அப்போஸ்தலர் 15:5-12

அப்போஸ்தலர் 15:5-12 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அப்பொழுது பரிசேயர் குழுவைச் சேர்ந்த சில விசுவாசிகள் எழுந்து நின்று, “யூதரல்லாத மக்களும் விருத்தசேதனம் பெற்றுக்கொண்டு, மோசேயின் சட்டத்திற்குக் கீழ்ப்படிய வேண்டும்” என்றார்கள். அப்பொழுது அப்போஸ்தலரும் சபைத்தலைவர்களும் இந்தக் காரியத்தைக்குறித்து ஆலோசிப்பதற்கு ஒன்றுகூடினார்கள். அதிக நேரம் கலந்துரையாடிய பின்பு, பேதுரு எழுந்து நின்று, அவர்களிடம் பேசத் தொடங்கினான்: “சகோதரரே, யூதரல்லாத மக்களும் நற்செய்தியைக் கேட்டு விசுவாசிப்பதற்கென, இறைவன் உங்கள் மத்தியிலிருந்து என்னைச் சிறிதுகாலத்துக்கு முன்பு தெரிந்துகொண்டார் என்று நீங்கள் அறிவீர்கள். யூதரல்லாத மக்களும் என் உதடுகளிலிருந்து நற்செய்தியைக் கேட்டு விசுவாசிக்க வேண்டுமென்றே அவர் என்னைத் தெரிந்துகொண்டார். இருதயத்தை அறிந்திருக்கிற இறைவன், நமக்கு பரிசுத்த ஆவியானவரைக் கொடுத்ததுபோல, யூதரல்லாத மக்களுக்கும் கொடுத்து, அவர்களையும் அவர் ஏற்றுக்கொண்டார் என்பதைக் காண்பித்தார். இறைவன் விசுவாசத்தினாலேயே அவர்களுடைய இருதயங்களை சுத்தமாக்கி, நமக்கும் அவர்களுக்கும் எந்தவித வித்தியாசமும் இல்லாதபடிச் செய்தார் இப்படியிருக்க, யூதரல்லாத விசுவாசிகளின் கழுத்தின்மேல் நம்மாலோ, நம் தந்தையராலோ சுமக்க முடியாத நுகத்தை சுமத்துவதினால், ஏன் இறைவனைச் சோதிக்கிறீர்கள்? எனவே, கர்த்தராகிய இயேசுவின் கிருபையின் மூலமே, நாம் இரட்சிக்கப்படுகிறோம் என்று விசுவாசிக்கிறோம். அவர்களும் அப்படித்தான் இரட்சிக்கப்படுகிறார்கள்” என்றான். பின்பு பர்னபாவும் பவுலும் தங்கள் மூலமாக யூதரல்லாத மக்கள் மத்தியில் இறைவன் செய்த அற்புதங்களையும், அதிசயங்களையும் பற்றிச் சொன்னார்கள். அதைக் கேட்டபோது கூடியிருந்த அனைவரும் மவுனமாய் இருந்தார்கள்.

அப்போஸ்தலர் 15:5-12 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அப்பொழுது பரிசேய சமயத்தாரில் விசுவாசிகளான சிலர் எழுந்து, அவர்களை விருத்தசேதனம்பண்ணுகிறதும் மோசேயின் நியாயப்பிரமாணத்தைக் கடைபிடிக்கும்படி அவர்களுக்குக் கற்பிக்கிறதும் அவசியம் என்றார்கள். அப்போஸ்தலர்களும், சபை மூப்பர்களும் இந்தக் காரியத்தைக்குறித்து ஆலோசனைபண்ணும்படி கூடினார்கள். மிகுந்த வாக்குவாதம் உண்டானபோது, பேதுரு எழுந்து, அவர்களை நோக்கி: சகோதரர்களே, உங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி யூதரல்லாதோர் என்னுடைய வாயினாலே நற்செய்தி வசனத்தைக்கேட்டு விசுவாசிக்கும்படி தேவன் அநேக நாட்களுக்கு முன்பே உங்களில் ஒருவனாகிய என்னைத் தெரிந்துகொண்டார். இருதயங்களை அறிந்திருக்கிற தேவன் நமக்கு பரிசுத்த ஆவியானவரை அருளினதுபோல அவர்களுக்கும் அருளி, அவர்களைக்குறித்துச் சாட்சியளித்தார்; விசுவாசத்தினாலே அவர்கள் இருதயங்களை அவர் சுத்தமாக்கி, நமக்கும் அவர்களுக்கும் எந்தவொரு வித்தியாசமும் இல்லாதபடி செய்தார். இப்படியிருக்க, நம்முடைய முற்பிதாக்களாலும் நம்மாலும் சுமக்கமுடியாமல் இருந்த நுகத்தடியைச் சீடர்களின் கழுத்தின்மேல் வைப்பதினால், நீங்கள் தேவனை சோதிப்பது ஏன்? கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையினாலே அவர்கள் இரட்சிக்கப்படுகிறது எப்படியோ, அப்படியே நாமும் இரட்சிக்கப்படுவோம் என்று நம்பியிருக்கிறோமே என்றான். அப்பொழுது கூடிவந்திருந்த எல்லோரும் அமைதியாக இருந்து, பர்னபாவும் பவுலும் தங்களைக்கொண்டு தேவன் யூதரல்லாதோர்களுக்குள்ளே செய்த அற்புதங்கள் அடையாளங்கள் யாவையும் விளக்கிச் சொல்லக் கேட்டார்கள்.

அப்போஸ்தலர் 15:5-12 பரிசுத்த பைபிள் (TAERV)

எருசலேமின் விசுவாசிகளில் சிலர் பரிசேயர்கள். அவர்கள் எழுந்து “யூதரல்லாத விசுவாசிகள் விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டும். மோசேயின் சட்டங்களுக்குக் கீழ்ப்படியுமாறு அவர்களுக்குக் கூற வேண்டும்” என்று கூறினர். அப்போது அப்போஸ்தலர்களும் மூப்பர்களும் இந்தச் சிக்கலை ஆய்ந்து அறியக் கூடினர். நீண்ட விவாதம் நடந்தது. பேதுரு எழுந்து அவர்களை நோக்கி, “சகோதரர்களே, தொடக்கக் காலத்தில் நிகழ்ந்தவற்றை நீங்கள் நினைவுகூருகிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். யூதரல்லாத மக்களுக்கு நற்செய்தியைப் போதனை செய்வதற்கு அப்போது உங்களுக்கிடையிலிருந்து தேவன் என்னைத் தேர்ந்தெடுத்தார். அவர்கள் என் மூலமாக நற்செய்தியைக் கேட்டு விசுவாசம் வைத்தனர். தேவன் மனிதரின் எண்ணங்களை அறிவார். அவர் யூதரல்லாத மக்களையும் ஏற்றுக்கொண்டார். எங்களுக்குச் செய்தது போலவே அவர்களுக்கும் பரிசுத்த ஆவியை அளித்து தேவன் இதனைக் காட்டினார். இந்த மனிதர்கள் தேவனுக்கு நம்மிலிருந்தும் வேறுபட்டவர்களல்லர். அவர்கள் விசுவாசம் வைத்தபோது, தேவன் அவர்கள் இருதயங்களை பரிசுத்தமுறச் செய்தார். எனவே யூதரல்லாத விசுவாசிகளிகளின் கழுத்தில் ஏன் பெரும் பாரத்தைச் சுமத்துகிறீர்கள். தேவனைக் கோபப்படுத்த நீங்கள் முயன்றுகொண்டிருக்கிறீர்களா? அந்தப் பாரத்தைச் சுமப்பதற்கு நமக்கும் நமது முன்னோர்களுக்கும் வலிமை இருக்கவில்லை! நாமும் இந்த மக்களும் கர்த்தராகிய இயேசுவின் கிருபையினாலே இரட்சிக்கப்படுவோம் என்று நான் நம்புகிறேன்.” என்றான். அப்போது அந்தக் கூட்டம் முழுமையும் அமைதியாயிற்று. பவுலும் பர்னபாவும் பேசுவதைக் கவனித்தனர். யூதரல்லாத மக்களின் மத்தியில் தேவன் அவர்கள் மூலமாகச் செய்த அதிசயங்களையும் அற்புதங்களையும் குறித்துப் பவுலும் பர்னபாவும் விவரித்தார்கள்.

அப்போஸ்தலர் 15:5-12 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அப்பொழுது பரிசேய சமயத்தாரில் விசுவாசிகளான சிலர் எழுந்து, அவர்களை விருத்தசேதனம் பண்ணுகிறதும் மோசேயின் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ளும்படி அவர்களுக்குக் கற்பிக்கிறதும் அவசியம் என்றார்கள். அப்போஸ்தலரும், மூப்பரும் இந்தக் காரியத்தைக்குறித்து ஆலோசனைபண்ணும்படி கூடினார்கள். மிகுந்த தர்க்கம் உண்டானபோது, பேதுரு எழுந்து, அவர்களை நோக்கி: சகோதரரே, நீங்கள் அறிந்திருக்கிறபடி புறஜாதியார் என்னுடைய வாயினாலே சுவிசேஷ வசனத்தைக் கேட்டு விசுவாசிக்கும்படி தேவன் அநேக நாட்களுக்கு முன்னே உங்களில் ஒருவனாகிய என்னைத் தெரிந்துகொண்டார். இருதயங்களை அறிந்திருக்கிற தேவன் நமக்குப் பரிசுத்தஆவியைத் தந்தருளினதுபோல அவர்களுக்கும் தந்தருளி, அவர்களைக்குறித்துச் சாட்சிகொடுத்தார். விசுவாசத்தினாலே அவர்கள் இருதயங்களை அவர் சுத்தமாக்கி, நமக்கும் அவர்களுக்கும் யாதொரு வித்தியாசமுமிராதபடி செய்தார். இப்படியிருக்க, நம்முடைய பிதாக்களாலும் நம்மாலும் சுமக்கக்கூடாதிருந்த நுகத்தடியைச் சீஷர் கழுத்தின்மேல் சுமத்துவதினால், நீங்கள் தேவனைச் சோதிப்பானேன்? கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையினாலே அவர்கள் இரட்சிக்கப்படுகிறது எப்படியோ, அப்படியே நாமும் இரட்சிக்கப்படுவோமென்று நம்பியிருக்கிறோமே என்றான். அப்பொழுது கூடிவந்திருந்த யாவரும் அமைந்திருந்து, பர்னபாவும் பவுலும் தங்களைக்கொண்டு தேவன் புறஜாதிகளுக்குள்ளே செய்த அடையாளங்கள் அற்புதங்கள் யாவையும் விவரித்துச் சொல்லக் கேட்டார்கள்.