அப்போஸ்தலர் 13:1-5

அப்போஸ்தலர் 13:1-5 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அந்தியோகியாவில் இருந்த திருச்சபையிலே இறைவாக்கினரும், ஆசிரியரும் இருந்தார்கள். பர்னபா, நீகர் எனப்பட்ட சிமியோன், சிரேனேயைச் சேர்ந்த லூசியஸ், அரசனான ஏரோதுவுடன் வளர்ந்த மனாயீன், சவுல் ஆகியோரே இவர்கள். அவர்கள் கர்த்தரை வழிபட்டு உபவாசித்துக்கொண்டிருக்கையில், பரிசுத்த ஆவியானவர் அவர்களிடம், “நான் அவர்களை அழைத்த ஊழியத்திற்காக பர்னபாவையும் சவுலையும் எனக்கென வேறுபிரித்துவிடுங்கள்” என்றார். எனவே அவர்கள் உபவாசித்து மன்றாடியபின், தங்கள் கைகளை அந்த இருவர்மேலும் வைத்து, அவர்களை அனுப்பிவிட்டார்கள். அவர்கள் இருவரும் பரிசுத்த ஆவியானவரால் வழியனுப்பப்பட்டு, செலூக்கியாவுக்குப்போய், அங்கிருந்து கப்பல் மூலமாய் சீப்புரு தீவுக்குச் சென்றார்கள். அவர்கள் சலாமி பட்டணத்திற்கு வந்து சேர்ந்தபோது, அங்குள்ள யூத ஜெப ஆலயங்களில் இறைவனுடைய வார்த்தையை அறிவித்தார்கள். மாற்கு எனப்பட்ட யோவான், அவர்களோடு அவர்களின் உதவியாளனாய் இருந்தான்.

அப்போஸ்தலர் 13:1-5 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அந்தியோகியா பட்டணத்திலுள்ள சபையிலே பர்னபாவும், நீகர் என்னப்பட்ட சிமியோனும், சிரேனே ஊரானாகிய லூகியும், காற்பங்கு தேசத்தின் அதிபதியாகிய ஏரோதுடன் வளர்க்கப்பட்ட மனாயீனும், சவுலும், தீர்க்கதரிசிகளாகவும் போதகர்களாகவும் இருந்தார்கள். அவர்கள் கர்த்தருக்கு ஆராதனைசெய்து, உபவாசித்துக்கொண்டிருக்கிறபோது: பர்னபாவையும் சவுலையும் நான் அழைத்த ஊழியத்துக்காக அவர்களைப் பிரித்துவிடுங்கள் என்று பரிசுத்த ஆவியானவர் உரைத்தார். அப்பொழுது உபவாசித்து ஜெபம்பண்ணி, அவர்கள்மேல் கரங்களை வைத்து, அவர்களை அனுப்பினார்கள். அப்படியே அவர்கள் பரிசுத்த ஆவியானவரால் அனுப்பப்பட்டு செலூக்கியா பட்டணத்திற்கு வந்து, கப்பல் ஏறி, அங்கிருந்து சீப்புருதீவிற்குப் போனார்கள். சாலமி பட்டணத்திற்கு வந்தபோது அவர்கள் யூதர்களுடைய ஜெப ஆலயங்களில் தேவவசனத்தைப் போதித்தார்கள். யோவானும் அவர்களுக்கு உதவிக்காரனாக இருந்தான்.

அப்போஸ்தலர் 13:1-5 பரிசுத்த பைபிள் (TAERV)

அந்தியோகியா சபையில் சில தீர்க்கதரிசிகளும் போதகர்களும் இருந்தனர். அவர்கள் பர்னபாஸ், சிமியோன் (நீகர் எனவும் அழைக்கப்பட்டான்), லூகி (சிரேனே பட்டணத்தைச் சேர்ந்தவன்), மானாயீன் (ஆட்சியாளனான ஏரோதுவோடு வளர்ந்தவன்), சவுல் ஆகியோர். இம்மனிதர்கள் எல்லோரும் கர்த்தருக்கு சேவை செய்யவும் உபவாசமிருக்கவும் செய்தனர். பரிசுத்த ஆவியானவர் அவர்களை நோக்கி, “பர்னபாவையும் சவுலையும் எனக்காக ஒரு சிறப்பான வேலைக்காகத் தனித்து விடுங்கள். இந்த வேலையைச் செய்ய நான் அவர்களைத் தேர்ந்துள்ளேன்” என்றார். எனவே சபை உபவாசமிருந்து பிரார்த்தனை செய்தது. பர்னபாவின் மீதும் சவுலின் மீதும் தங்கள் கரங்களை வைத்து வெளியே அனுப்பினர். பரிசுத்த ஆவியானவரால் பர்னபாவும் சவுலும் அனுப்பப்பட்டனர். செலூக்கியா நகரத்திற்கு அவர்கள் சென்றனர். பின் செலூக்கியாவிலிருந்து சீப்புரு தீவிற்குக் கடல் வழியாகச் சென்றனர். சாலமி என்னும் நகரத்திற்கு பர்னபாவும் சவுலும் வந்தபோது தேவனுடைய செய்தியை அவர்கள் யூத ஜெப ஆலயங்களில் போதித்தனர். (யோவான் மாற்கும் ஓர் உதவியாளனாக அவர்களோடிருந்தான்).

அப்போஸ்தலர் 13:1-5 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அந்தியோகியா பட்டணத்திலுள்ள சபையிலே பர்னபாவும், நீகர் என்னப்பட்ட சிமியோனும், சிரேனே ஊரானாகிய லூகியும், காற்பங்கு தேசாதிபதியாகிய ஏரோதுடனேகூட வளர்க்கப்பட்ட மனாயீனும், சவுலும், தீர்க்கதரிசிகளாயும் போதகர்களாயும் இருந்தார்கள். அவர்கள் கர்த்தருக்கு ஆராதனைசெய்து, உபவாசித்துக்கொண்டிருக்கிறபோது: பர்னபாவையும் சவுலையும் நான் அழைத்த ஊழியத்துக்காக அவர்களைப் பிரித்துவிடுங்கள் என்று பரிசுத்த ஆவியானவர் திருவுளம்பற்றினார். அப்பொழுது உபவாசித்து ஜெபம்பண்ணி, அவர்கள்மேல் கைகளை வைத்து, அவர்களை அனுப்பினார்கள். அப்படியே அவர்கள் பரிசுத்த ஆவியினால் அனுப்பப்பட்டுச் செலூக்கியா பட்டணத்துக்கு வந்து, கப்பல் ஏறி, அங்கிருந்து சீப்புரு தீவுக்குப் போனார்கள். சாலமி பட்டணத்தில் வந்தபோது அவர்கள் யூதருடைய ஜெப ஆலயங்களில் தேவவசனத்தைப் பிரசங்கித்தார்கள். யோவானும் அவர்களுக்கு உதவிக்காரனாயிருந்தான்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்