அப்போஸ்தலர் 2:1-5

அப்போஸ்தலர் 2:1-5 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

பெந்தெகொஸ்தே நாள் வந்தபோது, அவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் கூடியிருந்தார்கள். அப்பொழுது திடீரென பலத்த காற்று வீசுவதுபோன்ற ஒரு முழக்கம் பரத்திலிருந்து வந்து, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று. அவர்கள் நெருப்புப்போன்ற பிரிந்திருக்கும் நாவுகளைக் கண்டார்கள். அவை அவர்கள் ஒவ்வொருவர்மேலும் வந்து அமர்ந்தன. அவர்கள் அனைவரும் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டார்கள். ஆவியானவர் கொடுத்த ஆற்றலின்படி, ஒவ்வொருவரும் வெவ்வேறு மொழிகளிலே பேசத் தொடங்கினார்கள். அப்பொழுது இறைவனிடம் பயபக்தியாயிருந்த யூதர்கள் வானத்தின் கீழுள்ள ஒவ்வொரு நாடுகளிலிருந்தும் வந்து எருசலேமில் தங்கியிருந்தார்கள்.

அப்போஸ்தலர் 2:1-5 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது, அவர்களெல்லோரும் ஒருமனப்பட்டு ஓரிடத்திலே கூடிவந்திருந்தார்கள். அப்பொழுது பலத்தக் காற்று அடிக்கிறதுபோல, வானத்திலிருந்து திடீரென ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று. அல்லாமலும் நெருப்புமயமான நாக்குகள்போல பிரிந்திருக்கும் நாக்குகள் அவர்களுக்குக் காணப்பட்டு, அவர்கள் ஒவ்வொருவர்மேலும் வந்து அமர்ந்தது. அவர்களெல்லோரும் பரிசுத்த ஆவியானவராலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு மொழிகளிலே பேசத்தொடங்கினார்கள். வானத்தின்கீழே இருக்கிற எல்லா தேசத்திலுமிருந்து வந்த தேவபக்தியுள்ள யூதர்கள் அப்பொழுது எருசலேமிலே தங்கியிருந்தார்கள்.

அப்போஸ்தலர் 2:1-5 பரிசுத்த பைபிள் (TAERV)

பெந்தெகோஸ்தே நாளில் அப்போஸ்தலர் அனைவரும் ஓரிடத்தில் கூடியிருந்தனர். திடீரென வானிலிருந்து ஓசை ஒன்று எழுந்தது. பெருங்காற்று அடித்தாற்போல அது ஒலித்தது. அவர்கள் அமர்ந்திருந்த வீடு முழுவதையும் அவ்வொலி நிரப்பிற்று. நெருப்புக் கொழுந்து போன்றவற்றை அவர்கள் கண்டனர். அக்கொழுந்துகள் பிரிந்து சென்று அங்கிருந்த ஒவ்வொருவர் மேலும் நின்றன. அவர்கள் எல்லோரும் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டார்கள். பல்வேறு மொழிகளில் அவர்கள் பேச ஆரம்பித்தார்கள். இப்படிப்பட்ட வல்லமையை பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்குக் கொடுத்துக்கொண்டிருந்தார். அக்காலத்தில் எருசலேமில் மிக பக்திமான்களாகிய யூதர்கள் சிலர் தங்கியிருந்தனர். உலகத்தின் எல்லா தேசத்தையும் சார்ந்தவர்களாக இந்த மனிதர்கள் இருந்தனர்.

அப்போஸ்தலர் 2:1-5 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது, அவர்களெல்லாரும் ஒருமனப்பட்டு ஓரிடத்திலே வந்திருந்தார்கள். அப்பொழுது பலத்த காற்று அடிக்கிற முழக்கம்போல, வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று. அல்லாமலும் அக்கினிமயமான நாவுகள்போலப் பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டு, அவர்கள் ஒவ்வொருவர்மேலும் வந்து அமர்ந்தது. அவர்களெல்லாரும் பரிசுத்தஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள். வானத்தின் கீழிருக்கிற சகல தேசத்தாரிலுமிருந்துவந்த தேவபக்தியுள்ள யூதர்கள் அப்பொழுது எருசலேமிலே வாசம்பண்ணினார்கள்.