அப்போஸ்தலர் 14:1-28
அப்போஸ்தலர் 14:1-28 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
பவுலும் பர்னபாவும் இக்கோனியாவிலும் வழக்கப்படி யூத ஜெப ஆலயத்திற்குச் சென்றார்கள். அங்கே அவர்கள் மிகவும் ஆற்றலுடன் பேசினார்கள். அதனால் பெருந்தொகையான யூதரும் கிரேக்கரும் விசுவாசித்தார்கள். ஆனால் விசுவாசிக்க மறுத்த யூதர், யூதரல்லாத மக்களைத் தூண்டி, சகோதரருக்கு எதிராக அவர்களுடைய மனதில் பகை உண்டாக்கினார்கள். ஆனால் பவுலும் பர்னபாவும் கர்த்தருக்காகத் துணிவுடன் பேசிக்கொண்டு, சில நாட்களை அங்கே கழித்தார்கள். அவர்களுக்கு அற்புத அடையாளங்களையும், அதிசயங்களையும் செய்யக்கூடிய ஆற்றலைக் கொடுத்து, கர்த்தர் தமது கிருபையின் செய்தியை உறுதிப்படுத்தினார். அந்தப் பட்டணத்தின் மக்கள் இரண்டாகப் பிளவுபட்டார்கள்; சிலர் யூதருடைய பக்கமும், மற்றவர்கள் அப்போஸ்தலரின் பக்கமும் சாய்ந்து கொண்டார்கள். பவுலையும் பர்னபாவையும் துன்பப்படுத்தவும், அவர்களைக் கல்லால் எறியவும் யூதரல்லாத மக்களும், யூதரும், அவர்களுடைய தலைவர்களும் சூழ்ச்சி செய்துகொண்டிருந்தார்கள். ஆனால் பவுலும் பர்னபாவும் அதைப்பற்றி அறிந்து, லிக்கவோனியா நாட்டைச் சேர்ந்த லீஸ்திரா, தெர்பை ஆகிய பட்டணங்களுக்கும் அதைச் சுற்றியுள்ள நாட்டுப் புறத்திற்கும் தப்பியோடினார்கள். அங்கே அவர்கள் தொடர்ந்து நற்செய்தியைப் பிரசங்கித்தார்கள். லீஸ்திராவிலே கால் ஊனமுற்ற ஒருவன் இருந்தான். அவன் பிறப்பிலேயே கால் ஊனமுற்றவனாய் இருந்ததால், ஒருபோதும் நடந்ததில்லை. பவுல் பேசிக்கொண்டிருக்கையில், அவன் அதைக் கேட்டுக்கொண்டிருந்தான். பவுல் அவனை உற்றுநோக்கி, அவனுக்கு சுகம் அடைவதற்குரிய விசுவாசம் இருக்கிறது எனக் கண்டான். எனவே பவுல் அவனிடம், “நீ காலூன்றி எழுந்து நில்” என்றான். இதைக் கேட்ட அவன் துள்ளி எழுந்து நடக்கத் தொடங்கினான். கூடியிருந்த மக்கள் பவுல் செய்ததைக் கண்டபோது, “தெய்வங்கள் மனித உருவெடுத்து நம்மிடம் இறங்கி வந்திருக்கின்றன” என்று, லிக்கவோனியா மொழியில் சத்தமிட்டுச் சொன்னார்கள். அவர்கள் பர்னபாவை கிரேக்க தெய்வமான செயுஸ் என்றார்கள், பவுல் முக்கிய பேச்சாளனாய் இருந்ததால், அவனை எர்மஸ் என்றார்கள். அப்பொழுது பட்டணத்திற்கு வெளியே, இருந்த செயுஸ் தெய்வத்தின் கோயிலைச் சேர்ந்த பூசாரி காளைகளையும் பூமாலைகளையும் பட்டணத்தின் வாசல்கள் அருகே கொண்டுவந்தான். ஏனெனில் அவனும், கூடியிருந்த மக்களும் பவுலுக்கும் பர்னபாவுக்கும் பலிகளைச் செலுத்த விரும்பினார்கள். அப்போஸ்தலர்களான பர்னபாவும் பவுலும் இதைக்குறித்துக் கேள்விப்பட்டபோது, அவர்கள் தங்கள் உடைகளைக் கிழித்துக்கொண்டு, கூட்டத்துக்குள் சத்தமிட்டுக்கொண்டு ஓடினார்கள்: “நண்பர்களே, நீங்கள் ஏன் இப்படிச் செய்கிறீர்கள்? நாங்களும் உங்களைப்போன்ற மனிதர்களே. நாங்கள் உங்களுக்கு நற்செய்தியைக் கொண்டுவந்திருக்கிறோம். நீங்களும் இந்த பயனற்ற காரியங்களைக் கைவிட்டு, ஜீவனுள்ள இறைவனிடம் மனந்திரும்ப வேண்டும் என்று உங்களுக்குச் சொல்கிறோம். ஏனெனில் அவரே வானத்தையும், பூமியையும், கடலையும், அவற்றிலுள்ள எல்லாவற்றையும் படைத்தார். கடந்த காலத்தில் இறைவன் எல்லா நாட்டு மக்களையும், தங்கள் சொந்த வழியிலே போகவிட்டிருந்தார். ஆனால், இறைவன் தம்மைக்குறித்த எந்த ஒரு சாட்சியும் இல்லாமல் விட்டுவிடவில்லை: அவர் வானத்திலிருந்து உங்களுக்கு மழையையும், பருவகாலங்களில் அதற்குரிய விளைச்சலையும் கொடுத்து, தமது நன்மையை காண்பித்திருக்கிறார்; அவர் நிறைவான உணவை உங்களுக்குக் கொடுத்து, உங்கள் இருதயங்களைச் சந்தோஷத்தினால் நிரப்பியிருக்கிறார்” என்றார்கள். இந்த வார்த்தைகளைச் சொல்லியும்கூட, கூடியிருந்த மக்கள் தங்களுக்குப் பலியிடுவதைத் தடுப்பது அவர்களுக்குக் கடினமாக இருந்தது. அப்பொழுது அந்தியோகியாவிலும் இக்கோனியாவிலுமிருந்து வந்த சில யூதர்கள், மக்கள் கூட்டத்தைத் தங்கள் பக்கமாய்த் திருப்பிக்கொண்டார்கள். அவர்கள் பவுலின்மேல் கல்லெறிந்து, அவன் இறந்துவிட்டதாக எண்ணி, அவனைப் பட்டணத்திற்கு வெளியே இழுத்துக்கொண்டு போனார்கள். ஆனால் சீடர்கள் வந்து பவுலைச்சுற்றி நின்றபோது, அவன் எழுந்து மீண்டும் பட்டணத்திற்குள் போனான். மறுநாளில் பவுலும் பர்னபாவும் தெர்பைக்குச் சென்றார்கள். பவுல் மற்றும் பர்னபா அந்தப் பட்டணத்திலே நற்செய்தியைப் பிரசங்கித்து, பெருந்தொகையானவர்களைச் சீடராக்கினார்கள். பின்பு அவர்கள் லீஸ்திராவுக்கும், இக்கோனியாவுக்கும், அந்தியோகியாவுக்கும் திரும்பிச் சென்றார்கள். அங்கே அவர்கள் சீடர்களைப் பெலப்படுத்தி, விசுவாசத்திற்கு உண்மையாய் இருக்கும்படி, அவர்களை உற்சாகப்படுத்தினார்கள். “நாம் பல துன்பங்களை அனுபவித்து, இறைவனுடைய அரசுக்குள் பிரவேசிக்க வேண்டும்” என்று அவர்கள் சொன்னார்கள். பவுலும் பர்னபாவும் ஒவ்வொரு திருச்சபையிலும், அங்கிருந்த சீடர்களுக்கென சபைத்தலைவர்களை நியமித்தார்கள். விசுவாசிகள் உபவாசத்துடன் மன்றாடி தாங்கள் சார்ந்திருந்த கர்த்தருக்கு அந்த தலைவர்களை ஒப்புவித்தார்கள். அவர்கள் பிசீதியா வழியாகப்போய், பின்பு பம்பிலியாவுக்கு வந்தார்கள். அவர்கள் பெர்கே பட்டணத்தில் வார்த்தையைப் பிரசங்கித்த பின்பு, அத்தலியா பட்டணத்திற்குச் சென்றார்கள். அத்தலியாவிலிருந்து அவர்கள் அந்தியோகியாவுக்குக் கப்பல் மூலமாய்த் திரும்பிப் போனார்கள். அங்குதான் இப்பொழுது நிறைவேற்றிய பணிக்காக, இறைவனுடைய கிருபைக்கு அவர்கள் ஒப்புக்கொடுக்கப்பட்டார்கள். அவர்கள் அங்கு வந்து சேர்ந்தபோது, திருச்சபையை ஒன்றுகூட்டி, தங்கள் மூலமாக இறைவன் செய்த எல்லாவற்றையும் அவர்களுக்கு அறிவித்தார்கள். எவ்விதமாக இறைவன் விசுவாசத்தின் கதவை யூதரல்லாத மக்களுக்கும் திறந்தார் என்பதையும் அவர்களுக்கு அறிவித்தார்கள். அங்கே அவர்கள் சீடர்களுடன் அதிக நாட்கள் தங்கினார்கள்.
அப்போஸ்தலர் 14:1-28 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
இக்கோனியா பட்டணத்திலே அவர்கள் இருவரும் யூதர்களுடைய ஜெப ஆலயத்தின் உள்ளே பிரவேசித்து யூதர்களிலும் கிரேக்கர்களிலும் திரளான மக்கள் நம்பத்தக்கதாகப் பிரசங்கித்தார்கள். விசுவாசிக்காத யூதர்கள் சகோதரர்களுக்கு விரோதமாக யூதரல்லாதவர்களுடைய மனதைத் தூண்டிவிட்டு, பகையுண்டாக்கினார்கள். அவர்கள் அங்கே அநேகநாட்கள் வாழ்ந்து கர்த்த்தரை முன்னிட்டுத் தைரியம் உள்ளவர்களாகப் போதகம்பண்ணினார்கள்; அவர் தமது கிருபையுள்ள வசனத்திற்கு சாட்சியாக அடையாளங்களும் அற்புதங்களும் அவர்கள் கைகளால் செய்யப்படும்படி தயவுபண்ணினார். பட்டணத்து மக்கள் பிரிந்து, சிலர் யூதர்களையும் சிலர் அப்போஸ்தலர்களையும் சேர்ந்துகொண்டார்கள். இவர்களை அவமானப்படுத்தவும் கல்லெறியவும் வேண்டும் என்று, யூதரல்லாதவர்களும், யூதர்களும் அவர்களுடைய அதிகாரிகளும் திட்டமிட்டபோது, இவர்கள் அதை அறிந்து, லிக்கவோனியா நாட்டிலுள்ள பட்டணங்களாகிய லீஸ்திராவிற்கும் தெர்பைக்கும் அவைகளின் சுற்றுப் புறங்களுக்கும் ஓடிப்போய்; அங்கே நற்செய்தியைப் பிரசங்கம்பண்ணினார்கள். லீஸ்திராவிலே ஒருவன் தன் தாயின் வயிற்றிலிருந்து பிறந்ததுமுதல் முடவனாக இருந்து, ஒருபோதும் நடக்காமல், கால்கள் செயலற்றவனாக உட்கார்ந்து, பவுல் பேசுகிறதைக் கேட்டுக்கொண்டிருந்தான். அவனைப் பவுல் உற்றுப்பார்த்து, இரட்சிப்புக்கேற்ற விசுவாசம் அவனுக்கு உண்டென்று கண்டு, நீ எழுந்து காலூன்றி நிமிர்ந்து நில் என்று உரத்த சத்தமாகச் சொன்னான். உடனே அவன் குதித்தெழுந்து நடந்தான். பவுல் செய்ததை மக்கள் கண்டு, தேவர்கள் மனித உருவமெடுத்து நம்மிடத்தில் இறங்கி வந்திருக்கிறார்கள் என்று லிக்கவோனியா மொழியிலே சத்தமிட்டுச் சொல்லி, பர்னபாவை யூப்பித்தர் என்றும், பவுல் பிரசங்கத்தை நடத்தினவனானபடியினால் அவனை மெர்க்குரி என்றும் சொன்னார்கள். அல்லாமலும் பட்டணத்திற்கு முன்னே இருந்த யூப்பித்தருடைய முக்கியமான கோவிலின் மதகுரு எருதுகளையும் பூமாலைகளையும் வாசலண்டையிலே கொண்டுவந்து, மக்களோடுகூட அவர்களுக்குப் பலியிட மனதாயிருந்தான். அப்போஸ்தலர்களாகிய பர்னபாவும் பவுலும் அதைக் கேட்டபொழுது, தங்களுடைய துணிகளைக் கிழித்துக்கொண்டு, கூட்டத்திற்குள்ளே ஓடி, உரத்த சத்தமாக: மனிதர்களே, ஏன் இப்படிச் செய்கிறீர்கள்? நாங்களும் உங்களைப்போலப் பாடுள்ள மனிதர்கள் தானே; நீங்கள் இந்த வீணான தேவர்களைவிட்டு, வானத்தையும் பூமியையும் கடலையும் அவைகளிலுள்ள அனைத்தையும் உண்டாக்கின ஜீவனுள்ள தேவனிடத்திற்கு திரும்பவேண்டும் என்று உங்களுக்குப் பிரசங்கிக்கிறோம். கடந்த காலங்களில் அவர் எல்லா மக்களையும் தங்கள் தங்கள் வழிகளிலே நடக்கவிட்டிருந்தும், அவர் நன்மை செய்துவந்து, வானத்திலிருந்து மழைகளையும் செழிப்புள்ள காலங்களையும் நமக்குத் தந்து, ஆகாரத்தினாலும் சந்தோஷத்தினாலும் நம்முடைய இருதயங்களை நிரப்பி, இவ்விதமாக அவர் தம்மைக்குறித்துச் சாட்சி விளங்கப்பண்ணியிருக்கிறார் என்றார்கள். இப்படி அவர்கள் சொல்லியும் தங்களுக்கு மக்கள் பலியிடாதபடிக்கு அவர்களை தடுத்து நிறுத்துவது கடினமாக இருந்தது. பின்பு அந்தியோகியாவிலும் இக்கோனியாவிலுமிருந்து சில யூதர்கள் வந்து மக்களைத் தூண்டிவிட்டு, பவுலைக் கல்லெறிந்து, அவன் மரித்துப்போனான் என்று எண்ணி, அவனைப் பட்டணத்திற்கு வெளியிலே இழுத்துக்கொண்டுபோனார்கள். சீடர்கள் அவனைச் சூழ்ந்துநிற்கும்போது, அவன் எழுந்து, பட்டணத்திற்குள்ளே போனான். மறுநாளில் பர்னபாவுடனேகூடத் தெர்பைக்குப் புறப்பட்டுப்போனான். தெர்பை பட்டணத்தில் அவர்கள் நற்செய்தியைப் பிரசங்கித்து, அநேகரைச் சீடர்களாக்கினபின்பு, லீஸ்திராவிற்கும் இக்கோனியாவிற்கும் அந்தியோகியாவிற்கும் திரும்பிவந்து, சீடர்களுடைய மனதைத் தைரியப்படுத்தி, விசுவாசத்திலே நிலைத்திருக்கும்படி அவர்களுக்குப் புத்திசொல்லி, நாம் அநேக உபத்திரவங்களின்வழியாக தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கவேண்டும் என்று சொன்னார்கள். அல்லாமலும் அந்தந்த சபைகளில் அவர்களுக்கு மூப்பர்களை ஏற்படுத்தி வைத்து, உபவாசித்து ஜெபம்பண்ணி, அவர்கள் விசுவாசித்துப் பற்றிக்கொண்ட கர்த்தருக்கு அவர்களை ஒப்புவித்தார்கள். பின்பு பிசீதியா நாட்டைக் கடந்து, பம்பிலியா நாட்டிற்கு வந்து, பெர்கே ஊரில் வசனத்தைப் பிரசங்கித்து, அத்தலியா பட்டணத்திற்குப் போனார்கள். அங்கே கப்பல் ஏறி, தாங்கள் நிறைவேற்றின செயல்களுக்காக தேவனுடைய கிருபைக்கு ஒப்புவிக்கப்பட்டு, புறப்பட்டு அந்தியோகியாவிற்கு வந்தார்கள். அவர்கள் அங்கே சேர்ந்தபொழுது சபையைக் கூடிவரச்செய்து, தேவன் தங்களைக்கொண்டு செய்தவைகளையும், அவர் யூதரல்லாதவர்க்கும் விசுவாசத்தின் கதவைத் திறந்ததையும் அறிவித்து, அங்கே சீடர்களோடுகூட அநேகநாட்கள் தங்கியிருந்தார்கள்.
அப்போஸ்தலர் 14:1-28 பரிசுத்த பைபிள் (TAERV)
பவுலும் பர்னபாவும் இக்கோனியம் நகரத்திற்குச் சென்றனர். அவர்கள் யூத ஜெப ஆலயத்திற்குச் சென்றனர். (இதைத் தான் அவர்கள் ஒவ்வொரு நகரத்திலும் செய்தனர்) அவர்கள் அங்குள்ள மக்களிடம் பேசினர். பவுலும் பர்னபாவும் பேசின விதத்தில் பல யூதர்களும், கிரேக்கர்களும் அவர்கள் கூறியதை முழுமையாக நம்பினர். ஆனால் மனந்திரும்பாத யூதர்கள், யூதரல்லாத சகோதரரைக் குறித்துத் தீமையானவற்றை எண்ணும்படியாகச் செய்தனர். எனவே பவுலும் பர்னபாவும் இக்கோனியத்தில் நீண்ட காலம் தங்கினர். கர்த்தருக்காகத் துணிவோடு பேசினர். தேவனுடைய கிருபையைக் குறித்து பவுலும், பர்னபாவும் பேசினர். அற்புதங்களையும் அதிசயங்களையும் நிகழ்த்துவதற்கு அப்போஸ்தலர்களுக்கு உதவி செய்து அவர்கள் கூறியதை உண்மையென்று தேவன் நிரூபித்தார். ஆனால் நகர மக்களில் சிலர் யூதர்கள் கூறியதை ஒப்புக்கொண்டனர். நகரத்தின் மற்ற மக்களோ பவுலையும் பர்னபாவையும் நம்பினர். எனவே நகரம் பிரிவுபட்டது. சில யூதரல்லாத மக்களும், சில யூதர்களும் அவர்களின் யூத அதிகாரிகளும் பவுலையும் பர்னபாவையும் துன்புறுத்த முயன்றனர். இந்த மக்கள் அவர்களைக் கற்களால் எறிந்துகொல்ல எண்ணினர். பவுலும் பர்னபாவும் இதை அறிந்தபோது, நகரிலிருந்து சென்றனர். அவர்கள் லிஸ்தீராவுக்கும், தெர்பைக்கும் லிக்கோனியாவின் நகரங்களுக்கும், அந்த நகரங்களைச் சூழ்ந்த கிராமப்புறப் பகுதிகளுக்கும் சென்றனர். அவர்கள் அங்கும் கூட நற்செய்தியைக் கூறினர். பாதங்களில் ஊனமுற்ற மனிதன் ஒருவன் லிஸ்தீராவில் இருந்தான். அவன் பிறவியிலேயே ஊனமுற்றவன். அவன் அங்கு உட்கார்ந்துகொண்டு பவுல் பேசுவதைக் கேட்டுக்கொண்டேயிருந்தான். பவுல் அவனைப் பார்த்தான். தேவன் அவனைக் குணப்படுத்த முடியும் என்பதை அம்மனிதன் நம்பியதைப் பவுல் கண்டான். எனவே பவுல் உரக்க, “எழுந்து உன் கால்களால் நில்” என்றான். அம்மனிதன் குதித்தெழுந்து சுற்றிலும் நடக்க ஆரம்பித்தான். பவுல் செய்ததை மக்கள் கூட்டத்தினர் கண்டபோது, அவர்கள் லிக்கோனிய மொழியில் சத்தமிட்டனர். அவர்கள், “தேவர்கள் மனிதரைப்போன்று மாறியுள்ளனர்! அவர்கள் நம்மிடம் இறங்கி வந்துள்ளனர்!” என்றனர். மக்கள் பர்னபாவை “சீயெஸ்” என அழைக்கத் தொடங்கினர். பவுல் முக்கிய பேச்சாளராக இருந்ததால், அவர்கள் பவுலை “ஹெர்ம்ஸ்” என்றழைத்தனர். சீயஸின் தேவாலயம் நகரத்தினருகில் இருந்தது. தேவாலயத்தின் பூசாரி சில காளைகளையும் மாலைகளையும் நகரக் கதவுகளுக்கருகே கொண்டுவந்தான். பவுலையும் பர்னபாவையும் வழிபடுவதற்கு பூசாரிகளும் மக்களும் பலி செலுத்த விரும்பினர். அப்போஸ்தலராகிய பர்னபாவும் பவுலும் மக்கள் செய்துகொண்டிருப்பதைப் புரிந்துகொண்டதும் அவர்கள் தங்கள் ஆடைகளைக் கிழித்தனர். பின் அவர்கள் கூட்டத்தினர் மத்தியில் ஓடி, அவர்களிடம் உரத்த குரலில், “மனிதரே ஏன் இவற்றையெல்லாம் செய்கிறீர்கள்? நாங்கள் தேவர்கள் அல்ல. உங்களைப்போன்ற மனிதர்கள்தான். எங்களுக்கும் உணர்வுகள் உங்களைப்போலவே உண்டு. உங்களுக்கு நற்செய்தியைச் சொல்ல நாங்கள் வந்தோம். பயனற்ற இந்தக் காரியங்களை விட்டுவிலகும்படியாக நாங்கள் உங்களுக்குச் சொல்லிக்கொண்டிருக்கிறோம். உண்மையான ஜீவனுள்ள தேவனிடத்திற்குத் திரும்புங்கள். அவரே வானம், பூமி, கடல், அவற்றிலுள்ள பொருட்கள் அனைத்தையும் உண்டாக்கியவர். “முன்பு எல்லா தேசங்களும் அவை விரும்பியவற்றைச் செய்வதற்கு தேவன் அனுமதித்தார். ஆனால் அதே சமயம் தேவன் உண்மையானவர் என்பதை நிறுவும் காரியங்களையே தேவன் செய்தார். அவர் உங்களுக்கு நல்லவற்றையே செய்கிறார். அவர் வானிலிருந்து உங்களுக்கு மழையைத் தருகிறார். அவர் தக்க காலங்களில் உங்களுக்கு நல்ல அறுவடையைக் கொடுக்கிறார். அவர் மிகுதியான உணவை உங்களுக்குத் தருகிறார். அவர் உங்கள் இருதயங்களை மகிழ்ச்சியால் நிரப்புகிறார்” என்றனர். பவுலும் பர்னபாவும் மக்களுக்கு இவற்றைக் கூறினர். ஆனாலும் அவர்களை வழிபடுவதற்காக அவர்கள் இட்ட பலியை அநேகமாக பவுலும் பர்னபாவும் தடுத்து நிறுத்த முடியவில்லை. பின் அந்தியோகியாவிலிருந்தும், இக்கோனியத்திலிருந்தும் சில யூதர்கள் வந்தனர். அவர்கள் பவுலை எதிர்க்கும்படியாக மக்களை ஏவினர். எனவே மக்கள் பவுலின்மீது கற்களை வீசி, அவன் இறந்துவிட்டானென்று நினைத்து அவனை ஊருக்குப் புறம்பே இழுத்து வந்தனர். இயேசுவின் சீஷர்கள் பவுலைச் சுற்றிலும் கூடினர். பின் அவன் எழுந்து ஊருக்குள் மீண்டும் சென்றான். மறுநாள் அவனும் பர்னபாவும் புறப்பட்டு தெர்பை நகரத்துக்குச் சென்றனர். பவுலும் பர்னபாவும் தெர்பை நகரத்திலும் நற்செய்தியைக் கூறினர். பல மக்கள் இயேசுவின் சீஷராயினர். லிஸ்திரா, இக்கோனியம், அந்தியோகியா நகரங்களுக்குப் பவுலும் பர்னபாவும் திரும்பினர். அந்நகரங்களில் இயேசுவின் சீஷர்களை பவுலும் பர்னபாவும் வலிமைமிக்கவர்களாக ஆக்கினர். நம்பிக்கையில் நிலைத்திருப்பதற்கு அவர்கள் உதவினர். பவுலும் பர்னபாவும், “தேவனுடைய இராஜ்யத்துக்குள் செல்லும் நம் பாதையில் நாம் பல துன்பங்களை அனுபவிக்க வேண்டும்” என்றனர். பவுலும் பர்னபாவும் ஒவ்வொரு சபைக்கும் மூப்பர்களை அமர்த்தினார்கள். அவர்கள் உபவாசமிருந்து அம்மூப்பர்களுக்காகப் பிரார்த்தனை செய்தனர். அம்மூப்பர்கள் கர்த்தராகிய இயேசுவில் நம்பிக்கை வைத்த மனிதராயிருந்தார்கள். எனவே பவுலும் பர்னபாவும் கர்த்தரின் பாதுகாப்பில் அவர்களை விட்டனர். பவுலும் பர்னபாவும் பிசிதியா நாட்டின் வழியாகச் சென்றனர். பின் அவர்கள் பம்பிலியா நாட்டிற்கு வந்தனர். அவர்கள் பெர்காவில் தேவனுடைய செய்தியைக் கூறினார்கள். பின் அவர்கள் அத்தாலியா நகரத்திற்குச் சென்றனர். அங்கிருந்து பவுலும் பர்னபாவும் சிரியாவிலுள்ள அந்தியோகியாவிற்குக் கடல் வழியாகப் பயணமாயினர். இந்நகரில்தான் விசுவாசிகள் அவர்களை தேவனுடைய கண்காணிப்பில் ஆட்படுத்தி இவ்வேலை செய்ய அனுப்பியிருந்தனர். இப்போது அவர்கள் தங்கள் வேலையை முடித்திருந்தனர். பவுலும் பர்னபாவும் வந்துசேர்ந்தபோது அவர்கள் சபையைக் கூட்டினர். தேவன் அவர்களோடு செய்த எல்லாக் காரியங்களையும் குறித்துப் பவுலும் பர்னபாவும் அவர்களுக்குக் கூறினர். அவர்கள், “வேறு தேசங்களின் மக்களும் நம்பும்படிக்கு தேவன் ஒரு வாசலைத் திறந்தார்” என்றார்கள். கிறிஸ்துவின் சீஷர்களோடு பவுலும் பர்னபாவும் நீண்டகாலம் அங்கேயே தங்கினர்.
அப்போஸ்தலர் 14:1-28 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
இக்கோனியா பட்டணத்திலே அவர்கள் இருவரும் யூதருடைய ஜெப ஆலயத்தில் பிரவேசித்து, யூதரிலும் கிரேக்கரிலும் திரளான ஜனங்கள் விசுவாசிக்கத்தக்கதாகப் பிரசங்கித்தார்கள். விசுவாசியாத யூதர்கள் சகோதரருக்கு விரோதமாகப் புறஜாதியாருடைய மனதை எழுப்பிவிட்டு, பகையுண்டாக்கினார்கள். அவர்கள் அங்கே அநேகநாள் சஞ்சரித்துக் கர்த்தரை முன்னிட்டுத் தைரியமுள்ளவர்களாய்ப் போதகம் பண்ணினார்கள்; அவர் தமது கிருபையுள்ள வசனத்திற்குச் சாட்சியாக அடையாளங்களும் அற்புதங்களும் அவர்கள் கைகளால் செய்யப்படும்படி அநுக்கிரகம்பண்ணினார். பட்டணத்து ஜனங்கள் பிரிந்து, சிலர் யூதரையும் சிலர் அப்போஸ்தலரையும் சேர்ந்துகொண்டார்கள். இவர்களை அவமானப்படுத்தவும் கல்லெறியவும் வேண்டுமென்று, புறஜாதியாரும் யூதரும் அவர்கள் அதிகாரிகளும் அமளிபண்ணுகையில், இவர்கள் அதை அறிந்து, லிக்கவோனியா நாட்டிலுள்ள பட்டணங்களாகிய லீஸ்திராவுக்கும் தெர்பைக்கும் அவைகளின் சுற்றுப்புறங்களுக்கும் ஓடிப்போய்; அங்கே சுவிசேஷத்தைப் பிரசங்கம்பண்ணினார்கள். லீஸ்திராவிலே ஒருவன் தன் தாயின் வயிற்றிலிருந்து பிறந்ததுமுதல் சப்பாணியாயிருந்து, ஒருபோதும் நடவாமல், கால்கள் வழங்காதவனாய் உட்கார்ந்து, பவுல் பேசுகிறதைக் கேட்டுக்கொண்டிருந்தான். அவனைப் பவுல் உற்றுப்பார்த்து, இரட்சிப்புக்கேற்ற விசுவாசம் அவனுக்கு உண்டென்று கண்டு: நீ எழுந்து காலூன்றி நிமிர்ந்து நில் என்று உரத்த சத்தத்தோடே சொன்னான். உடனே அவன் குதித்தெழுந்து நடந்தான். பவுல் செய்ததை ஜனங்கள் கண்டு, தேவர்கள் மனுஷரூபமெடுத்து நம்மிடத்தில் இறங்கிவந்திருக்கிறார்கள் என்று லிக்கவோனியா பாஷையிலே சத்தமிட்டுச் சொல்லி, பர்னபாவை யூப்பித்தர் என்றும், பவுல் பிரசங்கத்தை நடத்தினவனானபடியினால் அவனை மெர்க்கூரி என்றும் சொன்னார்கள். அல்லாமலும் பட்டணத்துக்கு முன்னே இருந்த யூப்பித்தருடைய கோவில் பூஜாசாரி எருதுகளையும் பூமாலைகளையும் வாசலண்டையிலே கொண்டுவந்து, ஜனங்களோடேகூட அவர்களுக்குப் பலியிட மனதாயிருந்தான். அப்போஸ்தலராகிய பர்னபாவும் பவுலும் அதைக் கேட்டபொழுது, தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, கூட்டத்துக்குள்ளே ஓடி, உரத்த சத்தமாய்: மனுஷரே, ஏன் இப்படிச் செய்கிறீர்கள்? நாங்களும் உங்களைப்போலப் பாடுள்ள மனுஷர்தானே; நீங்கள் இந்த வீணான தேவர்களைவிட்டு, வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின ஜீவனுள்ள தேவனிடத்திற்குத் திரும்பவேண்டுமென்று உங்களுக்குப் பிரசங்கிக்கிறோம். சென்ற காலங்களில் அவர் சகல ஜனங்களையும் தங்கள்தங்கள் வழிகளிலே நடக்கவிட்டிருந்தும், அவர் நன்மை செய்துவந்து, வானத்திலிருந்து மழைகளையும் செழிப்புள்ள காலங்களையும் நமக்குத் தந்து, ஆகாரத்தினாலும் சந்தோஷத்தினாலும் நம்முடைய இருதயங்களை நிரப்பி, இவ்விதமாய் அவர் தம்மைக்குறித்துச் சாட்சி விளங்கப்பண்ணாதிருந்ததில்லை என்றார்கள். இப்படி அவர்கள் சொல்லியும் தங்களுக்கு ஜனங்கள் பலியிடாதபடிக்கு அவர்களை அமர்த்துகிறது அரிதாயிருந்தது. பின்பு அந்தியோகியாவிலும் இக்கோனியாவிலுமிருந்து சில யூதர்கள் வந்து, ஜனங்களுக்குப் போதனைசெய்து, பவுலைக் கல்லெறிந்து, அவன் மரித்துப்போனானென்று எண்ணி, அவனைப் பட்டணத்துக்கு வெளியிலே இழுத்துக்கொண்டுபோனார்கள். சீஷர்கள் அவனைச் சூழ்ந்துநிற்கையில், அவன் எழுந்து, பட்டணத்திற்குள் பிரவேசித்தான். மறுநாளில் பர்னபாவுடனேகூடத் தெர்பைக்குப் புறப்பட்டுப்போனான். அந்தப் பட்டணத்தில் அவர்கள் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, அநேகரைச் சீஷராக்கினபின்பு, லீஸ்திராவுக்கும் இக்கோனியாவுக்கும் அந்தியோகியாவுக்கும் திரும்பிவந்து, சீஷருடைய மனதைத் திடப்படுத்தி, விசுவாசத்திலே நிலைத்திருக்கும்படி அவர்களுக்குப் புத்திசொல்லி, நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கவேண்டுமென்று சொன்னார்கள். அல்லாமலும் அந்தந்தச் சபைகளில் அவர்களுக்கு மூப்பர்களை ஏற்படுத்திவைத்து, உபவாசித்து ஜெபம்பண்ணி, அவர்கள் விசுவாசித்துப் பற்றிக்கொண்ட கர்த்தருக்கு அவர்களை ஒப்புவித்தார்கள். பின்பு பிசீதியா நாட்டைக் கடந்து, பம்பிலியா நாட்டிற்கு வந்து, பெர்கே ஊரில் வசனத்தைப் பிரசங்கித்து, அத்தலியா பட்டணத்திற்குப் போனார்கள். அங்கே கப்பல் ஏறி, தாங்கள் நிறைவேற்றின கிரியைக்காக தேவனுடைய கிருபைக்கு ஒப்புவிக்கப்பட்டுப் புறப்பட்டு அந்தியோகியாவுக்கு வந்தார்கள். அவர்கள் அங்கே சேர்ந்தபொழுது சபையைக் கூடிவரச்செய்து, தேவன் தங்களைக்கொண்டு செய்தவைகளையும், அவர் புறஜாதிகளுக்கு விசுவாசத்தின் கதவைத் திறந்ததையும் அறிவித்து, அங்கே சீஷருடனேகூட அநேகநாள் சஞ்சரித்திருந்தார்கள்.