2 தீமோத்தேயு 1:1-5
2 தீமோத்தேயு 1:1-5 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
கிறிஸ்து இயேசுவில் இருக்கும் வாழ்வைக் குறித்த வாக்குறுதியின்படி, இறைவனுடைய சித்தத்தினால், கிறிஸ்து இயேசுவின் அப்போஸ்தலனாக நியமிக்கப்பட்ட பவுல், எனது அன்பான மகன் தீமோத்தேயுவுக்கு எழுதுகிறதாவது: நம்முடைய பிதாவாகிய இறைவனாலும், நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவினாலும் கிருபையும், இரக்கமும், சமாதானமும் உண்டாவதாக. இரவும் பகலும் எனது மன்றாட்டில் உன்னை இடைவிடாமல் நினைக்கும் போதெல்லாம், நான் இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன். இறைவனுக்கே என் முற்பிதாக்களைப்போல், சுத்த மனசாட்சியுடன் நான் பணிசெய்கிறேன். நாம் ஒருவரையொருவர் விட்டுப் பிரிந்தவேளையில் உனது கண்ணீர் என் நினைவில் இருக்கிறபடியால், நான் உன்னைக் கண்டு மகிழ்ச்சியடையும்படி வாஞ்சையாய் இருக்கிறேன். உனது உண்மையான விசுவாசமும் என் நினைவில் வந்திருக்கிறது. இந்த விசுவாசம் முதலில் உனது பாட்டி லோவிசாளிடத்திலும், உனது தாய் ஐனிக்கேயாளிடத்திலும் இருந்தது. இப்பொழுது அந்த விசுவாசம் உன்னிடத்திலும் இருக்கிறது என நான் நம்புகிறேன்.
2 தீமோத்தேயு 1:1-5 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
கிறிஸ்து இயேசுவினால் உண்டாயிருக்கிற ஜீவனைக்குறித்த வாக்குத்தத்தத்தின்படி, தேவனுடைய விருப்பத்தினாலே, இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனாக இருக்கிற பவுல், பிரியமுள்ள குமாரனாகிய தீமோத்தேயுவிற்கு எழுதுகிறதாவது: பிதாவாகிய தேவனாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவினாலும் கிருபையும் இரக்கமும் சமாதானமும் உண்டாவதாக. நான் இரவும் பகலும் இடைவிடாமல் என் ஜெபங்களில் உன்னை நினைத்து, உன் கண்ணீரையும் நினைவுகூர்ந்து, மகிழ்ச்சியால் நிறையப்படும்படிக்கு உன்னைக் காண வாஞ்சையாக இருந்து, உன்னிலுள்ள மாயமில்லாத விசுவாசத்தை நினைவுகூருகிறதினால், என் முன்னோர்கள் முதற்கொண்டு சுத்தமனச்சாட்சியோடு ஆராதித்துவரும் தேவனுக்கு நான் நன்றி செலுத்துகிறேன். அந்த விசுவாசம் முந்தி உன் பாட்டியாகிய லோவிசாளுக்குள்ளும் உன் தாயாகிய ஐனிக்கேயாளுக்குள்ளும் நிலைத்திருந்தது; அது உனக்குள்ளும் நிலைத்திருக்கிறதென்று நிச்சயித்திருக்கிறேன்.
2 தீமோத்தேயு 1:1-5 பரிசுத்த பைபிள் (TAERV)
இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலனான பவுல் எழுதுவது: தேவனின் விருப்பப்படியே நான் அப்போஸ்தலனானேன். கிறிஸ்து இயேசுவிலுள்ள வாழ்க்கையின் வாக்குறுதியைப் பற்றி மக்களிடம் கூறுமாறு தேவன் என்னை அனுப்பினார். தீமோத்தேயுவே! நீ எனக்குப் பிரியமுள்ள குமாரனைப் போன்றவன். கிருபை, இரக்கம், சமாதானம் ஆகியவற்றை நீ பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலும் பெறுவாய் என்று நம்புகிறேன். இரவிலும் பகலிலும் என் பிரார்த்தனைகளில் உன்னை எப்பொழுதும் நினைத்துக்கொள்ளுகிறேன். என்னுடைய முன்னோர் சேவை செய்த தேவன் அவரே. நான் உனக்காக தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன். நான் அறிந்த அளவில் சரியானதை மட்டுமே செய்கிறேன். நீ எனக்காக சிந்திய கண்ணீர்த் துளிகளை நான் நினைத்துப் பார்க்கிறேன். நான் உன்னைக் காண மிகவும் விரும்புகிறேன். அதனால் நான் முழு மகிழ்ச்சியை அடைய முடியும். நான் உனது உண்மையான விசுவாசத்தை நினைத்துப் பார்க்கிறேன். அத்தகைய விசுவாசம் முதலில் உன் பாட்டியான லோவிசாளுக்கும் உன் தாயான ஐனிக்கேயாளுக்கும் இருந்தது. அவர்களைப் போன்றே உனக்கும் விசுவாசம் இருக்கிறது என்று உறுதியாக நம்புகிறேன்.
2 தீமோத்தேயு 1:1-5 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
கிறிஸ்து இயேசுவினால் உண்டாயிருக்கிற ஜீவனைப்பற்றிய வாக்குத்தத்தத்தின்படி, தேவனுடைய சித்தத்தினாலே, இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனாயிருக்கிற பவுல், பிரியமுள்ள குமாரனாகிய தீமோத்தேயுவுக்கு எழுதுகிறதாவது: பிதாவாகிய தேவனாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவினாலும் கிருபையும் இரக்கமும் சமாதானமும் உண்டாவதாக. நான் இரவும் பகலும் இடைவிடாமல் என் ஜெபங்களில் உன்னை நினைத்து, உன் கண்ணீரை ஞாபகம்பண்ணி, சந்தோஷத்தால் நிறையப்படும்படிக்கு உன்னைக் காண வாஞ்சையாயிருந்து, உன்னிலுள்ள மாயமற்ற விசுவாசத்தை நினைவுகூருகிறதினால், என் முன்னோர்கள் முதற்கொண்டு சுத்தமனச்சாட்சியோடே ஆராதித்துவரும் தேவனை நான் ஸ்தோத்திரிக்கிறேன். அந்த விசுவாசம் முந்தி உன் பாட்டியாகிய லோவிசாளுக்குள்ளும் உன் தாயாகிய ஐனிக்கேயாளுக்குள்ளும் நிலைத்திருந்தது; அது உனக்குள்ளும் நிலைத்திருக்கிறதென்று நிச்சயித்திருக்கிறேன்.