3 யோவான் 1:1-14
3 யோவான் 1:1-14 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
சபைத்தலைவனாகிய நான், சத்தியத்தின்படி நான் நேசிக்கிற, என் அன்பான நண்பன் காயுவுக்கு எழுதுகிறதாவது: பிரியமானவனே, உன் ஆத்துமா இருப்பதுபோல், நீ உன் உடல் நலத்திலும் மற்றெல்லாவற்றிலும் நன்றாயிருக்கும்படி, நான் உனக்காக மன்றாடுகிறேன். சில சகோதரர் வந்து, நீ எப்படி சத்தியத்தை உறுதியாய்க் கைக்கொள்கிறாய் என்றும், நீ தொடர்ந்து சத்தியத்தின்படி நடக்கிறாய் என்றும் எனக்குச் சொன்னபோது, நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். எனது பிள்ளைகள் சத்தியத்தில் நடக்கிறார்கள் என்று கேள்விப்படுவதைவிட வேறு பெரிதான சந்தோஷம் எனக்கு இல்லை. அன்பான நண்பனே, உன்னிடம் வந்துபோகிற சகோதரர் உனக்கு அந்நியராய் இருந்துங்கூட, நீ அவர்களுக்கு உதவி செய்வதில் உண்மையுள்ளவனாய் இருந்தாய். அவர்கள் உன்னுடைய அன்பைக்குறித்து, இங்குள்ள திருச்சபைக்குச் சாட்சி சொல்லியிருக்கிறார்கள். நீ இறைவனுக்கு ஏற்றவிதத்தில் அப்படிப்பட்ட சகோதரர்களை வழியனுப்பி வைப்பது நல்லது. ஏனெனில், அவர்கள் கிறிஸ்துவின் பெயருக்காகவே அவிசுவாசிகளிடமிருந்து எவ்வித உதவியையும் பெற்றுக்கொள்ளாமல், பயணமாய் சென்றார்கள். எனவே அப்படிப்பட்டவர்களை நாம் உபசரிக்க வேண்டியவர்களாய் இருக்கிறோம். அவ்விதமாகத்தான் நாம் சத்தியத்துக்காக ஒத்துழைக்க முடியும். இதை நான் திருச்சபைக்கு எழுதினேன். ஆனால் திருச்சபையில் தான் முதல்வனாயிருக்க விரும்பிய தியோத்திரேப்பு எங்கள் தலைமைத்துவத்தை ஏற்க விரும்பவில்லை. எனவே நான் அங்கு வந்தால், அவன் செய்வதைக்குறித்து உங்கள் எல்லோருக்கும் எடுத்துச்சொல்வேன். அவன் தீய எண்ணத்துடன் எங்களைப்பற்றி அவதூறாய்ப் பேசுகிறான். அதிலும் திருப்தியடையாமல், அங்கு வருகின்ற சகோதரரையும் வரவேற்க மறுக்கின்றான். அவர்களை வரவேற்க விரும்புகிற மற்றவர்களையும் தடைசெய்து, அப்படிச் செய்கிறவர்களையும் திருச்சபையைவிட்டு விலக்குகிறான். அன்பான நண்பனே, தீமையைப் பார்த்து, நீயும் தீமை செய்யாதே! நன்மையையே செய். நன்மை செய்கிறவன் யாரோ, அவன் இறைவனுக்குரியவனாகவே இருக்கிறான். தீமையைச் செய்கிறவன் யாரோ அவன் இறைவனைக் கண்டதேயில்லை. தேமேத்திரியுவைக்குறித்து எல்லோரும் நன்றாக பேசுகிறார்கள்; அதுவுமல்லாமல் அவன் சத்தியத்தாலும் நற்சாட்சி பெற்றிருக்கிறான். நாங்களும் அவனைக்குறித்து நற்சாட்சி கொடுக்கிறோம், எங்கள் சாட்சி உண்மை என்பதை நீ அறிவாய். உனக்கு எழுதவேண்டிய காரியங்கள் அதிகம் உண்டு; ஆனால் நான் அவற்றை மையினால் காகிதங்களில் எழுத விரும்பவில்லை. உன்னை விரைவில் சந்திப்பேன் என எதிர்பார்க்கிறேன். அப்பொழுது, நாம் நேரடியாகவே பேசிக்கொள்ளலாம்.
3 யோவான் 1:1-14 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
மூப்பனாகிய நான் சத்தியத்தின்படி நேசிக்கிற பிரியமான காயுவிற்கு எழுதுகிறதாவது: பிரியமானவனே, உன் ஆத்துமா வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாக இருக்கும்படி ஜெபித்துக்கொள்கிறேன். சகோதரர்கள் வந்து நீ சத்தியத்தில் நடந்துகொள்ளுகிறாய் என்று உன்னுடைய உண்மையைக்குறித்துச் சாட்சி கொடுத்தபோது அதிக சந்தோஷப்பட்டேன். என் பிள்ளைகள் சத்தியத்திலே நடக்கிறார்கள் என்று நான் கேள்விப்படுகிற சந்தோஷத்தைவிட அதிகமான சந்தோஷம் எனக்கு இல்லை. பிரியமானவனே, நீ சகோதரர்களுக்கும், அந்நியர்களுக்கும் செய்கிற எல்லாவற்றையும் உண்மையாகச் செய்கிறாய். அவர்கள் உன்னுடைய அன்பைக்குறித்துச் சபைக்குமுன்பாகச் சாட்சி சொன்னார்கள்; தேவனுக்குத் தகுதியானபடி நீ அவர்களை வழியனுப்பிவைத்தால் நலமாக இருக்கும். ஏனென்றால், அவர்கள் யூதரல்லாத மக்களிடம் ஒன்றும் வாங்காமல் தேவனுடைய நாமத்தினிமித்தம் புறப்பட்டுப்போனார்கள். ஆகவே, நாம் சத்தியத்திற்கு உடன்வேலையாட்களாக இருப்பதற்காக அப்படிப்பட்டவர்களைச் சேர்த்துக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறோம். நான் சபைக்கு எழுதினேன்; ஆனாலும் அவர்களில் முதன்மையாக இருக்கவிரும்புகிற தியோத்திரேப்பு எங்களை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆகவே, நான் வந்தால், அவன் எங்களுக்கு எதிராகப் பொல்லாத வார்த்தைகளைப் பேசி, செய்துவருகிற செயல்களை ஞாபகப்படுத்துவேன். அவன் இப்படிச் செய்துவருவதும் போதாமல், தன்னுடைய சகோதரர்களை ஏற்றுக்கொள்ளாமலிருப்பது மட்டுமல்லாமல், ஏற்றுக்கொள்ள விருப்பமாக இருக்கிறவர்களையும் தடைசெய்து, சபைக்கு வெளியே தள்ளுகிறான். பிரியமானவனே, நீ தீமையானதைப் பின்பற்றாமல், நன்மையானதைப் பின்பற்று, நன்மைசெய்கிறவன் தேவனால் உண்டாயிருக்கிறான்; தீமைசெய்கிறவன் தேவனைப் பார்த்தது இல்லை. தேமேத்திரியு எல்லோராலும் நற்சாட்சி பெற்றதும் இல்லாமல், சத்தியத்தாலும் நற்சாட்சி பெற்றவன்; நாங்களும் சாட்சி கொடுக்கிறோம், எங்களுடைய சாட்சி உண்மை என்று அறிவீர்கள். எழுதவேண்டிய காரியங்கள் அதிகம் உண்டு; ஆனால் மையினாலும், இறகினாலும் எழுத எனக்கு விருப்பம் இல்லை. சீக்கிரமாக உன்னைப் பார்க்கலாம் என்று நம்பியிருக்கிறேன், அப்பொழுது முகமுகமாகப் பேசிக்கொள்ளுவோம்.
3 யோவான் 1:1-14 பரிசுத்த பைபிள் (TAERV)
மூப்பனாகிய நான், உண்மையினால் நான் நேசிக்கும் எனது அன்பான நண்பன் காயுவுக்கு எழுதுவது, எனது அன்பான நண்பனே, உனது ஆன்மா நலமாயிருக்கும் வண்ணம் ஒவ்வொரு வகையிலும் நீ நலமாயிருக்க வேண்டுமென நான் பிரார்த்திக்கிறேன். உனது வாழ்க்கையில் உள்ள உண்மையைக் குறித்துச் சில சகோதரர்கள் என்னிடம் வந்து கூறினர். உண்மையின் வழியை நீ தொடர்ந்து பின்பற்றுவதை அவர்கள் எனக்குக் கூறினர். இது எனக்கு சந்தோஷம் கொடுத்தது. உண்மையின் வழியை எனது பிள்ளைகள் பின்பற்றுகிறார்கள் என்பதைக் கேட்கும்போது எனக்கு அளவு கடந்த சந்தோஷம் உண்டாகிறது. எனது அன்பான நண்பனே, கிறிஸ்துவில் சகோதரருக்கு உதவுவதில் நீ தொடர்ந்து ஈடுபடுவது நல்லது. உனக்குத் தெரியாத சகோதரருக்கும் நீ உதவிக்கொண்டிருக்கிறாய்! இச்சகோதரர்கள் உனது அன்பைக் குறித்து சபைக்கு கூறினர். அவர்கள் பயணத்தைத் தொடருவதற்குத் தயவு செய்து நீ உதவு, தேவனை மகிழ்ச்சிப்படுத்தும் வழியில் அவர்களுக்கு உதவு. கிறிஸ்துவின் சேவைக்காக இச்சகோதரர்கள் பயணம் மேற்கொண்டனர். தேவனில் விசுவாசமற்றோரிடமிருந்து அவர்கள் எந்தவித உதவியையும் ஏற்கவில்லை. எனவே இச்சகோதரருக்கு நாம் உதவ வேண்டும். நாம் அவர்களுக்கு உதவும்போது, உண்மைக்கான அவர்கள் வேலையில் நாமும் பங்கு கொள்வோம். நான் சபைக்கு ஒரு நிருபம் எழுதினேன். ஆனால் நாங்கள் சொல்வதைத் தியோத்திரேப்பு கேட்கவில்லை. எப்போதும் அவர்களுக்குத் தலைவனாக இருப்பதற்கு அவன் விரும்புகிறான். தியோத்திரேப்பு செய்வது தவறு என்பதை நான் வரும்போது பேசுவேன். அவன் எங்களைக் குறித்துப் பொய் கூறி, தீயன பேசுகிறான். அவன் செய்வது இது மட்டுமல்ல. கிறிஸ்துவின் சேவையில் ஈடுபட்டுள்ள சகோதரருக்கு உதவவும் மறுக்கிறான். சகோதரருக்கு உதவ விரும்பும் மக்களையும் தியோத்திரேப்பு தடுக்கிறான். அவர்கள் சபையினின்று விலகும்படியாகச் செய்கிறான். எனது அன்பான நண்பனே, தீயவற்றைப் பின்பற்றாதே. நல்லவற்றைப் பின்பற்று. நல்லவற்றைச் செய்கிற மனிதன் தேவனிடமிருந்து வந்தவன். தீயவை செய்யும் மனிதனோ, தேவனை அறியாதவன். தெமெத்திரியுவைப் பற்றி எல்லா மக்களும் நல்லபடியாகப் பேசுகிறார்கள். அவர்கள் கூறுவதோடு உண்மையும் ஒத்துப்போகிறது. அவனைக் குறித்து நாங்களும் நல்லவற்றையே சொல்கிறோம். நாங்கள் கூறுவது உண்மையென்பதும் உனக்குத் தெரியும். உனக்கு நான் கூற வேண்டிய பல செய்திகள் உள்ளன. ஆனால் எழுதுகோலையும் மையையும் பயன்படுத்த விரும்பவில்லை. நான் உன்னை விரைவில் சந்திக்க விரும்புகிறேன். அப்போது நாம் ஒருமித்துக் கூடிப் பேசலாம்.
3 யோவான் 1:1-14 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
மூப்பனாகிய நான் சத்தியத்தின்படி நேசிக்கிற பிரியமான காயுவுக்கு எழுதுகிறதாவது: பிரியமானவனே, உன் ஆத்துமா வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன். சகோதரர் வந்து நீ சத்தியத்தில் நடந்துகொள்ளுகிறாய் என்று உன்னுடைய உண்மையைக்குறித்துச் சாட்சி கொடுத்தபோது மிகவும் சந்தோஷப்பட்டேன். என் பிள்ளைகள் சத்தியத்திலே நடக்கிறார்கள் என்று நான் கேள்விப்படுகிற சந்தோஷத்திலும் அதிகமான சந்தோஷம் எனக்கு இல்லை. பிரியமானவனே, நீ சகோதரருக்கும் அந்நியருக்கும் செய்கிற யாவற்றையும் உண்மையாய்ச் செய்கிறாய். அவர்கள் உன்னுடைய அன்பைக்குறித்துச் சபைக்குமுன்பாகச் சாட்சி சொன்னார்கள்; தேவனுக்கு முன்பாகப் பாத்திரமானபடி அவர்களை நீ வழிவிட்டனுப்பினால் நலமாயிருக்கும். ஏனெனில் அவர்கள் புறஜாதியாரிடத்தில் ஒன்றும் வாங்காமல் அவருடைய நாமத்தினிமித்தம் புறப்பட்டுப்போனார்கள். ஆகையால் நாம் சத்தியத்திற்கு உடன்வேலையாட்களாயிருக்கும்படி அப்படிப்பட்டவர்களைச் சேர்த்துக்கொள்ளக் கடனாளிகளாயிருக்கிறோம். நான் சபைக்கு எழுதினேன்; ஆனாலும் அவர்களில் முதன்மையாயிருக்க விரும்புகிற தியோத்திரேப்பு எங்களை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனபடியால், நான் வந்தால், அவன் எங்களுக்கு விரோதமாய்ப் பொல்லாத வார்த்தைகளை அலப்பி, செய்துவருகிற கிரியைகளை நினைத்துக்கொள்வேன். அவன் இப்படிச் செய்துவருவதும் போதாமல், தான் சகோதரரை ஏற்றுக்கொள்ளாமலிருக்கிறதுமன்றி, ஏற்றுக்கொள்ள மனதாயிருக்கிறவர்களையும் தடைசெய்து, சபைக்குப் புறம்பேதள்ளுகிறான். பிரியமானவனே, நீ தீமையானதைப் பின்பற்றாமல், நன்மையானதைப் பின்பற்று, நன்மைசெய்கிறவன் தேவனால் உண்டாயிருக்கிறான்; தீமைசெய்கிறவன் தேவனைக் காணவில்லை. தேமேத்திரியு எல்லாராலும் நற்சாட்சிபெற்றதுமல்லாமல், சத்தியத்தாலும் நற்சாட்சிபெற்றவன்; நாங்களும் சாட்சிகொடுக்கிறோம், எங்கள் சாட்சி மெய்யென்று அறிவீர்கள். எழுதவேண்டிய காரியங்கள் அநேகமுண்டு; ஆனால் மையினாலும் இறகினாலும் எழுத எனக்கு மனதில்லை. சீக்கிரமாய் உன்னைக் காணலாமென்று நம்பியிருக்கிறேன், அப்பொழுது முகமுகமாய்ப் பேசிக்கொள்ளுவோம். உனக்கு சமாதானம் உண்டாவதாக. சிநேகிதர் உனக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள். சிநேகிதரைப் பேர்பேராக வாழ்த்துவாயாக.