அப்போஸ்தலர் 2:6-12

அப்போஸ்தலர் 2:6-12 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அவர்கள் இந்த சத்தத்தைக் கேட்டபோது, பெருங்கூட்டமாய் அங்கே வந்தார்கள். தங்களுடைய சொந்த மொழிகளில் அவர்கள் ஒவ்வொருவரும் பேசுவதைக் கேட்டு வியப்படைந்தார்கள். அவர்கள் முற்றுமாய் வியப்படைந்து, “இங்கு பேசிக்கொண்டிருக்கிற இவர்கள் அனைவரும் கலிலேயர் அல்லவா? அப்படியிருக்க, இவர்கள் நமது சொந்த மொழிகளில் பேசுவதை நாம் ஒவ்வொருவரும் கேட்கிறோமே, அது எப்படி? பார்த்தரும், மேதரும், எலாமீத்தரும், மெசொப்பொத்தாமியா, யூதேயா, கப்பத்தோக்கியா, பொந்து, ஆசியா, பிரிகியா, பம்பிலியா, எகிப்து ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களும், சிரேனே அருகேயுள்ள லீபியாவின் சில பகுதிகளிலுள்ளவர்களும், ரோமிலிருந்து வந்தவர்களும் இங்கிருக்கிறார்களே. இன்னும் யூதரும், யூத விசுவாசத்திற்கு வந்தவர்களும் இருக்கிறார்களே! அத்துடன் கிரேத்தரும், அரபியரும் ஆகிய நாம் நம் மொழிகளிலே இறைவனின் அதிசயங்களை இவர்கள் அறிவிப்பதைக் கேட்கிறோமே!” என்றார்கள். அவர்கள் வியப்பும் குழப்பமும் அடைந்தவர்களாய், ஒருவரையொருவர் பார்த்து, “இதன் அர்த்தம் என்ன?” என்றார்கள்.

அப்போஸ்தலர் 2:6-12 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அந்த சத்தம் உண்டானபோது, அநேக மக்கள் கூடிவந்து, தங்கள் தங்கள் மொழியிலே அவர்கள் பேசுகிறதை கேட்டபடியினாலே கலக்கமடைந்தார்கள். எல்லோரும் பிரமித்து ஆச்சரியப்பட்டு, ஒருவரையொருவர் பார்த்து: இதோ, பேசுகிற இவர்களெல்லோரும் கலிலேயர்கள் அல்லவா? அப்படியிருக்க, நம்மில் அவரவர்களுடைய தாய் மொழிகளிலே இவர்கள் பேசக்கேட்கிறோமே, இது எப்படி? பார்த்தரும், மேதரும், ஏலாமீத்தரும், மெசொப்பொத்தாமியா, யூதேயா, கப்பத்தோக்கியா, பொந்து, ஆசியா, பிரிகியா, பம்பிலியா, எகிப்து என்னும் தேசத்தார்களும், சிரேனே பட்டணத்தைச் சுற்றியிருக்கிற லீபியாவின் திசைகளிலே குடியிருக்கிறவர்களும், இங்கே வருகைதரும் ரோமாபுரியாரும், யூதர்களும், யூதமார்க்கத்தை பின்பற்றுகிறவர்களும், கிரேத்தரும், அரபியருமாகிய நாம் நம்முடைய மொழிகளிலே இவர்கள் தேவனுடைய மகத்துவங்களைப் பேசக்கேட்கிறோமே என்றார்கள். எல்லோரும் பிரமித்து சந்தேகப்பட்டு, இது என்னமாய் முடியுமோ என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.

அப்போஸ்தலர் 2:6-12 பரிசுத்த பைபிள் (TAERV)

ஒலியைக் கேட்டு இம்மனிதர்கள் பெருங்கூட்டமாக அங்கு வந்தனர். அப்போஸ்தலர்கள் பேசிக்கொண்டிருக்கையில் ஒவ்வொரு மனிதனும் தனது சொந்த மொழியில் கேட்டதால் அம்மனிதர்கள் வியப்புற்றனர். யூதர்கள் இதனால் ஆச்சரியமடைந்தனர். அப்போஸ்தலர்கள் எவ்வாறு இதைச் செய்ய முடிந்தது என்பதை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. அவர்கள், “பாருங்கள்! பேசிக்கொண்டிருக்கும் இந்த மனிதர்கள் எல்லோரும் கலிலேயாவைச் சேர்ந்தவர்கள்! ஆனால் நமது மொழிகளில் அவர்கள் பேசிக்கொண்டிருப்பதைக் கேட்கிறோம். எப்படி இது இயலும்? நாம் பார்த்தியா, மேதியா, ஏலாம், மெசொபொதாமியா, யூதேயா, கப்பதோகியா, பொந்து, ஆசியா, பிரிகியா, பம்பிலியா, எகிப்து, சிரேனே நகரங்களிற்கு அருகேயுள்ள லிபியா நாட்டுப் பகுதிகள், கிரேத்தா, ரோமிலிருந்து வந்த மக்கள் மற்றும் அரேபியா ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள். நம்மில் சிலர் யூதர்களாகப் பிறந்தவர்கள் மற்றவர்கள் யூதர்களாக மதம் மாறியவர்கள். நாம் வெவ்வேறு நாட்டினர். ஆனால் இவர்கள் நம் மொழிகளில் பேசுவதைக் கேட்கிறோமே! அவர்கள் தேவனைக் குறித்துக் கூறும் மேன்மையான காரியங்களை நம்மெல்லோராலும் புரிந்துகொள்ள முடிகிறதே” என்றார்கள். மக்கள் அனைவரும் வியப்புற்றவர்களாகவும் குழப்பமடைந்தவர்களாகவும் காணப்பட்டனர். அவர்கள் ஒருவரையொருவர் நோக்கி, “என்ன நடந்துகொண்டிருக்கிறது?” என்று வினவினர்.

அப்போஸ்தலர் 2:6-12 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அந்தச் சத்தம் உண்டானபோது, திரளான ஜனங்கள் கூடிவந்து, தங்கள் தங்கள் பாஷையிலே அவர்கள் பேசுகிறதை அவரவர்கள் கேட்டபடியினாலே கலக்கமடைந்தார்கள். எல்லாரும் பிரமித்து ஆச்சரியப்பட்டு, ஒருவரையொருவர் பார்த்து: இதோ, பேசுகிற இவர்களெல்லாரும் கலிலேயரல்லவா? அப்படியிருக்க, நம்மில் அவரவர்களுடைய ஜென்மபாஷைகளிலே இவர்கள் பேசக் கேட்கிறோமே, இதெப்படி? பார்த்தரும், மேதரும், ஏலாமீத்தரும், மெசொப்பொத்தாமியா, யூதேயா, கப்பத்தோக்கியா, பொந்து, ஆசியா, பிரிகியா, பம்பிலியா, எகிப்து என்னும் தேசத்தார்களும், சிரேனே பட்டணத்தைச் சுற்றியிருக்கிற லீபியாவின் திசைகளிலே குடியிருக்கிறவர்களும், இங்கே சஞ்சரிக்கிற ரோமாபுரியாரும், யூதரும், யூதமார்க்கத்தமைந்தவர்களும், கிரேத்தரும், அரபியருமாகிய நாம் நம்முடைய பாஷைகளிலே இவர்கள் தேவனுடைய மகத்துவங்களைப் பேசக்கேட்கிறோமே என்றார்கள். எல்லாரும் பிரமித்துச் சந்தேகப்பட்டு, இதென்னமாய் முடியுமோ என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.