அப்போஸ்தலர் 23:1-5

அப்போஸ்தலர் 23:1-5 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

பவுல் ஆலோசனைச் சங்கத்தாரை உற்றுப்பார்த்து: சகோதரரே, இந்நாள்வரைக்கும் எல்லா விஷயங்களிலும் நான் நல்மனச்சாட்சியோடே தேவனுக்குமுன்பாக நடந்துவந்தேன் என்று சொன்னான். அப்பொழுது பிரதானஆசாரியனாகிய அனனியா அவனுக்குச் சமீபமாய் நின்றவர்களை நோக்கி: இவன் வாயில் அடியுங்கள் என்று கட்டளையிட்டான். அப்பொழுது பவுல் அவனைப்பார்த்து: வெள்ளையடிக்கப்பட்ட சுவரே, தேவன் உம்மை அடிப்பார்; நியாயப்பிரமாணத்தின்படி என்னை நியாயம் விசாரிக்கிறவராய் உட்கார்ந்திருக்கிற நீர் நியாயப்பிரமாணத்திற்கு விரோதமாய் என்னை அடிக்கச் சொல்லலாமா என்றான். சமீபத்திலே நின்றவர்கள்: தேவனுடைய பிரதானஆசாரியரை வைகிறாயா என்றார்கள். அதற்குப் பவுல்: சகோதரரே, இவர் பிரதானஆசாரியரென்று எனக்குத் தெரியாது; உன் ஜனத்தின் அதிபதியைத் தீது சொல்லாயாக என்று எழுதியிருக்கிறதே என்றான்.

அப்போஸ்தலர் 23:1-5 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

பவுல் ஆலோசனைச் சங்கத்திலுள்ளவர்களை நேருக்கு நேராகப் பார்த்து, “சகோதரரே, இன்றுவரை ஒரு நல்ல மனசாட்சியுடனே நான் இறைவனுக்குரிய எனது கடமையை நிறைவேற்றியிருக்கிறேன்” என்றான். பவுல் இதைச் சொன்னபோது, பிரதான ஆசாரியனான அனனியா, பவுலின் அருகில் நின்றவர்களைப் பார்த்து, அவனுடைய வாயிலே அடிக்கும்படி உத்தரவிட்டான். அப்பொழுது பவுல் அவனிடம், “வெள்ளையடிக்கப்பட்ட சுவரே, இறைவன் உம்மை அடிப்பார்! மோசேயின் சட்டத்தின்படி என்னை நியாயம் விசாரிப்பதற்கு, நீர் அங்கே உட்கார்ந்திருக்கிறீர். ஆனால் என்னை அடிக்கும்படி கட்டளையிட்டு, நீரே மோசேயின் சட்டத்தை மீறுகிறீரே!” என்றான். அப்பொழுது பவுலின் அருகே நின்றவர்கள், “இறைவனுடைய பிரதான ஆசாரியனை அவமதிக்கத் துணிகிறாயா?” என்றார்கள். அதற்குப் பவுல், “சகோதரரே, அவர் பிரதான ஆசாரியன் என்று எனக்குத் தெரியாது; ஏனெனில், ‘உனது மக்களின் ஆளுநனைக் குறித்துத் தீமையாய்ப் பேசவேண்டாம்’ என்று எழுதியிருக்கிறதே” என்றான்.

அப்போஸ்தலர் 23:1-5 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

பவுல் ஆலோசனைச் சங்கத்தினரை உற்றுப்பார்த்து: சகோதரர்களே, இந்தநாள்வரை எல்லா விஷயங்களிலும் நான் நல்மனச்சாட்சியோடு தேவனுக்குமுன்பாக நடந்துவந்தேன் என்று சொன்னான். அப்பொழுது பிரதான ஆசாரியனாகிய அனனியா அவனுக்கு அருகில் நின்றவர்களைப் பார்த்து: இவன் வாயில் அடியுங்கள் என்று கட்டளையிட்டான். அப்பொழுது பவுல் அவனைப் பார்த்து: வெள்ளையடிக்கப்பட்ட சுவரே, தேவன் உம்மை அடிப்பார்; நியாயப்பிரமாணத்தின்படி என்னை நியாயம் விசாரிக்க உட்கார்ந்திருக்கிற நீர் நியாயபிரமாணத்திற்கு விரோதமாக என்னை அடிக்கச்சொல்லலாமா என்றான். அருகில் நின்றவர்கள்: தேவனுடைய பிரதான ஆசாரியரை அவமதித்துப் பேசலாமா என்றார்கள். அதற்குப் பவுல்: சகோதரர்களே, இவர் பிரதான ஆசாரியரென்று எனக்குத் தெரியாது; உன் மக்களின் தலைவரை குற்றம் சொல்லாதே” என்று எழுதியிருக்கிறதே என்றான்.

அப்போஸ்தலர் 23:1-5 பரிசுத்த பைபிள் (TAERV)

யூத சங்கக் கூட்டத்தினரைப் பார்த்துப் பவுல், “சகோதரர்களே! தேவனுக்கு முன்பாக நல்ல வகையில் என் வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறேன். சரியென்று நான் நினைத்ததையே எப்போதும் செய்துகொண்டிருக்கிறேன்” என்றான். தலைமை ஆசாரியனான அனனியா அங்கிருந்தான். பவுல் கூறுவதைக் கேட்ட அனனியா, பவுலின் அருகே நின்ற மனிதரை நோக்கிப் பவுலின் வாயில் அடிக்குமாறு கூறினான். பவுல் அனனியாவைப் பார்த்து, “தேவன் உன்னையும் அடிப்பார்! அழுக்கான சுவர் வெள்ளையடிக்கப்பட்டது போன்று நீ காணப்படுகிறாய்! நீ அங்கு அமர்ந்து மோசேயின் சட்டப்படி என்னை நியாயந்தீர்க்கிறாய். ஆனால் என்னை அடிக்குமாறு அவர்களிடம் கூறிக்கொண்டிருக்கிறாய். அது மோசேயின் சட்டத்திற்கு எதிரானது” என்றான். பவுலின் அருகில் நின்றிருந்த மனிதர்கள் அவனை நோக்கி, “தேவனுடைய தலைமைஆசாரியனிடம் நீ இவ்வாறு பேசக்கூடாது. நீ அவரை அவமானப்படுத்திக் கொண்டிருக்கிறாய்!” என்றனர். பவுல், “சகோதரர்களே, இம்மனிதன் தலைமை ஆசாரியன் என்பது எனக்குத் தெரியாது. வேதவாக்கியங்களில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது, ‘உன் மக்களின் தலைவர்களைக் குறித்துத் தீயவற்றைக் கூறலாகாது’ என்று எழுதப்பட்டள்ளது” என்றான்.