அப்போஸ்தலர் 19:1-20
அப்போஸ்தலர் 19:1-20 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
அப்பொல்லோ கொரிந்து பட்டணத்தில் இருந்தபோது பவுல் தரைவழியாகப் பிரயாணம் செய்து, எபேசு பட்டணத்திற்கு வந்தான். அங்கே பவுல் சில சீடர்களைக் கண்டான். அவன் அவர்களிடம், “நீங்கள் விசுவாசிகளானபோது, பரிசுத்த ஆவியானவரைப் பெற்றீர்களா?” என்று கேட்டான். அதற்கு அவர்கள், “பரிசுத்த ஆவியானவர் ஒருவர் இருக்கிறார் என்றுகூட நாங்கள் கேள்விப்படவில்லை” என்றார்கள். அப்பொழுது பவுல், “அப்படியானால், நீங்கள் எந்த திருமுழுக்கைப் பெற்றீர்கள்?” என்று கேட்டான். அதற்கு அவர்கள், “யோவானுடைய திருமுழுக்கு” என்றார்கள். எனவே பவுல், “யோவானின் திருமுழுக்கு மனந்திரும்புதலின் திருமுழுக்கே. அவன் மக்களிடம், எனக்குப் பின்வருகிறவரான இயேசுவிலேயே நீங்கள் விசுவாசம் வைக்கவேண்டும் என்று சொன்னான்” என்றான். அவர்கள் இதைக் கேட்டு, கர்த்தராகிய இயேசுவின் பெயரில் திருமுழுக்குப் பெற்றார்கள். பின்பு பவுல், அவர்கள்மேல் தனது கைகளை வைத்தபோது, பரிசுத்த ஆவியானவர் அவர்கள்மேல் இறங்கினார். அவர்கள் வேற்று மொழிகளைப் பேசி, இறைவாக்கு உரைத்தார்கள். அங்கே ஏறக்குறைய, பன்னிரண்டு பேர் இருந்தார்கள். பவுல் ஜெப ஆலயத்திற்குள் சென்று துணிவுடன் பேசினான். அங்கே மூன்று மாதங்களாக இறைவனுடைய அரசைக் குறித்து மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய விதத்தில் விவாதித்துக் கொண்டிருந்தான். ஆனால் அவர்களில் சிலர் பிடிவாதமுள்ளவர்களாகி, விசுவாசிக்க மறுத்தார்கள்; அவர்கள் வெளிப்படையாக கிறிஸ்துவின் வழியைக் குறித்துத் தீமையாய்ப் பேசினார்கள். எனவே பவுல் சீடரைத் தன்னுடன் கூட்டிக்கொண்டு அவ்விடத்தை விட்டுப்போய், திறன்னு என்பவனின் கல்விக் கூடத்திலே, ஒவ்வொரு நாளும் கலந்துரையாடல்களை நடத்தினான். இது இரண்டு வருடங்களாக தொடர்ந்து நடைபெற்றது. இதனால், ஆசியா பகுதியில் வாழ்ந்த யூதர்கள், கிரேக்கர் அனைவரும் கர்த்தரின் வார்த்தையைக் கேட்டார்கள். இறைவன் பவுலைக் கொண்டு மிகப்பெரிதான அற்புதங்களைச் செய்தார். பவுலின் உடலில் தொடப்பட்ட கைக்குட்டைகளையும், மேலுடைகளையும் கொண்டுபோய் நோயாளிகளின்மேல் போட்டபோது, அவர்களுடைய வியாதிகள் சுகமடைந்தன. தீய ஆவிகள் அவர்களைவிட்டு வெளியேறின. பல்வேறு இடங்களுக்குப் போய் அசுத்த ஆவிகளை துரத்தும் சில யூதர்கள், பிசாசு பிடித்தவர்கள்மேல் கர்த்தராகிய இயேசுவின் பெயரை பயன்படுத்த முயன்றார்கள். அவர்கள், “பவுல் பிரசங்கிக்கிற இயேசுவின் பெயராலே, வெளியே போகும்படி நான் கட்டளையிடுகிறேன்” என்று சொல்லியே துரத்தினார்கள். யூத பிரதான ஆசாரியனான ஸ்கேவாவின் ஏழு மகன்களே, இவ்வாறு செய்தார்கள். அந்த அசுத்த ஆவி அவர்களிடம், “இயேசுவை எனக்குத் தெரியும், பவுலையும் எனக்குத் தெரியும், ஆனால் நீங்கள் யார்?” என்று திருப்பிக் கேட்டது. பின்பு அசுத்த ஆவியுள்ள மனிதன் அவர்கள்மேல் பாய்ந்து, அவர்கள் எல்லோரையும் மேற்கொண்டான். அவன் அவர்களை அதிகமாக அடித்ததினால், அவர்கள் அந்த வீட்டைவிட்டு இரத்தக் காயங்களுடன் உடைகளின்றி ஓடிப்போனார்கள். எபேசு பட்டணத்திலுள்ள யூதரும் கிரேக்கரும் இதை அறிந்தபோது, அவர்கள் எல்லோருக்கும் பயமுண்டாயிற்று. கர்த்தராகிய இயேசுவின் பெயர் மகிமைப்பட்டது. விசுவாசித்த பலர் முன்வந்து, தாங்கள் செய்த தீயசெயல்களை வெளியரங்கமாக அறிக்கையிட்டார்கள். மந்திரவித்தையில் ஈடுபட்டிருந்த பலர் தங்களுடைய புத்தகச்சுருள்களைக் கொண்டுவந்து வெளியரங்கமாக எரித்தார்கள். அந்தப் புத்தகச்சுருள்களின் மதிப்பை அவர்கள் கணக்கிட்டபோது, ஐம்பதாயிரம் வெள்ளிக்காசு மதிப்புடையதாய் இருந்தது. இவ்விதமாய், கர்த்தரின் வார்த்தை எங்கும் பரவி வல்லமையாய்ப் பெருகியது.
அப்போஸ்தலர் 19:1-20 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
அப்பொல்லோ என்பவன் கொரிந்து பட்டணத்திலே இருக்கும்போது, பவுல் மேடான தேசங்கள்வழியாகப்போய், எபேசுவிற்கு வந்தான்; அங்கே சில சீடர்களைக் கண்டு: நீங்கள் விசுவாசிகளானபோது, பரிசுத்த ஆவியானவரைப் பெற்றீர்களா என்று கேட்டான். அதற்கு அவர்கள்: பரிசுத்த ஆவியானவர் உண்டென்பதை நாங்கள் கேள்விப்படவே இல்லை என்றார்கள். அப்பொழுது அவன்: அப்படியானால் நீங்கள் எந்த ஞானஸ்நானம் பெற்றீர்கள் என்றான். அதற்கு அவர்கள்: யோவான் கொடுத்த ஞானஸ்நானம் பெற்றோம் என்றார்கள். அப்பொழுது பவுல்: யோவான் தனக்குப்பின் வருகிறவராகிய கிறிஸ்து இயேசுவில் விசுவாசிகளாக இருக்கவேண்டும் என்று மக்களுக்குச் சொல்லி, மனந்திரும்புதலுக்கு ஏற்ற ஞானஸ்நானத்தைக் கொடுத்தானே என்றான். அதைக் கேட்டபொழுது அவர்கள் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றார்கள். அல்லாமலும் பவுல் அவர்கள்மேல் கரங்களை வைத்தபோது, பரிசுத்த ஆவியானவர் அவர்கள்மேல் வந்தார்; அப்பொழுது அவர்கள் பிறமொழிகளைப் பேசி தீர்க்கதரிசனம் சொன்னார்கள். அந்த மனிதர்கள் ஏறக்குறைய பன்னிரண்டுபேராக இருந்தார்கள். பின்பு பவுல் ஜெப ஆலயத்தில் உள்ளே வந்து, தைரியமாகப் பிரசங்கித்து, மூன்று மாதங்கள்வரை தேவனுடைய ராஜ்யத்துக்கடுத்தவைகளைக்குறித்து கலந்துரையாடி, புத்திசொல்லிக்கொண்டு வந்தான். சிலர் கடினப்பட்டு நம்பிக்கையற்றவர்களாகிக் கூட்டத்திற்கு முன்பாக இந்த மார்க்கத்தை இகழ்ந்து பேசியபோது, அவன் அவர்களைவிட்டு விலகி, சீடர்களை அவர்களிலிருந்து பிரித்துக்கொண்டு, திறன்னு என்னும் ஒருவனுடைய கல்விக்கூடத்திலே அநுதினமும் கலந்துரையாடிக்கொண்டிருந்தான். இரண்டு வருடகாலம் இப்படி நடந்ததினாலே ஆசியாவில் குடியிருந்த யூதர்களும் கிரேக்கர்களுமாகிய எல்லோரும் கர்த்தராகிய இயேசுவின் வசனத்தைக் கேட்டார்கள். பவுலின் கைகளினாலே தேவன் அரிய பெரிய அற்புதங்களைச் செய்துகாண்பித்தார். அவனுடைய சரீரத்திலிருந்து துண்டுகளையும், கைக்குட்டைகளையும் கொண்டுவந்து, வியாதிக்காரர்கள்மேல் போட வியாதிகள் அவர்களைவிட்டு நீங்கிப்போயின; பொல்லாத ஆவிகளும் அவர்களைவிட்டுப் புறப்பட்டன. அப்பொழுது நாடோடிகளாகத் திரிகிற மந்திரவாதிகளாகிய யூதர்களில் சிலர் பொல்லாத ஆவிகள் பிடித்திருந்தவர்கள்மேல் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தைச் சொல்லத் துணிந்து: பவுல் பிரசங்கிக்கிற இயேசுவின்பேரில் ஆணையிட்டு உங்களுக்குக் கட்டளையிடுகிறோம் என்றார்கள். பிரதான ஆசாரியனாகிய ஸ்கேவா என்னும் ஒரு யூதனுடைய குமாரர்கள் ஏழுபேர் இப்படிச்செய்தார்கள். பொல்லாத ஆவி அவர்களை நோக்கி: இயேசுவை அறிவேன், பவுலையும் அறிவேன், நீங்கள் யார் என்று சொல்லி, அசுத்தஆவியையுடைய மனிதன் அவர்கள்மேல் பாய்ந்து, பலவந்தம்பண்ணி, அவர்களை மேற்கொள்ள, அவர்கள் நிர்வாணிகளும் காயப்பட்டவர்களுமாகி அந்த வீட்டைவிட்டு ஓடிப்போனார்கள். இது எபேசுவிலே குடியிருந்த யூதர்கள் கிரேக்கர்கள் அனைவருக்கும் தெரியவந்தபோது, அவர்களெல்லோரும் பயமடைந்தார்கள்; கர்த்தராகிய இயேசுவின் நாமம் மகிமைப்பட்டது. விசுவாசித்தவர்களில் அநேகர் வந்து, தங்களுடைய பொல்லாத வித்தைகளை வெளிப்படுத்தி அறிக்கையிட்டார்கள். மாயவித்தைக்காரர்களாக இருந்தவர்களில் அநேகர் தங்களுடைய புத்தகங்களைக் கொண்டுவந்து, எல்லோருக்கும் முன்பாகச் சுட்டெரித்தார்கள்; அவைகளின் விலையைத் தொகைபார்த்து, ஐம்பதினாயிரம் வெள்ளிக்காசாகக் கண்டார்கள். இவ்வளவு வல்லமையாக கர்த்தருடைய வசனம் பரவியது.
அப்போஸ்தலர் 19:1-20 பரிசுத்த பைபிள் (TAERV)
அப்பொல்லோ கொரிந்து நகரில் இருந்தபோது எபேசு நகருக்குச் செல்லும் வழியில் பவுல் சில உள்பகுதிகளின் வழியாகப் போய்க்கொண்டிருந்தான். பவுல் எபேசுவில் சீஷர்கள் சிலரைக் கண்டுபிடித்தான். பவுல் அவர்களை நோக்கி, “நீங்கள் விசுவாசித்தபோது பரிசுத்த ஆவியானவரைப் பெற்றீர்களா?” என்று கேட்டான். இந்தச் சீஷர்கள் அவனுக்கு, “நாங்கள் பரிசுத்த ஆவியானவரைப் பற்றிக் கேள்விப்படவே இல்லை” என்றனர். எனவே பவுல் அவர்களை நோக்கி, “பின் நீங்கள் எத்தகைய ஞானஸ்நானம் பெற்றீர்கள்?” என்று கேட்டான். அவர்கள், “யோவான் கற்பித்த ஞானஸ்நானம் அது” என்றார்கள். பவுல், “மக்கள் தங்கள் வாழ்க்கையை மாற்றியமைக்க விரும்புவதைக் காட்டுவதற்கு யோவான் அவர்களை ஞானஸ்நானம் பெறும்படியாகக் கூறினான். அவனுக்குப் பின் வருகிற ஒருவரை நம்பும்படியாக யோவான் மக்களுக்குக் கூறினான். அவர் இயேசுவே” என்றான். அவர்கள் இதனைக் கேட்டபோது கர்த்தராகிய இயேசுவின் பெயரில் ஞானஸ்நானம் பெற்றார்கள். அப்போது பவுல் அவனது கைகளை அவர்கள்மீது வைத்தபோது பரிசுத்த ஆவியானவர் அவர்கள்மீது வந்தார். அவர்கள் வெவ்வேறு மொழிகளைப் பேசவும் தீர்க்கதரிசனம் சொல்லவும் ஆரம்பித்தனர். இக்குழுவில் சுமார் பன்னிரண்டு மனிதர்கள் இருந்தனர். பவுல் ஜெப ஆலயத்திற்குள் சென்று, மிகவும் துணிவாகப் பேசினான். பவுல் மூன்று மாதங்கள் இதைச் செய்தான். அவன் யூதர்களிடம் தேவனுடைய இராஜ்யத்தைப் பற்றிப் பேசி, அவற்றை யூதர்கள் ஏற்றுக்கொள்ளும்படித் தூண்ட முயற்சித்தான். ஆனால் சில யூதர்கள் பிடிவாதமாக இருந்தனர். அவர்கள் நம்ப மறுத்தனர். இந்த யூதர்கள் தேவனுடைய வழியைக் குறித்துத் தீயவற்றைப் பேசினர். எல்லா மக்களும் இவற்றை கேட்டனர். எனவே பவுல் இந்த யூதரை விட்டு நீங்கி, இயேசுவின் சீஷர்களைத் தன்னோடு அழைத்துச் சென்றான். திறன்னு என்ற ஒருவனின் பள்ளிக்கூடம் இருந்த இடத்திற்குப் பவுல் போனான். பவுல் அங்கிருந்த மக்களுடன் தினமும் கலந்துரையாடினான். பவுல் இதை இரண்டு வருடங்கள் செய்தான். இச்செயலால் ஆசியாவில் வசித்துக்கொண்டிருந்த ஒவ்வொரு யூதனும் கிரேக்கனும் தேவனுடைய வார்த்தையைக் கேட்டனர். சில அசாதாரணமான அற்புதங்களைச் செய்வதற்கு தேவன் பவுலைப் பயன்படுத்தினார். பவுல் பயன்படுத்திய துணிகளையும் கைக்குட்டைகளையும் சிலர் எடுத்துச் சென்றனர். இவற்றை மக்கள் நோயாளிகள் மீது வைத்தனர். அவர்கள் இதைச் செய்தபோது, நோயாளிகள் குணமடைந்தார்கள். அசுத்த ஆவிகள் அவர்களைவிட்டு நீங்கிச் சென்றன. சில யூதர்களும் சுற்றுப் பிரயாணம் செய்து மக்களை விட்டு அசுத்த ஆவிகள் நீங்கும்படியாகச் செய்தனர். ஸ்கேவாவின் ஏழு குமாரர்களும் இதைச் செய்தனர். (ஸ்கேவா ஒரு தலைமை ஆசாரியன்) கர்த்தர் இயேசுவின் பெயரைப் பயன்படுத்தி, மக்களிடமிருந்து அசுத்த ஆவிகளை வெளியேற்ற இந்த யூதர்கள் முயன்றனர். அவர்கள் எல்லோரும், “பவுல் பேசுகின்ற அதே இயேசுவினால், வெளியேறுமாறு நான் கட்டளையிடுகிறேன்!” என்று கூறினர். ஆனால் ஒருமுறை ஓர் அசுத்த ஆவி இந்த யூதர்களை நோக்கி, “எனக்கு இயேசுவைத் தெரியும், எனக்குப் பவுலைப் பற்றியும் தெரியும், ஆனால் நீங்கள் யார்?” என்று கேட்டது. மேலும் அசுத்த ஆவி பிடித்த மனிதன், இந்த யூதர்கள் மீது தாவினான். அவர்கள் எல்லோரைக் காட்டிலும் அவன் மிகுந்த பலம் பொருந்தியவனாக இருந்தான். அவன் அவர்களை அடித்து, அவர்களின் ஆடைகளைக் கிழித்துப்போட்டான். அந்த வீட்டிலிருந்து இந்த யூதர்கள் நிர்வாணமாக ஓடிப் போனார்கள். எபேசுவின் எல்லா ஜனங்களும், யூதரும் கிரேக்கரும் இதனை அறிந்தனர். தேவனிடம் மிகுந்த மரியாதை கொள்ளத் துவங்கினர். கர்த்தராகிய இயேசுவின் பெயரை மக்கள் அதிகமாக மகிமைப்படுத்த ஆரம்பித்தனர். விசுவாசிகளில் பலர் தாங்கள் செய்த பாவச் செயல்களை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளத் துவங்கினார்கள். சில விசுவாசிகள் மந்திரத்தைப் பயன்படுத்தினவர்களாயிருந்தனர். அவர்கள் தங்கள் மந்திர நூல்களைக் கொண்டு வந்து, அவற்றை எல்லோருக்கும் முன்பாக எரித்தனர். அப்புத்தகங்கள் சுமார் ஐம்பதாயிரம் வெள்ளிக் காசுகள் மதிப்புடையனவாக இருந்தன. இவ்வாறே கர்த்தரின் வார்த்தை மிக்க வல்லமை வாய்ந்த வகையில் அதிகமான மக்களைப் பாதிக்க ஆரம்பித்தது. மிக அதிக எண்ணிக்கையில் மக்கள் விசுவாசம் வைத்தனர்.
அப்போஸ்தலர் 19:1-20 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
அப்பொல்லோ என்பவன் கொரிந்து பட்டணத்திலே இருக்கையில், பவுல் மேடான தேசங்கள் வழியாய்ப் போய், எபேசுவுக்கு வந்தான்; அங்கே சில சீஷரைக் கண்டு: நீங்கள் விசுவாசிகளானபோது, பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா என்று கேட்டான். அதற்கு அவர்கள்: பரிசுத்த ஆவி உண்டென்பதை நாங்கள் கேள்விப்படவே இல்லை என்றார்கள். அப்பொழுது அவன்: அப்படியானால் நீங்கள் எந்த ஞானஸ்நானம் பெற்றீர்கள் என்றான். அதற்கு அவர்கள்: யோவான் கொடுத்த ஞானஸ்நானம் பெற்றோம் என்றார்கள். அப்பொழுது பவுல்: யோவான் தனக்குப்பின் வருகிறவராகிய கிறிஸ்து இயேசுவில் விசுவாசிகளாயிருக்க வேண்டும் என்று ஜனங்களுக்குச் சொல்லி, மனந்திரும்புதலுக்கு ஏற்ற ஞானஸ்நானத்தைக் கொடுத்தானே என்றான். அதைக் கேட்டபோது அவர்கள் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றார்கள். அல்லாமலும் பவுல் அவர்கள்மேல் கைகளை வைத்தபோது, பரிசுத்த ஆவி அவர்கள்மேல் வந்தார்; அப்பொழுது அவர்கள் அந்நியபாஷைகளைப் பேசித் தீர்க்கதரிசனஞ்சொன்னார்கள். அந்த மனுஷரெல்லாரும் ஏறக்குறையப் பன்னிரண்டு பேராயிருந்தார்கள். பின்பு பவுல் ஜெப ஆலயத்தில் பிரவேசித்து, தைரியமாய்ப் பிரசங்கித்து, மூன்று மாதமளவும் தேவனுடைய ராஜ்யத்துக்கடுத்தவைகளைக்குறித்துச் சம்பாஷணைபண்ணி, புத்திசொல்லிக்கொண்டு வந்தான். சிலர் கடினப்பட்டு அவிசுவாசிகளாகிக் கூட்டத்திற்கு முன்பாக இந்த மார்க்கத்தை நிந்தித்தபோது, அவன் அவர்களை விட்டு விலகி, சீஷரை அவர்களிலிருந்து பிரித்துக்கொண்டு, திறன்னு என்னும் ஒருவனுடைய வித்தியாசாலையிலே அனுதினமும் சம்பாஷித்துக் கொண்டுவந்தான். இரண்டு வருஷகாலம் இப்படி நடந்ததினாலே ஆசியாவில் குடியிருந்த யூதரும் கிரேக்கருமாகிய எல்லாரும் கர்த்தராகிய இயேசுவின் வசனத்தைக் கேட்டார்கள். பவுலின் கைகளினாலே தேவன் விசேஷித்த அற்புதங்களைச் செய்தருளினார். அவனுடைய சரீரத்திலிருந்து உறுமால்களையும், கச்சைகளையும் கொண்டுவந்து, வியாதிக்காரர்மேல் போட வியாதிகள் அவர்களைவிட்டு நீங்கிப்போயின; பொல்லாத ஆவிகளும் அவர்களைவிட்டுப் புறப்பட்டன. அப்பொழுது தேசாந்தரிகளாய்த் திரிகிற மந்திரவாதிகளாகிய யூதரில் சிலர் பொல்லாத ஆவிகள் பிடித்திருந்தவர்கள்மேல் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தைச் சொல்லத் துணிந்து: பவுல் பிரசங்கிக்கிற இயேசுவின்பேரில் ஆணையிட்டு உங்களுக்குக் கட்டளையிடுகிறோம் என்றார்கள். பிரதான ஆசாரியனாகிய ஸ்கேவா என்னும் ஒரு யூதனுடைய குமாரர் ஏழுபேர் இப்படிச் செய்தார்கள். பொல்லாத ஆவி அவர்களை நோக்கி: இயேசுவை அறிவேன், பவுலையும் அறிவேன், நீங்கள் யார் என்று சொல்லி, பொல்லாத ஆவியையுடைய மனுஷன் அவர்கள்மேல் பாய்ந்து, பலாத்காரம்பண்ணி, அவர்களை மேற்கொள்ள, அவர்கள் நிருவாணிகளும் காயப்பட்டவர்களுமாகி அந்த வீட்டை விட்டு ஓடிப்போனார்கள். இது எபேசுவிலே குடியிருந்த யூதர் கிரேக்கர் அனைவருக்கும் தெரியவந்தபோது, அவர்களெல்லாரும் பயமடைந்தார்கள்; கர்த்தராகிய இயேசுவின் நாமம் மகிமைப்பட்டது. விசுவாசித்தவர்களில் அநேகர் வந்து, தங்கள் செய்கைகளை வெளிப்படுத்தி அறிக்கையிட்டார்கள். மாயவித்தைக்காரராயிருந்தவர்களில் அநேகர் தங்கள் புஸ்தகங்களைக் கொண்டுவந்து, எல்லாருக்கும் முன்பாகச் சுட்டெரித்தார்கள்; அவைகளின் கிரயத்தைத் தொகைபார்த்து, ஐம்பதினாயிரம் வெள்ளிக்காசாகக் கண்டார்கள். இவ்வளவு பலமாய்க் கர்த்தருடைய வசனம் விருத்தியடைந்து மேற்கொண்டது.