அப்போஸ்தலர் 11:19-30

அப்போஸ்தலர் 11:19-30 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

ஸ்தேவானுடைய மரணத்தின்பின் ஏற்பட்ட துன்புறுத்தலின் காரணமாக, சிதறடிக்கப்பட்டவர்கள் பெனிக்கே, சீப்புரு தீவு, அந்தியோகியாவரை சென்றார்கள். அவர்களோ யூதருக்கு மட்டுமே, இறைவார்த்தையை அறிவித்தார்கள். ஆயினும் சீப்புரு தீவு, சிரேனே ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்களில் சிலர், அந்தியோகியாவுக்குப் போய் கிரேக்கருடன் பேசத்தொடங்கி, கர்த்தராகிய இயேசுவைக்குறித்த நற்செய்தியை அவர்களுக்குச் சொன்னார்கள். கர்த்தருடைய கரம் அவர்களுடன்கூட இருந்தது. பெருந்தொகையான மக்கள் விசுவாசித்து, கர்த்தரிடமாய் திரும்பினார்கள். இந்தச் செய்தி எருசலேமிலுள்ள திருச்சபையோரின் காதுக்கு எட்டியது; அப்பொழுது அவர்கள் பர்னபாவை அந்தியோகியாவுக்கு அனுப்பினார்கள். அவன் அங்கேபோய்ச் சேர்ந்து, அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் இறைவனுடைய கிருபையின் செயல்களைக் கண்டான். அப்பொழுது அவன் மகிழ்ச்சியடைந்து, அவர்கள் அனைவரும் தங்கள் முழு இருதயத்தோடும், கர்த்தருக்கு உண்மையாய் இருக்கவேண்டும் என்று அவர்களை உற்சாகப்படுத்தினான். பர்னபா நல்லவனும், பரிசுத்த ஆவியானவராலும், விசுவாசத்திலும் நிறைந்தவனுமாக இருந்தான். அங்கே அநேக மக்கள் கர்த்தரிடம் சேர்க்கப்பட்டார்கள். அதற்குப் பின்பு பர்னபா சவுலைத்தேடி தர்சுவிற்குப் போனான். அவன் சவுலைக் கண்டபோது, அவனை அந்தியோகியாவுக்குக் கூட்டிக்கொண்டு வந்தான். எனவே ஒரு வருடமாக பர்னபாவும் சவுலும் அங்குள்ள திருச்சபையுடன் சேர்ந்து, பெருந்தொகையான மக்களுக்கு போதித்தார்கள். அந்தியோகியாவிலேயே முதன்முதலில் சீடர்களுக்கு கிறிஸ்தவர்கள் என்ற பெயர் கொடுக்கப்பட்டது. அந்நாட்களில் சில இறைவாக்கினர் எருசலேமிலிருந்து அந்தியோகியாவுக்கு வந்தார்கள். அவர்களில் ஒருவனான அகபு என்பவன் எழுந்து நின்று, உலகம் எங்கும் ஒரு கடும் பஞ்சம் ஏற்படப்போகிறது என்று பரிசுத்த ஆவியானவராலே முன்னறிவித்தான். அப்படியே, அது ரோமப் பேரரசன் கிலவுதியுவின் ஆட்சியில் ஏற்பட்டது. சீடர்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய ஆற்றலுக்கு ஏற்றபடி, யூதேயாவில் வாழுகிற சகோதரருக்கு உதவிசெய்யத் தீர்மானித்தார்கள். பர்னபா, சவுல் என்பவர்கள் மூலமாக அங்குள்ள சபைத்தலைவர்களுக்கு நன்கொடையை அனுப்பி, அவர்கள் இந்த உதவியைச் செய்தார்கள்.

அப்போஸ்தலர் 11:19-30 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

ஸ்தேவானுடைய மரணத்தினால் வந்த உபத்திரவத்தினாலே சிதறப்பட்டவர்கள் நற்செய்தி வசனத்தை யூதர்களுக்குமட்டும் அறிவித்து மற்றவர்களுக்கு அறிவிக்காமல், பெனிக்கே நாடு, சீப்புரு தீவு, அந்தியோகியா பட்டணம்வரைக்கும் சுற்றித்திரிந்தார்கள். அவர்களில் சீப்புருதீவாரும் சிரேனே பட்டணத்தாருமாகிய சிலர் அந்தியோகியா பட்டணத்திற்கு வந்து, கிரேக்கர்களுடனே பேசிக் கர்த்தராகிய இயேசுவைக்குறித்து போதித்தார்கள். கர்த்தருடைய கரம் அவர்களோடு இருந்தது; அநேக மக்கள் விசுவாசித்து, கர்த்தரிடத்தில் வந்தார்கள். எருசலேமிலுள்ள சபைமக்கள் இந்தக் காரியங்களைக்குறித்துக் கேள்விப்பட்டபோது, அந்தியோகியாவரைக்கும் போகும்படி பர்னபாவை அனுப்பினார்கள். அவன் போய்ச்சேர்ந்து, தேவனுடைய கிருபையைப் பார்த்தபோது, சந்தோஷப்பட்டு, கர்த்தரிடத்தில் மனஉறுதியாக நிலைத்திருக்கும்படி எல்லோருக்கும் புத்திசொன்னான். அவன் நல்லவனும், பரிசுத்த ஆவியானவராலும் விசுவாசத்தினாலும் நிறைந்தவனுமாக இருந்தான்; அநேக மக்கள் கர்த்தரிடம் சேர்க்கப்பட்டார்கள். பின்பு பர்னபா சவுலைத் தேடும்படி, தர்சுவிற்குப் புறப்பட்டுப்போய், அவனைப் பார்த்து, அந்தியோகியாவிற்கு அழைத்துக்கொண்டுவந்தான். அவர்கள் ஒரு வருடம் சபைமக்களோடு இருந்து, அநேக மக்களுக்கு உபதேசம்பண்ணினார்கள். முதன்முதலில் அந்தியோகியாவிலே சீடர்களுக்குக் கிறிஸ்தவர்கள் என்கிற பெயர் உண்டானது. அந்த நாட்களிலே எருசலேமிலிருந்து சில தீர்க்கதரிசிகள் அந்தியோகியாவிற்கு வந்தார்கள். அவர்களில் ஒருவனாகிய அகபு என்பவன் எழுந்து, உலகமெங்கும் கொடிய பஞ்சம் உண்டாகும் என்று ஆவியானவராலே அறிவித்தான்; அது அப்படியே கிலவுதியு பேரரசனுடைய நாட்களிலே நடந்தது. அப்பொழுது சீடர்களில் அவரவர்கள் தங்கள் தங்கள் தகுதிக்கேற்ப யூதேயாவில் குடியிருக்கிற சகோதரர்களுக்கு உதவிசெய்ய பணம் சேகரித்து அனுப்பவேண்டுமென்று தீர்மானம்பண்ணினார்கள். அப்படியே அவர்கள் சேகரித்து, பர்னபா சவுல் என்பவர்களுடைய கையிலே கொடுத்து, மூப்பர்களிடத்திற்கு அனுப்பினார்கள்.

அப்போஸ்தலர் 11:19-30 பரிசுத்த பைபிள் (TAERV)

ஸ்தேவான் கொல்லப்பட்ட பிறகு விளைந்த துன்பங்களினால் விசுவாசிகள் சிதறுண்டனர். தூரத்து இடங்களாகிய பெனிக்கே, சீப்புரு, அந்தியோகியா போன்ற இடங்களுக்குச் சில விசுவாசிகள் சென்றனர். விசுவாசிகள் நற்செய்தியை இந்த இடங்களிலெல்லாம் கூறினர். ஆனால் யூதர்களுக்கு மட்டுமே அவ்வாறு செய்தார்கள். இந்த விசுவாசிகளில் சிலர் சீப்புரு, சிரேனே ஆகிய நாடுகளிலிருந்து வந்த மனிதர்கள். இந்த மனிதர்கள் அந்தியோகியாவுக்கு வந்தபோது அவர்களும் கிரேக்கரிடம் பேசினர். அந்த கிரேக்க மக்களுக்குக் கர்த்தர் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அவர்கள் கூறினர். கர்த்தர் விசுவாசிகளுக்கு உதவிக்கொண்டிருந்தார். பெரும் எண்ணிக்கையிலான மக்கள் விசுவாசம் வைத்து கர்த்தரைப் பின்பற்றினர். எருசலேமின் சபை அந்தியோகியாவிலிருந்த இப்புதிய விசுவாசிகளைப்பற்றி அறிந்தது. எனவே பர்னபாவை அந்தியோகியாவுக்கு அனுப்பினர். பர்னபா நல்ல மனிதன். அவன் பரிசுத்த ஆவியாலும் மிகுந்த விசுவாசத்திலும் நிரம்பியிருந்தான். அந்தியோகியா மக்கள் பெரிதும் தேவ ஆசீர்வாதம் பெற்றதைக் கண்டான், அது பர்னபாவுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. அவன் அந்தியோகியாவின் எல்லா விசுவாசிகளுக்கும் உற்சாகமூட்டினான். அவன் அவர்களை நோக்கி, “ஒருபொழுதும் விசுவாசம் இழக்காதீர்கள். எப்பொழுதும் உங்கள் முழு இருதயத்தோடு கர்த்தருக்குக் கீழ்ப்படியுங்கள்” என்றான். பற்பல மக்கள் கர்த்தரின் சீஷராயினர். பின்பு பர்னபா தர்சு நகரத்திற்குச் சென்றான். அவன் சவுலைத் தேடினான். அவன் சவுலைப் பார்த்தபோது பர்னபா அவனை அந்தியோகியாவுக்கு அழைத்து வந்தான். ஓர் ஆண்டு முழுவதும் சவுலும் பர்னபாவும் அங்கே தங்கி இருந்தனர். விசுவாசிகளின் கூட்டம் ஒருங்கே கூடியபோதெல்லாம் சவுலும் பர்னபாவும் அவர்களைச் சந்தித்து மக்கள் பலருக்குப் போதித்தனர். அந்தியோகியாவில் இயேசுவின் சீஷர்கள் முதன்முதலாக “கிறிஸ்தவர்கள்” என்று அழைக்கப்பட்டனர். அதே கால கட்டத்தில் சில தீர்க்கதரிசிகள் எருசலேமிலிருந்து அந்தியோகியாவிற்குச் சென்றனர். அந்தத் தீர்க்கதரிசிகளில் ஒருவன் அகபு. அந்தியோகியாவில் அகபு எழுந்து நின்று பேசினான். “உலகம் முழுவதற்கும் மிகப் பெரிய பஞ்சம் வருகிறது. மக்கள் உண்ண உணவிராது” என்று பரிசுத்த ஆவியானவரின் துணையால் அறிவித்தான். (கிலவுதியு என்னும் சக்கரவர்த்தியின் காலத்தில் உண்மையாகவே இப்பஞ்சம் ஏற்பட்டது) யூதேயாவில் வாழ்ந்த சகோதர சகோதரிகளுக்கு உதவவேண்டுமென விசுவாசிகள் முடிவெடுத்தனர். தங்களால் முடிந்த வரைக்கும் அவர்களுக்கு அனுப்புவதாக ஒவ்வொரு விசுவாசியும் திட்டமிட்டனர். அவர்கள் அப்படியே பணத்தைச் சேர்த்து பர்னபாவிடமும் சவுலிடமும் கொடுத்தனர். பின் பர்னபாவும் சவுலும் அதனை யூதேயாவிலிருந்த பெரியோரிடம் கொண்டு வந்தனர்.

அப்போஸ்தலர் 11:19-30 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

ஸ்தேவான் நிமித்தமாய் எழும்பின உபத்திரவத்தினாலே சிதறப்பட்டவர்கள் சுவிசேஷ வசனத்தை யூதர்களுக்கேயன்றி மற்ற ஒருவருக்கும் அறிவியாமல், பெனிக்கேநாடு, சீப்புருதீவு, அந்தியோகியா பட்டணம்வரைக்கும் சுற்றித்திரிந்தார்கள். அவர்களில் சீப்புருதீவாரும் சிரேனே பட்டணத்தாருமாகிய சிலர் அந்தியோகியா பட்டணத்துக்கு வந்து, கிரேக்கருடனே பேசிக் கர்த்தராகிய இயேசுவைக்குறித்துப் பிரசங்கித்தார்கள். கர்த்தருடைய கரம் அவர்களோடே இருந்தது; அநேக ஜனங்கள் விசுவாசிகளாகி, கர்த்தரிடத்தில் திரும்பினார்கள். எருசலேமிலுள்ள சபையார் இந்தக் காரியங்களைக்குறித்துக் கேள்விப்பட்டபோது, அந்தியோகியாவரைக்கும் போகும்படிக்குப் பர்னபாவை அனுப்பினார்கள். அவன் போய்ச் சேர்ந்து, தேவனுடைய கிருபையைக் கண்டபோது, சந்தோஷப்பட்டு, கர்த்தரிடத்தில் மனநிர்ணயமாய் நிலைத்திருக்கும்படி எல்லாருக்கும் புத்திசொன்னான். அவன் நல்லவனும், பரிசுத்த ஆவியினாலும் விசுவாசத்தினாலும் நிறைந்தவனுமாயிருந்தான்; அநேக ஜனங்கள் கர்த்தரிடமாய்ச் சேர்க்கப்பட்டார்கள். பின்பு பர்னபா சவுலைத் தேடும்படி, தர்சுவுக்குப் புறப்பட்டுப்போய், அவனைக்கண்டு, அந்தியோகியாவுக்கு அழைத்துக்கொண்டுவந்தான். அவர்கள் ஒரு வருஷகாலமாய்ச் சபையோடே கூடியிருந்து, அநேக ஜனங்களுக்கு உபதேசம் பண்ணினார்கள். முதல்முதல் அந்தியோகியாவிலே சீஷர்களுக்குக் கிறிஸ்தவர்கள் என்கிற பேர் வழங்கிற்று. அந்நாட்களிலே எருசலேமிலிருந்து சில தீர்க்கதரிசிகள் அந்தியோகியாவுக்கு வந்தார்கள். அவர்களில் ஒருவனாகிய அகபு என்பவன் எழுந்து, உலகமெங்கும் கொடிய பஞ்சம் உண்டாகும் என்று ஆவியானவராலே அறிவித்தான்; அது அப்படியே கிலவுதியு ராயனுடைய நாட்களிலே உண்டாயிற்று. அப்பொழுது சீஷரில் அவரவர் தங்கள் தங்கள் திராணிக்குத்தக்கதாக யூதேயாவில் குடியிருக்கிற சகோதரருக்கு உதவியாகப் பணஞ்சேகரித்து அனுப்பவேண்டுமென்று தீர்மானம்பண்ணினார்கள். அப்படியே அவர்கள் சேகரித்து, பர்னபா சவுல் என்பவர்களுடைய கையிலே கொடுத்து, மூப்பரிடத்திற்கு அனுப்பினார்கள்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்