அப்போஸ்தலர் 2:1-47

அப்போஸ்தலர் 2:1-47 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

பெந்தெகொஸ்தே நாள் வந்தபோது, அவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் கூடியிருந்தார்கள். அப்பொழுது திடீரென பலத்த காற்று வீசுவதுபோன்ற ஒரு முழக்கம் பரத்திலிருந்து வந்து, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று. அவர்கள் நெருப்புப்போன்ற பிரிந்திருக்கும் நாவுகளைக் கண்டார்கள். அவை அவர்கள் ஒவ்வொருவர்மேலும் வந்து அமர்ந்தன. அவர்கள் அனைவரும் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டார்கள். ஆவியானவர் கொடுத்த ஆற்றலின்படி, ஒவ்வொருவரும் வெவ்வேறு மொழிகளிலே பேசத் தொடங்கினார்கள். அப்பொழுது இறைவனிடம் பயபக்தியாயிருந்த யூதர்கள் வானத்தின் கீழுள்ள ஒவ்வொரு நாடுகளிலிருந்தும் வந்து எருசலேமில் தங்கியிருந்தார்கள். அவர்கள் இந்த சத்தத்தைக் கேட்டபோது, பெருங்கூட்டமாய் அங்கே வந்தார்கள். தங்களுடைய சொந்த மொழிகளில் அவர்கள் ஒவ்வொருவரும் பேசுவதைக் கேட்டு வியப்படைந்தார்கள். அவர்கள் முற்றுமாய் வியப்படைந்து, “இங்கு பேசிக்கொண்டிருக்கிற இவர்கள் அனைவரும் கலிலேயர் அல்லவா? அப்படியிருக்க, இவர்கள் நமது சொந்த மொழிகளில் பேசுவதை நாம் ஒவ்வொருவரும் கேட்கிறோமே, அது எப்படி? பார்த்தரும், மேதரும், எலாமீத்தரும், மெசொப்பொத்தாமியா, யூதேயா, கப்பத்தோக்கியா, பொந்து, ஆசியா, பிரிகியா, பம்பிலியா, எகிப்து ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களும், சிரேனே அருகேயுள்ள லீபியாவின் சில பகுதிகளிலுள்ளவர்களும், ரோமிலிருந்து வந்தவர்களும் இங்கிருக்கிறார்களே. இன்னும் யூதரும், யூத விசுவாசத்திற்கு வந்தவர்களும் இருக்கிறார்களே! அத்துடன் கிரேத்தரும், அரபியரும் ஆகிய நாம் நம் மொழிகளிலே இறைவனின் அதிசயங்களை இவர்கள் அறிவிப்பதைக் கேட்கிறோமே!” என்றார்கள். அவர்கள் வியப்பும் குழப்பமும் அடைந்தவர்களாய், ஒருவரையொருவர் பார்த்து, “இதன் அர்த்தம் என்ன?” என்றார்கள். ஆனால் சிலர், அவர்களைக்குறித்து கேலிசெய்து, “இவர்கள் மதுபானத்தை நிறைய குடித்திருக்கிறார்கள்” என்றார்கள். அப்பொழுது பேதுரு மற்ற பதினொரு பேருடனும் எழுந்து நின்று, உரத்த சத்தமாய் அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் பேசத் தொடங்கினான்: “யூதமக்களே, எருசலேமில் வாழுகிறவர்களே, உங்கள் எல்லோருக்கும் நான் இதை விளக்கிச் சொல்லுகிறேன்; நான் சொல்வதைக் கவனமாய் கேளுங்கள். நீங்கள் நினைப்பதுபோல இவர்கள் குடிவெறி கொண்டவர்கள் அல்ல. நேரமோ இன்னும் காலை ஒன்பது மணிதானே! இறைவாக்கினன் யோவேலினால் கூறப்பட்டபடி இது நிறைவேறுகிறது: “ ‘இறைவன் சொல்லியபடி, கடைசி நாட்களில், நான் எல்லா மக்கள்மேலும் என் ஆவியானவரைப் பொழிவேன். உங்கள் மகன்களும் மகள்களும் இறைவாக்கு உரைப்பார்கள், உங்கள் இளைஞர் தரிசனங்களைக் காண்பார்கள், உங்கள் முதியவர்கள் கனவுகளைக் காண்பார்கள். மேலும் அந்நாட்களில் நான், எனது ஊழியக்காரர்கள்மேலும் ஊழியக்காரிகள்மேலும், என் ஆவியைப் பொழிவேன். அப்பொழுது அவர்கள் இறைவாக்கு உரைப்பார்கள். உயரே வானத்தில் நான் அதிசயங்களைக் காண்பிப்பேன், கீழே பூமியில் அடையாளங்களாக இரத்தத்தையும், நெருப்பையும், புகை மண்டலங்களையும் காண்பிப்பேன். பெரிதும் மகிமையானதுமான கர்த்தரின் நாள் வருமுன்பே, சூரியன் இருண்டுபோகும்; சந்திரன் இரத்தமாக மாறும். கர்த்தரின் பெயரைச் சொல்லி கூப்பிடுகிற யாவரும் இரட்சிக்கப்படுவார்கள்.’ “இஸ்ரயேலரே, இதைக் கேளுங்கள்: நீங்கள் அறிந்திருக்கிறபடி, இறைவன் உங்கள் மத்தியில் நாசரேத்தைச் சேர்ந்த இயேசுவின் மூலமாக செய்த அற்புதங்கள், அதிசயங்கள், அடையாளங்களினால் அவர் இறைவனால் அங்கீகாரம் பெற்ற மனிதர் என்பதை நிரூபித்தார். இறைவன் தாம் தீர்மானித்திருந்த நோக்கத்தின்படியும், தமது முன்னறிவின்படியும், அவர் அந்த இயேசுவை உங்களிடம் ஒப்படைத்தார். நீங்களோ கொடியவர்களின் உதவியோடு, அவரைச் சிலுவையில் ஆணி அடித்துக் கொலைசெய்தீர்கள். ஆனால் இறைவனோ, மரணத்தின் வேதனையிலிருந்து இயேசுவை விடுவித்து, அவரை உயிரோடு எழுப்பினார். ஏனெனில், மரணத்தினால் அவரைப் பிடித்து வைத்திருக்க முடியவில்லை. தாவீது கிறிஸ்துவைக்குறித்துச் சொல்லியிருப்பதாவது: “ ‘நான் கர்த்தரை எப்பொழுதும் என் கண்முன் வைத்துக்கொண்டிருக்கிறேன். அவர் எனது வலதுபக்கத்தில் இருக்கிறபடியால், நான் அசைக்கப்படமாட்டேன். ஆகையால், என் இருதயம் மகிழ்ந்து என் நாவு களிகூருகிறது; என் உடலும் எதிர்பார்ப்புடன் வாழும். ஏனெனில் நீர் என்னைப் பாதாளத்தில் கைவிடமாட்டீர், உமது பரிசுத்தர் அழிவைக் காணவும் நீர் விடமாட்டீர். நீர் வாழ்வின் பாதைகளை எனக்குத் தெரியப்படுத்தியிருக்கிறீர். உமது சமுகத்தில் உமது மகிழ்ச்சியினால் என்னை நிரப்புவீர்’ என்பதே. “சகோதரரே, இதை நான் உங்களுக்கு உறுதியாகச் சொல்கிறேன். நமது முற்பிதாவான தாவீது இறந்து அடக்கம்பண்ணப்பட்டானே. அவனது கல்லறை இந்நாள்வரை இங்கே இருக்கிறதே. ஆனால் தாவீது இறைவாக்கினனாய் இருந்ததால், தனது சந்ததியிலே ஒருவரை தனது அரியணையில் அமர்த்துவார் என்று இறைவன் தனக்கு ஆணையிட்டு வாக்குக் கொடுத்திருந்ததை அவன் அறிந்திருந்தான். நிகழப்போவதை தாவீது முன்னமே கண்டு, கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைக்குறித்துப் பேசினான். அதனாலேயே அவர் பாதாளத்தில் கைவிடப்படுவதில்லை என்றும், அவரின் உடல் அழிவைக் காண்பதில்லை என்றும் சொன்னான். இறைவன் இந்த இயேசுவை உயிர்த்தெழச் செய்தார். அதற்கு நாங்கள் அனைவரும் சாட்சிகளாய் இருக்கிறோம். கிறிஸ்து இறைவனுடைய வலதுபக்கத்திற்கு உயர்த்தப்பட்டு, பிதா வாக்குப்பண்ணிய பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொண்டார். நீங்கள் இப்பொழுது காண்கிறபடியும் கேட்கிறபடியும் அவரே அந்த பரிசுத்த ஆவியானவரை ஊற்றியிருக்கிறார். தாவீது பரலோகத்திற்கு எழுந்து போகவில்லையே, ஆனால் அவன், “ ‘கர்த்தர் என் கர்த்தரிடம், சொன்னதாவது: “நான் உமது பகைவரை உமது கால்களுக்குப் பாதபடி ஆக்கும்வரை, நீர் என் வலதுபக்கத்தில் அமர்ந்திரும்.” ’ என்று சொன்னான். “ஆகவே இஸ்ரயேலராகிய நீங்கள் அனைவரும் நிச்சயமாய் அறிந்துகொள்ள வேண்டியது: நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவையே இறைவன், கர்த்தரும் கிறிஸ்துவும் ஆக்கியிருக்கிறார்” என்று பேதுரு சொன்னான். அந்த மக்கள் இதைக் கேட்டபோது, இருதயத்தில் குத்தப்பட்டவர்களாய், பேதுருவையும் மற்ற அப்போஸ்தலரையும் பார்த்து, “சகோதரரே, நாங்கள் என்ன செய்யவேண்டும்?” என்றார்கள். அதற்குப் பேதுரு, “நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் பாவங்களுக்கு மன்னிப்புப் பெறும்படி மனந்திரும்பி, இயேசுகிறிஸ்துவின் பெயரில் திருமுழுக்கு பெற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது நீங்கள் பரிசுத்த ஆவியானவரை நன்கொடையாகப் பெறுவீர்கள். இந்த வாக்குத்தத்தம் உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், தொலைவிலுள்ள அனைவருக்கும் உரியது. நமது இறைவனாகிய கர்த்தர் அழைக்கப்போகிற அனைவருக்கும் இது உரியது” என்றான். பேதுரு இன்னும் வேறு பல வார்த்தைகள் மூலமாயும் அவர்களை எச்சரித்தான்: “இந்தக் கறைபட்ட தலைமுறையிலிருந்து உங்களைக் காத்துக்கொள்ளுங்கள்” என்றும் அவர்களை எச்சரித்தான். பேதுருவினுடைய செய்தியை ஏற்றுக்கொண்ட அனைவரும் திருமுழுக்குப் பெற்றார்கள். திருச்சபையில் ஏறக்குறைய மூவாயிரம்பேர் அன்று சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள். அவர்கள் அப்போஸ்தலருடைய போதித்தலுக்கும், ஐக்கியத்திற்கும், அப்பம் பிட்குதலுக்கும், மன்றாட்டுக்கும் தங்களை அர்ப்பணித்தார்கள். அனைவரும் பயபக்தியினால் நிறைந்திருந்தார்கள். அப்போஸ்தலர்களால் அநேக அதிசயங்களும் அற்புத அடையாளங்களும் செய்யப்பட்டன. விசுவாசிகள் அனைவரும் ஒன்றுகூடியிருந்தார்கள். அவர்கள் எல்லாப் பொருட்களையும் பொதுவானதாக வைத்துக்கொண்டார்கள். அவர்கள் தங்கள் சொத்துக்களையும், பொருட்களையும் விற்று, தேவையானவர்களுக்கு ஏற்றவிதமாய் பகிர்ந்துகொடுத்தார்கள். ஒவ்வொரு நாளும், அவர்கள் ஆலயத்தின் முற்றத்தில் ஒன்றுகூடி சந்தித்தார்கள். அவர்கள் தங்களுடைய வீடுகள்தோறும் அப்பம் பிட்டார்கள். அவர்கள் எளிய இருதயத்துடனும், சந்தோஷத்துடனும் ஒன்றாய்ச் சாப்பிட்டார்கள். அவர்கள் இறைவனைத் துதிக்கிறவர்களாயும், எல்லா மக்களுடைய தயவையும் பெற்றவர்களாயும் இருந்தார்கள். ஒவ்வொரு நாளும் இரட்சிக்கப்படுகிறவர்களை கர்த்தர் அவர்களின் எண்ணிக்கையுடனே சேர்த்துக்கொண்டு வந்தார்.

அப்போஸ்தலர் 2:1-47 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது, அவர்களெல்லோரும் ஒருமனப்பட்டு ஓரிடத்திலே கூடிவந்திருந்தார்கள். அப்பொழுது பலத்தக் காற்று அடிக்கிறதுபோல, வானத்திலிருந்து திடீரென ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று. அல்லாமலும் நெருப்புமயமான நாக்குகள்போல பிரிந்திருக்கும் நாக்குகள் அவர்களுக்குக் காணப்பட்டு, அவர்கள் ஒவ்வொருவர்மேலும் வந்து அமர்ந்தது. அவர்களெல்லோரும் பரிசுத்த ஆவியானவராலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு மொழிகளிலே பேசத்தொடங்கினார்கள். வானத்தின்கீழே இருக்கிற எல்லா தேசத்திலுமிருந்து வந்த தேவபக்தியுள்ள யூதர்கள் அப்பொழுது எருசலேமிலே தங்கியிருந்தார்கள். அந்த சத்தம் உண்டானபோது, அநேக மக்கள் கூடிவந்து, தங்கள் தங்கள் மொழியிலே அவர்கள் பேசுகிறதை கேட்டபடியினாலே கலக்கமடைந்தார்கள். எல்லோரும் பிரமித்து ஆச்சரியப்பட்டு, ஒருவரையொருவர் பார்த்து: இதோ, பேசுகிற இவர்களெல்லோரும் கலிலேயர்கள் அல்லவா? அப்படியிருக்க, நம்மில் அவரவர்களுடைய தாய் மொழிகளிலே இவர்கள் பேசக்கேட்கிறோமே, இது எப்படி? பார்த்தரும், மேதரும், ஏலாமீத்தரும், மெசொப்பொத்தாமியா, யூதேயா, கப்பத்தோக்கியா, பொந்து, ஆசியா, பிரிகியா, பம்பிலியா, எகிப்து என்னும் தேசத்தார்களும், சிரேனே பட்டணத்தைச் சுற்றியிருக்கிற லீபியாவின் திசைகளிலே குடியிருக்கிறவர்களும், இங்கே வருகைதரும் ரோமாபுரியாரும், யூதர்களும், யூதமார்க்கத்தை பின்பற்றுகிறவர்களும், கிரேத்தரும், அரபியருமாகிய நாம் நம்முடைய மொழிகளிலே இவர்கள் தேவனுடைய மகத்துவங்களைப் பேசக்கேட்கிறோமே என்றார்கள். எல்லோரும் பிரமித்து சந்தேகப்பட்டு, இது என்னமாய் முடியுமோ என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள். மற்றவர்களோ: இவர்கள் மதுபானம் அருந்தியிருக்கிறார்கள் என்று கேலிசெய்தார்கள். அப்பொழுது பேதுரு பதினொரு சீடர்களோடு நின்று, அவர்களை நோக்கி, உரத்த சத்தமாக: யூதர்களே, எருசலேமில் வசிக்கின்ற மக்களே, நீங்களெல்லோரும் அறிந்துகொள்வீர்களாக, என் வார்த்தைகளைக் கேளுங்கள். நீங்கள் நினைக்கிறபடி இவர்கள் மது அருந்தியவர்கள் அல்ல, பொழுதுவிடிந்து ஒன்பது மணியாக இருக்கிறதே. தீர்க்கதரிசியாகிய யோவேலினால் உரைக்கப்பட்டபடியே இது நிறைவேறுகிறது. கடைசிநாட்களில் நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியைப் பொழிவேன், அப்பொழுது உங்களுடைய குமாரர்களும் உங்களுடைய குமாரத்திகளும் தீர்க்கதரிசனம் சொல்லுவார்கள்; உங்களுடைய வாலிபர்கள் தரிசனங்களைக் காண்பார்கள்; உங்களுடைய மூப்பர்கள் கனவுகளைக் காண்பார்கள்; என்னுடைய ஊழியக்காரர்கள்மேலும், என்னுடைய ஊழியக்காரிகள்மேலும் அந்த நாட்களிலே என் ஆவியைப் பொழிவேன், அப்பொழுது அவர்கள் தீர்க்கதரிசனம் சொல்லுவார்கள். அல்லாமலும் உயர வானத்திலே அற்புதங்களையும், கீழே பூமியிலே இரத்தம், அக்கினி, புகைக்காடாகிய அதிசயங்களையும் காட்டுவேன். கர்த்தருடைய பெரிதும் பிரகாசமுமான நாள் வரும்முன்னே சூரியன் இருளாகவும், சந்திரன் இரத்தமாகவும் மாறும். அப்பொழுது கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவனெவனோ அவன் இரட்சிக்கப்படுவான்’ என்று தேவன் உரைத்திருக்கிறார். “இஸ்ரவேலர்களே, நான் சொல்லும் வார்த்தைகளைக் கேளுங்கள்; உங்களுக்கு தெரிந்திருக்கிறபடி நசரேயனாகிய இயேசுவைக்கொண்டு தேவன் உங்களுக்குள்ளே பலத்த கிரியைகளையும், அற்புதங்களையும், அதிசயங்களையும் நடப்பித்து, அவைகளினாலே அவரை உங்களுக்கு வெளிப்படுத்தினார். அப்படியிருந்தும், தேவன் நியமித்திருந்த ஆலோசனையின்படியேயும், அவருடைய முன்னறிவின்படியேயும் ஒப்புக்கொடுக்கப்பட்ட அந்த இயேசுவை நீங்கள் பிடித்து, அக்கிரமக்காரர்களுடைய கைகளினாலே சிலுவையில் ஆணியடித்துக் கொலைசெய்தீர்கள். தேவன் அவருடைய மரணவேதனைகளின் கட்டுகளை நீக்கி, அவரை உயிரோடு எழுப்பினார்; அவர் மரணத்தினால் கட்டப்பட்டிருக்கக்கூடாமலிருந்தது. அவரைக்குறித்து தாவீது: கர்த்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக நிறுத்தி நோக்கிக்கொண்டிருக்கிறேன்; நான் அசைக்கப்படாதபடி அவர் என் வலதுபக்கத்திலே இருக்கிறார்; அதினாலே என் இருதயம் மகிழ்ந்தது, என் நாக்கு களிகூர்ந்தது, என் சரீரமும் நம்பிக்கையோடு தங்கியிருக்கும்; என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடமாட்டீர், உம்முடைய பரிசுத்தர் அழிவைக் காணவிடமாட்டீர்; ஜீவவழிகளை எனக்குத் தெரியப்படுத்தினீர்; உம்முடைய சமூகத்திலே என்னைச் சந்தோஷத்தினால் நிரப்புவீர் என்று சொல்லுகிறான். சகோதரர்களே, “கோத்திரத்தலைவனாகிய தாவீதைக்குறித்து நான் உங்களோடு தைரியமாகப் பேசுகிறதற்கு இடங்கொடுங்கள்; அவன் மரணமடைந்து அடக்கம்பண்ணப்பட்டான்; அவனுடைய கல்லறை இந்தநாள்வரை நம்மிடத்திலிருக்கிறது. அவன் தீர்க்கதரிசியாக இருந்து: உன் சிங்காசனத்தில் வீற்றிருக்க உன் வம்சத்திலே கிறிஸ்துவை எழும்பப்பண்ணுவேன்” என்று தேவன் தனக்கு சத்தியம்பண்ணினதைத் தெரிந்தபடியால், அவன் கிறிஸ்துவினுடைய ஆத்துமா பாதாளத்திலே விடப்படுவதில்லையென்றும், அவருடைய சரீரம் அழிவைக் காண்பதில்லையென்றும் முன்பே அறிந்து, அவர் உயிர்த்தெழுதலைக்குறித்து இப்படிச் சொன்னான். இந்த இயேசுவை தேவன் உயிரோடு எழுப்பினார்; இதற்கு நாங்கள் எல்லோரும் சாட்சிகளாக இருக்கிறோம். அவர் தேவனுடைய வலது கரத்தினாலே உயர்த்தப்பட்டு, பிதா அருளிய வாக்குத்தத்தத்தின்படி பரிசுத்த ஆவியானவரைப் பெற்று, நீங்கள் இப்பொழுது காண்கிறவைகளையும் கேட்கிறவைகளையும் பொழிந்தருளினார். தாவீது பரலோகத்திற்கு இன்னும் எழுந்துபோகவில்லையே. நான் உம்முடைய சத்துருக்களை உமது பாதத்தின் கீழே போடும்வரைக்கும், நீர் என் வலதுபக்கத்தில் உட்காரும் என்று கர்த்தர் என் ஆண்டவருடனே சொன்னார் என்று அவனே சொல்லியிருக்கிறான். ஆகவே, நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவையே தேவன் ஆண்டவரும் கிறிஸ்துவுமாக்கினாரென்று இஸ்ரவேல் குடும்பத்தார் அனைவரும் நிச்சயமாக அறிந்துகொள்ளுங்கள் என்றான். இதை அவர்கள் கேட்டபொழுது, இருதயத்திலே குத்தப்பட்டவர்களாகி, பேதுருவையும் மற்ற அப்போஸ்தலர்களையும் பார்த்து: சகோதரர்களே, நாங்கள் என்னசெய்யவேண்டும் என்றார்கள். பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியானவரின் வரத்தைப் பெறுவீர்கள். வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்களுடைய பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள அனைவருக்கும் உண்டாயிருக்கிறது என்று சொல்லி; இன்னும் அநேக வார்த்தைகளாலும் சாட்சிகூறி, மாறுபாடுள்ள இந்த வம்சத்தை விட்டுவிலகி உங்களைக் காப்பாற்றிக்கொள்ளுங்கள் என்றும் புத்திசொன்னான். அவனுடைய வார்த்தைகளை சந்தோஷமாக ஏற்றுக்கொண்டவர்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள். அன்றையதினம் ஏறக்குறைய மூவாயிரம்பேர் விசுவாசிகளின் கூட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள். அவர்கள் அப்போஸ்தலர்களுடைய போதனைகளிலும், ஐக்கியத்திலும், அப்பம் புசித்தலிலும், ஜெபம்பண்ணுதலிலும் உறுதியாகத் தரித்திருந்தார்கள். எல்லோருக்கும் பயமுண்டானது. அப்போஸ்தலர்களாலே அநேக அற்புதங்களும் அதிசயங்களும் செய்யப்பட்டது. விசுவாசிகள் எல்லோரும் ஒன்றாக இருந்து, எல்லாவற்றையும் பொதுவாய் வைத்து அனுபவித்தார்கள். நிலங்களையும் சொத்துக்களையும்விற்று, ஒவ்வொருவனுக்கும் தேவைக்குத்தக்கதாக அவைகளில் எல்லோருக்கும் பகிர்ந்துகொடுத்தார்கள். அவர்கள் ஒருமனப்பட்டவர்களாக தேவாலயத்திலே அனுதினமும் தரித்திருந்து, வீடுகள்தோறும் அப்பம்புசித்து மகிழ்ச்சியோடும் கபடம் இல்லாத இருதயத்தோடும் சாப்பிட்டு, தேவனைத் துதித்து, மக்களெல்லோரிடத்திலும் தயவுபெற்றிருந்தார்கள். மீட்கப்படுகிறவர்களைக் கர்த்தர் அனுதினமும் சபையிலே சேர்த்துக்கொண்டுவந்தார்.

அப்போஸ்தலர் 2:1-47 பரிசுத்த பைபிள் (TAERV)

பெந்தெகோஸ்தே நாளில் அப்போஸ்தலர் அனைவரும் ஓரிடத்தில் கூடியிருந்தனர். திடீரென வானிலிருந்து ஓசை ஒன்று எழுந்தது. பெருங்காற்று அடித்தாற்போல அது ஒலித்தது. அவர்கள் அமர்ந்திருந்த வீடு முழுவதையும் அவ்வொலி நிரப்பிற்று. நெருப்புக் கொழுந்து போன்றவற்றை அவர்கள் கண்டனர். அக்கொழுந்துகள் பிரிந்து சென்று அங்கிருந்த ஒவ்வொருவர் மேலும் நின்றன. அவர்கள் எல்லோரும் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டார்கள். பல்வேறு மொழிகளில் அவர்கள் பேச ஆரம்பித்தார்கள். இப்படிப்பட்ட வல்லமையை பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்குக் கொடுத்துக்கொண்டிருந்தார். அக்காலத்தில் எருசலேமில் மிக பக்திமான்களாகிய யூதர்கள் சிலர் தங்கியிருந்தனர். உலகத்தின் எல்லா தேசத்தையும் சார்ந்தவர்களாக இந்த மனிதர்கள் இருந்தனர். ஒலியைக் கேட்டு இம்மனிதர்கள் பெருங்கூட்டமாக அங்கு வந்தனர். அப்போஸ்தலர்கள் பேசிக்கொண்டிருக்கையில் ஒவ்வொரு மனிதனும் தனது சொந்த மொழியில் கேட்டதால் அம்மனிதர்கள் வியப்புற்றனர். யூதர்கள் இதனால் ஆச்சரியமடைந்தனர். அப்போஸ்தலர்கள் எவ்வாறு இதைச் செய்ய முடிந்தது என்பதை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. அவர்கள், “பாருங்கள்! பேசிக்கொண்டிருக்கும் இந்த மனிதர்கள் எல்லோரும் கலிலேயாவைச் சேர்ந்தவர்கள்! ஆனால் நமது மொழிகளில் அவர்கள் பேசிக்கொண்டிருப்பதைக் கேட்கிறோம். எப்படி இது இயலும்? நாம் பார்த்தியா, மேதியா, ஏலாம், மெசொபொதாமியா, யூதேயா, கப்பதோகியா, பொந்து, ஆசியா, பிரிகியா, பம்பிலியா, எகிப்து, சிரேனே நகரங்களிற்கு அருகேயுள்ள லிபியா நாட்டுப் பகுதிகள், கிரேத்தா, ரோமிலிருந்து வந்த மக்கள் மற்றும் அரேபியா ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள். நம்மில் சிலர் யூதர்களாகப் பிறந்தவர்கள் மற்றவர்கள் யூதர்களாக மதம் மாறியவர்கள். நாம் வெவ்வேறு நாட்டினர். ஆனால் இவர்கள் நம் மொழிகளில் பேசுவதைக் கேட்கிறோமே! அவர்கள் தேவனைக் குறித்துக் கூறும் மேன்மையான காரியங்களை நம்மெல்லோராலும் புரிந்துகொள்ள முடிகிறதே” என்றார்கள். மக்கள் அனைவரும் வியப்புற்றவர்களாகவும் குழப்பமடைந்தவர்களாகவும் காணப்பட்டனர். அவர்கள் ஒருவரையொருவர் நோக்கி, “என்ன நடந்துகொண்டிருக்கிறது?” என்று வினவினர். பிற மக்கள் அப்போஸ்தலர்களைப் பார்த்துச் சிரித்தனர். அம்மக்கள் அப்போஸ்தலர் மிகுதியான மதுவைப் பருகியிருந்தனர் என நினைத்தனர். அப்பொழுது பேதுரு மற்ற அப்போஸ்தலர் பதினொருவரோடும் எழுந்து நின்றான். எல்லா மக்களும் கேட்கும்படியாக உரக்கப் பேசினான். அவன், “எனது யூத சகோதரர்களே, எருசலேமில் வசிக்கும் மக்களே, நான் கூறுவதைக் கவனியுங்கள். நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில கருத்துக்களை உங்களுக்குக் கூறுவேன். கவனமாகக் கேளுங்கள். நீங்கள் நினைக்கிறது போல் இம்மனிதர்கள் மது பருகியிருக்கவில்லை. இப்போது காலை ஒன்பது மணிதான். இங்கு இன்றைக்கு நிகழ்ந்துகொண்டிருப்பதைக் குறித்து யோவேல் என்னும் தீர்க்கதரிசி எழுதியிருக்கிறார். யோவேல் கீழ்க்கண்டவாறு எழுதியுள்ளார்: “‘தேவன் கூறுகிறார், கடைசி நாட்களில் நான் எனது ஆவியை எல்லா மக்களுக்கும் அள்ளி வழங்குவேன். ஆண் மக்களும், பெண்மக்களும் தீர்க்கதரிசனம் உரைப்பர். உங்கள் இளைஞர் தரிசனம் காண்பார்கள். உங்கள் முதியோர் விசேஷக் கனவுகள் காண்பர். அந்நேரத்தில் எனது ஆவியை எனது ஊழியர்களாகிய ஆண்களுக்கும் பெண்களுக்கும் கொடுப்பேன். அவர்கள் தீர்க்கதரிசனம் உரைப்பர். மேலே வானில் வியப்புறும் காட்சிகளைக் காண்பிப்பேன். கீழே பூமியிலும் சான்றுகள் தருவேன். அங்கு இரத்தம், நெருப்பும், புகை மண்டலமும் இருக்கும். சூரியன் இருளாக மாறும். நிலா இரத்தம் போல் சிவப்பாகும். அப்போது கர்த்தருடைய மகத்தான மகிமை மிக்க நாள் வரும். கர்த்தர் மேல் நம்பிக்கை வைக்கும் ஒவ்வொரு மனிதனும் இரட்சிக்கப்படுவான்.’ “எனது யூத சகோதரர்களே, இந்த வார்த்தைகளைக் கவனியுங்கள். நாசரேத்தின் இயேசு மிகச் சிறப்பான மனிதர். தேவன் இதைத் தெளிவாக உங்களுக்குக் காட்டினார். இயேசுவின் மூலமாக அவர் செய்த வல்லமை மிக்க வியப்பான காரியங்களால் தேவன் இதை நிரூபித்தார். நீங்கள் எல்லோரும் இந்தக் காரியங்களைப் பார்த்தீர்கள். எனவே இது உண்மையென்பது உங்களுக்குத் தெரியும். இயேசு உங்களுக்குக் கொடுக்கப்பட்டார். நீங்கள் அவரைக் கொன்றீர்கள். தீயவர்களின் உதவியோடு இயேசுவைச் சிலுவையில் அறைந்தீர்கள். ஆனால் இவையெல்லாம் நடக்குமென்பதை தேவன் அறிந்திருந்தார். இது தேவனுடைய திட்டமாக இருந்தது. வெகுகாலத்திற்கு முன்னரே தேவன் இந்தத் திட்டத்தை வகுத்திருந்தார். மரணத்தின் வேதனையை இயேசு அனுபவித்தார். ஆனால் தேவன் அவரை விடுவித்தார். தேவன் இயேசுவை மரணத்திலிருந்து எழுப்பினார். மரணம் இயேசுவைத் தொடர்ந்து தன் பிடிக்குள் வைத்திருக்க முடியவில்லை. தாவீது இயேசுவைக் குறித்து இவ்வாறு கூறினான்: “‘நான் ஆண்டவரை எப்போதும் என்முன் காண்கிறேன். என்னைப் பாதுகாப்பதற்கு எனது வலப்புறத்தே உள்ளார். எனவே என் உள்ளம் மகிழுகிறது, என் வாய் களிப்போடு பேசுகிறது. ஆம், எனது சரீரமும் கூட நம்பிக்கையால் வாழும். ஏனெனில் மரணத்தின் இடத்தில் எனது ஆத்துமாவை நீர் விட்டு விடுவதில்லை. உமது பரிசுத்தமானவரின் சரீரத்தைக் கல்லறைக்குள் அழுகிவிட நீர் அனுமதிப்பதில்லை. வாழும் வகையை எனக்குப் போதித்தீர். என்னருகே நீர் வந்து அளவற்ற ஆனந்தம் தருவீர்.’ “எனது சகோதரர்களே, நமது முன்னோராகிய தாவீதைக் குறித்து உண்மையாகவே உங்களுக்கு என்னால் சொல்லமுடியும். அவன் இறந்து புதைக்கப்பட்டான். அவன் புதைக்கப்பட்ட இடம் இங்கேயே நம்மிடையே இன்றும் உள்ளது. தாவீது ஒரு தீர்க்கதரிசி. தேவன் கூறிய சில செய்திகளை அவன் அறிந்திருந்தான். தாவீதின் குடும்பத்திலுள்ள ஒருவரை தாவீதைப்போன்று மன்னனாக்குவேன் என்று தேவன் தாவீதுக்கு வாக்குறுதி அளித்திருந்தார். அது நடக்கும் முன்பே தாவீது அதனை அறிந்திருந்தான். எனவேதான் அவரைக் குறித்து தாவீது இவ்வாறு கூறினான். “‘அவர் மரணத்தின் இடத்தில் விடப்படவில்லை. அவர் சரீரம் கல்லறையில் அழுகவில்லை.’ தாவீது மரணத்தின்று எழும்பும் கிறிஸ்துவைக் குறித்துப் பேசினான். எனவே தாவீதை அல்ல, இயேசுவையே தேவன் மரணத்தினின்று எழுப்பினார். நாங்கள் எல்லோரும் இதற்கு சாட்சிகள். நாங்கள் அவரைக் கண்டோம். இயேசு பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார். இப்போது இயேசு தேவனோடு, தேவனுடைய வலது பக்கத்தில் இருக்கிறார். பிதா பரிசுத்தாவியை இயேசுவுக்குக் கொடுத்துள்ளார். பிதா கொடுப்பதாக வாக்குறுதி அளித்தது பரிசுத்த ஆவியேயாகும். எனவே இயேசு அந்த ஆவியை இப்பொழுதுகொடுத்துக்கொண்டிருக்கிறார். இதையே நீங்கள் பார்க்கவும், கேட்கவும் செய்கிறீர்கள். தாவீது பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டவரல்ல. பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டவர் இயேசுவே. தாவீது கூறினான், “‘தேவன் என் கர்த்தரிடம் சொன்னார், உம் எதிரிகள் அனைவரையும் உம் அதிகாரத்தின் கீழ் கொண்டு வரும்வரை என் வலதுபுறத்தில் உட்கார்ந்துகொள்ளும்.’ “எனவே எல்லா யூத மனிதர்களும் இதை உண்மையாகத் தெரிந்திருக்க வேண்டும். ஆண்டவராகவும் கிறிஸ்துவாகவும் இருக்கும்படியாக இயேசுவை தேவன் உண்டாக்கினார். அவரே நீங்கள் சிலுவையில் அறைந்த மனிதர்” என்றான். மக்கள் இதைக் கேட்டபோது அவர்கள் தங்கள் இதயத்தில் மிகவும் வருத்தம் அடைந்தார்கள். அவர்கள் பேதுருவையும் பிற அப்போஸ்தலரையும் நோக்கி, “நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார்கள். பேதுரு அவர்களை நோக்கி, “நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் இருதயத்தையும் வாழ்க்கையையும் மாற்றி, இயேசு கிறிஸ்துவின் பெயரில் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள். அப்போது தேவன் உங்கள் பாவங்களை மன்னிப்பார். நீங்களும் பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள். இந்த வாக்குறுதி உங்களுக்குரியது. அது உங்கள் பிள்ளைகளுக்கும் தொலைவில் வாழ்கின்ற எல்லா மக்களுக்கும் கூட உரியது. ஆண்டவராகிய நமது தேவன் தன்னிடம் அழைக்கிற ஒவ்வொரு மனிதனுக்கும் அது உரியது” என்று கூறினான். வேறு பல வார்த்தைகளையும் கூறி பேதுரு அவர்களை எச்சரித்தான். அவன் அவர்களை, “இன்று வாழ்கின்ற மக்களின் தீமைகளிலிருந்து உங்களைக் காத்துக்கொள்ளுங்கள்” என்று வேண்டினான். பேதுரு கூறியவற்றை ஏற்றுக்கொண்ட அந்த மக்கள் ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டனர். அந்த நாளில் விசுவாசிகளின் கூட்டத்தில் சுமார் 3,000 மக்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். விசுவாசிகள் தொடர்ந்து ஒன்றாக சந்தித்தனர். அப்போஸ்தலரின் போதனையைக் கற்பதற்குத் தங்கள் நேரத்தைச் செலவிட்டனர். விசுவாசிகள் ஒருவரோடொருவர் பகிர்ந்துகொண்டனர். அவர்கள் ஒருமித்து உண்டு, ஒருமித்து பிரார்த்தனை செய்தார்கள். பல வல்லமை மிக்க, வியப்பான காரியங்களை அப்போஸ்தலர்கள் செய்துகொண்டிருந்தனர். ஒவ்வொருவரும் தேவனை மிகவும் மரியாதையாக உணர்ந்தனர். எல்லா விசுவாசிகளும் ஒருமித்து வசித்தனர். அவர்கள் எல்லாவற்றையும் பகிர்ந்துகொண்டனர். விசுவாசிகள் அவர்களது நிலங்களையும் அவர்களுக்குச் சொந்தமான பொருட்களையும் விற்றனர். பின்னர் பணத்தைப் பங்கிட்டு, தேவைப்பட்ட ஒவ்வொருவருக்கும் அவர்களது தேவைக்கேற்பக் கொடுத்தனர். ஒவ்வொரு நாளும் விசுவாசிகள் தேவாலயத்தில் சந்தித்தனர். அவர்களது குறிக்கோள் ஒன்றாகவே இருந்தது. அவர்களுடைய வீடுகளில் ஒருமித்து உண்டனர். அவர்கள் உணவைப் பங்கிட்டுக்கொள்வதிலும் களிப்புமிக்க உள்ளங்களோடு உண்பதிலும் மகிழ்ச்சியடைந்தனர். விசுவாசிகள் தேவனை வாழ்த்தினர். எல்லா மக்களும் அவர்களை விரும்பினர். ஒவ்வொரு நாளும் அதிகமதிகமான மக்கள் இரட்சிக்கப்பட்டனர். விசுவாசிகளின் கூட்டத்தில் கர்த்தர் அம்மக்களைச் சேர்த்துக்கொண்டிருந்தார்.

அப்போஸ்தலர் 2:1-47 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது, அவர்களெல்லாரும் ஒருமனப்பட்டு ஓரிடத்திலே வந்திருந்தார்கள். அப்பொழுது பலத்த காற்று அடிக்கிற முழக்கம்போல, வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று. அல்லாமலும் அக்கினிமயமான நாவுகள்போலப் பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டு, அவர்கள் ஒவ்வொருவர்மேலும் வந்து அமர்ந்தது. அவர்களெல்லாரும் பரிசுத்தஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள். வானத்தின் கீழிருக்கிற சகல தேசத்தாரிலுமிருந்துவந்த தேவபக்தியுள்ள யூதர்கள் அப்பொழுது எருசலேமிலே வாசம்பண்ணினார்கள். அந்தச் சத்தம் உண்டானபோது, திரளான ஜனங்கள் கூடிவந்து, தங்கள் தங்கள் பாஷையிலே அவர்கள் பேசுகிறதை அவரவர்கள் கேட்டபடியினாலே கலக்கமடைந்தார்கள். எல்லாரும் பிரமித்து ஆச்சரியப்பட்டு, ஒருவரையொருவர் பார்த்து: இதோ, பேசுகிற இவர்களெல்லாரும் கலிலேயரல்லவா? அப்படியிருக்க, நம்மில் அவரவர்களுடைய ஜென்மபாஷைகளிலே இவர்கள் பேசக் கேட்கிறோமே, இதெப்படி? பார்த்தரும், மேதரும், ஏலாமீத்தரும், மெசொப்பொத்தாமியா, யூதேயா, கப்பத்தோக்கியா, பொந்து, ஆசியா, பிரிகியா, பம்பிலியா, எகிப்து என்னும் தேசத்தார்களும், சிரேனே பட்டணத்தைச் சுற்றியிருக்கிற லீபியாவின் திசைகளிலே குடியிருக்கிறவர்களும், இங்கே சஞ்சரிக்கிற ரோமாபுரியாரும், யூதரும், யூதமார்க்கத்தமைந்தவர்களும், கிரேத்தரும், அரபியருமாகிய நாம் நம்முடைய பாஷைகளிலே இவர்கள் தேவனுடைய மகத்துவங்களைப் பேசக்கேட்கிறோமே என்றார்கள். எல்லாரும் பிரமித்துச் சந்தேகப்பட்டு, இதென்னமாய் முடியுமோ என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள். மற்றவர்களோ: இவர்கள் மதுபானத்தினால் நிறைந்திருக்கிறார்களென்று பரியாசம்பண்ணினார்கள். அப்பொழுது பேதுரு பதினொருவரோடுங்கூட நின்று, அவர்களை நோக்கி, உரத்த சத்தமாய்: யூதர்களே, எருசலேமில் வாசம்பண்ணுகிற ஜனங்களே, நீங்களெல்லாரும் அறிந்துகொள்வீர்களாக, என் வார்த்தைகளுக்குச் செவிகொடுங்கள். நீங்கள் நினைக்கிறபடி இவர்கள் வெறிகொண்டவர்களல்ல, பொழுது விடிந்து மூன்றாம் மணி வேளையாயிருக்கிறதே. தீர்க்கதரிசியாகிய யோவேலினால் உரைக்கப்பட்டபடியே இது நடந்தேறுகிறது. கடைசிநாட்களில் நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ்சொல்லுவார்கள்; உங்கள் வாலிபர் தரிசனங்களை அடைவார்கள்; உங்கள் மூப்பர் சொப்பனங்களைக் காண்பார்கள்; என்னுடைய ஊழியக்காரர்மேலும், என்னுடைய ஊழியக்காரிகள்மேலும் அந்நாட்களில் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது அவர்கள் தீர்க்கதரிசனஞ்சொல்லுவார்கள். அல்லாமலும் உயர வானத்திலே அற்புதங்களையும், தாழ பூமியிலே இரத்தம், அக்கினி, புகைக்காடாகிய அதிசயங்களையும் காட்டுவேன். கர்த்தருடைய பெரிதும் பிரகாசமுமான நாள் வருமுன்னே சூரியன் இருளாகவும், சந்திரன் இரத்தமாகவும் மாறும். அப்பொழுது கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவனெவனோ அவன் இரட்சிக்கப்படுவான் என்று தேவன் உரைத்திருக்கிறார். இஸ்ரவேலரே, நான் சொல்லும் வார்த்தைகளைக் கேளுங்கள்; நீங்கள் அறிந்திருக்கிறபடி நசரேயனாகிய இயேசுவைக்கொண்டு தேவன் உங்களுக்குள்ளே பலத்த செய்கைகளையும், அற்புதங்களையும், அடையாளங்களையும் நடப்பித்து, அவைகளினாலே அவரை உங்களுக்கு வெளிப்படுத்தினார். அப்படியிருந்தும், தேவன் நிர்ணயித்திருந்த ஆலோசனையின்படியேயும், அவருடைய முன்னறிவின்படியேயும் ஒப்புக்கொடுக்கப்பட்ட அந்த இயேசுவை நீங்கள் பிடித்து, அக்கிரமக்காரருடைய கைகளினாலே சிலுவையில் ஆணியடித்துக் கொலைசெய்தீர்கள். தேவன் அவருடைய மரண உபாதிகளின் கட்டை அவிழ்த்து, அவரை எழுப்பினார்; அவர் மரணத்தினால் கட்டப்பட்டிருக்கக்கூடாதிருந்தது. அவரைக்குறித்துத் தாவீது: கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக நிறுத்தி நோக்கிக்கொண்டிருக்கிறேன்; நான் அசைக்கப்படாதபடி அவர் என் வலதுபாரிசத்திலே இருக்கிறார்; அதினாலே என் இருதயம் மகிழ்ந்தது, என் நாவு களிகூர்ந்தது, என் மாம்சமும் நம்பிக்கையோடே தங்கியிருக்கும்; என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர், உம்முடைய பரிசுத்தர் அழிவைக்காணவொட்டீர்; ஜீவமார்க்கங்களை எனக்குத் தெரியப்படுத்தினீர்; உம்முடைய சந்நிதானத்திலே என்னைச் சந்தோஷத்தினால் நிரப்புவீர் என்று சொல்லுகிறான். சகோதரரே, கோத்திரத்தலைவனாகிய தாவீதைக்குறித்து நான் உங்களுடனே தைரியமாய்ப் பேசுகிறதற்கு இடங்கொடுங்கள்; அவன் மரணமடைந்து அடக்கம்பண்ணப்பட்டான்; அவனுடைய கல்லறை இந்நாள்வரைக்கும் நம்மிடத்திலிருக்கிறது. அவன் தீர்க்கதரிசியாயிருந்து: உன் சிங்காசனத்தில் வீற்றிருக்க மாம்சத்தின்படி உன் சந்ததியிலே கிறிஸ்துவை எழும்பப்பண்ணுவேன் என்று தேவன் தனக்குச் சத்தியம்பண்ணினதை அறிந்தபடியால், அவன் கிறிஸ்துவினுடைய ஆத்துமா பாதாளத்திலே விடப்படுவதில்லையென்றும், அவருடைய மாம்சம் அழிவைக் காண்பதில்லையென்றும் முன்னறிந்து, அவர் உயிர்த்தெழுதலைக்குறித்து இப்படிச் சொன்னான். இந்த இயேசுவை தேவன் எழுப்பினார்; இதற்கு நாங்களெல்லாரும் சாட்சிகளாயிருக்கிறோம். அவர் தேவனுடைய வலதுகரத்தினாலே உயர்த்தப்பட்டு, பிதா அருளிய வாக்குத்தத்தின்படி பரிசுத்த ஆவியைப் பெற்று, நீங்கள் இப்பொழுது காண்கிறதும் கேட்கிறதுமாகிய இதைப் பொழிந்தருளினார். தாவீது பரலோகத்திற்கு எழுந்து போகவில்லையே. நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப்போடும்வரைக்கும், நீர் என் வலதுபாரிசத்தில் உட்காருமென்று கர்த்தர் என் ஆண்டவருடனே சொன்னார் என்று அவனே சொல்லியிருக்கிறான். ஆகையினால், நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவையே தேவன் ஆண்டவரும் கிறிஸ்துவுமாக்கினாரென்று இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரும் நிச்சயமாய் அறியக்கடவர்கள் என்றான். இதை அவர்கள் கேட்டபொழுது, இருதயத்திலே குத்தப்பட்டவர்களாகி, பேதுருவையும் மற்ற அப்போஸ்தலரையும் பார்த்து: சகோதரரே, நாங்கள் என்ன செய்யவேண்டும் என்றார்கள். பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள். வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது என்று சொல்லி; இன்னும் அநேக வார்த்தைகளாலும் சாட்சிகூறி, மாறுபாடுள்ள இந்தச் சந்ததியை விட்டுவிலகி உங்களை இரட்சித்துக்கொள்ளுங்கள் என்றும் புத்திசொன்னான். அவனுடைய வார்த்தையைச் சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டவர்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள். அன்றையத்தினம் ஏறக்குறைய மூவாயிரம்பேர் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள். அவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியோந்நியத்திலும், அப்பம் பிட்குதலிலும், ஜெபம்பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள். எல்லாருக்கும் பயமுண்டாயிற்று. அப்போஸ்தலர்களாலே அநேக அற்புதங்களும் அடையாளங்களும் செய்யப்பட்டது. விசுவாசிகளெல்லாரும் ஒருமித்திருந்து, சகலத்தையும் பொதுவாய் வைத்து அநுபவித்தார்கள். காணியாட்சிகளையும் ஆஸ்திகளையும் விற்று, ஒவ்வொருவனுக்கும் தேவையானதற்குத்தக்கதாக அவைகளில் எல்லாருக்கும் பகிர்ந்துகொடுத்தார்கள். அவர்கள் ஒருமனப்பட்டவர்களாய் தேவாலயத்திலே அனுதினமும் தரித்திருந்து, வீடுகள்தோறும் அப்பம்பிட்டு மகிழ்ச்சியோடும் கபடமில்லாத இருதயத்தோடும் போஜனம்பண்ணி, தேவனைத் துதித்து, ஜனங்களெல்லாரிடத்திலும் தயவுபெற்றிருந்தார்கள். இரட்சிக்கப்படுகிறவர்களைக் கர்த்தர் அனுதினமும் சபையிலே சேர்த்துக்கொண்டுவந்தார்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்