அப்போஸ்தலர் 20:31-36
அப்போஸ்தலர் 20:31-36 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
ஆனபடியால், நான் மூன்று வருஷகாலமாய் இரவும் பகலும் கண்ணீரோடே இடைவிடாமல் அவனவனுக்குப் புத்தி சொல்லிக்கொண்டுவந்ததை நினைத்து விழித்திருங்கள். இப்பொழுதும் சகோதரரே, நீங்கள் பக்திவிருத்தியடையவும், பரிசுத்தமாக்கப்பட்ட அனைவருக்குள்ளும் உங்களுக்குச் சுதந்தரத்தைக் கொடுக்கவும் வல்லவராயிருக்கிற தேவனுக்கும் அவருடைய கிருபையுள்ள வசனத்துக்கும் உங்களை ஒப்புக்கொடுக்கிறேன். ஒருவனுடைய வெள்ளியையாகிலும் பொன்னையாகிலும் வஸ்திரத்தையாகிலும் நான் இச்சிக்கவில்லை. நீங்கள் அறிந்திருக்கிறபடி, எனக்கும் என்னுடனேகூடி இருந்தவர்களுக்கும் வேண்டியவைகளுக்காக இந்தக்கைகளே வேலைசெய்தது. இப்படிப் பிரயாசப்பட்டு, பலவீனரைத் தாங்கவும், வாங்குகிறதைப்பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம் என்று கர்த்தராகிய இயேசு சொன்ன வார்த்தைகளை நினைக்கவும் வேண்டுமென்று எல்லா விதத்திலேயும் உங்களுக்குக் காண்பித்தேன் என்றான். இவைகளைச் சொன்னபின்பு, அவன் முழங்காற்படியிட்டு, அவர்களெல்லாரோடுங்கூட ஜெபம் பண்ணினான்.
அப்போஸ்தலர் 20:31-36 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
எனவே நீங்கள் கவனமாயிருங்கள்! நான் மூன்று வருடங்களாக இரவும், பகலும் உங்களைக் கண்ணீருடன் எச்சரிக்கைச் செய்ததை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். “இப்பொழுது நான் உங்களை இறைவனுக்கும், அவருடைய கிருபையுள்ள வார்த்தைக்கும் ஒப்புக்கொடுத்திருக்கிறேன்; அந்த வார்த்தையே உங்களைக் கட்டியெழுப்பி அதுவே பரிசுத்தமாக்கப்பட்ட எல்லோருடனும்கூட உங்களுக்கும் உரிமைச்சொத்தைக் கொடுக்க வல்லமையுள்ளது. யாருடைய வெள்ளிக்கோ, தங்கத்திற்கோ, உடைக்கோ நான் ஆசைப்படவில்லை. என்னுடைய தேவைகளுக்காகவும், என்னுடன் இருந்தவர்களின் தேவைகளுக்காகவும், என் கைகளினாலேயே வேலைசெய்தேன் என்பது உங்களுக்குத் தெரியும். நான் செய்த இவை எல்லாவற்றிலும், இவ்விதம் கஷ்டப்பட்டு வேலைசெய்தே, நாம் நலிவுற்றோர்க்கு உதவிசெய்ய வேண்டும் என்று, நான் உங்களுக்கு ஒரு முன்மாதிரியைக் காண்பித்தேன். ‘பெற்றுக்கொள்வதைப் பார்க்கிலும், கொடுக்கிறதே அதிக ஆசீர்வாதம்’ என்று கர்த்தராகிய இயேசு தாமே சொன்னதையும் உங்களுக்கு நினைவுப்படுத்தினேன்” என்றான். பவுல் இதைச் சொன்னபின்பு, அவர்கள் எல்லோருடனும் முழங்காற்படியிட்டு மன்றாடினான்.
அப்போஸ்தலர் 20:31-36 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
எனவே, நான் மூன்று வருடங்கள் இரவும் பகலும் கண்ணீரோடு இடைவிடாமல் உங்கள் அனைவருக்கும் புத்திச் சொன்னதை நினைத்து விழித்திருங்கள். இப்பொழுதும் சகோதரர்களே, உங்களுடைய பக்தி பெருகவும், பரிசுத்தமாக்கப்பட்ட அனைவருக்குள்ளும் உங்களுக்கு உரிமைப்பங்கைக் கொடுக்கவும் வல்லவராக இருக்கிற தேவனுக்கும் அவருடைய கிருபையுள்ள வசனத்திற்கும் உங்களை ஒப்புக்கொடுக்கிறேன். ஒருவனுடைய வெள்ளியையோ பொன்னையோ ஆடையையோ நான் இச்சிக்கவில்லை. நீங்கள் அறிந்திருக்கிறபடி, எனக்கும் என்னுடனே கூடி இருந்த மக்களுக்காகவும் இந்தக் கைகளே வேலைசெய்தது. இப்படிப் பிரயாசப்பட்டு, பலவீனரைத் தாங்கவும், வாங்குகிறதைவிட கொடுக்கிறதே பாக்கியம் என்று கர்த்தராகிய இயேசு சொன்ன வார்த்தைகளை நினைக்கவும் வேண்டுமென்று எல்லாவிதத்திலேயும் உங்களுக்குக் காண்பித்தேன் என்றான். இவைகளைச் சொன்னபின்பு, அவன் முழங்கால்படியிட்டு, அவர்கள் எல்லோரோடும் சேர்ந்து ஜெபம்பண்ணினான்.
அப்போஸ்தலர் 20:31-36 பரிசுத்த பைபிள் (TAERV)
எனவே எச்சரிக்கையாக இருங்கள்! எப்போதும் இதை நினைவுகூருங்கள். நான் உங்களோடு மூன்று ஆண்டுகள் இருந்தேன். இக்காலத்தில் நான் உங்களை எச்சரிப்பதை நிறுத்தவில்லை. நான் இரவும் பகலும் உங்களுக்கு உபதேசித்தேன். நான் அடிக்கடி உங்களுக்காக அழுதேன். “நான் இப்போது உங்களை தேவனுக்கு நியமம் செய்கிறேன். உங்களை பலப்படுத்தக் கூடிய தேவனுடைய கிருபையைப் பற்றிய தேவனுடைய செய்தியைச் சார்ந்திருக்கிறேன். தேவன் தனது பரிசுத்த மக்கள் எல்லோருக்கும் கொடுக்கும் ஆசீர்வாதத்தை இந்தச் செய்தி உங்களுக்குக் கொடுக்கும். நான் உங்களோடிருந்தபோது, பிறருடைய பணத்தையோ விலை உயர்ந்த ஆடைகளையோ விரும்பவில்லை. எனது தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்வதற்கும், என்னோடிருந்த மக்களின் தேவைகளுக்காகவும் எனது கைகளைக் கொண்டே நான் எப்போதும் உழைத்தேன் என்பது உங்களுக்குத் தெரியும். நான் செய்ததைப் போலவே நீங்களும் உழைத்து எளிய மக்களுக்கு உதவ வேண்டுமென எப்போதும் உங்களுக்குச் சுட்டிக் காட்டினேன். கர்த்தராகிய இயேசுவின் வார்த்தைகளை நினைவு கூருவதற்கு உங்களுக்குக் கற்பித்தேன். ‘நீங்கள் ஒன்றைப் பெறும் வேளையைக் காட்டிலும் பிறருக்குக் கொடுக்கும்போதே மகிழ்ச்சியாக இருங்கள்’ என்று இயேசு கூறினார்” என்றான். இவ்விஷயங்களைக் கூறி முடித்த பின்னர், பவுல் எல்லோருடனும் முழங்காலிட்டுப் பிரார்த்தனை செய்தான்.