2 தீமோத்தேயு 2:8-13
2 தீமோத்தேயு 2:8-13 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
இயேசுகிறிஸ்துவை நினைவிற்கொள். அவர் மரித்தோரிலிருந்து உயிருடன் எழுப்பப்பட்டார். அவர் தாவீதின் சந்ததியில் வந்தவர். இதுவே எனது நற்செய்தி. இதற்காகவே நான் குற்றவாளியைப்போல் விலங்கிடப்படும் அளவுக்கு துன்பப்படுகிறேன். ஆனால் இறைவனின் வார்த்தையோ விலங்கிடப்படவில்லை. ஆகையால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்காக, நான் எல்லாவற்றையும் சகிக்கிறேன். அவர்கள் கிறிஸ்து இயேசுவில் இருக்கும் இந்த இரட்சிப்பை நித்திய மகிமையுடன் பெற்றுக்கொள்ளும்படியே நான் இவற்றைச் சகிக்கிறேன். இதுவும் நம்பத்தகுந்த ஒரு வாக்கு: நாம் கிறிஸ்துவுடன் மரித்திருந்தால், நாமும் அவருடன் வாழ்வோம். நாம் பாடுகளைத் தாங்கினால், நாமும் அவருடன் ஆளுகை செய்வோம். நாம் கிறிஸ்துவை மறுதலித்தால், அவரும் நம்மை மறுதலிப்பார்; நாம் அவருக்கு உண்மையாய் இராவிட்டாலும், அவர் நமக்கு உண்மையுள்ளவராகவே இருப்பார். ஏனெனில், அவர் தம்மைத்தாம் மறுதலிக்கமாட்டார்.
2 தீமோத்தேயு 2:8-13 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
தாவீதின் சந்ததியில் பிறந்த இயேசுகிறிஸ்து, என்னுடைய நற்செய்தியின்படியே, மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பப்பட்டவர் என்று நினைத்துக்கொள். இந்த நற்செய்தியினிமித்தம் நான் பெரும் பாவம் செய்தவனைப்போலக் கட்டப்பட்டு, துன்பத்தை அனுபவிக்கிறேன்; தேவவசனமோ கட்டப்பட்டிருக்கவில்லை. ஆகவே, தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் கிறிஸ்து இயேசுவினால் உண்டான இரட்சிப்பை நித்திய மகிமையோடு பெற்றுக்கொள்ளும்படி, எல்லாவற்றையும் அவர்கள் நிமித்தமாக சகித்துக்கொள்ளுகிறேன். இந்த வார்த்தை உண்மையுள்ளது; என்னவென்றால், நாம் அவரோடுகூட மரித்தோமானால், அவரோடுகூடப் பிழைத்துமிருப்போம்; அவரோடுகூடப் பாடுகளைச் சகித்தோமானால் அவரோடுகூட ஆளுகையும் செய்வோம்; நாம் அவரை மறுதலித்தால், அவரும் நம்மை மறுதலிப்பார்; நாம் உண்மை இல்லாதவர்களாக இருந்தாலும், அவர் உண்மை உள்ளவராக இருக்கிறார்; அவர் தம்மைத்தாம் மறுதலிக்கமாட்டார்.
2 தீமோத்தேயு 2:8-13 பரிசுத்த பைபிள் (TAERV)
இயேசு கிறிஸ்துவை ஞாபகப்படுத்திக்கொள். அவர் தாவீதின் குடும்பத்திலிருந்து வந்தவர். இறந்த பிறகு அவர் மரணத்திலிருந்து எழுந்தார். இதுதான் நான் சொல்லும் நற்செய்தி. நான் இதனைச் சொல்வதால் பலவித துன்பங்களுக்கு உட்படுகிறேன். நான் ஒரு குற்றவாளியைப் போல் சங்கிலிகளால் பிணைத்துக் கட்டப்பட்டிருக்கிறேன். ஆனால் தேவனுடைய போதனைகள் கட்டப்படவில்லை. ஆகையால் நான் பொறுமையோடு அனைத்துத் துன்பங்களையும் ஏற்றுக்கொள்கிறேன். தேவனால் தேர்ந்தெடுக்கபட்ட அனைவருக்கும் உதவும் பொருட்டே நான் இதனைச் செய்தேன். இதனால் மக்கள் இயேசு கிறிஸ்துவில் இரட்சிப்பைப் பெறுவார்கள். அதனால் முடிவற்ற மகிமையைப் பெறுவர். இந்தப் போதனை உண்மையானது: நாம் இயேசுவோடு மரணமடைந்திருந்தால் பிறகு நாமும் அவரோடு வாழ்வோம். நாம் துன்பங்களை ஏற்றுக்கொண்டால் பிறகு அவரோடு ஆட்சியும் செய்வோம். நாம் அவரை ஏற்றுக்கொள்ள மறுத்தால் பிறகு அவரும் நம்மை ஏற்க மறுப்பார். நாம் உண்மையுள்ளவராக இல்லாதிருந்தாலும் அவர் தொடர்ந்து உண்மைக்குரியவராக இருப்பார். ஏனென்றால் அவர் தனக்குத்தானே உண்மையற்றவராக இருக்க முடியாது.
2 தீமோத்தேயு 2:8-13 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
தாவீதின் சந்ததியில் பிறந்த இயேசுகிறிஸ்து, என் சுவிசேஷத்தின்படியே, மரித்தோரிலிருந்தெழுப்பப்பட்டவரென்று நினைத்துக்கொள். இந்தச் சுவிசேஷத்தினிமித்தம் நான் பாதகன்போலக் கட்டப்பட்டு, துன்பத்தை அனுபவிக்கிறேன்; தேவவசனமோ கட்டப்பட்டிருக்கவில்லை. ஆகையால், தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் கிறிஸ்து இயேசுவினால் உண்டான இரட்சிப்பை நித்திய மகிமையோடே பெற்றுக்கொள்ளும்படி, சகலத்தையும் அவர்கள் நிமித்தமாகச் சகிக்கிறேன். இந்த வார்த்தை உண்மையுள்ளது; என்னவெனில், நாம் அவரோடேகூட மரித்தோமானால், அவரோடேகூடப் பிழைத்துமிருப்போம்; அவரோடேகூடப் பாடுகளைச் சகித்தோமானால் அவரோடேகூட ஆளுகையும் செய்வோம்; நாம் அவரை மறுதலித்தால், அவரும் நம்மை மறுதலிப்பார்; நாம் உண்மையில்லாதவர்களாயிருந்தாலும், அவர் உண்மையுள்ளவராயிருக்கிறார்; அவர் தம்மைத்தாம் மறுதலிக்கமாட்டார்.