அப்போஸ்தலர் 18:1-4

அப்போஸ்தலர் 18:1-4 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இதற்குப் பின்பு, பவுல் அத்தேனே பட்டணத்தைவிட்டு, கொரிந்து பட்டணத்திற்குப் போனான். அங்கே அவன் ஆக்கில்லா என்னும் பெயருடைய ஒரு யூதனைச் சந்தித்தான். பொந்து பட்டணத்தைச் சேர்ந்தவனாகிய இவன், தனது மனைவி பிரிஸ்கில்லாளுடன் சமீபத்தில் இத்தாலியிலிருந்து வந்திருந்தான். ஏனெனில், கிலவுதியு என்னும் ரோம பேரரசன் எல்லா யூதரும் ரோமை விட்டு வெளியேற வேண்டுமென உத்தரவிட்டிருந்தான். பவுல் அவர்களைப் பார்க்கப்போனான். அவர்களைப் போலவே, தானும் ஒரு கூடாரத் தொழிலாளியானபடியால், பவுலும் அவர்களுடன் தங்கி வேலைசெய்தான். ஒவ்வொரு ஓய்வுநாளிலும் அவன் ஜெப ஆலயத்திலே ஆதாரத்துடன் விவாதித்து, யூதர்களையும் கிரேக்கரையும் நற்செய்தியை ஏற்றுக்கொள்ளும்படி முயற்சித்தான்.

அப்போஸ்தலர் 18:1-4 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அதன்பின்பு பவுல் அத்தேனே பட்டணத்தைவிட்டு, கொரிந்து பட்டணத்திற்கு வந்து; யூதரெல்லோரும் ரோமாபுரியைவிட்டுப்போகும்படி கிலவுதியு பேரரசன் கட்டளையிட்டபடியினாலே, இத்தாலியாவிலிருந்து புதிதாக வந்திருந்த பொந்து தேசத்தைச் சேர்ந்த ஆக்கில்லா என்னும் பெயருள்ள ஒரு யூதனையும் அவன் மனைவியாகிய பிரிஸ்கில்லாளையும் அங்கே பார்த்து, அவர்களிடத்திற்குப் போனான். அவர்கள் கூடாரம்பண்ணுகிற தொழிலாளிகளாக இருந்தார்கள்; தானும் அந்தத் தொழில் செய்கிறவனாக இருந்தபடியால் அவர்களோடு தங்கி, வேலை செய்துகொண்டு வந்தான். ஓய்வு நாட்களிலே இவன் ஜெப ஆலயத்திலே, யூதர்களுக்கும் கிரேக்கர்களுக்கும் புத்திசொன்னான்.

அப்போஸ்தலர் 18:1-4 பரிசுத்த பைபிள் (TAERV)

இதன் பிறகு பவுல் அத்தேனேயை விட்டு, கொரிந்து நகரத்திற்குச் சென்றான். கொரிந்துவில் பவுல் ஆக்கில்லா என்னும் பெயருள்ள யூத மனிதனைச் சந்தித்தான். ஆக்கில்லா பொந்து நாட்டில் பிறந்தவன். ஆனால் ஆக்கில்லாவும் அவனது மனைவி பிரிசில்லாவும் சமீபத்தில் இத்தாலியிலிருந்துகொரிந்துவுக்கு வந்திருந்தனர். கிலவுதியு எல்லா யூதர்களும் ரோமை விட்டுப் போக வேண்டுமென்று கட்டளையிட்டதால் அவர்கள் இத்தாலியிலிருந்து வந்தனர். பவுல், ஆக்கில்லா, பிரிசில்லா ஆகியோரைச் சந்திக்கச் சென்றான். அவர்களும் பவுலைப் போலவே கூடாரம் கட்டுபவர்கள். இதன் காரணமாகப் பவுல் அவர்களோடு தங்கியிருந்து வேலை செய்து வந்தான். ஒவ்வொரு ஓய்வு நாளிலும் பவுல் ஜெப ஆலயத்தில் யூதரோடும் கிரேக்கரோடும் பேசினான். அவர்கள் இயேசுவில் விசுவாசம்கொள்ள ஒப்புமாறு செய்வதற்குப் பவுல் முயற்சி செய்துகொண்டிருந்தான்.

அப்போஸ்தலர் 18:1-4 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அதன்பின்பு பவுல் அத்தேனே பட்டணத்தை விட்டு, கொரிந்து பட்டணத்துக்கு வந்து; யூதரெல்லாரும் ரோமாபுரியை விட்டுப் போகும்படி கிலவுதியுராயன் கட்டளையிட்டபடியினாலே, இத்தாலியாவிலிருந்து புதிதாய் வந்திருந்த பொந்து தேசத்தானாகிய ஆக்கில்லா என்னும் நாமமுள்ள ஒரு யூதனையும் அவன் மனைவியாகிய பிரிஸ்கில்லாளையும் அங்கே கண்டு, அவர்களிடத்திற்குப் போனான். அவர்கள் கூடாரம்பண்ணுகிற தொழிலாளிகளாயிருந்தார்கள்; தானும் அந்தத் தொழில் செய்கிறவனானபடியினாலே அவர்களிடத்தில் தங்கி, வேலைசெய்துகொண்டுவந்தான். ஓய்வு நாள்தோறும் இவன் ஜெப ஆலயத்திலே சம்பாஷணைபண்ணி, யூதருக்கும் கிரேக்கருக்கும் புத்தி சொன்னான்.