அப்போஸ்தலர் 17:10-15

அப்போஸ்தலர் 17:10-15 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

உடனே சகோதரர் இராத்திரிகாலத்திலே பவுலையும் சீலாவையும் பெரோயா பட்டணத்துக்கு அனுப்பிவிட்டார்கள்; அவர்கள் அங்கே சேர்ந்து, யூதருடைய ஜெப ஆலயத்திற்குப் போனார்கள். அந்தப் பட்டணத்தார் மனோவாஞ்சையாய் வசனத்தை ஏற்றுக்கொண்டு, காரியங்கள் இப்படியிருக்கிறதா என்று தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்ந்துபார்த்ததினால், தெசலோனிக்கேயில் உள்ளவர்களைப்பார்க்கிலும் நற்குணசாலிகளாயிருந்தார்கள். அதனால் அவர்களில் அநேகம்பேரும் கனம்பொருந்திய கிரேக்கரில் அநேக ஸ்திரீகளும் புருஷர்களும் விசுவாசித்தார்கள். பெரோயாவிலும் தேவவசனம் பவுலினால் அறிவிக்கப்படுகிறதென்று தெசலோனிக்கேயரான யூதர்கள் அறிந்தபோது, அங்கேயும் வந்து, ஜனங்களைக் கிளப்பிவிட்டார்கள். உடனே சகோதரர் பவுலைச் சமுத்திரவழியாய்ப் போக அனுப்பிவிட்டார்கள். சீலாவும் தீமோத்தேயும் அங்கே தங்கியிருந்தார்கள். பவுலை வழிநடத்தினவர்கள் அவனை அத்தேனே பட்டணம்வரைக்கும் அழைத்துக்கொண்டுபோய்; அங்கே சீலாவும் தீமோத்தேயும் அதிசீக்கிரமாகத் தன்னிடத்திற்கு வரும்படி அவர்களுக்குச் சொல்லக் கட்டளை பெற்றுக்கொண்டு புறப்பட்டுப்போனார்கள்.

அப்போஸ்தலர் 17:10-15 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அன்று இரவே சகோதரர்கள், பவுலையும் சீலாவையும் பெரோயாவுக்கு அனுப்பிவைத்தார்கள். அவர்கள் அங்கு வந்து சேர்ந்தபோது, யூத ஜெப ஆலயத்திற்குச் சென்றார்கள். பெரோயா பட்டணத்தைச் சேர்ந்தவர்கள் தெசலோனிக்கேயாவைச் சேர்ந்தவர்களைவிட சிறந்த குணமுடையவர்கள். அவர்கள் இறைவனுடைய வார்த்தையை ஆவலுடன் ஏற்றுக்கொண்டு, பவுல் சொன்னது உண்மைதானோ எனக் கண்டறிவதற்கு ஒவ்வொரு நாளும் வேதவசனங்களை ஆராய்ந்தார்கள். பல யூதர்கள் விசுவாசித்தார்கள், கனம்பொருந்திய அநேக கிரேக்கப் பெண்களும் ஆண்களும் விசுவாசித்தார்கள். பெரோயாவில் பவுல் இறைவனின் வார்த்தையைப் பிரசங்கிக்கிறான் என்று தெசலோனிக்கேயாவிலுள்ள யூதர் அறிந்தபோது, அவர்கள் அங்கேயும் போய் மக்களைக் கலகம் செய்யத் தூண்டிவிட்டார்கள். உடனே சகோதரர் பவுலை கடற்கரையோரப் பகுதிக்கு அனுப்பினார்கள். ஆனால் சீலாவும் தீமோத்தேயுவுமோ பெரோயாவில் தங்கியிருந்தார்கள். பவுலைக் கூட்டிக்கொண்டு போனவர்கள் அத்தேனே பட்டணம் வரைக்கும் அவனைக் கொண்டுவந்தார்கள். அவர்கள் திரும்பிப் போகும்போது, சீலாவும் தீமோத்தேயுவும் விரைவில் தன்னிடம் வந்து சேர்ந்துகொள்ள வேண்டும் என்று பவுல் இவர்களுக்குக் கொடுத்த செய்தியைக் கொண்டுசென்றார்கள்.

அப்போஸ்தலர் 17:10-15 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அன்று இரவிலே சகோதரர்கள் பவுலையும் சீலாவையும் பெரோயா பட்டணத்திற்கு அனுப்பிவிட்டார்கள்; அவர்கள் அங்கே சென்று, யூதர்களுடைய ஜெப ஆலயத்திற்குப் போனார்கள். அந்தப் பட்டணத்து மக்கள் வசனத்தை ஆர்வத்தோடு ஏற்றுக்கொண்டு, விஷயங்கள் இப்படியிருக்கிறதா என்று தினமும் வேதவாக்கியங்களை ஆராய்ந்துபார்த்ததினால், தெசலோனிக்கேயில் உள்ளவர்களைவிட நற்பண்பு உடையவர்களாக இருந்தார்கள். அதனால் அவர்களில் அநேகரும், கிரேக்கர்களில் கனம்பெற்ற அநேக ஆண்களும் பெண்களும் விசுவாசித்தார்கள். பெரோயாவிலும் தேவவசனம் பவுலினால் அறிவிக்கப்படுகிறது என்று தெசலோனிக்கேயரான யூதர்களுக்கு தெரிந்தபோது, அங்கேயும் வந்து, மக்களைத் தூண்டிவிட்டார்கள். உடனே சகோதரர்கள் பவுலைக் கடல்வழியாக அனுப்பிவிட்டார்கள். சீலாவும் தீமோத்தேயுவும் அங்கே தங்கியிருந்தார்கள். பவுலைக் கூட்டிச்சென்றவர்கள் அவனை அத்தேனே பட்டணம்வரைக்கும் கூட்டிக்கொண்டுபோனார்கள். அங்கே பவுல், சீலாவையும் தீமோத்தேயுவையும் சீக்கிரமாக என்னிடம் வரச் சொல்லுங்கள் என்று அவர்களுக்குச் சொல்லி அனுப்பினான்.

அப்போஸ்தலர் 17:10-15 பரிசுத்த பைபிள் (TAERV)

அதே இரவில் விசுவாசிகள் பவுலையும் சீலாவையும் பெரேயா எனப்பட்ட மற்றொரு நகரத்திற்கு அனுப்பினர். பெரேயாவில் பவுலும் சீலாவும் யூதர்களின் ஜெப ஆலயத்திற்குச் சென்றனர். தெசலோனிக்கேயின் யூதர்களைக் காட்டிலும் இந்த யூதர்கள் சிறந்தவர்களாக இருந்தனர். பவுலும் சீலாவும் கூறியவற்றை இந்த யூதர்கள் மிகுந்த ஆர்வமுடன் வரவேற்றார்கள். பெரேயாவின் யூதர்கள் ஒவ்வொருநாளும் வேதவாக்கியங்களைக் கற்றார்கள். இக்காரியங்கள் உண்மையானவையா என்று அறிய இந்த யூதர்கள் விரும்பினார்கள். இந்த யூதர்களில் பலர் நம்பிக்கை கொண்டனர். உயர்நிலையிலிருந்த பல கிரேக்கப் பெண்களும் ஆண்களைப் போலவே நம்பிக்கை கொண்டனர். தெசலோனிக்கேயின் யூதர்கள் பெரேயாவில் பவுல் தேவனுடைய வார்த்தைகளை உபதேசித்தான் என்பதை அறிந்தபோது அவர்கள் பெரேயாவுக்கும் வந்தனர். தெசலோனிக்கேயின் யூதர்கள் பெரேயாவின் மக்களைக் கலக்கமுறச் செய்து கலகம் உண்டாக்கினர். எனவே விசுவாசிகள் விரைந்து பவுலைக் கடற்கரை வழியாக அனுப்பி வைத்தனர், ஆனால் சீலாவும் தீமோத்தேயுவும் பெரேயாவில் தங்கினர். பவுலோடு சென்ற விசுவாசிகள் அவனை அத்தேனே நகரத்திற்கு அழைத்துச் சென்றனர். பவுலிடமிருந்து அந்தச் சகோதரர்கள் சீலாவுக்கும் தீமோத்தேயுவுக்கும் குறிப்புகளை எடுத்துச் சென்றனர். அக்குறிப்புகள், “எவ்வளவு விரைவில் முடியுமோ, அவ்வளவு விரைவில் என்னிடம் வாருங்கள்” என்றன.