அப்போஸ்தலர் 13:1-13
அப்போஸ்தலர் 13:1-13 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
அந்தியோகியா பட்டணத்திலுள்ள சபையிலே பர்னபாவும், நீகர் என்னப்பட்ட சிமியோனும், சிரேனே ஊரானாகிய லூகியும், காற்பங்கு தேசாதிபதியாகிய ஏரோதுடனேகூட வளர்க்கப்பட்ட மனாயீனும், சவுலும், தீர்க்கதரிசிகளாயும் போதகர்களாயும் இருந்தார்கள். அவர்கள் கர்த்தருக்கு ஆராதனைசெய்து, உபவாசித்துக்கொண்டிருக்கிறபோது: பர்னபாவையும் சவுலையும் நான் அழைத்த ஊழியத்துக்காக அவர்களைப் பிரித்துவிடுங்கள் என்று பரிசுத்த ஆவியானவர் திருவுளம்பற்றினார். அப்பொழுது உபவாசித்து ஜெபம்பண்ணி, அவர்கள்மேல் கைகளை வைத்து, அவர்களை அனுப்பினார்கள். அப்படியே அவர்கள் பரிசுத்த ஆவியினால் அனுப்பப்பட்டுச் செலூக்கியா பட்டணத்துக்கு வந்து, கப்பல் ஏறி, அங்கிருந்து சீப்புரு தீவுக்குப் போனார்கள். சாலமி பட்டணத்தில் வந்தபோது அவர்கள் யூதருடைய ஜெப ஆலயங்களில் தேவவசனத்தைப் பிரசங்கித்தார்கள். யோவானும் அவர்களுக்கு உதவிக்காரனாயிருந்தான். அவர்கள் பாப்போ பட்டணம் வரைக்கும் தீவைக் கடந்துவந்தபோது, பர்யேசு என்னும் பேர்கொண்ட மாயவித்தைக்காரனும் கள்ளத்தீர்க்கதரிசியுமான ஒரு யூதனைக் கண்டார்கள். அவன் விவேகமுள்ள மனுஷனாகிய செர்கியுபவுல் என்னும் அதிபதியுடனேகூட இருந்தான். அந்த அதிபதி பர்னபாவையும் சவுலையும் அழைப்பித்து, அவர்களிடத்தில் தேவவசனத்தைக் கேட்க ஆசையாயிருந்தான். மாயவித்தைக்காரன் என்று அர்த்தங்கொள்ளும் பேரையுடைய அந்த எலிமா என்பவன் அதிபதியை விசுவாசத்தினின்று திருப்பும்படி வகைதேடி, அவர்களோடு எதிர்த்துநின்றான். அப்பொழுது பவுல் என்று சொல்லப்பட்ட சவுல் பரிசுத்த ஆவியினால் நிறைந்தவனாய் அவனை உற்றுப்பார்த்து: எல்லாக் கபடமும் எல்லாப் பொல்லாங்கும் நிறைந்தவனே, பிசாசின் மகனே, நீதிக்கெல்லாம் பகைஞனே, கர்த்தருடைய செம்மையான வழிகளைப் புரட்டுவதில் ஓயமாட்டாயோ? இதோ, இப்பொழுதே, கர்த்தருடைய கை உன்மேல் வந்திருக்கிறது, சிலகாலம் சூரியனைக் காணாமல் நீ குருடனாயிருப்பாய் என்றான். உடனே மந்தாரமும் இருளும் அவன்மேல் விழுந்தது; அவன் தடுமாறி, கைலாகு கொடுக்கிறவர்களைத் தேடினான். அப்பொழுது அதிபதி சம்பவித்ததைக் கண்டு, கர்த்தருடைய உபதேசத்தைக்குறித்து அதிசயப்பட்டு, விசுவாசித்தான். பின்பு பவுலும் அவனைச் சேர்ந்தவர்களும் பாப்போ பட்டணத்தைவிட்டுக் கப்பல் ஏறிப் பம்பிலியாவிலிருக்கும் பெர்கே பட்டணத்துக்கு வந்தார்கள். யோவான் அவர்களை விட்டுப் பிரிந்து, எருசலேமுக்குத் திரும்பிப்போனான்.
அப்போஸ்தலர் 13:1-13 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
அந்தியோகியாவில் இருந்த திருச்சபையிலே இறைவாக்கினரும், ஆசிரியரும் இருந்தார்கள். பர்னபா, நீகர் எனப்பட்ட சிமியோன், சிரேனேயைச் சேர்ந்த லூசியஸ், அரசனான ஏரோதுவுடன் வளர்ந்த மனாயீன், சவுல் ஆகியோரே இவர்கள். அவர்கள் கர்த்தரை வழிபட்டு உபவாசித்துக்கொண்டிருக்கையில், பரிசுத்த ஆவியானவர் அவர்களிடம், “நான் அவர்களை அழைத்த ஊழியத்திற்காக பர்னபாவையும் சவுலையும் எனக்கென வேறுபிரித்துவிடுங்கள்” என்றார். எனவே அவர்கள் உபவாசித்து மன்றாடியபின், தங்கள் கைகளை அந்த இருவர்மேலும் வைத்து, அவர்களை அனுப்பிவிட்டார்கள். அவர்கள் இருவரும் பரிசுத்த ஆவியானவரால் வழியனுப்பப்பட்டு, செலூக்கியாவுக்குப்போய், அங்கிருந்து கப்பல் மூலமாய் சீப்புரு தீவுக்குச் சென்றார்கள். அவர்கள் சலாமி பட்டணத்திற்கு வந்து சேர்ந்தபோது, அங்குள்ள யூத ஜெப ஆலயங்களில் இறைவனுடைய வார்த்தையை அறிவித்தார்கள். மாற்கு எனப்பட்ட யோவான், அவர்களோடு அவர்களின் உதவியாளனாய் இருந்தான். அவர்கள் அந்தத் தீவு முழுவதும் பிரயாணம் செய்து, பாப்போ பட்டணத்திற்கு வந்தார்கள். அங்கே அவர்கள் ஒரு யூத மந்திரவாதியும், பொய் தீர்க்கதரிசியுமான பர்யேசு என்னும் ஒருவனைச் சந்தித்தார்கள். அவன் செர்கியுபவுல் என்னும் அதிபதியின் உதவியாளனாய் இருந்தான். அறிவாற்றல் உள்ளவனான அந்த அதிபதி, இறைவனுடைய வார்த்தையைக் கேட்க விரும்பியதால், பர்னபாவையும் சவுலையும் அழைத்துவர ஆளனுப்பினான். ஆனால் மந்திரவாதி எலிமா அவர்களை எதிர்த்து நின்று, அந்த அதிபதி விசுவாசிக்காதபடி தடைசெய்ய முயற்சித்தான். எலிமா என்பது மந்திரவாதி என்ற அவனது பெயரின் அர்த்தமாகும். அப்பொழுது பவுல் என்று அழைக்கப்பட்ட சவுல் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டு, நேரே எலிமாவைப் பார்த்துச் சொன்னதாவது, “பிசாசின் பிள்ளையே, எல்லா நீதிக்கும் பகைவனே, நீ எல்லாவித ஏமாற்றுக்களினாலும் தந்திரங்களினாலும் நிறைந்திருக்கிறாய். கர்த்தருடைய நேர்வழிகளைப் புரட்டுவதை நீ ஒருபோதும் நிறுத்தமாட்டாயோ? இப்பொழுதே, கர்த்தருடைய கரம் உனக்கு எதிராய் இருக்கிறது. நீ இப்பொழுது குருடனாகி கொஞ்சக் காலத்திற்கு சூரிய வெளிச்சத்தைக் காணமாட்டாய்” என்றான். உடனே அவன் பார்வை மங்கியது, இருளும் சூழ்ந்தது. அவன் கைகளினால் தடவி, தன் கையைப் பிடித்து நடத்துவதற்கு ஒருவனைத் தேடினான். நடந்ததை அந்த அதிபதி கண்டபோது, அவன் கர்த்தருடைய போதனையைக்குறித்து வியப்படைந்து விசுவாசித்தான். பாப்போ பட்டணத்திலிருந்து, பவுலும் அவனுடைய கூட்டாளிகளும் கப்பல் மூலமாய் பம்பிலியாவிலுள்ள பெர்கேவுக்குச் சென்றார்கள். யோவான் எருசலேமுக்குத் திரும்பிப் போவதற்காக அங்கிருந்து அவர்களைவிட்டுப் போனான்.
அப்போஸ்தலர் 13:1-13 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
அந்தியோகியா பட்டணத்திலுள்ள சபையிலே பர்னபாவும், நீகர் என்னப்பட்ட சிமியோனும், சிரேனே ஊரானாகிய லூகியும், காற்பங்கு தேசத்தின் அதிபதியாகிய ஏரோதுடன் வளர்க்கப்பட்ட மனாயீனும், சவுலும், தீர்க்கதரிசிகளாகவும் போதகர்களாகவும் இருந்தார்கள். அவர்கள் கர்த்தருக்கு ஆராதனைசெய்து, உபவாசித்துக்கொண்டிருக்கிறபோது: பர்னபாவையும் சவுலையும் நான் அழைத்த ஊழியத்துக்காக அவர்களைப் பிரித்துவிடுங்கள் என்று பரிசுத்த ஆவியானவர் உரைத்தார். அப்பொழுது உபவாசித்து ஜெபம்பண்ணி, அவர்கள்மேல் கரங்களை வைத்து, அவர்களை அனுப்பினார்கள். அப்படியே அவர்கள் பரிசுத்த ஆவியானவரால் அனுப்பப்பட்டு செலூக்கியா பட்டணத்திற்கு வந்து, கப்பல் ஏறி, அங்கிருந்து சீப்புருதீவிற்குப் போனார்கள். சாலமி பட்டணத்திற்கு வந்தபோது அவர்கள் யூதர்களுடைய ஜெப ஆலயங்களில் தேவவசனத்தைப் போதித்தார்கள். யோவானும் அவர்களுக்கு உதவிக்காரனாக இருந்தான். அவர்கள் பாப்போ பட்டணம்வரைக்கும் தீவைக் கடந்துவந்தபோது, பர்யேசு என்னும் பெயர்கொண்ட மாயவித்தைக்காரனும் கள்ளத்தீர்க்கதரிசியுமான ஒரு யூதனைப் பார்த்தார்கள். அவன் விவேகமுள்ள மனிதனாகிய செர்கியுபவுல் என்னும் அதிபதியோடு இருந்தான். அந்த அதிபதி பர்னபாவையும் சவுலையும் அழைத்து, அவர்களிடத்தில் தேவவசனத்தைக் கேட்க ஆசையாக இருந்தான். மாயவித்தைக்காரன் என்று அர்த்தங்கொள்ளும் பெயரையுடைய எலிமா என்பவன், அதிபதியை இயேசுவை விசுவாசிக்காமல் திசைதிரும்பும்படி செய்ய, அவர்களோடு எதிர்த்து நின்றான். அப்பொழுது பவுல் என்று சொல்லப்பட்ட சவுல் பரிசுத்த ஆவியானவரால் நிறைந்தவனாக அவனை உற்றுப்பார்த்து: எல்லாக் கபடமும் அக்கிரமமும் நிறைந்தவனே, பிசாசின் மகனே, உண்மைக்கெல்லாம் பகைவனே, கர்த்தருடைய செம்மையான வழிகளைப் புரட்டுவதை நிறுத்தமாட்டாயோ? இதோ, இப்பொழுதே கர்த்தருடைய கை உன்மேல் வந்திருக்கிறது, கொஞ்சகாலம் நீ சூரியனைப் பார்க்காமல் குருடனாக இருப்பாய் என்றான். உடனே அவன் தன் கண்பார்வையை இழந்தான்; அவன் தடுமாறி, தனக்கு கை கொடுக்கிறவர்களைத் தேடினான். அப்பொழுது அதிபதி நடந்தவைகளைப் பார்த்து, கர்த்தருடைய உபதேசத்தைக்குறித்து அதிசயப்பட்டு, விசுவாசித்தான். பின்பு பவுலும் அவனைச் சேர்ந்தவர்களும் பாப்போ பட்டணத்தைவிட்டுக் கப்பல் ஏறிப் பம்பிலியாவில் இருக்கும் பெர்கே பட்டணத்திற்கு வந்தார்கள். யோவான் அவர்களைவிட்டுப் பிரிந்து, எருசலேமுக்குத் திரும்பிப்போனான்.
அப்போஸ்தலர் 13:1-13 பரிசுத்த பைபிள் (TAERV)
அந்தியோகியா சபையில் சில தீர்க்கதரிசிகளும் போதகர்களும் இருந்தனர். அவர்கள் பர்னபாஸ், சிமியோன் (நீகர் எனவும் அழைக்கப்பட்டான்), லூகி (சிரேனே பட்டணத்தைச் சேர்ந்தவன்), மானாயீன் (ஆட்சியாளனான ஏரோதுவோடு வளர்ந்தவன்), சவுல் ஆகியோர். இம்மனிதர்கள் எல்லோரும் கர்த்தருக்கு சேவை செய்யவும் உபவாசமிருக்கவும் செய்தனர். பரிசுத்த ஆவியானவர் அவர்களை நோக்கி, “பர்னபாவையும் சவுலையும் எனக்காக ஒரு சிறப்பான வேலைக்காகத் தனித்து விடுங்கள். இந்த வேலையைச் செய்ய நான் அவர்களைத் தேர்ந்துள்ளேன்” என்றார். எனவே சபை உபவாசமிருந்து பிரார்த்தனை செய்தது. பர்னபாவின் மீதும் சவுலின் மீதும் தங்கள் கரங்களை வைத்து வெளியே அனுப்பினர். பரிசுத்த ஆவியானவரால் பர்னபாவும் சவுலும் அனுப்பப்பட்டனர். செலூக்கியா நகரத்திற்கு அவர்கள் சென்றனர். பின் செலூக்கியாவிலிருந்து சீப்புரு தீவிற்குக் கடல் வழியாகச் சென்றனர். சாலமி என்னும் நகரத்திற்கு பர்னபாவும் சவுலும் வந்தபோது தேவனுடைய செய்தியை அவர்கள் யூத ஜெப ஆலயங்களில் போதித்தனர். (யோவான் மாற்கும் ஓர் உதவியாளனாக அவர்களோடிருந்தான்). அவர்கள் தீவைக் கடந்து பாப்போ நகர்வரைக்கும் சென்றனர். பாப்போவில் மந்திர தந்திரங்கள் செய்த ஒரு யூத மனிதனை அவர்கள் சந்தித்தனர். அவன் பெயர் பர்யேசு, அவன் ஒரு போலித் தீர்க்கதரிசி. ஆளுநர் செர்கியு பவுல் என்பவரோடு பர்யேசு எப்போதும் இருந்தான். செர்கியு பவுல் ஒரு ஞானவான். அவன் பர்னபாவையும் சவுலையும் சந்திக்க விரும்பினான். ஆனால் எலிமாஸ் என்னும் மந்திரவாதி பர்னபாவுக்கும் சவுலுக்கும் எதிரியாக இருந்தான். (பர்யேசு என்பதின் கிரேக்க மொழியாக்கம் எலிமாஸ்) செர்கியுபவுல் இயேசுவை நம்பாதபடி தடுக்க பர்யேசு முயன்றான். பவுல் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டான். (சவுலின் மற்றொரு பெயர் பவுல்) பவுல் எலிமாஸைப் பார்த்து, “பிசாசின் மகனே! நீதிக்கெல்லாம் நீ எதிரி. நீ தீய தந்திரங்களாலும் பொய்களாலும் நிரப்பப்பட்டிருக்கிறாய். கர்த்தரின் உண்மைகளைப் பொய்களாக திரித்துக் கூற எப்போதும் முயல்கிறாய்! இப்போது கர்த்தர் உன்னைத் தொடுவார். நீ குருடனாவாய். சில காலம் வரைக்கும் உன்னால் எதையும் பார்க்க முடியாது. சூரியனிலிருந்து வரும் ஒளியைக் கூடப் பார்க்க முடியாது” என்றான். அப்போது எலிமாஸுக்கு எல்லாம் இருண்டு போயின. பார்க்க முடியாதபடி அங்குமிங்கும் தடுமாறினான். கையால் பிடித்து அவனை வழி நடத்துகிற ஒருவனைக் கண்டு பிடிக்க முயற்சிசெய்துகொண்டிருந்தான். ஆளுநர் இதைப் பார்த்தபோது நம்பிக்கை வைத்தான். கர்த்தரைக் குறித்துப் போதிக்கப்படுபவற்றைக் கேட்டு அவன் வியப்புற்றான். பாப்போவிலிருந்து பவுலும் அவனோடிருந்த மனிதர்களும் கடற் பயணமாயினர். பம்பிலியாவிலுள்ள பெர்கே என்னும் நகரத்திற்கு அவர்கள் வந்தனர். ஆனால் யோவான் மாற்கு அவர்களை விட்டுப் பிரிந்தான். அவன் எருசலேமுக்குத் திரும்பினான்.