அப்போஸ்தலர் 17:24-28

அப்போஸ்தலர் 17:24-28 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

உலகத்தையும் அதிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின தேவனானவர் வானத்திற்கும் பூமிக்கும் ஆண்டவராயிருக்கிறபடியால் கைகளினால் கட்டப்பட்ட கோவில்களில் அவர் வாசம்பண்ணுகிறதில்லை. எல்லாருக்கும் ஜீவனையும் சுவாசத்தையும் சகலத்தையும் கொடுக்கிற அவர், தமக்கு யாதொன்று தேவையானதுபோல, மனுஷர் கைகளால் பணிவிடைகொள்ளுகிறதுமில்லை. மனுஷஜாதியான சகல ஜனங்களையும் அவர் ஒரே இரத்தத்தினாலே தோன்றப்பண்ணி, பூமியின்மீதெங்கும் குடியிருக்கச்செய்து, முன் தீர்மானிக்கப்பட்ட காலங்களையும் அவர்கள் குடியிருப்பின் எல்லைகளையும் குறித்திருக்கிறார். கர்த்தராகிய தம்மை அவர்கள் தடவியாகிலும் கண்டுபிடிக்கத்தக்கதாகத் தம்மைத் தேடும்படிக்கு அப்படிச் செய்தார்; அவர் நம்மில் ஒருவருக்கும் தூரமானவரல்லவே. ஏனெனில் அவருக்குள் நாம் பிழைக்கிறோம், அசைகிறோம், இருக்கிறோம்; அப்படியே உங்கள் புலவர்களிலும் சிலர், நாம் அவருடைய சந்ததியார் என்று சொல்லியிருக்கிறார்கள்.

அப்போஸ்தலர் 17:24-28 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

“உலகத்தையும், அதிலுள்ள எல்லாவற்றையும் படைத்த இறைவனே, வானத்திற்கும் பூமிக்கும் ஆண்டவராய் இருக்கிறார். அவர் கைகளினால் கட்டப்பட்ட ஆலயங்களில் வாழ்கிறவர் அல்ல. இறைவனுக்கு எவ்விதத் தேவையும் இல்லாதிருப்பதனால், மனிதருடைய கைகளின் பணி அவருக்குத் தேவையில்லை. ஏனெனில் அவரே எல்லா மனிதருக்கும் உயிரையும், சுவாசத்தையும், தேவையான எல்லாவற்றையும் கொடுக்கிறார். அவர் ஒரு மனிதனில் இருந்தே, எல்லா நாடுகளையும் படைத்து, அவர்களை பூமி முழுவதிலும் குடியிருக்கச் செய்தார்; அவர்களுக்குரிய காலங்களையும் அவர்கள் வாழவேண்டிய இடங்களையும் அவரே முன்குறித்திருக்கிறார். மனிதர் இறைவனைத் தேடவேண்டும் என்பதற்காகவே அவர் இப்படிச் செய்திருக்கிறார். அவர்கள் தம்மை நாடித் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும் என்பதே அவருடைய எதிர்பார்ப்பு. எனினும் அவர் நம் ஒவ்வொருவருக்கும் அருகிலேயே இருக்கிறார். ‘ஏனெனில், நாம் அவரிலேயே வாழ்கின்றோம், அவரிலேயே செயல்படுகின்றோம், அவரிலேயே தங்கியுமிருக்கின்றோம்.’ உங்கள் புலவர்களில் சிலர் சொன்னதுபோல், ‘அவருடைய பிள்ளைகளாய் இருக்கிறோம்.’

அப்போஸ்தலர் 17:24-28 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

உலகத்தையும் அதிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கின தேவனானவர் வானத்திற்கும் பூமிக்கும் ஆண்டவராக இருக்கிறபடியால், கைகளினால் கட்டப்பட்ட கோவில்களில் அவர் குடியிருப்பதில்லை. எல்லோருக்கும் ஜீவனையும் சுவாசத்தையும் எல்லாவற்றையும் கொடுக்கிற ஆண்டவர், தமக்கு ஏதாவது தேவையென்றால், மனிதர்கள் கைகளினால் பெற்றுக்கொள்வதில்லை. மனித இனமான எல்லா மக்களையும் அவர் ஒரே இரத்தத்தினாலே உண்டாக்கி, பூமியெங்கும் குடியிருக்கச்செய்து, முன் தீர்மானிக்கப்பட்ட காலங்களையும் அவர்கள் குடியிருக்கும் எல்லைகளையும் குறித்திருக்கிறார்; கர்த்தராகிய அவரை மக்கள் தடவியாவது தேடிக் கண்டுபிடிக்கும்படி அப்படிச் செய்தார்; அவர் நம் ஒவ்வொருவருக்கும் அருகில் உள்ளார். ஏனென்றால், அவருக்குள் நாம் பிழைக்கிறோம், அசைகிறோம், இருக்கிறோம்; அப்படியே உங்களுடைய புலவர்களிலும் சிலர், நாம் அவருடைய வம்சத்தார் என்று சொல்லியிருக்கிறார்கள்.

அப்போஸ்தலர் 17:24-28 பரிசுத்த பைபிள் (TAERV)

“அவரே உலகம் முழுவதையும் அதிலுள்ள எல்லாப் பொருட்களையும் உண்டாக்கின தேவன். அவரே வானம் பூமி ஆகியவற்றின் கர்த்தர். மனிதன் கட்டுகிற ஆலயங்களில் அவர் வசிப்பதில்லை. உயிர், மூச்சு, பிற அனைத்தையும் மக்களுக்குக் கொடுப்பவர் இந்த தேவனே, அவருக்கு மக்களிடமிருந்து எந்த உதவியும் தேவையில்லை. தேவனுக்குத் தேவையான எல்லாம் அவரிடம் இருக்கின்றன. ஒரு மனிதனை உருவாக்குவதிலிருந்து தேவன் ஆரம்பித்தார். அவனிலிருந்து தேவன் வெவ்வேறான மக்களை உருவாக்கினார். தேவன் அவர்களை உலகின் எல்லாப் பகுதிகளிலும் வசிக்கச் செய்தார். எப்போது, எங்கு அவர்கள் வசிக்க வேண்டுமென்பதை தேவன் மிகச் சரியாகத் தீர்மானித்தார். “மக்கள் தன்னைத் தேடவேண்டுமென்று தேவன் விரும்பினார். அவர்கள் எல்லா இடங்களிலும் தேடி அவரைக் கண்டுகொள்ளக்கூடும். ஆனால் அவர் நம் ஒவ்வொருவருக்கும் தொலைவில் இல்லை. “நாம் அவரோடு வாழ்கிறோம். நாம் அவரோடு நடக்கிறோம். நாம் அவரோடு இருக்கிறோம். உங்கள் கவிஞர்கள் சிலர் இதைச் சொல்லியிருக்கிறார்கள். ‘ஏனென்றால் நாம் அவரது பிள்ளைகள்.’