அப்போஸ்தலர் 10:23-28

அப்போஸ்தலர் 10:23-28 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அப்பொழுது பேதுரு அவர்களைத் தனது விருந்தாளிகளாக வீட்டிற்கு அழைத்தான். மறுநாள் பேதுரு அவர்களுடன் யோப்பாவைச் சேர்ந்த சில சகோதரரையும் கூட்டிக்கொண்டு புறப்பட்டுப் போனான். அடுத்தநாள் அவன் செசரியாவைச் சென்றடைந்தான். கொர்நேலியு அவர்களை எதிர்பார்த்து, தனது உறவினர்களையும், நெருங்கிய நண்பர்களையும் ஒன்றாய் கூட்டி வைத்திருந்தான். பேதுரு வீட்டிற்குள் போனதும், கொர்நேலியு அவனைச் சந்தித்து, பயபக்தியுடன் அவனுடைய கால்களில் விழுந்தான். ஆனால், பேதுரு அவனை எழுந்திருக்கப்பண்ணி, “எழுந்திரு, நானும் ஒரு மனிதனே” என்றான். அவனுடன் பேசிக்கொண்டே பேதுரு உள்ளே போனபோது, அங்கே மக்கள் பெருங்கூட்டமாய் கூடியிருந்ததைக் கண்டான். பேதுரு அவர்களிடம்: “யூதனொருவன் யூதரல்லாதவருடன் கூடிப்பழகுவதோ, அல்லது அவர்களின் வீட்டிற்குப் போவதோ, எங்கள் யூத சட்டத்திற்கு முரணானது என்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும். ஆனால், யாரையும் தூய்மையற்றவன் என்றோ, அசுத்தமானவன் என்றோ நான் அழைக்கக் கூடாது என்று இறைவன் எனக்குக் காண்பித்திருக்கிறார்.

அப்போஸ்தலர் 10:23-28 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அப்பொழுது பேதுரு அவர்களை உள்ளே அழைத்து, தங்க வைத்து வேண்டிய உதவிகளைச் செய்தான். மறுநாளிலே அவர்களோடு புறப்பட்டான்; யோப்பா பட்டணத்து சகோதரர்களில் சிலரும் அவனோடுகூட போனார்கள். மறுநாளிலே செசரியா பட்டணத்திற்கு வந்துசேர்ந்தார்கள். கொர்நேலியு தன் உறவினரையும் தன்னுடைய நெருங்கிய நண்பர்களையும் வரவழைத்து, அவர்களுக்காகக் காத்திருந்தான். பேதுரு உள்ளே நுழையும்பொழுது, கொர்நேலியு அவனுக்கு எதிரேபோய், அவன் பாதத்தில் விழுந்து, பணிந்துகொண்டான். பேதுரு அவனைத் தூக்கியெடுத்து: எழுந்திரும், நானும் ஒரு மனிதன்தான் என்றான். அவனோடுகூட பேசிக்கொண்டு உள்ளேபோய், அநேக மக்கள் கூடிவந்திருக்கிறதைக் கண்டு, அவர்களை நோக்கி: யூதரல்லாதவனோடு கலந்து அவனிடத்தில் போக்கும் வரத்துமாக இருப்பது யூத சட்டத்திற்கு எதிரானது என்று நீங்கள் தெரிந்திருக்கிறீர்கள்; அப்படியிருந்தும், எந்த மனிதனையும் தீட்டுள்ளவன் என்றும் அசுத்தமுள்ளவன் என்றும் நான் சொல்லாதபடிக்கு தேவன் எனக்குத் தரிசனத்தில் காண்பித்திருக்கிறார்.

அப்போஸ்தலர் 10:23-28 பரிசுத்த பைபிள் (TAERV)

பேதுரு அம்மனிதரை உள்ளே கூப்பிட்டு இரவில் அங்கே தங்கும்படியாகக் கேட்டுக்கொண்டான். மறுநாள் பேதுரு தயாராகி அம்மூன்று மனிதரோடும் சென்றான். யோப்பாவிலிருந்து சில சகோதரர்கள் பேதுருவோடு சென்றனர். அடுத்த நாள் செசரியா நகரத்திற்குள் அவர்கள் வந்தனர். கொர்நேலியு அவர்களுக்காகக் காத்துக்கொண்டிருந்தான். அவனது வீட்டில் உறவினரையும், நெருங்கிய நண்பர்களையும் ஏற்கெனவே வரவழைத்திருந்தான். பேதுரு வீட்டிற்குள் நுழைந்தபோதுகொர்நேலியு அவர்களைச் சந்தித்தான். கொர்நேலியு பேதுருவின் பாதங்களில் விழுந்து அவனை வணங்கினான். ஆனால் பேதுரு அவனை எழுந்திருக்குமாறு கூறினான். பேதுரு “எழுந்திரும், நானும் உம்மைப் போன்ற ஒரு மனிதனே” என்றான். பேதுரு கொர்நேலியுவோடு தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தான். பேதுரு உள்ளே சென்று ஒரு பெரிய கூட்டமாகக் கூடியிருந்த மக்களை அங்கே கண்டான். பேதுரு மக்களை நோக்கி, “யூதரல்லாத எந்த மனிதனோடும் சந்திப்பதோ தொடர்பு கொள்வதோ கூடாது என்பது எங்கள் யூதச் சட்டம் என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். ஆனால் நான் எந்த மனிதனையும் ‘தூய்மையற்றவன்’ எனவும், ‘சுத்தமற்றவன்’ எனவும் அழைக்கக் கூடாது என்று தேவன் எனக்குக் காட்டியுள்ளார்.

அப்போஸ்தலர் 10:23-28 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அப்பொழுது பேதுரு அவர்களை உள்ளே அழைத்து, அவர்களுக்கு உபசாரஞ்செய்து, மறுநாளிலே அவர்களுடனே கூடப் புறப்பட்டான்; யோப்பா பட்டணத்தாராகிய சகோதரரில் சிலரும் அவனுடனேகூடப் போனார்கள். மறுநாளிலே செசரியா பட்டணத்தில் பிரவேசித்தார்கள். கொர்நேலியு தன் உறவின் முறையாரையும் தன்னுடைய விசேஷித்த சிநேகிதரையும் கூடவரவழைத்து, அவர்களுக்காகக் காத்திருந்தான். பேதுரு உள்ளே பிரவேசிக்கிறபொழுது, கொர்நேலியு அவனுக்கு எதிர்கொண்டுபோய், அவன் பாதத்தில் விழுந்து, பணிந்துகொண்டான். பேதுரு அவனைத் தூக்கியெடுத்து: எழுந்திரும், நானும் ஒரு மனுஷன்தான் என்றான். அவனுடனே பேசிக்கொண்டு, உள்ளேபோய், அநேகர் கூடிவந்திருக்கிறதைக் கண்டு, அவர்களை நோக்கி: அந்நிய ஜாதியானோடே கலந்து அவனிடத்தில் போக்குவரவாயிருப்பது யூதனானவனுக்கு விலக்கப்பட்டிருக்கிறதென்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்; அப்படியிருந்தும், எந்த மனுஷனையும் தீட்டுள்ளவனென்றும் அசுத்தனென்றும் நான் சொல்லாதபடிக்கு தேவன் எனக்குக் காண்பித்திருக்கிறார்.