அப்போஸ்தலர் 26:1-32
அப்போஸ்தலர் 26:1-32 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
அப்பொழுது அகிரிப்பா பவுலிடம், “உன் வழக்கை எடுத்துரைக்க உனக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது” என்றான். எனவே பவுல் தனது கையினால் சைகை காட்டி தனது சார்பாகப் பேசத் தொடங்கினான்: “அகிரிப்பா அரசனே, யூதருடைய குற்றச்சாட்டுகள் எல்லாவற்றிற்கும் எதிராக, நான் எனது சார்பாக பேசும்படி, இன்று உமக்கு முன்பாக நிற்பது, ஒரு வாய்ப்பு என கருதுகிறேன். ஏனெனில், யூதருடைய எல்லா முறைகளைக் குறித்தும், கருத்து முரண்பாடுகளைக் குறித்தும், நீர் நன்றாய் அறிந்திருக்கிறீர். எனவே, நான் சொல்வதைப் பொறுமையாகக் கேட்கும்படி உம்மைக் கெஞ்சிக்கேட்கிறேன். “நான் சிறுபிள்ளையாக இருந்ததிலிருந்து, என் வாழ்க்கையின் ஆரம்பத்தில் என் நாட்டிலும், பின்பு எருசலேமிலும் நான் எப்படி வாழ்ந்தேன் என்பதை எல்லா யூதரும் அறிவார்கள். நீண்டகாலமாக அவர்கள் என்னை அறிந்திருக்கிறார்கள். அதனால் நான் எப்படி எங்கள் சமயத்திலுள்ள கண்டிப்பான பிரிவின்படி, ஒரு பரிசேயனாக வாழ்ந்தேன் என்பதை, அவர்கள் விரும்பினால் சாட்சியாகச் சொல்லலாம். எங்கள் தந்தையருக்கு இறைவன் வாக்குத்தத்தம் பண்ணியதில், நான் கொண்டிருக்கும் நம்பிக்கை காரணமாகவே, இன்று நான் இங்கே விசாரணை செய்யப்படுகிறேன். இந்த வாக்குத்தத்தம் நிறைவேறுவதைக் காணும் எதிர்பார்ப்புடனேயே, எங்கள் பன்னிரண்டு கோத்திரத்தினரும், இரவும் பகலுமாய் இறைவனுக்கு ஆர்வத்துடன் பணிசெய்கிறார்கள். அரசே, அந்த எதிர்பார்ப்பின் காரணமாகவே, யூதர்கள் என்மேல் குற்றம் சுமத்துகிறார்கள். இறந்தவர்களை இறைவன் உயிருடன் எழுப்புவது நம்பமுடியாத செயல் என்று நீங்கள் கருதுவது ஏன்? “நாசரேத்தைச் சேர்ந்த இயேசுவின் பெயருக்கு எதிராக இயன்றதையெல்லாம் செய்யவேண்டும் என்று நானும் எண்ணியிருந்தேன். அதையே நான் எருசலேமில் செய்தேன். தலைமை ஆசாரியரின் அதிகாரத்தைப் பெற்று, பரிசுத்தவான்களில் பலரைச் சிறையில் அடைத்தேன்; அவர்கள் கொலைசெய்யப்படும்போது, அவர்களுக்கு எதிராக நானும் என் ஒப்புதலை வழங்கியிருந்தேன். பலமுறை அவர்களைத் தண்டனைக்கு உட்படுத்தும்படி, ஒவ்வொரு ஜெப ஆலயத்திற்கும் போனேன். இறைவனை அவமதித்துப் பேசும்படி அவர்களை வற்புறுத்தினேன். நான் அவர்களுக்கு எதிராகக் கடுங்கோபம் கொண்டிருந்ததால், அவர்களைத் துன்புறுத்தும்படி வெளிநாட்டின் பட்டணங்களுக்கும் போனேன். “இப்படியாக ஒருமுறை நான் தலைமை ஆசாரியரின் அதிகாரத்துடனும், ஆணையுடனும் தமஸ்கு பட்டணத்திற்கு போய்க்கொண்டிருந்தேன். அரசே, நான் போகும் வழியில், மத்தியான வேளையில், வானத்திலிருந்து ஒரு ஒளியைக் கண்டேன். அது சூரியனைவிடப் பிரகாசமுடையதாய், என்னையும் என்னுடன் வந்தவர்களையும் சுற்றிப் பிரகாசித்தது. நாங்கள் அனைவரும் தரையில் விழுந்தோம். ஒரு குரல் எபிரெய மொழியில் என்னுடன் பேசுவதைக் கேட்டேன். அது, ‘சவுலே, சவுலே, நீ ஏன் என்னைத் துன்பப்படுத்துகிறாய்? முட்களை உதைப்பது உனக்குக் கடினமே’ என்றது. “அப்பொழுது நான், ‘ஆண்டவரே, நீர் யார்?’ என்று கேட்டேன். “ ‘ஆண்டவர் அதற்கு மறுமொழியாக, நான் இயேசு, நீ என்னையே துன்புறுத்துகிறாய். இப்பொழுது நீ எழுந்து காலூன்றி நில். நான் உன்னை என் ஊழியனாகவும், சாட்சியாகவும் நியமிப்பதற்கே, உனக்குக் காட்சியளித்தேன். என்னைக் கண்டது குறித்தும், நான் உனக்குக் காண்பிக்கப் போகிறவற்றிற்கும், நீ சாட்சியாய் இருக்கவேண்டும். நான் உன்னை உன் சொந்த மக்களிடமிருந்தும், யூதரல்லாதவர்களிடமிருந்தும் காப்பாற்றுவேன். நீ அவர்களை இருளிலிருந்து வெளிச்சத்திற்கும், சாத்தானின் அதிகாரத்திலிருந்து இறைவனிடத்திற்கும் திரும்பும்படி அவர்களுடைய கண்களைத் திறக்கவும், அவர்கள் தங்களுடைய பாவமன்னிப்பைப் பெற்று, என்மேலுள்ள விசுவாசத்தினால் பரிசுத்தமாக்கப்பட்டவர்களுடன் இடத்தைப் பெற்றுக்கொள்ளும்படியாகவே, நான் உன்னை அனுப்புகிறேன்’ என்றார். “அகிரிப்பா அரசே, ஆகவே அந்த பரலோக தரிசனத்திற்கு நான் கீழ்ப்படியாதவனாய் இருக்கவில்லை. எனவே முதலாவது தமஸ்குவில் இருந்தவர்களுக்கும், பின்பு எருசலேமிலும் முழு யூதேயாவில் இருந்தவர்களுக்கும், யூதரல்லாதவர்களுக்கும்கூட நான் பிரசங்கித்தேன். அவர்கள் மனந்திரும்பி இறைவனிடம் திரும்பவேண்டும் என்றும், தங்களுடைய மனந்திரும்புதலை அவர்கள் தங்கள் செயல்களினால் நிரூபிக்கவேண்டும் என்றும் அறிவித்தேன். இதனாலேயே யூதர்கள், ஆலய முற்றத்தில் இருந்த என்னைப் பிடித்துக் கொலைசெய்ய முயற்சித்தார்கள். ஆனால், இன்றுவரை, நான் இறைவனுடைய உதவியைப் பெற்றவனாய், இங்கே நின்று சிறியவர்கள் பெரியவர்கள் எல்லோருக்கும் சாட்சி கொடுக்கிறேன். இறைவாக்கினரும், மோசேயும் என்ன நடக்கும் என்று சொன்னார்களோ, அதையேதான் நானும் சொல்கிறேன். வேறு எதையும் நான் சொல்லவில்லை. கிறிஸ்து வேதனைகள் அனுபவித்து, பின் இறந்தவர்களிலிருந்து முதலாவதாய் எழுந்திருப்பவராய், தனது சொந்த மக்களுக்கும், யூதரல்லாதவர்களுக்கும் ஒளியைப் பிரசித்தப்படுத்துவார் என்றே அவர்களும் சொன்னார்கள்” என்றார். அந்நேரத்தில் பெஸ்து குறுக்கிட்டு பவுலிடம், “பவுலே, உனக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது!” உனது அதிக படிப்பினால் “உனக்கு மூளை குழம்பிவிட்டது” என்று சத்தமிட்டுச் சொன்னான். அதற்குப் பவுல், “மதிப்புக்குரிய பெஸ்து அவர்களே, எனக்கு மூளை குழம்பவில்லை. நான் சொல்வது உண்மையும், நியாயமானதுமாய் இருக்கிறது. அரசர் இவற்றையெல்லாம் அறிந்திருக்கிறார். அதனால்தான் நான் அவருடன் தாராளமாய் பேசுகிறேன். நான் பேசும் இவை ஒன்றும் அவருக்குத் தெரியாமல் நடந்தவை அல்ல என்பது எனக்குத் தெரியும். ஏனெனில், இவை மூலைமுடுக்கில் நடந்தவை அல்ல. அகிரிப்பா அரசே, நீர் இறைவாக்கினரை நம்புகிறீரா? நீர் நம்புகிறீர் என்று எனக்குத் தெரியும்” என்றான். அப்பொழுது அகிரிப்பா பவுலிடம், “என்ன! இந்தக் கொஞ்ச நேரத்திலே, நீ என்னைக் கிறிஸ்துவை பின்பற்றுகிறவனாக்க நினைக்கிறாயா?” என்றான். அதற்குப் பவுல், “கொஞ்ச நேரமோ, அதிக நேரமோ, நீர் மட்டுமல்ல, இன்று நான் சொல்வதைக் கேட்கும் அனைவரும், என்னைப்போல் ஆகவேண்டும்; ஆனால் இவ்விதம் சங்கிலிகளால் மட்டும் கட்டப்படக்கூடாது என்றே இறைவனிடம் மன்றாடுகிறேன்” என்றான். அரசன் தன் இடத்தைவிட்டு எழுந்தான். அவனுடன் ஆளுநரும், பெர்னிக்கேயாளும், அவர்களுடன் இருந்தவர்களுங்கூட இருக்கைகளை விட்டு எழுந்தார்கள். அவர்கள் அவ்விடத்தை விட்டுப்போகையில் ஒருவரோடொருவர், “இவன் மரணதண்டனையையோ, சிறைத் தண்டனையையோ பெறுவதற்கான எதையும் செய்யவில்லை” என்று பேசிக்கொண்டார்கள். அப்பொழுது அகிரிப்பா பெஸ்துவிடம், “இவன் ரோமப் பேரரசனுக்கு மேல்முறையீடு செய்யாமல் இருந்திருந்தால், இவனை விடுவித்திருக்கலாம்” என்றான்.
அப்போஸ்தலர் 26:1-32 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
அகிரிப்பா பவுலைப் பார்த்து: நீ உனக்காகப் பேச உன்னை அனுமதிக்கிறேன் என்றான். அப்பொழுது பவுல் கையை நீட்டி, தனக்காக பதில் சொல்லத்தொடங்கினான். அகிரிப்பா ராஜாவே, யூதர்கள் என்மேல் சுமத்துகிற எல்லாக் காரியங்களைக்குறித்தும் நான் இன்றைக்கு உமக்கு முன்பாக பதில் சொல்லப்போகிறபடியினாலே என்னைப் பாக்கியவான் என்றெண்ணுகிறேன். விசேஷமாக நீர் யூதர்களுடைய எல்லாமுறைமைகளையும் விவாதங்களையும் அறிந்தவரானதால் அப்படி எண்ணுகிறேன்; ஆகவே, நான் சொல்வதைப் பொறுமையோடு கேட்கும்படி உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன். நான் என் சிறுவயது முதற்கொண்டு, எருசலேமிலே என் மக்களுக்குள்ளே இருந்தபடியால், ஆரம்பமுதல் நான் நடந்த நடக்கையை யூதரெல்லோரும் அறிந்திருக்கிறார்கள். நம்முடைய மார்க்கத்திலுள்ள மதவேறுபாடுகளில் மிகவும் கண்டிப்பான நேரத்திற்கு ஏற்றபடி பரிசேயனாக நடந்தேனென்று சாட்சிசொல்ல அவர்களுக்கு விருப்பமிருந்தால் சொல்லலாம். தேவன் நம்முடைய பிதாக்களுக்கு அருளிச்செய்த வாக்குத்தத்தம் நிறைவேறுமென்கிற நம்பிக்கைக்காகவே நான் இப்பொழுது நியாயம் விசாரிக்கப்படுகிறவனாக நிற்கிறேன். இரவும் பகலும் இடைவிடாமல் ஆராதனை செய்துவருகிற நம்முடைய பன்னிரண்டு கோத்திரத்தார்களும் அந்த வாக்குத்தத்தம் நிறைவேறுமென்று நம்பியிருக்கிறார்கள். அகிரிப்பா ராஜாவே, அந்த நம்பிக்கையினிமித்தமே யூதர்கள் என்மேல் குற்றஞ்சுமத்துகிறார்கள். தேவன் மரித்தவர்களை எழுப்புகிறது நம்பப்படாத காரியமென்று நீங்கள் நினைக்கிறதென்ன? முன்னே நானும் நசரேயனாகிய இயேசுவின் நாமத்திற்கு எதிராக அநேக காரியங்களைச் செய்யவேண்டுமென்று நினைத்திருந்தேன். அப்படியே நான் எருசலேமிலும் செய்தேன். நான் பிரதான ஆசாரியர்களிடத்தில் அனுமதிபெற்று, பரிசுத்தவான்களில் அநேகரைச் சிறைச்சாலைகளில் அடைத்தேன்; அவர்கள் கொலைசெய்யப்படும்போது நானும் சம்மதித்திருந்தேன். எல்லா ஜெபஆலயங்களிலும் நான் அவர்களை பலமுறைத் தண்டித்து அவதூறு சொல்லக் கட்டாயப்படுத்தினேன்; அவர்கள் பேரில் கோபவெறிகொண்டவனாக அந்நியப் பட்டணங்கள்வரைக்கும் அவர்களைத் துன்பப்படுத்தினேன். இப்படிச் செய்துவரும்போது, நான் பிரதான ஆசாரியர்களிடத்தில் அதிகாரமும் அனுமதியும் பெற்று, தமஸ்குவிற்குப் போகும்போது, மத்தியான நேரத்தில், ராஜாவே, நான் வழியிலே சூரியனுடைய பிரகாசத்திலும் அதிகமான ஒளி வானத்திலிருந்து என்னையும் என்னுடனேகூடப் பயணம் செய்தவர்களையும் சுற்றிப் பிரகாசிக்கக்கண்டேன். நாங்களெல்லோரும் தரையிலே விழுந்தபோது: சவுலே, சவுலே, நீ ஏன் என்னைத் துன்பப்படுத்துகிறாய்? முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினம் என்று எபிரெயு மொழியிலே என்னுடனே பேசுகிற ஒரு சத்தத்தைக் கேட்டேன். அப்பொழுது நான்: ஆண்டவரே, நீர் யார்? என்றேன். அதற்கு அவர்: நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே. இப்பொழுது நீ எழுந்து, காலூன்றி நில். நீ பார்த்தவைகளையும் நான் உனக்குத் தரிசனமாகிக் காண்பிக்கப்போகிறவைகளையும்குறித்து உன்னை ஊழியக்காரனாகவும் சாட்சியாகவும் ஏற்படுத்துகிறதற்காக உனக்குக் காட்சியளித்தேன். உன் சொந்த மக்களிடத்திலிருந்தும் அந்நிய மக்களிடத்திலிருந்தும் உன்னை விடுதலையாக்கி, அவர்கள் என்னைப் பற்றும் விசுவாசத்தினாலே பாவமன்னிப்பையும், பரிசுத்தமாக்கப்பட்டவர்களுக்குரிய உரிமைப்பங்கையும் பெற்றுக்கொள்ளும்படியாக, அவர்கள் இருளைவிட்டு ஒளியினிடத்திற்கும், சாத்தானுடைய அதிகாரத்தைவிட்டு தேவனிடத்திற்கும் திரும்பும்படிக்கு நீ அவர்களுடைய கண்களைத் திறப்பதற்காக, இப்பொழுது உன்னை அவர்களிடத்திற்கு அனுப்புகிறேன் என்றார். ஆகவே, அகிரிப்பா ராஜாவே, நான் அந்தப் பரமதரிசனத்திற்குக் கீழப்படியாதவனாக இருக்கவில்லை. முன்பு தமஸ்குவிலும் எருசலேமிலும் யூதேயா நாடெங்குமுள்ளவர்களிடத்திலும், பின்பு யூதரல்லாதோர்களிடத்திலும் நான் போய், அவர்கள் தேவனிடத்திற்கு மனம்திரும்பி குணப்படவும், மனம்திரும்புவதற்கேற்ற செயல்களைச் செய்யவும் வேண்டுமென்று அறிவித்தேன். இதினிமித்தமே யூதர்கள் தேவாலயத்திலே என்னைப் பிடித்துக் கொலைசெய்ய முயற்சிசெய்தார்கள். ஆனாலும் தேவ உதவியைப் பெற்று, நான் இந்த நாள்வரை சிறியோர்களுக்கும் பெரியோர்களுக்கும் சாட்சி சொல்லிவருகிறேன். தீர்க்கதரிசிகளும் மோசேயும் முன்னமே சொல்லியிருந்தபடியே, கிறிஸ்து பாடுபடவேண்டியதென்றும், மரித்தோர் உயிர்த்தெழுதலில் அவர் முதல்வராகி, சொந்த மக்களுக்கும் அந்நிய மக்களுக்கும் ஒளியை வெளிப்படுத்துகிறவரென்றும் சொல்லுகிறேனேயன்றி, வேறொன்றையும் நான் சொல்லுகிறதில்லை என்றான். இவ்விதமாக அவன் தனக்காக பதில்சொல்லும்போது, பெஸ்து மிகவும் சத்தமாக: பவுலே, நீ உலறுகிறாய், அதிகக் கல்வி உனக்குப் பயித்தியமுண்டாக்குகிறது என்றான். அதற்கு அவன்: கனம்பொருந்திய பெஸ்துவே, நான் பயித்தியக்காரனல்ல, சத்தியமும் சுயபுத்தியோடு வார்த்தைகளைப் பேசுகிறேன். இந்தச் செய்திகளை ராஜா அறிந்திருக்கிறார்; ஆகவே, தைரியமாக அவருக்கு முன்பாகப் பேசுகிறேன்; இவைகளில் ஒன்றும் அவருக்கு மறைவானதல்லவென்று நினைக்கிறேன்; இது ஒரு பக்கம் நடந்த காரியமல்ல. அகிரிப்பா ராஜாவே, தீர்க்கதரிசிகளை நம்புகிறீரா? நம்புகிறீர் என்று அறிவேன் என்றான். அப்பொழுது அகிரிப்பா பவுலைப் பார்த்து: நான் கிறிஸ்தவனாகிறதற்குக் கொஞ்சங்குறைய நீ என்னைச் சம்மதிக்கச் செய்கிறாய் என்றான். அதற்குப் பவுல்: நீர் மாத்திரமல்ல, இன்று என் வசனத்தைக் கேட்கிற அனைவரும், கொஞ்சங்குறையமட்டும் அல்ல, இந்தக் கட்டுகள்தவிர, முழுவதும் என்னைப்போலாகும்படி தேவனை வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான். இவைகளை அவன் சொன்னபோது, ராஜாவும் தேசாதிபதியும் பெர்னீக்கேயாளும் அவர்களோடு உட்கார்ந்திருந்தவர்களும் எழுந்து, தனியேபோய்: இந்த மனிதன் மரணத்திற்காவது கட்டுகளுக்காவது தகுதியானது எதையும் செய்யவில்லை என்று தங்களுக்குள்ளே பேசிக்கொண்டார்கள். அகிரிப்பா பெஸ்துவைப் பார்த்து: இந்த மனிதன் இராயனுக்கு மேல்முறையீடு செய்யாதிருந்தானானால், இவனை விடுதலை செய்யமுடியும் என்றான்.
அப்போஸ்தலர் 26:1-32 பரிசுத்த பைபிள் (TAERV)
அகிரிப்பா பவுலை நோக்கி, “இப்போது உன்னைப்பற்றி நீயே பேசலாம்” என்றான். பின் பவுல் தனது கையை உயர்த்தித் தனக்கு சார்பாகப் பேசத் துவங்கினான். அவன், “அகிரிப்பா மன்னரே, யூதர்கள் எனக்கு எதிராகச் சொன்ன எல்லா வழக்குகளுக்கும் நான் பதில் கூறுவேன். நான் இன்று உங்கள் முன்பாக நின்று இதைச் செய்வதை ஓர் ஆசீர்வாதமாகக் கருதுகிறேன். நீங்கள் எல்லா யூத வழக்கங்களையும் யூதர்கள் வாதிடுகிற காரியங்களையும் மிகுதியாக அறிந்திருப்பதால் நான் உங்களோடு பேசுவதில் மகிழ்ச்சி கொள்ளுகிறேன். தயவு செய்து நான் சொல்வதைக் கவனமாகக் கேளுங்கள். “எனது முழு வாழ்க்கையைக் குறித்து எல்லா யூதர்களும் அறிந்திருக்கிறார்கள். முதலில் எனது சொந்த நாட்டில் நான் வாழ்ந்த வகையையும், பின்னர் எருசலேமில் வாழ்ந்த வகையையும் பற்றி அவர்கள் அறிந்திருக்கிறார்கள். இந்த யூதர்களுக்கு என்னைப் பல காலமாகத் தெரியும். அவர்கள் விரும்பினால் நான் ஒரு நல்ல பரிசேயன் என்று உங்களுக்குக் கூற முடியும். யூத மக்களில் பிற எல்லா பிரிவினரைக் காட்டிலும் பரிசேயர்கள் யூத மதவிதிகளைக் கவனமாகப் பின்பற்றுகிறார்கள். தேவன் நமது முன்னோருக்குக் கொடுத்த வாக்குறுதியை நான் நம்புவதால் இப்போது நான் விசாரணையிலிருக்கிறேன். நமது மக்களில் பன்னிரண்டு குலத்தினரும் பெறவேண்டுமென நம்பும் வாக்குறுதி இதுவே. இந்நம்பிக்கைக்காக யூதர்கள் தேவனுக்கு இரவும் பகலும் சேவை புரிகின்றனர். எனது மன்னரே, நான் இந்த வாக்குறுதியிலே நம்பிக்கை வைத்திருப்பதால் யூதர்கள் என் மீது பழி சுமத்துகின்றனர்! தேவன் மரணத்தினின்று மக்களை எழுப்ப முடியுமென்பது நம்ப இயலாதது என ஏன் மக்கள் எண்ணுகின்றனர்? “நான் பரிசேயனாக இருந்தபோது, நாசரேத்தைச் சேர்ந்த இயேசுவின் பெயருக்கு எதிராகப் பல காரியங்களைச் செய்ய எண்ணினேன். எருசலேமில் விசுவாசிகளுக்கு எதிராகப் பல காரியங்களைச் செய்தேன். விசுவாசிகளில் பலரைச் சிறையிலிடும் அதிகாரத்தைத் தலைமை ஆசாரியர் எனக்குக் கொடுத்திருந்தனர். இயேசுவின் சீஷர்கள் கொல்லப்பட்டபோது, அது ஒரு நல்ல செய்கை என்று நான் ஒப்புக்கொண்டேன். ஒவ்வொரு யூத ஜெப ஆலயத்திலும் நான் அவர்களைத் தண்டித்தேன். இயேசுவுக்கு எதிராக அவர்கள் தகாதவற்றைப் பேசச் செய்வதற்கு முயற்சித்தேன். அம்மக்களிடம் நான் கொண்ட அதிக சினத்தால் அவர்களைக் கண்டு பிடித்துத் துன்புறுத்துவதற்காக வேறு நகரங்களுக்கு சென்றேன். “ஒரு முறை தலைமை ஆசாரியர் தமஸ்கு நகரத்திற்குப் போகும் அதிகாரத்தையும் அனுமதியையும் கொடுத்தார்கள். நான் தமஸ்குவுக்குப் போய்க்கொண்டிருந்தேன். அது நண்பகல் பொழுது. நான் வானத்திலிருந்து ஓர் ஒளியைப் பார்த்தேன். சூரியனைக் காட்டிலும் அதிகமாக அவ்வொளி பிரகாசித்தது. அந்த ஒளி என்னையும் என்னோடு பயணம் செய்த மனிதர்களைச் சுற்றியும் பிரகாசித்தது. நாங்கள் எல்லோரும் நிலத்தில் வீழ்ந்தோம். அப்போது யூத மொழியில் ஒரு குரல் என்னோடு பேசுவதைக் கேட்டேன். அக்குரல் ‘சவுலே, சவுலே, ஏன் இக்கொடுமைகளை எனக்கு எதிராகச் செய்கிறாய்? நீ என்னை எதிர்ப்பதன் மூலம் உன்னை நீயே துன்புறுத்திக்கொண்டிருக்கிறாய்’ என்றது. “நான், ‘ஆண்டவரே, நீங்கள் யார்’ என்றேன். ஆண்டவர், ‘நான் இயேசு. நீ துன்பப்படுத்துகிறவர் நானே. எழுந்திரு. நான் உன்னை எனது ஊழியனாகத் தேர்ந்தெடுத்திருக்கிறேன். நீ எனக்குச் சாட்சியாக இருப்பாய். இன்று பார்த்த என்னைப் பற்றிய செய்திகளையும், உனக்கு நான் காட்டப்போகிற விஷயங்களையும் நீ மக்களுக்குக் கூறுவாய். நான் உனது சொந்த மக்கள் உன்னைத் துன்புறுத்துவதற்கு அனுமதிக்கமாட்டேன். யூதரல்லாத மக்களிடமிருந்தும் நான் உன்னைப் பாதுகாப்பேன். நான் உன்னை இம்மக்களிடம் அனுப்புகிறேன். உண்மையை இம்மக்களுக்கு நீ காட்டுவாய். அதனால் மக்கள் இருளிலிருந்து ஒளிக்குத் திரும்புவார்கள். சாத்தானின் அதிகாரத்திலிருந்து தேவனிடம் திரும்புவார்கள். மேலும் அவர்களது பாவங்கள் மன்னிக்கப்படும். என்னை நம்புவதால் பரிசுத்தமாக்கப்பட்ட மனிதரோடு அவர்களும் பங்குபெற முடியும்’ என்றார்” என்று கூறினான். பவுல் தொடர்ந்து பேசினான். “அகிரிப்பா மன்னரே, பரலோகத்திலிருந்து இக்காட்சி வந்தபோது, நான் அதற்குக் கீழ்ப்படிந்தேன். மக்கள் அவர்களது இருதயங்களையும் வாழ்க்கைகளையும் மாற்றிக்கொண்டு, தேவனிடம் திரும்ப வேண்டுமென்று அவர்களுக்குக் கூற ஆரம்பித்தேன். அவர்கள் மனம் மாறினார்கள் என்பதை வெளிக்காட்டும்படியான செயல்களைச் செய்யுமாறு மக்களுக்குக் கூறினேன். தமஸ்குவிலுள்ள மக்களுக்கு முதலில் இதைக் கூற ஆரம்பித்தேன். பின் எருசலேமுக்கும், யூதேயாவின் ஒவ்வொரு பாகத்திற்கும் சென்று, அங்குள்ள மக்களுக்கு இவற்றைக் கூறினேன். மேலும் யூதரல்லாத மக்களிடமும் நான் சென்றேன். “எனவேதான் யூதர்கள் என்னைப் பிடித்து, தேவாலயத்தில் என்னைக் கொல்ல முயன்றார்கள். ஆனால் தேவன் எனக்கு உதவினார். இன்னமும் எனக்கு உதவிக் கொண்டிருக்கிறார். தேவனுடைய உதவியால் நான் இன்று இங்கு நின்று கொண்டிருக்கிறேன். நான் கண்ட மகத்தானதும் எளியதுமானவற்றையும் கூறிக்கொண்டுள்ளேன். ஆனால் நான் எதையும் புதிதாகக் கூறிக் கொண்டிருக்கவில்லை. பின்னர் நிகழுமென்று மோசேயும் தீர்க்கதரிசிகளும் கூறியவற்றை நான் கூறிக்கொண்டிருக்கிறேன். தொல்லைகளை அனுபவித்தபின் மரணத்தின்று முதன் முதலில் எழுபவர் கிறிஸ்துவே என்று அவர்கள் கூறினர். மோசேயும் தீர்க்கதரிசிகளும் கிறிஸ்து யூத மக்களுக்கும் யூதரல்லாத மக்களுக்கும் ஒளியைத் தருபவர் என்று கூறினார்கள்” என்றான். பவுல் இவற்றைத் தனக்குச் சாதகமாகக் கூறிக்கொண்டிருந்தபொழுது பெஸ்து உரக்க, “பவுலே, நீ பைத்தியக்காரன்! அதிகப் படிப்பு உன்னைப் பித்தனாக்கிவிட்டது!” என்றான். பவுல், “மிக மாட்சிமைமிக்க பெஸ்துவே, நான் பித்தன் அல்லன். நான் கூறுபவை உண்மையானவை. எனது வார்த்தைகள் ஒரு மூடனின் வார்த்தைகள் அல்ல. அவை உண்மையானவையும், ஞானமிக்கவையும் ஆகும். அகிரிப்பா மன்னர் இவற்றை நன்கு அறிந்திருக்கிறார். நான் சுதந்திரமாக அவரோடு பேசமுடியும். இவை அனைத்தையும் குறித்து அவர் கேள்விப்பட்டிருக்கிறார் என்பதை நான் அறிவேன். ஏன்? இவையனைத்தும் மக்கள் காணும்படியாக நடந்தவையே. அகிரிப்பா மன்னரே, தீர்க்கதிரிசிகள் எழுதியவற்றை நம்புகிறீர்களா? நீங்கள் நம்புகிறீர்கள் என்பது எனக்குத் தெரியும்!” என்றான். அகிரிப்பா பவுலிடம் “நீ அவ்வளவு எளிதாக என்னைக் கிறிஸ்தவனாக மாறுவதற்குத் தூண்ட முடியும் என்று நினைக்கிறாயா?” என்று கேட்டான். பவுல், “அது எளிதானதா கடினமானதா, என்பது முக்கியமல்ல. நீங்கள் மட்டுமல்ல, என்னைக் கேட்கிற இங்குள்ள ஒவ்வொருவரும் இன்று இரட்சிக்கப்பட்டு எனக்குப் பூட்டப்பட்டுள்ள இந்த விலங்குகளைத் தவிர்த்து எல்லாவற்றிலும் என்னைப் போலாக வேண்டுமென்று தேவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்” என்றான். அகிரிப்பா மன்னரும் கவர்னர் பெஸ்துவும் பெர்னிசும் அவர்களோடு அமர்ந்திருந்த எல்லா மக்களும் எழுந்து ஒருவரோடொருவர் பேசிக்கொண்டு அந்த அறையை விட்டுச் சென்றார்கள். அவர்கள், “இம்மனிதன் கொல்லப்படவோ, சிறையில் அடைக்கப்படவோ கூடாது, உண்மையிலேயே தவறான எதையும் அவன் செய்யவில்லை!” என்றார்கள். அகிரிப்பா பெஸ்துவை நோக்கி, “அவன் மட்டும் இராயரிடம் விண்ணப்பிக்காமலிருந்திருந்தால் அவன் விடுதலை செய்யப்பட்டிருக்கலாம்” என்றான்.
அப்போஸ்தலர் 26:1-32 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
அகிரிப்பா பவுலை நோக்கி: நீ உனக்காகப் பேச உனக்கு உத்தரவாகிறது என்றான். அப்பொழுது பவுல் கையை நீட்டி, தனக்காக உத்தரவு சொல்லத் தொடங்கினான். அகிரிப்பா ராஜாவே, யூதர்கள் என்மேல் சாட்டுகிற சகல காரியங்களைக்குறித்தும் நான் இன்றைக்கு உமக்கு முன்பாக உத்தரவு சொல்லப்போகிறபடியினாலே என்னைப் பாக்கியவான் என்றெண்ணுகிறேன். விசேஷமாய் நீர் யூதருடைய சகலமுறைமைகளையும் தர்க்கங்களையும் அறிந்தவரானதால் அப்படி எண்ணுகிறேன்; ஆகையால் நான் சொல்வதைப் பொறுமையோடே கேட்கும்படி உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன். நான் என் சிறுவயதுமுதற்கொண்டு, எருசலேமிலே என் ஜனத்தாருக்குள்ளே இருந்தபடியால், ஆதிமுதல் நான் நடந்த நடக்கையை யூதரெல்லாரும் அறிந்திருக்கிறார்கள். நம்முடைய மார்க்கத்திலுள்ள சமயபேதங்களில் மிகவும் கண்டிப்பான சமயத்துக்கு இசைந்தபடி பரிசேயனாய் நடந்தேனென்று சாட்சிசொல்ல அவர்களுக்கு மனதிருந்தால் சொல்லலாம். தேவன் நம்முடைய பிதாக்களுக்கு அருளிச்செய்த வாக்குத்தத்தம் நிறைவேறுமென்கிற நம்பிக்கைக்காகவே நான் இப்பொழுது நியாயத்தீர்ப்படைகிறவனாய் நிற்கிறேன். இரவும் பகலும் இடைவிடாமல் ஆராதனை செய்துவருகிற நம்முடைய பன்னிரண்டு கோத்திரத்தாரும் அந்த வாக்குத்தத்தம் நிறைவேறுமென்று நம்பியிருக்கிறார்கள். அகிரிப்பா ராஜாவே, அந்த நம்பிக்கையினிமித்தமே யூதர்கள் என்மேல் குற்றஞ்சாட்டுகிறார்கள். தேவன் மரித்தோரை எழுப்புகிறது நம்பப்படாத காரியமென்று நீங்கள் எண்ணுகிறதென்ன? முன்னே நானும் நசரேயனாகிய இயேசுவின் நாமத்திற்கு விரோதமாய் அநேகக் காரியங்களை நடப்பிக்கவேண்டுமென்று நினைத்திருந்தேன். அப்படியே நான் எருசலேமிலும் செய்தேன். நான் பிரதான ஆசாரியர்களிடத்தில் அதிகாரம் பெற்று, பரிசுத்தவான்களில் அநேகரைச் சிறைச்சாலைகளில் அடைத்தேன்; அவர்கள் கொலைசெய்யப்படுகையில் நானும் சம்மதித்திருந்தேன். சகல ஜெப ஆலயங்களிலும் நான் அவர்களை அநேகந்தரம் தண்டித்து, தேவதூஷணஞ்சொல்லக் கட்டாயப்படுத்தினேன்; அவர்கள்பேரில் மூர்க்கவெறிகொண்டவனாய் அந்நியப்பட்டணங்கள்வரைக்கும் அவர்களைத் துன்பப்படுத்தினேன். இப்படிச் செய்துவருகையில், நான் பிரதான ஆசாரியர்களிடத்தில் அதிகாரமும் உத்தரவும் பெற்று, தமஸ்குவுக்குப் போகும்போது, மத்தியான வேளையில், ராஜாவே, நான் வழியிலே சூரியனுடைய பிரகாசத்திலும் அதிகமான ஒளி வானத்திலிருந்து என்னையும் என்னுடனேகூடப் பிரயாணம்பண்ணினவர்களையும் சுற்றிப் பிரகாசிக்கக்கண்டேன். நாங்களெல்லாரும் தரையிலே விழுந்தபோது: சவுலே, சவுலே, நீ ஏன் என்னைத் துன்பப்படுத்துகிறாய்? முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாமென்று எபிரெயு பாஷையிலே என்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக் கேட்டேன். அப்பொழுது நான்: ஆண்டவரே, நீர் யார் என்றேன். அதற்கு அவர்: நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே. இப்பொழுது நீ எழுந்து, காலூன்றி நில். நீ கண்டவைகளையும் நான் உனக்குத் தரிசனமாகிக் காண்பிக்கப்போகிறவைகளையும் குறித்து உன்னை ஊழியக்காரனாகவும் சாட்சியாகவும் ஏற்படுத்துகிறதற்காக உனக்குத் தரிசனமானேன். உன் சுயஜனத்தாரிடத்தினின்றும் அந்நிய ஜனத்தாரிடத்தினின்றும் உன்னை விடுதலையாக்கி, அவர்கள் என்னைப் பற்றும் விசுவாசத்தினாலே பாவமன்னிப்பையும், பரிசுத்தமாக்கப்பட்டவர்களுக்குரிய சுதந்தரத்தையும் பெற்றுக்கொள்ளும்படியாக, அவர்கள் இருளைவிட்டு ஒளியினிடத்திற்கும், சாத்தானுடைய அதிகாரத்தைவிட்டு தேவனிடத்திற்கும் திரும்பும்படிக்கு நீ அவர்களுடைய கண்களைத் திறக்கும்பொருட்டு, இப்பொழுது உன்னை அவர்களிடத்திற்கு அனுப்புகிறேன் என்றார். ஆகையால், அகிரிப்பா ராஜாவே, நான் அந்தப் பரமதரிசனத்துக்குக் கீழப்படியாதவனாயிருக்கவில்லை. முன்பு தமஸ்குவிலும் எருசலேமிலும் யூதேயா தேசமெங்குமுள்ளவர்களிடத்திலும், பின்பு புறஜாதியாரிடத்திலும் நான் போய், அவர்கள் தேவனிடத்திற்கு மனந்திரும்பிக் குணப்படவும், மனந்திரும்புதலுக்கேற்ற கிரியைகளைச் செய்யவும் வேண்டுமென்று அறிவித்தேன். இதினிமித்தமே யூதர்கள் தேவாலயத்திலே என்னைப் பிடித்துக் கொலைசெய்யப் பிரயத்தனம் பண்ணினார்கள். ஆனாலும் தேவ அநுக்கிரகம் பெற்று, நான் இந்நாள்வரைக்கும் சிறியோருக்கும் பெரியோருக்கும் சாட்சிகூறி வருகிறேன். தீர்க்கதரிசிகளும் மோசேயும் முன்னமே சொல்லியிருந்தபடியே, கிறிஸ்து பாடுபடவேண்டியதென்றும், மரித்தோர் உயிர்த்தெழுதலில் அவர் முதல்வராகி, சுயஜனங்களுக்கும் அந்நிய ஜனங்களுக்கும் ஒளியை வெளிப்படுத்துகிறவரென்றும் சொல்லுகிறேனேயன்றி, வேறொன்றையும் நான் சொல்லுகிறதில்லை என்றான். இவ்விதமாய் அவன் தனக்காக உத்தரவு சொல்லுகையில், பெஸ்து உரத்தசத்தமாய்: பவுலே, நீ பிதற்றுகிறாய், அதிகக் கல்வி உனக்குப் பயித்தியமுண்டாக்குகிறது என்றான். அதற்கு அவன்: கனம்பொருந்திய பெஸ்துவே, நான் பயித்தியக்காரனல்ல, சத்தியமும் சொஸ்தபுத்தியுமுள்ள வார்த்தைகளைப் பேசுகிறேன். இந்தச் சங்கதிகளை ராஜா அறிந்திருக்கிறார்; ஆகையால் தைரியமாய் அவருக்கு முன்பாகப் பேசுகிறேன்; இவைகளில் ஒன்றும் அவருக்கு மறைவானதல்லவென்று எண்ணுகிறேன்; இது ஒரு மூலையிலே நடந்த காரியமல்ல. அகிரிப்பா ராஜாவே, தீர்க்கதரிசிகளை விசுவாசிக்கிறீரா? விசுவாசிக்கிறீர் என்று அறிவேன் என்றான். அப்பொழுது அகிரிப்பா பவுலை நோக்கி: நான் கிறிஸ்தவனாகிறதற்குக் கொஞ்சங்குறைய நீ என்னைச் சம்மதிக்கப்பண்ணுகிறாய் என்றான். அதற்குப் பவுல்: நீர்மாத்திரமல்ல, இன்று என் வசனத்தைக் கேட்கிற யாவரும், கொஞ்சங்குறையமாத்திரம் அல்ல, இந்தக் கட்டுகள் தவிர, முழுவதும் என்னைப்போலாகும்படி தேவனை வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான். இவைகளை அவன் சொன்னபோது, ராஜாவும் தேசாதிபதியும் பெர்னீக்கேயாளும் அவர்களுடனேகூட உட்கார்ந்திருந்தவர்களும் எழுந்து, தனியே போய்: இந்த மனுஷன் மரணத்துக்காவது கட்டுகளுக்காவது பாத்திரமானதொன்றையும் செய்யவில்லையென்று தங்களுக்குள்ளே பேசிக்கொண்டார்கள். அகிரிப்பா பெஸ்துவை நோக்கி: இந்த மனுஷன் இராயனுக்கு அபயமிடாதிருந்தானானால், இவனை விடுதலைபண்ணலாகும் என்றான்.