அப்போஸ்தலர் 10:24-48
அப்போஸ்தலர் 10:24-48 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
அடுத்தநாள் அவன் செசரியாவைச் சென்றடைந்தான். கொர்நேலியு அவர்களை எதிர்பார்த்து, தனது உறவினர்களையும், நெருங்கிய நண்பர்களையும் ஒன்றாய் கூட்டி வைத்திருந்தான். பேதுரு வீட்டிற்குள் போனதும், கொர்நேலியு அவனைச் சந்தித்து, பயபக்தியுடன் அவனுடைய கால்களில் விழுந்தான். ஆனால், பேதுரு அவனை எழுந்திருக்கப்பண்ணி, “எழுந்திரு, நானும் ஒரு மனிதனே” என்றான். அவனுடன் பேசிக்கொண்டே பேதுரு உள்ளே போனபோது, அங்கே மக்கள் பெருங்கூட்டமாய் கூடியிருந்ததைக் கண்டான். பேதுரு அவர்களிடம்: “யூதனொருவன் யூதரல்லாதவருடன் கூடிப்பழகுவதோ, அல்லது அவர்களின் வீட்டிற்குப் போவதோ, எங்கள் யூத சட்டத்திற்கு முரணானது என்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும். ஆனால், யாரையும் தூய்மையற்றவன் என்றோ, அசுத்தமானவன் என்றோ நான் அழைக்கக் கூடாது என்று இறைவன் எனக்குக் காண்பித்திருக்கிறார். எனவேதான் நான் அழைக்கப்பட்டபோது, எவ்வித மறுப்பும் தெரிவிக்காமல் இங்கே வந்தேன். என்னை எதற்காக அழைத்தீர்கள் என்று நான் இப்பொழுது தெரிந்துகொள்ளலாமா?” என்று கேட்டான். அப்பொழுது கொர்நேலியு: “நான்கு நாட்களுக்கு முன்பு நான் எனது வீட்டிலே, மாலை மூன்றுமணியளவில் இதே நேரத்தில் மன்றாடிக்கொண்டிருந்தேன். திடீரென்று பிரகாசிக்கின்ற உடைகள் உடுத்திய ஒரு மனிதன் எனக்கு முன்பாக நின்றான். அவன் என்னிடம், ‘கொர்நேலியுவே, இறைவன் உன் மன்றாட்டைக் கேட்டார். நீ ஏழைகளுக்குக் கொடுத்த நன்கொடைகளையும் அவர் நினைவில்கொண்டார். பேதுரு என்று அழைக்கப்படும் சீமோனைக் கூட்டிவர, ஆட்களை யோப்பாவுக்கு அனுப்பு. பேதுரு கடலோரமாய் வாழுகிற, தோல் பதனிடும் சீமோனுடைய வீட்டிலே தங்கியிருக்கிறான்’ என்றார். எனவேதான் நான் உடனே உம்மை அழைத்துவர ஆட்களை அனுப்பினேன். நீங்களும் வந்திருப்பது நல்லதே. இங்கே கர்த்தர் எங்களுக்குச் சொல்லும்படி உமக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றையும் கேட்கவே இப்பொழுது நாங்கள் அனைவரும் இறைவனுக்கு முன்பாகக் கூடிவந்திருக்கிறோம்” என்றான். அப்பொழுது பேதுரு பேசத் தொடங்கினான்: “இறைவன் பட்சபாதம் காண்பிக்கிறவர் அல்ல என்பது எவ்வளவு உண்மை என்பதை நான் இப்போது அறிந்திருக்கிறேன். எந்த நாட்டைச் சேர்ந்தவரானாலும், அவர்கள் இறைவனுக்குப் பயந்து, சரியானதைச் செய்யும்போது, அவர் அவர்களை ஏற்றுக்கொள்கிறார். இறைவன் இஸ்ரயேல் மக்களுக்கு அனுப்பிய செய்தியை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். எல்லோருக்கும் ஆண்டவராயிருக்கிற இயேசுகிறிஸ்துவின் மூலமாய்ச் சமாதானத்தின் நற்செய்தியை அவர் அறிவித்தார். யோவான் திருமுழுக்கைப்பற்றிப் பிரசங்கித்தபின், கலிலேயா தொடங்கி யூதேயா முழுவதிலும் என்ன நடந்தது என்பது உங்களுக்குத் தெரியும். இறைவன் எவ்விதம் நாசரேத்தைச் சேர்ந்த இயேசுவை பரிசுத்த ஆவியானவராலும் வல்லமையாலும் அபிஷேகம் செய்தார் என்பதையும், அவர் எவ்விதம் எங்கும் போய் நன்மை செய்தார் என்பதையும் இறைவன் தம்முடன் இருந்ததால், பிசாசின் அதிகாரத்திற்குக் கீழ்ப்பட்டிருந்த எல்லோரையும் அவர் குணமாக்கினார் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். “யூதருடைய நாட்டிலும், எருசலேமிலும் இயேசுகிறிஸ்து செய்த எல்லாவற்றிற்கும் நாங்கள் சாட்சிகளாய் இருக்கிறோம். அவர்கள் இயேசுவை ஒரு மரத்தில் தொங்கவிட்டுக் கொலைசெய்தார்கள். ஆனால் இறைவனோ மூன்றாம் நாளிலே அவரை இறந்தோரிலிருந்து எழுப்பி, எங்களுக்கு உயிருடன் காணப்படச் செய்தார். அவர் எல்லோருக்கும் காணப்படவில்லை, ஆனால் இறைவனால் ஏற்கெனவே தெரிந்துகொள்ளப்பட்ட சாட்சிகளாகிய நாங்களே அவரைக் கண்டோம். அவர் இறந்தோரில் இருந்து எழுந்தபின்பு, அவருடனே உணவருந்திய நாங்களே அந்த சாட்சிகள். உயிரோடிருக்கிறவர்களுக்கும் இறந்தோருக்கும் நீதிபதியாகத் தம்மையே இறைவன் நியமித்தார் என்று மக்களுக்குப் பிரசங்கித்து சாட்சி கூறும்படி, இயேசுகிறிஸ்து எங்களுக்குக் கட்டளையிட்டார். அவரிடம் விசுவாசமாய் இருக்கும் ஒவ்வொருவனும் அவருடைய பெயரினால் பாவங்களுக்கு மன்னிப்பைப் பெற்றுக்கொள்கிறான் என்று எல்லா இறைவாக்கினரும் அவரைக் குறித்தே சாட்சி கொடுக்கிறார்கள்” என்றான். பேதுரு இந்த வார்த்தைகளைப் பேசிக்கொண்டிருக்கையில், அந்தச் செய்தியைக் கேட்ட எல்லோர்மேலும் பரிசுத்த ஆவியானவர் இறங்கினார். பேதுருவுடன் வந்திருந்த விருத்தசேதனம் பெற்ற விசுவாசிகள், யூதரல்லாத மக்களுக்கும் பரிசுத்த ஆவியானவர் நன்கொடையாக ஊற்றப்பட்டதைக் கண்டு வியப்படைந்தார்கள். ஏனெனில், அவர்கள் வேறு மொழிகளில் பேசுவதையும், இறைவனைத் துதிக்கிறதையும் இவர்கள் கேட்டார்கள். அப்பொழுது பேதுரு அவர்களிடம், “இவர்கள் தண்ணீரில் திருமுழுக்கு பெறுவதை யாராவது தடைசெய்யலாமா? நாம் பெற்றிருப்பது போலவே, இவர்களும் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றிருக்கிறார்களே” என்று சொன்னான். எனவே, இயேசுகிறிஸ்துவின் பெயரிலே அவர்களுக்கு திருமுழுக்கு கொடுக்கும்படி பேதுரு உத்தரவிட்டான். அப்பொழுது அவர்கள் சிலநாட்கள் தங்களுடன் தங்கியிருக்கவேண்டும் என்று பேதுருவைக் கேட்டுக்கொண்டார்கள்.
அப்போஸ்தலர் 10:24-48 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
மறுநாளிலே செசரியா பட்டணத்திற்கு வந்துசேர்ந்தார்கள். கொர்நேலியு தன் உறவினரையும் தன்னுடைய நெருங்கிய நண்பர்களையும் வரவழைத்து, அவர்களுக்காகக் காத்திருந்தான். பேதுரு உள்ளே நுழையும்பொழுது, கொர்நேலியு அவனுக்கு எதிரேபோய், அவன் பாதத்தில் விழுந்து, பணிந்துகொண்டான். பேதுரு அவனைத் தூக்கியெடுத்து: எழுந்திரும், நானும் ஒரு மனிதன்தான் என்றான். அவனோடுகூட பேசிக்கொண்டு உள்ளேபோய், அநேக மக்கள் கூடிவந்திருக்கிறதைக் கண்டு, அவர்களை நோக்கி: யூதரல்லாதவனோடு கலந்து அவனிடத்தில் போக்கும் வரத்துமாக இருப்பது யூத சட்டத்திற்கு எதிரானது என்று நீங்கள் தெரிந்திருக்கிறீர்கள்; அப்படியிருந்தும், எந்த மனிதனையும் தீட்டுள்ளவன் என்றும் அசுத்தமுள்ளவன் என்றும் நான் சொல்லாதபடிக்கு தேவன் எனக்குத் தரிசனத்தில் காண்பித்திருக்கிறார். ஆகவே, நீங்கள் என்னை அழைத்தபோது நான் மறுப்பு சொல்லாமல் வந்தேன். இப்போதும் என்ன காரியத்துக்காக என்னை அழைத்தீர்கள் என்று கேட்கிறேன் என்றான். அதற்குக் கொர்நேலியு: நான்கு நாட்களுக்கு முன்னே இந்நேரத்திலே நான் உபவாசித்து, பிற்பகல் மூன்று மணியளவில் என் வீட்டிலே ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தேன்; அப்பொழுது வெண்மையான ஆடை அணிந்த மனிதன் ஒருவன் எனக்கு முன்பாக நின்று: கொர்நேலியுவே, உன் ஜெபம் கேட்கப்பட்டது, உன் தானதருமங்கள் தேவ சமுகத்தில் நினைக்கப்பட்டது. யோப்பா பட்டணத்திற்கு ஆள் அனுப்பி, பேதுரு என்னும் மறுபெயர்கொண்ட சீமோனை வரவழைப்பாயாக, அவன் கடலோரத்திலே தோல்பதனிடுகிறவனாகிய சீமோனுடைய வீட்டிலே தங்கியிருக்கிறான்; அவன் வந்து உன்னிடத்தில் பேசுவான் என்றார். அந்தப்படியே நான் உடனே உம்மிடத்திற்கு ஆள் அனுப்பினேன்; நீர் வந்தது நல்லது; தேவனாலே உமக்குக் கட்டளையிடப்பட்ட எல்லாவற்றையும் கேட்க நாங்கள் எல்லோரும் இப்பொழுது இங்கே தேவனுடைய சமுகத்தில் கூடியிருக்கிறோம் என்றான். அப்பொழுது பேதுரு பேசத்தொடங்கி: தேவன் பட்சபாதமுள்ளவரல்ல என்றும், எந்த இனமாக இருந்தாலும் அவருக்குப் பயந்திருந்து நேர்மையானதைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்குப் பிரியமானவன் என்றும் நிச்சயமாகத் தெரிந்திருக்கிறேன். எல்லோருக்கும் கர்த்தராக இருக்கிற இயேசுகிறிஸ்துவைக்கொண்டு அவர் சமாதானத்தை நற்செய்தியாகக் கூறி, இஸ்ரவேல் மக்களுக்கு அனுப்பின வார்த்தையை தெரிந்திருக்கிறீர்களே. யோவான் ஞானஸ்நானத்தைக்குறித்துப் போதித்தப்பின்பு, கலிலேயா தேசத்தில் துவங்கி யூதேயா தேசமெங்கும் நடந்த சம்பவங்கள் இவைகளே. நசரேயனாகிய இயேசுவை தேவன் பரிசுத்த ஆவியானவராலும் வல்லமையினாலும் அபிஷேகம்பண்ணினார்; தேவன் அவருடனேகூட இருந்தபடியினாலே அவர் நன்மைசெய்கிறவராகவும் பிசாசின் பிடியில் சிக்கின எல்லோரையும் குணமாக்குகிறவராகவும் சுற்றித்திரிந்தார். யூதர்களுடைய தேசத்திலும் எருசலேமிலும் அவர் செய்த எல்லாவற்றிற்கும் நாங்கள் சாட்சிகளாக இருக்கிறோம். அவரை மரத்திலே தூக்கிக் கொலைசெய்தார்கள். மூன்றாம்நாளிலே தேவன் அவரை உயிரோடு எழுப்பி நாம் அவரைக் காணும்படிச்செய்தார். என்றாலும், எல்லா மக்களும் அவரைக் காணும்படிச்செய்யாமல், அவர் உயிரோடு எழுந்தபின்பு அவரோடு சாப்பிட்டு குடித்தவர்களும் தேவனால் நியமிக்கப்பட்ட சாட்சிகளாகிய நாங்கள் காணும்படிச்செய்தார். அவரே உயிரோடிருக்கிறவர்களுக்கும் மரித்தோர்களுக்கும் தேவனால் நியமிக்கப்பட்ட நியாயாதிபதியென்று மக்களுக்குப் போதிக்கவும், சாட்சியாக அறிவிக்கவும், அவர் எங்களுக்குக் கட்டளையிட்டார். அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் அவருடைய நாமத்தினாலே பாவமன்னிப்பைப் பெறுவான் என்று தீர்க்கதரிசிகள் எல்லோரும் அவரைக்குறித்தே சாட்சிகொடுக்கிறார்கள் என்றான். இந்த வார்த்தைகளைப் பேதுரு பேசிக்கொண்டிருக்கும்போது வசனத்தைக் கேட்ட எல்லோர்மேலும் பரிசுத்த ஆவியானவர் இறங்கினார். அவர்கள் பலவிதமான மொழிகளைப் பேசுகிறதையும், தேவனைப் புகழ்வதையும், பேதுருவுடன் வந்திருந்த விருத்தசேதனம்பண்ணப்பட்ட விசுவாசிகள் கேட்கும்போது, பரிசுத்த ஆவியானவரின் வரம் யூதரல்லாதவர்கள்மேலும், பொழிந்தருளப்பட்டதைக்குறித்து வியப்படைந்தார்கள். அப்பொழுது பேதுரு: நம்மைப்போல பரிசுத்த ஆவியானவரைப் பெற்ற இவர்களும் தண்ணீரில் ஞானஸ்நானம் பெறாதபடி இவர்களைத் தடைசெய்யலாமா? என்று சொல்லி, கர்த்தருடைய நாமத்தினாலே அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கும்படிக் கட்டளையிட்டான். அப்பொழுது சிலநாட்கள் அங்கே தங்கும்படி அவனைக் கேட்டுக்கொண்டார்கள்.
அப்போஸ்தலர் 10:24-48 பரிசுத்த பைபிள் (TAERV)
அடுத்த நாள் செசரியா நகரத்திற்குள் அவர்கள் வந்தனர். கொர்நேலியு அவர்களுக்காகக் காத்துக்கொண்டிருந்தான். அவனது வீட்டில் உறவினரையும், நெருங்கிய நண்பர்களையும் ஏற்கெனவே வரவழைத்திருந்தான். பேதுரு வீட்டிற்குள் நுழைந்தபோதுகொர்நேலியு அவர்களைச் சந்தித்தான். கொர்நேலியு பேதுருவின் பாதங்களில் விழுந்து அவனை வணங்கினான். ஆனால் பேதுரு அவனை எழுந்திருக்குமாறு கூறினான். பேதுரு “எழுந்திரும், நானும் உம்மைப் போன்ற ஒரு மனிதனே” என்றான். பேதுரு கொர்நேலியுவோடு தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தான். பேதுரு உள்ளே சென்று ஒரு பெரிய கூட்டமாகக் கூடியிருந்த மக்களை அங்கே கண்டான். பேதுரு மக்களை நோக்கி, “யூதரல்லாத எந்த மனிதனோடும் சந்திப்பதோ தொடர்பு கொள்வதோ கூடாது என்பது எங்கள் யூதச் சட்டம் என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். ஆனால் நான் எந்த மனிதனையும் ‘தூய்மையற்றவன்’ எனவும், ‘சுத்தமற்றவன்’ எனவும் அழைக்கக் கூடாது என்று தேவன் எனக்குக் காட்டியுள்ளார். அதனால்தான் அம்மனிதர் இங்கு வருமாறு என்னை அழைத்தபோது நான் மறுக்கவில்லை. எதற்காக என்னை இங்கு அழைத்தீர்கள் என்பதை இப்போது தயவு செய்து கூறுங்கள்” என்றான். கொர்நேலியு, “நான்கு நாட்களுக்கு முன், என் வீட்டில் நான் பிரார்த்தனை செய்துகொண்டிருந்தேன். அது இதே வேளை பிற்பகல் மூன்று மணியாயிருந்தது. திடீரென ஒரு மனிதன் எனக்கு முன்பாக நின்றுகொண்டிருந்தான். அவன் ஒளிமிக்க பிரகாசமான ஆடைகளை அணிந்துகொண்டிருந்தான். அம்மனிதன், ‘கொர்நேலியுவே! தேவன் உன் பிரார்த்தனையைக் கேட்டார். நீ ஏழை மக்களுக்கு அளிக்கும் தருமங்களை தேவன் பார்த்தார். தேவன் உன்னை நினைவுகூருகிறார். எனவே சில மனிதர்களை யோப்பா நகரத்திற்கு அனுப்பு. சீமோன் எனப்படும் பேதுருவை வரச்சொல். தோல் தொழிலாளியான சீமோன் என்னும் பெயர் கொண்ட ஒருவனின் வீட்டில் பேதுரு தங்கியிருக்கிறான். அவன் வீடு கடற்கரையில் உள்ளது’ என்றான். எனவே உடனேயே உமக்கு வரச்சொல்லியனுப்பினேன். நீர் இங்கு வந்தது நல்லது. இப்போது தேவனுக்கு முன்பாக நாங்கள் அனைவரும் கர்த்தர் எங்களுக்குச் சொல்லும்படியாக உமக்குக் கட்டளையிட்டவற்றைக் கேட்க இங்கு கூடியிருக்கிறோம்” என்றான். பேதுரு பேச ஆரம்பித்தான். “மெய்யாகவே தேவனுக்கு எல்லா மனிதரும் சமமானவர்கள் என்பதை நான் இப்போது புரிந்துகொள்கிறேன். சரியானவற்றைச் செய்து அவரை வழிபடுகிற எந்த மனிதனையும் தேவன் ஏற்றுக்கொள்கிறார். தேவன் யூத மக்களோடு பேசியுள்ளார். இயேசு கிறிஸ்துவின் மூலமாக சமாதானம் வந்தது என்ற நற்செய்தியை தேவன் அவர்களுக்கு அனுப்பியுள்ளார். இயேசு எல்லா மக்களின் கர்த்தராவார். “யூதேயா முழுவதும் நிகழ்ந்த செயல்களை நீங்கள் அறிவீர்கள். யோவான் மக்களுக்கு ஞானஸ்நானத்தைக் குறித்து உபதேசிக்கத் துவங்கியதற்குப் பின் இவை யாவும் கலிலேயாவில் ஆரம்பமாயின. நீங்கள் நாசரேத்தின் இயேசுவைக் குறித்து அறிவீர்கள். பரிசுத்த ஆவியையும், வல்லமையையும் அவருக்குக் கொடுத்து தேவன் அவரைக் கிறிஸ்துவாக்கினார். இயேசு எல்லா இடங்களுக்கும் சென்று மக்களுக்கு நல்லவற்றைச் செய்துகொண்டிருந்தார். பிசாசினால் முடக்கப்பட்ட மக்களை இயேசு குணப்படுத்தினார். தேவன் இயேசுவோடிருந்தார் என்பதை இது காட்டிற்று. “யூதேயாவிலும் எருசலேமிலும் இயேசு செய்த எல்லாவற்றையும் நாங்கள் பார்த்தோம். அதற்கு நாங்கள் சாட்சிகள். ஆனால் இயேசு கொல்லப்பட்டார். மரத்தினால் செய்யப்பட்ட சிலுவையில் அவரை அறைந்தனர். ஆனால் மரணத்திற்குப்பின் மூன்றாவது நாள் தேவன் இயேசுவை உயிரோடு எழுப்பினார். இயேசுவை மக்கள் தெளிவாகப் பார்க்கும் வாய்ப்பை தேவன் கொடுத்தார். ஆனால் எல்லா மக்களும் அவரைப் பார்க்கவில்லை. தேவனால் ஏற்கெனவே தேர்ந்தெடுக்கப்பட்ட சாட்சிகள் மட்டும் அவரைப் பார்த்தார்கள். நாங்களே அந்த சாட்சிகள்! இயேசு மரித்து பின்னர் எழுந்த பிறகு அவரோடு உண்டோம், குடித்தோம். “மக்களுக்குப் போதிக்கும்படியாக இயேசு எங்களுக்குக் கூறினார். உயிரோடிருக்கும் மக்களுக்கும் மரித்த மக்களுக்கும் நீதிபதியாக தேவன் நியமித்தவர் அவரே என்று மக்களுக்குச் சொல்லும்படி எங்களுக்குக் கூறினார். இயேசுவில் நம்பிக்கை வைக்கிற ஒவ்வொரு மனிதனும் தன் பாவங்களிலிருந்து மன்னிக்கப்படுவான். இயேசுவின் பெயரால் தேவன் அம்மனிதனின் பாவங்களை மன்னிப்பார். இது உண்மையென்று எல்லா தீர்க்கதரிசிகளும் கூறுகின்றனர்” என்றான். பேதுரு இந்த வார்த்தைகளைப் பேசிக்கொண்டிருக்கையிலேயே, பரிசுத்த ஆவியானவர் அப்பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த எல்லா மக்களின் மீதும் வந்திறங்கினார். பேதுருவோடு வந்த யூத விசுவாசிகள் வியந்தனர். யூதரல்லாத மக்களுக்கும் பரிசுத்த ஆவியானவர் அருளப்பட்டதைக் கண்டு அவர்கள் ஆச்சரியமடைந்தனர். ஏனெனில் அவர்கள் வேற்று மொழிகளைப் பேசுவதையும், தேவனைத் துதிப்பதையும் யூத விசுவாசிகள் கேட்டனர். பின்பு பேதுரு “தண்ணீரின் மூலம் இம்மக்கள் ஞானஸ்நானம் பெறுவதை நாம் மறுக்க முடியாது. நாம் பெற்றதைப் போலவே இவர்களும் பரிசுத்த ஆவியைப் பெற்றார்கள்!” என்றான். கொர்நேலியுவும் அவன் உறவினரும் நண்பர்களும் இயேசு கிறிஸ்துவின் பெயரில் ஞானஸ்நானம் பெறவேண்டும் என்று பேதுரு கட்டளையிட்டான். பின் அம்மக்கள் பேதுருவைச் சில நாட்கள் தங்களோடு தங்கும்படியாகக் கேட்டுக்கொண்டனர்.
அப்போஸ்தலர் 10:24-48 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
மறுநாளிலே செசரியா பட்டணத்தில் பிரவேசித்தார்கள். கொர்நேலியு தன் உறவின் முறையாரையும் தன்னுடைய விசேஷித்த சிநேகிதரையும் கூடவரவழைத்து, அவர்களுக்காகக் காத்திருந்தான். பேதுரு உள்ளே பிரவேசிக்கிறபொழுது, கொர்நேலியு அவனுக்கு எதிர்கொண்டுபோய், அவன் பாதத்தில் விழுந்து, பணிந்துகொண்டான். பேதுரு அவனைத் தூக்கியெடுத்து: எழுந்திரும், நானும் ஒரு மனுஷன்தான் என்றான். அவனுடனே பேசிக்கொண்டு, உள்ளேபோய், அநேகர் கூடிவந்திருக்கிறதைக் கண்டு, அவர்களை நோக்கி: அந்நிய ஜாதியானோடே கலந்து அவனிடத்தில் போக்குவரவாயிருப்பது யூதனானவனுக்கு விலக்கப்பட்டிருக்கிறதென்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்; அப்படியிருந்தும், எந்த மனுஷனையும் தீட்டுள்ளவனென்றும் அசுத்தனென்றும் நான் சொல்லாதபடிக்கு தேவன் எனக்குக் காண்பித்திருக்கிறார். ஆகையால் நீங்கள் என்னை அழைப்பித்தபோது நான் எதிர்பேசாமல் வந்தேன். இப்போதும் என்ன காரியத்துக்காக என்னை அழைப்பித்தீர்கள் என்று கேட்கிறேன் என்றான். அதற்குக் கொர்நேலியு: நாலு நாளைக்கு முன்னே இந்நேரத்திலே நான் உபவாசித்து, ஒன்பதாம்மணி நேரத்தில் என் வீட்டிலே ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தேன்; அப்பொழுது பிரகாசமுள்ள வஸ்திரந்தரித்த மனுஷன் ஒருவன் எனக்கு முன்பாக நின்று: கொர்நேலியுவே, உன் ஜெபம் கேட்கப்பட்டது, உன் தானதருமங்கள் தேவசந்நிதியில் நினைத்தருளப்பட்டது. யோப்பா பட்டணத்துக்கு ஆள் அனுப்பி, பேதுரு என்று மறுபேர் கொண்ட சீமோனை வரவழைப்பாயாக, அவன் கடலோரத்திலே தோல்பதனிடுகிறவனாகிய சீமோனுடைய வீட்டிலே தங்கியிருக்கிறான்; அவன் வந்து உன்னிடத்தில் பேசுவான் என்றார். அந்தப்படியே நான் உடனே உம்மிடத்திற்கு ஆள் அனுப்பினேன்; நீர் வந்தது நல்ல காரியம்; தேவனாலே உமக்குக் கட்டளையிடப்பட்ட யாவையும் கேட்கும்படிக்கு நாங்கள் எல்லாரும் இப்பொழுது இங்கே தேவசமுகத்தில் கூடியிருக்கிறோம் என்றான். அப்பொழுது பேதுரு பேசத்தொடங்கி: தேவன் பட்சபாதமுள்ளவரல்ல என்றும், எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன் என்றும் நிச்சயமாய் அறிந்திருக்கிறேன். எல்லாருக்கும் கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்துவைக்கொண்டு அவர் சமாதானத்தைச் சுவிசேஷமாய்க் கூறி, இஸ்ரவேல் புத்திரருக்கு அனுப்பின வார்த்தையை அறிந்திருக்கிறீர்களே. யோவான் ஞானஸ்நானத்தைக்குறித்துப் பிரசங்கித்தபின்பு, கலிலேயா நாடு முதற்கொண்டு யூதேயா தேசமெங்கும் நடந்த சங்கதி இதுவே. நசரேயனாகிய இயேசுவை தேவன் பரிசுத்த ஆவியினாலும் வல்லமையினாலும் அபிஷேகம் பண்ணினார்; தேவன் அவருடனேகூட இருந்தபடியினாலே அவர் நன்மைசெய்கிறவராயும் பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும் சுற்றித்திரிந்தார். யூதருடைய தேசத்திலும் எருசலேமிலும் அவர் செய்தவைகளெல்லாவற்றிற்கும் நாங்கள் சாட்சிகளாயிருக்கிறோம். அவரை மரத்திலே தூக்கிக் கொலைசெய்தார்கள். மூன்றாம் நாளிலே தேவன் அவரை எழுப்பிப் பிரத்தியட்சமாய்க் காணும்படி செய்தார். ஆயினும் எல்லா ஜனங்களுக்கும் பிரத்தியட்சமாகும்படி செய்யாமல், அவர் மரித்தோரிலிருந்து எழுந்தபின்பு அவரோடே புசித்துக் குடித்தவர்களும் தேவனால் முன்பு நியமிக்கப்பட்ட சாட்சிகளுமாகிய எங்களுக்கே பிரத்தியட்சமாகும்படி செய்தார். அன்றியும் அவரே உயிரோடிருக்கிறவர்களுக்கும் மரித்தோர்களுக்கும் தேவனால் ஏற்படுத்தப்பட்ட நியாயாதிபதியென்று ஜனங்களுக்குப் பிரசங்கிக்கவும், சாட்சியாக ஒப்புவிக்கவும், அவர் எங்களுக்குக் கட்டளையிட்டார். அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் அவருடைய நாமத்தினாலே பாவமன்னிப்பைப் பெறுவானென்று தீர்க்கதரிசிகளெல்லாரும் அவரைக்குறித்தே சாட்சிகொடுக்கிறார்கள் என்றான். இந்த வார்த்தைகளைப் பேதுரு பேசிக்கொண்டிருக்கையில் வசனத்தைக் கேட்டவர்கள் யாவர்மேலும் பரிசுத்த ஆவியானவர் இறங்கினார். அவர்கள் பல பாஷைகளைப் பேசுகிறதையும், தேவனைப் புகழுகிறதையும், பேதுருவோடேகூட வந்திருந்த விருத்தசேதனமுள்ள விசுவாசிகள் கேட்கும்போது, பரிசுத்த ஆவியின் வரம் புறஜாதிகள்மேலும், பொழிந்தருளப்பட்டதைக்குறித்துப் பிரமித்தார்கள். அப்பொழுது பேதுரு: நம்மைப்போல பரிசுத்த ஆவியைப் பெற்ற இவர்களும் ஞானஸ்நானம் பெறாதபடிக்கு எவனாகிலும் தண்ணீரை விலக்கலாமா என்று சொல்லி, கர்த்தருடைய நாமத்தினாலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுக்கும்படி கட்டளையிட்டான். அப்பொழுது சிலநாள் அங்கே தங்கும்படி அவனை வேண்டிக்கொண்டார்கள்.