அப்போஸ்தலர் 20:22-32

அப்போஸ்தலர் 20:22-32 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

“இப்பொழுதும், பரிசுத்த ஆவியானவரால் கட்டுண்டவனாக நான் எருசலேமுக்குப் போகிறேன். அங்கே எனக்கு என்ன நடக்கும் என்பது எனக்குத் தெரியாது. நான் சிறையில் போடப்படுவேன் என்றும், பாடுகளை அனுபவிக்கவேண்டும் என்றும் எல்லாப் பட்டணங்களிலும், பரிசுத்த ஆவியானவர் என்னை எச்சரிக்கை செய்கிறார். இதை மட்டுமே நான் அறிவேன். ஆனால் என் வாழ்வு எனக்கு ஒன்றுமில்லை என்று நான் கருதுகிறேன். எனக்கு ஒப்புவிக்கப்பட்ட ஓட்டத்தை ஓடி முடிக்கவும், கர்த்தராகிய இயேசு எனக்குக் கொடுத்திருக்கிற ஊழியத்தை நிறைவேற்றவுமே நான் விரும்புகிறேன். இறைவனுடைய கிருபையின் நற்செய்திக்கு சாட்சி கொடுக்கும் ஊழியத்தையே அவர் எனக்குக் கொடுத்திருக்கிறார். “உங்கள் மத்தியில் நான் இறைவனுடைய அரசைப்பற்றிப் பிரசங்கித்ததைக் கேட்ட யாவரும் என்னை இனி ஒருபோதும் காணமாட்டீர்கள் என்பதை நான் அறிவேன். ஆகவே உங்களில் யாராவது அழிந்தால், அந்த இரத்தப்பழி என்மேல் சுமராது என்று, நான் உங்களுக்கு இன்று உறுதியாய் அறிவிக்கிறேன். ஏனெனில், இறைவனுடைய முழுத் சித்தத்தையும் உங்களுக்கு நான் அறிவிப்பதற்குத் தயங்கவில்லை. உங்களைக்குறித்து நீங்கள் கவனமாயிருங்கள். பரிசுத்த ஆவியானவர் உங்களைக் கண்காணிகளாக நியமித்த உங்கள் மந்தை முழுவதைக் குறித்தும் கவனமாயிருங்கள். இறைவனுடைய திருச்சபைக்கு மேய்ப்பர்களாய் இருங்கள். அதை அவர் தமது சொந்த இரத்தத்தை விலையாகக் கொடுத்தல்லவோ பெற்றுக்கொண்டார். நான் போனபின், உங்களிடையே கொடிதான ஓநாய்கள் வரும் என்றும் அவை மந்தையைத் தப்பவிடாது தாக்கும் என்றும் எனக்குத் தெரியும். உங்களைச் சேர்ந்தவர்களில் சிலரும்கூட எழும்பி, தங்கள் பக்கமாய் சீடரை இழுத்துக் கொள்வதற்கு, உண்மையைத் திரித்துக் கூறுவார்கள். எனவே நீங்கள் கவனமாயிருங்கள்! நான் மூன்று வருடங்களாக இரவும், பகலும் உங்களைக் கண்ணீருடன் எச்சரிக்கைச் செய்ததை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். “இப்பொழுது நான் உங்களை இறைவனுக்கும், அவருடைய கிருபையுள்ள வார்த்தைக்கும் ஒப்புக்கொடுத்திருக்கிறேன்; அந்த வார்த்தையே உங்களைக் கட்டியெழுப்பி அதுவே பரிசுத்தமாக்கப்பட்ட எல்லோருடனும்கூட உங்களுக்கும் உரிமைச்சொத்தைக் கொடுக்க வல்லமையுள்ளது.

அப்போஸ்தலர் 20:22-32 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

இப்பொழுதும் நான் பரிசுத்த ஆவியானவரிலே கட்டுண்டவனாக எருசலேமுக்குப் போகிறேன்; அங்கே எனக்கு என்ன நடக்கும் என்று தெரியாது. தொடர்ச்சியான கட்டுகளும் உபத்திரவங்களும் எனக்கு உள்ளது என்று பரிசுத்த ஆவியானவர் பட்டணங்களெல்லாம் தெரிவிக்கிறதைமட்டும் அறிந்திருக்கிறேன். ஆனாலும் எதைக்குறித்தும் நான் கவலைப்படமாட்டேன். என் உயிரையும் பெரிதாக நினைக்கமாட்டேன்; என் ஓட்டத்தை சந்தோஷத்தோடு முடிக்கவும், தேவனுடைய கிருபையின் நற்செய்தியைப் பிரசங்கம்பண்ணும்படிக்கு நான் கர்த்தராகிய இயேசுவினிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றவுமே விரும்புகிறேன். இதோ, நான் உங்களோடு வசித்து, தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்து பிரசங்கம்பண்ணினதைக் கேட்டவர்களாகிய நீங்கள் எல்லோரும் இனி என் முகத்தைப் பார்க்கமாட்டீர்கள் என்று அறிந்திருக்கிறேன். தேவனுடைய ஆலோசனையில் ஒன்றையும் நான் மறைத்துவைக்காமல், எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தபடியால், எல்லோருடைய இரத்தப்பழிக்கும் நீங்கி நான் சுத்தமாக இருக்கிறேன் என்பதற்கு உங்களை இன்று சாட்சிகளாக வைக்கிறேன். ஆகவே, உங்களைக்குறித்தும் தேவன், தம்முடைய சொந்த இரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட தமது சபையை மேய்ப்பதற்குப் பரிசுத்த ஆவியானவர் உங்களைக் கண்காணிகளாக வைத்த மந்தை எல்லாவற்றையும்குறித்தும், எச்சரிக்கையாக இருங்கள். நான் போனபின்பு மந்தையைத் தப்பவிடாத கொடிய ஓநாய்கள் உங்களுக்குள்ளே வரும். உங்களிலும் சிலர் எழும்பி, சீடர்களைத் தங்களிடத்தில் இழுத்துக்கொள்ளும்படி தவறானவைகளைப் போதிப்பார்கள் என்று அறிந்திருக்கிறேன். எனவே, நான் மூன்று வருடங்கள் இரவும் பகலும் கண்ணீரோடு இடைவிடாமல் உங்கள் அனைவருக்கும் புத்திச் சொன்னதை நினைத்து விழித்திருங்கள். இப்பொழுதும் சகோதரர்களே, உங்களுடைய பக்தி பெருகவும், பரிசுத்தமாக்கப்பட்ட அனைவருக்குள்ளும் உங்களுக்கு உரிமைப்பங்கைக் கொடுக்கவும் வல்லவராக இருக்கிற தேவனுக்கும் அவருடைய கிருபையுள்ள வசனத்திற்கும் உங்களை ஒப்புக்கொடுக்கிறேன்.

அப்போஸ்தலர் 20:22-32 பரிசுத்த பைபிள் (TAERV)

“ஆனால் இப்போது பரிசுத்த ஆவியானவருக்குக் கீழ்ப்படிந்து எருசலேமுக்கு நான் போக வேண்டும். எனக்கு அங்கு என்ன நேருமென்று எனக்குத் தெரியாது. துன்பமும் சிறையும் எருசலேமில் எனக்காக காத்திருப்பதை பரிசுத்த ஆவியானவர் ஒவ்வொரு நகரிலும் கூறுவதை மட்டும் அறிவேன். நான் எனது உயிரைப் பொருட்படுத்தவில்லை. நான் பந்தயத்தை முடிக்கிறேன் என்பதும் தேவனுடைய கிருபையைப் பற்றிய நற்செய்தியை மக்களுக்குச் சொல்லுமாறு கர்த்தராகிய இயேசு எனக்குக் கொடுத்த வேலையை முடிக்கிறேன் என்பதும் முக்கியமானவை. “இப்போது நான் சொல்வதைக் கேளுங்கள். என்னை உங்களில் ஒருவரும் திரும்பவும் பார்க்கமாட்டீர்கள் என்பது எனக்குத் தெரியும். தேவனுடைய இராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியை நான் உங்களோடிருந்த போதெல்லாம் உங்களுக்குக் கூறினேன். எனவே நான் உறுதியாயிருக்கிற ஒன்றைக் குறித்து இன்று உங்களுக்குக் கூற முடியும். உங்களில் சிலர் இரட்சிக்கப்படாவிட்டால் தேவன் என்னைக் குற்றம் சாட்டமாட்டார். நீங்கள் அறிந்துகொள்ளவேண்டுமென தேவன் விரும்பிய அனைத்தையும் உங்களுக்குக் கூறினேன். எதையும் விட்டு வைக்கவில்லை என்பதால் இதை நான் சொல்ல முடிகிறது. உங்களுக்காகவும் தேவன் உங்களுக்குத் தந்த எல்லா மக்களுக்காகவும் எச்சரிக்கையாக இருங்கள். அவரது மந்தையைக் கவனிக்கும் வேலையை பரிசுத்த ஆவியானவர் உங்களுக்குக் கொடுத்திருக்கிறார். தேவனின் சபைக்கு நீங்கள் மேய்ப்பர்களைப்போல் இருக்க வேண்டும். தேவன் தமது சொந்த இரத்தத்தால் வாங்கிய சபை இது. நான் பிரிந்த பின் உங்கள் குழுவில் சில மனிதர்கள் வருவார்கள் என்பதை அறிவேன். அவர்கள் கொடிய ஓநாய்களைப் போல் இருப்பார்கள். அவர்கள் மந்தையை அழிக்க முயல்வர். மேலும் உங்கள் சொந்தக் குழுவின் மனிதர்களும் மோசமான தலைவராக மாறுவர். அவர்கள் தவறான போதனைகளைப் போதிக்கத் தொடங்குவர். உண்மையை விட்டு விலகி இயேசுவின் சீஷர்கள் சிலரைத் தம்மைப் பின்பற்றுமாறு செய்வார்கள். எனவே எச்சரிக்கையாக இருங்கள்! எப்போதும் இதை நினைவுகூருங்கள். நான் உங்களோடு மூன்று ஆண்டுகள் இருந்தேன். இக்காலத்தில் நான் உங்களை எச்சரிப்பதை நிறுத்தவில்லை. நான் இரவும் பகலும் உங்களுக்கு உபதேசித்தேன். நான் அடிக்கடி உங்களுக்காக அழுதேன். “நான் இப்போது உங்களை தேவனுக்கு நியமம் செய்கிறேன். உங்களை பலப்படுத்தக் கூடிய தேவனுடைய கிருபையைப் பற்றிய தேவனுடைய செய்தியைச் சார்ந்திருக்கிறேன். தேவன் தனது பரிசுத்த மக்கள் எல்லோருக்கும் கொடுக்கும் ஆசீர்வாதத்தை இந்தச் செய்தி உங்களுக்குக் கொடுக்கும்.

அப்போஸ்தலர் 20:22-32 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

இப்பொழுதும் நான் ஆவியிலே கட்டுண்டவனாய் எருசலேமுக்குப் போகிறேன்; அங்கே எனக்கு நேரிடுங்காரியங்களை நான் அறியேன். கட்டுகளும் உபத்திரவங்களும் எனக்கு வைத்திருக்கிறதென்று பரிசுத்த ஆவியானவர் பட்டணந்தோறும் தெரிவிக்கிறதைமாத்திரம் அறிந்திருக்கிறேன். ஆகிலும் அவைகளில் ஒன்றையுங்குறித்துக் கவலைப்படேன்; என் பிராணனையும் நான் அருமையாக எண்ணேன்; என் ஓட்டத்தைச் சந்தோஷத்தோடே முடிக்கவும், தேவனுடைய கிருபையின் சுவிசேஷத்தைப் பிரசங்கம்பண்ணும்படிக்கு நான் கர்த்தராகிய இயேசுவினிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றவுமே விரும்புகிறேன். இதோ, நான் உங்களுக்குள்ளே சஞ்சரித்து, தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்துப் பிரசங்கம்பண்ணினதைக் கேட்டவர்களாகிய நீங்களெல்லாரும் இனி என் முகத்தைப் பார்க்கமாட்டீர்களென்று அறிந்திருக்கிறேன். தேவனுடைய ஆலோசனையில் ஒன்றையும் நான் மறைத்துவைக்காமல், எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தபடியினாலே, எல்லாருடைய இரத்தப்பழிக்கும் நீங்கி நான் சுத்தமாயிருக்கிறேனென்பதற்கு உங்களை இன்றையதினம் சாட்சிகளாக வைக்கிறேன். ஆகையால், உங்களைக்குறித்தும், தேவன் தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட தமது சபையை மேய்ப்பதற்குப் பரிசுத்த ஆவி உங்களைக் கண்காணிகளாக வைத்த மந்தை முழுவதையுங்குறித்தும், எச்சரிக்கையாயிருங்கள். நான் போனபின்பு மந்தையைத் தப்பவிடாத கொடிதான ஓநாய்கள் உங்களுக்குள்ளே வரும். உங்களிலும் சிலர் எழும்பி, சீஷர்களைத் தங்களிடத்தில் இழுத்துக்கொள்ளும்படி மாறுபாடானவைகளைப் போதிப்பார்களென்று அறிந்திருக்கிறேன். ஆனபடியால், நான் மூன்று வருஷகாலமாய் இரவும் பகலும் கண்ணீரோடே இடைவிடாமல் அவனவனுக்குப் புத்தி சொல்லிக்கொண்டுவந்ததை நினைத்து விழித்திருங்கள். இப்பொழுதும் சகோதரரே, நீங்கள் பக்திவிருத்தியடையவும், பரிசுத்தமாக்கப்பட்ட அனைவருக்குள்ளும் உங்களுக்குச் சுதந்தரத்தைக் கொடுக்கவும் வல்லவராயிருக்கிற தேவனுக்கும் அவருடைய கிருபையுள்ள வசனத்துக்கும் உங்களை ஒப்புக்கொடுக்கிறேன்.