்திற்கு எதிரே வந்து, சல்மோனே ஊருக்கு எதிராய்க் கிரேத்தாதீவின் ஒதுக்கில் ஓடினோம். அதை வருத்தத்தோடே கடந்து, நல்ல துறைமுகம் என்னப்பட்ட ஒரு இடத்திற்கு வந்தோம்; லசேயபட்டணம் அதற்குச் சமீபமாயிருந்தது. வெகுகாலம் சென்று, உபவாசநாளும் கழிந்துபோனபடியினாலே, இனிக் கப்பல் யாத்திரை செய்கிறது மோசத்திற்கு ஏதுவாயிருக்குமென்று, பவுல் அவர்களை நோக்கி: மனுஷரே, இந்த யாத்திரையினாலே சரக்குக்கும் கப்பலுக்கும் மாத்திரமல்ல, நம்முடைய ஜீவனுக்கும் வருத்தமும் மிகுந்த சேதமும் உண்டாயிருக்குமென்று காண்கிறேன் என்று சொல்லி, அவர்களை எச்சரித்தான். நூற்றுக்கு அதிபதி பவுலினால் சொல்லப்பட்டவைகளைப் பார்க்கிலும் மாலுமியையும் கப்பல் எஜமானையும் அதிகமாய் நம்பினான். அந்தத் துறைமுகம் மழைகாலத்திலே தங்குவதற்கு வசதியாயிராதபடியினால், அவ்விடத்தை விட்டுத் தென்மேற்கையும் வடமேற்கையும் நோக்கியிருக்கும் கிரேத்தா தீவிலுள்ள துறைமுகமாகிய பேனிக்ஸ் என்னும் இடத்தில் சேரக்கூடுமானால் சேர்ந்து, மழைகாலத்தில் தங்கும்படி அநேகம்பேர் ஆலோசனை சொன்னார்கள். தென்றல் மெதுவாயடித்தபடியால், தாங்கள் கோரினது கைகூடிவந்ததென்று எண்ணி, அவ்விடம்விட்டுப் பெயர்ந்து கிரேத்தா தீவுக்கு அருகாக ஓடினார்கள். கொஞ்சநேரத்துக்குள்ளே யூரோக்கிலிதோன் என்னுங்கடுங்காற்று அதில் மோதிற்று. கப்பல் அதில் அகப்பட்டுக்கொண்டு, காற்றுக்கு எதிர்த்துப்போகக்கூடாதபடியினால் காற்றின் போக்கிலே கொண்டுபோகப்பட்டோம். அப்படிக் கிலவுதா என்னப்பட்ட ஒரு சின்ன தீவின் ஒதுக்கிலே ஓடுகையில் வெகு வருத்தத்தோடே படவை வசப்படுத்தினோம். அதை அவர்கள் தூக்கியெடுத்தபின்பு, பல உபாயங்கள் செய்து, கப்பலைச் சுற்றிக் கட்டி, சொரிமணலிலே விழுவோமென்று பயந்து, பாய்களை இறக்கி, இவ்விதமாய்க் கொண்டுபோகப்பட்டார்கள். மேலும் பெருங்காற்றுமழையில் நாங்கள் மிகவும் அடிபட்டபடியினால், மறுநாளில் சில சரக்குகளைக் கடலில் எறிந்தார்கள். மூன்றாம் நாளிலே கப்பலின் தளவாடங்களை எங்கள் கைகளினாலே எடுத்து எறிந்தோம். அநேகநாளாய்ச் சூரியனாவது நட்சத்திரங்களாவது காணப்படாமல், மிகுந்த பெருங்காற்றுமழையும் அடித்துக் கொண்டிருந்தபடியினால், இனித் தப்பிப்பிழைப்போமென்னும் நம்பிக்கை முழுமையும் அற்றுப்போயிற்று. அநேகநாள் அவர்கள் போஜனம்பண்ணாமல் இருந்தபோது, பவுல் அவர்கள் நடுவிலே நின்று: மனுஷரே, இந்த வருத்தமும் சேதமும் வராதபடிக்கு என் சொல்லைக்கேட்டு, கிரேத்தாதீவை விட்டுப்புறப்படாமல் இருக்கவேண்டியதாயிருந்தது. ஆகிலும் திடமனதாயிருங்களென்று இப்பொழுது உங்களுக்குத் தைரியஞ்சொல்லுகிறேன். கப்பற் சேதமேயல்லாமல் உங்களில் ஒருவனுக்கும் பிராணச்சேதம் வராது. ஏனென்றால், என்னை ஆட்கொண்டவரும் நான் சேவிக்கிறவருமான தேவனுடைய தூதனானவன் இந்த இராத்திரியிலே என்னிடத்தில் வந்து நின்று: பவுலே, பயப்படாதே, நீ இராயனுக்கு முன்பாக நிற்கவேண்டும், இதோ, உன்னுடனேகூட யாத்திரைபண்ணுகிற யாவரையும் தேவன் உனக்குத் தயவுபண்ணினார் என்றான். ஆனபடியினால் மனுஷரே, திடமனதாயிருங்கள். எனக்குச் சொல்லப்பட்ட பிரகாரமாகவே நடக்கும் என்று தேவனிடத்தில் நம்பிக்கையாயிருக்கிறேன். ஆயினும் நாம் ஒரு தீவிலே விழவேண்டியதாயிருக்கும் என்றான். பதினாலாம் இராத்திரியானபோது, நாங்கள் ஆதிரியாக் கடலிலே அலைவுபட்டு ஓடுகையில், நடுஜாமத்திலே கப்பலாட்களுக்கு ஒரு கரை கிட்டிவருகிறதாகத் தோன்றிற்று. உடனே அவர்கள் விழுதுவிட்டு இருபது பாகமென்று கண்டார்கள்; சற்றப்புறம் போனபொழுது, மறுபடியும் விழுதுவிட்டுப் பதினைந்து பாகமென்று கண்டார்கள். பாறையிடங்களில் விழுவோமென்று பயந்து, பின்னணியத்திலிருந்து நாலு நங்கூரங்களைப்போட்டு, பொழுது எப்போது விடியுமோ என்றிருந்தார்கள். அப்பொழுது கப்பலாட்கள் கப்பலை விட்டோடிப்போக வகைதேடி, முன்னணியத்திலிருந்து நங்கூரங்களைப் போடப்போகிற பாவனையாய்ப் படவைக் கடலில் இறக்குகையில், பவுல் நூற்றுக்கு அதிபதியையும் சேவகரையும் நோக்கி: இவர்கள் கப்பலில் இராவிட்டால் நீங்கள் தப்பிப் பிழைக்கமாட்டீர்கள் என்றான். அப்பொழுது, போர்ச்சேவகர் படவின் கயிறுகளை அறுத்து, அதைத் தாழ விழவிட்டார்கள். பொழுது விடிகையில் எல்லாரும் போஜனம்பண்ணும்படி பவுல் அவர்களுக்குத் தைரியஞ்சொல்லி: நீங்கள் இன்று பதினாலுநாளாய் ஒன்றும் சாப்பிடாமல் பட்டினியாயிருக்கிறீர்கள். ஆகையால் போஜனம்பண்ணும்படி உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன், நீங்கள் தப்பிப் பிழைப்பதற்கு அது உதவியாயிருக்கும்; உங்கள் தலையிலிருந்து ஒரு மயிரும் விழாது என்றான். இப்படிச் சொல்லி. அப்பத்தை எடுத்து, எல்லாருக்குமுன்பாகவும் தேவனை ஸ்தோத்தரித்து, அதைப் பிட்டுப் புசிக்கத்தொடங்கினான். அப்பொழுது எல்லாரும் திடமனப்பட்டுப் புசித்தார்கள். கப்பலில் இருநூற்றெழுபத்தாறுபேர் இருந்தோம். திருப்தியாகப் புசித்தபின்பு அவர்கள் கோதுமையைக் கடலிலே எறிந்து, கப்பலை இலகுவாக்கினார்கள். பொழுது விடிந்தபின்பு, இன்னபூமியென்று அறியாதிருந்தார்கள். அப்பொழுது சமமான கரையுள்ள ஒரு துறைமுகம் அவர்களுக்குத் தென்பட்டது; கூடுமானால் அதற்குள் கப்பலையோட்ட யோசனையாயிருந்து, நங்கூரங்களை அறுத்துக் கடலிலே விட்டுவிட்டு, சுக்கான்களுடைய கட்டுகளைத் தளரவிட்டு, பெரும்பாயைக் காற்று முகமாய் விரித்து, கரைக்கு நேராய் ஓடி, இருபுறமும் கடல் மோதிய ஒரு இடத்திலே கப்பலைத் தட்டவைத்தார்கள்; முன்னணியம் ஊன்றி அசையாமலிருந்தது, பின்னணியம் அலைகளுடைய பலத்தினால் உடைந்துபோயிற்று. அப்பொழுது காவல்பண்ணப்பட்டவர்களில் ஒருவனும் நீந்தி ஓடிப்போகாதபடிக்கு அவர்களைக் கொன்றுபோடவேண்டுமென்று போர்ச்சேவகர் யோசனையாயிருந்தார்கள். நூற்றுக்கு அதிபதி பவுலைக் காப்பாற்ற மனதாயிருந்து, அவர்களுடைய யோசனையைத் தடுத்து, நீந்தத்தக்கவர்கள் முந்திக் கடலில் விழுந்து கரையேறவும், மற்றவர்களில் சிலர் பலகைகள்மேலும், சிலர் கப்பல் துண்டுகள்மேலும் போய்க் கரையேறவும் கட்டளையிட்டான்; இவ்விதமாய் எல்லாரும் தப்பிக் கரைசேர்ந்தார்கள்.