அப்போஸ்தலர் 25:23-27

அப்போஸ்தலர் 25:23-27 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

மறுநாள் அகிரிப்பா அரசனும், பெர்னிக்கேயாளும் சிறப்பான வரவேற்புடன் மக்கள் அரங்கத்திற்குள் வந்தார்கள். அவர்களுடன் உயர் அதிகாரிகளும், பட்டணத்தில் உயர் மதிப்புக்குரிய மனிதரும் வந்தார்கள். பெஸ்துவின் கட்டளைப்படி, பவுல் அங்கு கொண்டுவரப்பட்டான். அப்பொழுது பெஸ்து: “அகிரிப்பா அரசனே, எங்களோடு இங்கே இருக்கிறவர்களே, இவனை நீங்கள் பார்க்கிறீர்கள்; இவனைக் குறித்து எருசலேமிலும், இங்கே செசரியாவிலும் யூத சமூகத்தவர் யாவரும் என்னிடம், அவன் இனியும் உயிர் வாழக்கூடாது என்று சத்தமிட்டு முறையிட்டார்கள். ஆனால் மரண தண்டனை பெறக்கூடிய எதையும் அவன் செய்யவில்லை என்று நான் கண்டுகொண்டேன். இவன் ரோமப் பேரரசன் சீசருக்கு மேல்முறையீடு செய்திருக்கிறபடியால், நான் இவனை ரோம் நகருக்கு அனுப்பத் தீர்மானித்திருக்கிறேன். ஆனால் ரோமப் பேரரசன் சீசருக்கு இவனைக் குறித்து நான் எழுதுவதற்கு குறிப்பிடத்தக்கது எதுவும் என்னிடம் இல்லை. எனவேதான், நான் இப்பொழுது இவனை உங்கள் எல்லோருக்கும் முன்பாகக் கொண்டுவந்திருக்கிறேன். விசேஷமாக, அகிரிப்பா அரசனுக்கு முன்பாகக் கொண்டுவந்திருக்கிறேன். இந்த விசாரணையின் முடிவில், இவனைக் குறித்து எழுதுவதற்கு ஏதாவது எனக்குக் கிடைக்கும் என்று நம்புகிறேன். ஒரு கைதிக்கு எதிரான குற்றச்சாட்டுகளைக் குறிப்பிட்டு எழுதாமல் அவனை அனுப்புவது நியாயமல்ல என்று நான் எண்ணுகிறேன்” என்றான்.

அப்போஸ்தலர் 25:23-27 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

மறுநாளிலே அகிரிப்பாவும் பெர்னீக்கேயாளும் மிகுந்த ஆடம்பரத்துடனே வந்து படைத்தலைவர்களோடும் பட்டணத்து தலைவர்களோடும் நீதிமன்றத்தில் நுழைந்தார்கள். உடனே பெஸ்துவினுடைய ஆணையின்படி பவுல் அழைத்துவரப்பட்டான். அப்பொழுது பெஸ்து: அகிரிப்பா ராஜாவே, எங்களோடுகூட இந்த இடத்தில் வந்திருக்கிறவர்களே, நீங்கள் காண்கிற இந்த மனிதனைக்குறித்து யூதமக்களெல்லோரும் எருசலேமிலும் இந்த இடத்திலும் என்னை வருந்திக் கேட்டுக்கொண்டு, இவன் இனி உயிரோடிருக்கிறது சரியில்லை என்று சொல்லிச் சத்தமிட்டார்கள். இவன் மரணத்திற்கு ஏதுவானதொன்றையும் செய்யவில்லையென்று நான் அறிந்துகொண்டதினாலும், இவன் தானே இராயனுக்கு மேல்முறையீடு செய்ததினாலும், அவரிடத்தில் இவனை அனுப்பும்படி தீர்மானித்தேன். இவனைக்குறித்து ஆண்டவனுக்கு எழுதுகிறதற்கு உறுதிசெய்யப்பட்ட காரியமொன்றும் எனக்கு புரியவில்லை. காவல்பண்ணப்பட்ட ஒருவன் செய்த குற்றங்களை எடுத்துக்காட்டாமல் அனுப்புகிறது புத்தியீனமான காரியமென்று எனக்குத் தோன்றுகிறபடியினாலே, இவனை விசாரித்துக் கேட்டபின்பு எழுதவேண்டிய செய்தி ஏதாவது எனக்கு புரியும் என்று, இவனை உங்களுக்கு முன்பாகவும், விசேஷமாக அகிரிப்பா ராஜாவே, உமக்கு முன்பாகவும் கொண்டுவந்தேன் என்றான்.

அப்போஸ்தலர் 25:23-27 பரிசுத்த பைபிள் (TAERV)

மறுநாள் அகிரிப்பாவும் பெர்னிசும் அங்கு வந்தார்கள். மிக முக்கியமான மனிதர்களுக்குரிய ஆடைகளை உடுத்தி, அதற்கேற்றவாறு நடந்துகொண்டனர். அகிரிப்பாவும் பெர்னிசும் படை அதிகாரிகளும், செசரியாவின் முக்கிய மனிதர்களும் நியாயத்தீர்ப்பு அறைக்குள் சென்றனர். பெஸ்து பவுலை உள்ளே அழைத்து வருமாறு வீரர்களுக்குக் கட்டளையிட்டான். பெஸ்து, “அகிரிப்பா மன்னரும் இங்குள்ள எல்லோரும் இப்போது இம்மனிதனைப் பார்க்கிறீர்கள். இங்கும், எருசலேமிலுள்ள எல்லா யூத மக்களும் இவனுக்கெதிராக என்னிடம் குற்றம் சாட்டியுள்ளனர். அவர்கள் குற்றங்களைக் கூறியபோது, அவனை இனிமேலும் உயிரோடு விட்டு வைக்கக்கூடாதென்று கூக்குரலிட்டனர். நான் நியாயங்கேட்டபோது அவனிடம் எந்தத் தவறையும் காணவில்லை. அவனுக்கு மரண தண்டனை விதிக்குமளவிற்கு எந்தக் காரணமும் இருக்கவில்லை. அவன் இராயரிடம் நியாயம் பெற விரும்புகிறான். எனவே அவனை ரோமுக்கு அனுப்பத் தீர்மானித்துள்ளேன். இம்மனிதன் செய்த தவறாக இராயருக்கு எழுதுவதற்குத் தீர்மானமாக எதுவும் இல்லை. எனவே உங்களுக்கு முன்பாக, விசேஷமாக அகிரிப்பா மன்னரே, உங்களுக்கு முன்பாக அவனைக் கொண்டு வந்துள்ளேன். நீங்கள் அவனை வினவலாம். இராயருக்கு ஏதாவது எழுதுமாறு கூறலாம். ஒரு கைதிக்கு எதிராக எந்தக் குற்றத்தையும் குறிப்பிடாமல் அவனை இராயரிடம் அனுப்புவது மூடத்தனமானது என்று நினைக்கிறேன்” என்றான்.

அப்போஸ்தலர் 25:23-27 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

மறுநாளிலே அகிரிப்பாவும் பெர்னீக்கேயாளும் மிகுந்த ஆடம்பரத்துடனே வந்து சேனாதிபதிகளோடும் பட்டணத்துப் பிரதான மனுஷரோடுங்கூட நியாயஸ்தலத்தில் பிரவேசித்தார்கள். உடனே பெஸ்துவினுடைய கட்டளையின்படி பவுல் கொண்டுவரப்பட்டான். அப்பொழுது பெஸ்து: அகிரிப்பா ராஜாவே, எங்களோடேகூட இவ்விடத்தில் வந்திருக்கிறவர்களே, நீங்கள் காண்கிற இந்த மனுஷனைக்குறித்து யூதஜனங்களெல்லாரும் எருசலேமிலும் இவ்விடத்திலும் என்னை வருந்திக் கேட்டுக்கொண்டு, இவன் இனி உயிரோடிருக்கிறது தகாதென்று சொல்லிக் கூக்குரலிட்டார்கள். இவன் மரணத்துக்குப் பாத்திரமானதொன்றையும் செய்யவில்லையென்று நான் அறிந்துகொண்டதினாலும், இவன்தானே இராயனுக்கு அபயமிட்டபடியினாலும், அவரிடத்தில் இவனை அனுப்பும்படி தீர்மானம்பண்ணினேன். இவனைக்குறித்து ஆண்டவனுக்கு எழுதுகிறதற்கு நிச்சயப்பட்ட காரியமொன்றும் எனக்கு விளங்கவில்லை. காவல்பண்ணப்பட்ட ஒருவன் செய்த குற்றங்களை எடுத்துக்காட்டாமல் அனுப்புகிறது புத்தியீனமான காரியமென்று எனக்குத் தோன்றுகிறபடியினாலே, இவனை விசாரித்துக் கேட்டபின்பு எழுதத்தக்க விசேஷம் ஏதாகிலும் எனக்கு விளங்கும்படி, இவனை உங்களுக்கு முன்பாகவும், விசேஷமாய் அகிரிப்பா ராஜாவே, உமக்கு முன்பாகவும் கொண்டுவந்தேன் என்றான்.