2 தீமோத்தேயு 2:22-26
2 தீமோத்தேயு 2:22-26 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
வாலிப பருவத்தின் தீமையான ஆசைகளைவிட்டு ஓடி, சுத்த இருதயத்துடன் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவோருடன் சேர்ந்து நீதி, விசுவாசம், அன்பு, சமாதானம் ஆகியவற்றை நாடித்தேடு. மதிகேடும் அறிவற்றதுமான விவாதங்களில் கலந்து கொள்ளாதே. ஏனெனில், அவை வாக்குவாதங்களையே உண்டுபண்ணுகின்றவை என்பது உனக்குத் தெரியும். கர்த்தரின் ஊழியக்காரன் வாக்குவாதத்தில் ஈடுபடக்கூடாது. ஆனால் அவன் எல்லோரிடமும் தயவுள்ளவனாக, போதிக்கும் திறமையுள்ளவனாக, சகிப்புத்தன்மை உள்ளவனாக இருக்கவேண்டும். அவன் தன்னை எதிர்க்கிறவர்களை இறைவன் அவர்களுக்கு மனந்திரும்புதலைக் கொடுப்பார் என்ற எதிர்பார்ப்புடன், கனிவாக அறிவுறுத்தவேண்டும். இந்த மனந்திரும்புதல் சத்தியத்தின் அறிவுக்கு அவர்களை வழிநடத்தி, அவர்களைத் தெளிந்த புத்தியுள்ளவர்களாக்கும். எனவே, பிசாசு தனது திட்டத்தைத் செய்ய, இவர்களை சிறைப்பிடித்திருக்கிற கண்ணியிலிருந்து அவர்கள் தப்பித்துக்கொள்வார்கள்.
2 தீமோத்தேயு 2:22-26 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
அன்றியும், பாலியத்திற்குரிய இச்சைகளுக்கு நீ விலகி ஓடி, சுத்த இருதயத்தோடு கர்த்த்தரை தொழுதுகொள்ளுகிறவர்களுடனே, நீதியையும் விசுவாசத்தையும் அன்பையும் சமாதானத்தையும் அடையும்படி நாடு. புத்தியீனமும் அறிவில்லாததுமான வாக்குவாதங்கள் சண்டைகளை உண்டாக்குமென்று அறிந்து, அவைகளுக்கு விலகி இரு. கர்த்தருடைய ஊழியக்காரன் சண்டைபண்ணுகிறவனாக இல்லாமல், எல்லோரிடத்திலும் சாந்தமுள்ளவனும், போதிப்பதற்குத் திறமையுள்ளவனும், தீமையைச் சகிக்கிறவனுமாக இருக்கவேண்டும். எதிர்பேசுகிறவர்கள் சத்தியத்தை அறியும்படி தேவன் அவர்களுக்கு மனந்திரும்புதலை கொடுக்கத்தக்கதாகவும், பிசாசானவனுடைய இச்சையின்படி செய்ய அவனால் பிடிக்கப்பட்டிருக்கிற அவர்கள் மறுபடியும் மயக்கம் தெளிந்து அவன் தந்திரத்திற்கு நீங்கத்தக்கதாகவும், சாந்தமாக அவர்களுக்கு உபதேசிக்கவேண்டும்.
2 தீமோத்தேயு 2:22-26 பரிசுத்த பைபிள் (TAERV)
ஓர் இளைஞன் செய்ய விரும்புகிற தீய செயல்களில் இருந்து விலகி இருங்கள். சரியான வழியில் வாழவும், விசுவாசம், அன்பு, சமாதனம் ஆகியவற்றைப் பெறவும் கடுமையாக முயற்சியுங்கள். இவற்றை நீங்கள் சுத்தமான இதயம் உள்ளவர்களோடும் கர்த்தரிடம் நம்பிக்கை உள்ளவர்களோடும் சேர்ந்து செய்யுங்கள். முட்டாள்தனமான அறிவற்ற விவாதங்களில் இருந்தும் விலகி நில்லுங்கள். இப்படிப்பட்ட விவாதங்கள் வளர்ந்து பெரிதாகும் என்பதை நீங்கள் அறிவீர்கள். கர்த்தருடைய ஊழியன் சண்டைக்காரனாக இருக்கக் கூடாது. அவன் எல்லோரிடமும் இரக்கத்துடன் இருத்தல் வேண்டும். அவன் நல்ல போதகனாகவும் இருக்க வேண்டும். அவன் பொறுமையுள்ளவனாக இருக்க வேண்டும். தன் போதனையை எதிர்க்கிறவர்களோடு கர்த்தரின் ஊழியன் மென்மையாகப் பேச வேண்டும். அவர்களும் உண்மையை ஒப்புக்கொள்ளும் வகையில் தேவன் அவர்களின் மனத்தையும் மாற்றுவார். பிசாசானவன் இத்தகைய மக்களை வலை போட்டுப்பிடித்து தன் விருப்பப்படி செயல்பட வைப்பான். எனினும் அவர்கள் விழித்தெழுந்து, பிசாசு தன்னைப் பயன்படுத்துவதை அறிந்து, தம்மைப் பிசாசின் வலைக்குள் இருந்து விடுவித்துக்கொள்வர்.
2 தீமோத்தேயு 2:22-26 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
அன்றியும், பாலியத்துக்குரிய இச்சைகளுக்கு நீ விலகியோடி, சுத்த இருதயத்தோடே கர்த்தரைத் தொழுதுகொள்ளுகிறவர்களுடனே, நீதியையும் விசுவாசத்தையும் அன்பையும் சமாதானத்தையும் அடையும்படி நாடு. புத்தியீனமும் அயுக்தமுமான தர்க்கங்கள் சண்டைகளைப் பிறப்பிக்குமென்று அறிந்து, அவைகளுக்கு விலகியிரு. கர்த்தருடைய ஊழியக்காரன் சண்டைபண்ணுகிறவனாயிராமல், எல்லாரிடத்திலும் சாந்தமுள்ளவனும், போதகசமர்த்தனும், தீமையைச் சகிக்கிறவனுமாயிருக்கவேண்டும். எதிர்பேசுகிறவர்கள் சத்தியத்தை அறியும்படி தேவன் அவர்களுக்கு மனந்திரும்புதலை அருளத்தக்கதாகவும், பிசாசானவனுடைய இச்சையின்படி செய்ய அவனால் பிடிபட்டிருக்கிற அவர்கள் மறுபடியும் மயக்கந்தெளிந்து அவன் கண்ணிக்கு நீங்கத்தக்கதாகவும், சாந்தமாய் அவர்களுக்கு உபதேசிக்கவேண்டும்.